ரயிலைப் பிடிக்க வேண்டுமென்கிற என் பதற்றம் ஒருவழியாய் புதுதில்லி கல்கா சதாப்தி ஸ்பெஷல் ரயிலேறியதில் தணிந்து விட்டது. மெதுவாக நடைமேடையை விட்டு ரயில் தடதடக்கத் தொடங்கியதும் என்னைச் சுற்றி இருந்த விஷயங்கள் யாவும் சக்கரங்கள் எழுப்பும் சத்தத்தின் ஓர்மையில் என் நினைவுகளை போல் ஒருமித்தன. அவள் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தாள். அவளின் அமைதியின்மை ரயிலின் வேகத்துடன் இணைந்து வேகம் பிடித்தது.
அவளது தாத்தாவின் தலைமுடியை முதலில் கைகளால் வாரிக் கொண்டிருந்தாள். குருஷேத்ராவை நாங்கள் அடைந்தபோது ஜன்னலுக்கு வெளியே சூரியன் மறைந்திருந்தது. இப்போது அவள் இருக்கையின் கைப்பிடியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒருநேரம் அதை மேலே தூக்கி விட்டாள். மறுநேரம் அதை கீழே இறக்கி விட்டாள். சூரியன் எடுத்துச் சென்றுவிட்ட மஞ்சள் வெளிச்சத்துக்காக நான் ஏங்கினேன். அதிகரித்துக் கொண்டிருந்த இருளுக்குள் நாங்கள் மூழ்கிக் கொண்டிருந்தோம்.
ஆனால் அவளின் உணர்ச்சிப் பிரவாகத்தின் முன் அடர்ந்து வரும் இருளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வெள்ளைக் கோடுகள் கொண்ட நீல நிற பாவாடையுடன் அவளின் தாயின் மடியில் இப்போது நின்று கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை மேலே பார்த்தாள். அவள் எங்கே பார்க்கிறாள் எனக் காண நானும் மேலே பார்த்தேன். எங்களின் கண்கள் அவளின் தலைக்கு மேலிருந்த ஸ்விட்ச்களை கண்டடைந்தன. அவளின் தாயின் மடியிலிருந்து சற்று மேலே உந்தியெழுந்து, ஒரு கையை நீட்டிப் போராடி, அடுத்து இரண்டு கைகளையும் நீட்டி எம்பி, இறுதியில் எட்டி விட்டாள்.
மஞ்சள் வெளிச்சம் அவளின் முகத்தில் படர்ந்தது. அவளின் கண்களிலிருந்து சூரியன் மீண்டும் உதித்தது. இரண்டாவது ஸ்விட்சையும் அவள் போட்டாள். இன்னொரு வெளிச்சக்கற்றை அவளின் உடலின்மீது படர்ந்தது. கண்களிலிருந்தும் புன்னகையிலிருந்தும் வெளிச்சம் வழிய கைகளை மடித்து மஞ்சள் விளக்கின் அடியில் குவித்தபடி அங்கு அவள் நின்று கொண்டிருந்தாள்.
என் சக பயணி ஒளிரும் அக்காட்சியில் சொக்கிப்போன நான் நிதா ஃபசிலின் வரிகளை முணுமுணுத்தேன்
பச்சோன்
கி சோட்டே ஹாதோன் கொ சாந்த் சிதாரே சூனெ தொ
தோ-சார்
கிதாபெய்ன் பாத் கர் யெ பி ஹம் ஜெய்ஸே ஹொ ஜாயிங்கே
சிறுகுழந்தைகளின் கைகள்
நிலவையும் நட்சத்திரங்களையும் அடையட்டும்
சில புத்தகங்கள் படித்தபிறகு
அவர்களும் நம்மைப் போல் மாறுவார்கள்
தமிழில்: ராஜசங்கீதன்