ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள சிங்குவில் விவசாயிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் சர்தார் சந்தோக் சிங் காயமடைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.
இருந்தாலும் இந்த 70 வயது முதியவர், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டக் களத்தில் உள்ளார். “நாங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தபோது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது,” என்று அவர் தனது இடது கண்ணுக்குக் கீழே நவம்பர் 27ஆம் தேதி ஏற்பட்ட காயத்தைப் பற்றிச் சொல்கிறார்.
சம்பவத்திற்கு முதல்நாள் பஞ்சாபின் தார்ன் தாரன் மாவட்டத்தில் உள்ள கர்கா கிராமத்திலிருந்து 17 பேர் புறப்பட்டு அடுத்த நாள் காலையில் டெல்லி எல்லைக்கு வந்தடைந்தனர். “நாங்கள் இங்கு வந்தபோது 50,000-60,000 பேர் திரண்டிருந்தனர். பிற போராட்டக்காரர்களுடன் சேர்ந்து அமர்ந்து பேச்சை கேட்டுக்கொண்டிருந்தேன்,” என சந்தோக் சிங் நினைவுகூர்கிறார்.
காலை 11 மணியளவில் கைகலப்பும், குழப்பமும் ஏற்பட்டது. தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் வீசத் தொடங்கின. “என் முன்னால் இருந்த இளைஞர்கள் என்னை தாண்டி மறுபக்கம் ஓடினர். நான் எழுந்து நிதானித்து கொண்டேன்,” என்கிறார் சந்தோக் சிங். “பாதுகாப்புப் படையினரைப் பார்த்து நான் கத்தினேன்: ‘நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்கிறோம், எங்களை ஏன் தாக்குகிறீர்கள்’ எனக் கேட்டேன்? அவர்கள் கோபமாக பதிலளித்தனர்: ‘கூட்டத்தை துரத்த இப்படி செய்கிறோம்.’ குண்டு பாய்வதை கண்ட சிறுவன் ஒருவன் என் முன்னால் தலையை தாழ்த்திக் கொண்டான். அது என்னை தாக்கிவிட்டது. நான் நகரவில்லை.”
பஞ்சாபின் சோலா சாஹிப் தாலுக்காவில் உள்ள தனது கிராமத்தில் நெல், கோதுமை பயிரிடுவதிலேயே தன் வாழ்நாளை செலவிட்ட சர்தார் சந்தோக் சிங் மேலும் பேசுகையில், “கூட்டம் வந்து என்னைச் சுற்றி கூடும் வரை எனக்கு காயம் ஏற்பட்டதே தெரியாது. எனக்கு பயங்கரமாக இரத்தம் கொட்டுவதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்தனர். ஆனால் மறுத்ததுடன், கலைந்து போன போராட்டக்காரர்களையும் முன்னேறிச் செல்லுங்கள், ஓடாதீர்கள் என்றேன். திரும்பிச் செல்வதற்காக நாம் இத்தகைய தொலைவிலிருந்து வரவில்லை. அரசு படைகள் எங்களை ஏன் தாக்கின என அறிய விரும்புகிறேன். அவர்களுக்குத் துணிவிருந்தால் என்னுடன் வந்து சண்டையிடட்டும். அவர்களின் குண்டுகள் எனக்கு அச்சம் தராது.”
குண்டு தாக்கப்பட்ட பிறகு சிங்கின் வலது கண் இரத்தம் கட்டியதுடன் எட்டு தையல்களும் போடப்பட்டுள்ளன. “போராட்டக் களத்திற்கு அருகே உள்ள மருத்துவமனைக்கு என் கிராமத்து இளைஞர்கள் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் எங்களை அனுமதிக்கவில்லை, கதவை சாத்திவிட்டனர். ஒரே குழப்பம் நிலவியது. பஞ்சாபிலிருந்து வந்திருந்த அவசர ஊர்தி அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தது. அவர்கள் எங்களை நோக்கி ஓடிவந்து தையல் போட்டு, மருந்துகளைக் கொடுத்தனர். கண்ணீர் புகை குண்டு வீச்சில் காயமடைந்த பலருக்கும் சிகிச்சை அளித்தனர்.”
சந்தோக் சிங் அச்சம்பவத்தை புன்முறுவலுடன், கம்பீரமான குரலில் சொல்கிறார்: “வயல்களில் நாங்கள் படும் துன்பத்திற்கு முன்னால் இந்த காயங்கள் எல்லாம் ஒன்றுமில்லை. அறுவடைக் காலத்தில் ஆழமான காயங்கள் ஏற்படுவது பொதுவானது. நான் ஒரு விவசாயி. எனக்கு இரத்தம் என்பது பழக்கமானதுதான். அவர்களின் குண்டுகள் எங்களை விரட்டிவிடும் என நினைக்கிறார்களா?”
இச்சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் சிங் மற்றும் பிற போராட்டக்காரர்கள் எல்லையில் உள்ளனர். அரசுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகும் உறுதியாக உள்ளனர்.
விவசாயிகள் எதிர்க்கும் சட்டங்கள், விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 .
இந்திய சட்டப்பிரிவு 32ன்கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் சட்டரீதியான உதவிக் கோரும் உரிமை யை முடக்குவதால் இச்சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன.
2020 ஜூன் 5ஆம் தேதி முதலில் அவசர சட்டமாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு, அதே மாதம் 20ஆம் தேதி அவசர அவசரமாக சட்டங்களாக இயற்றப்பட்டன. பெருமுதலாளிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், விவசாயிகள், விவசாயத்தின் மீது அதிகளவு அதிகாரத்தை அவர்கள் செலுத்த வழிவகுக்கும் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் கருதுகின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி), வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (ஏபிஎம்சிஸ்), மாநில கொள்முதல் போன்ற விவசாயிகளுக்கு பல ஆதரவு அம்சங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றனர்.
“நீண்ட காலம் அமர்ந்து நாங்கள் சோர்வடைந்து கலைந்து செல்ல வேண்டும் என்பது அரசின் திட்டம். அவர்களின் எண்ணம் தவறானது. நாங்கள் திரும்பிச் செல்ல இங்கு வரவில்லை. நான் ஏற்கனவே சொன்னதை மீண்டும் சொல்கிறேன்: இங்கு அமர்ந்திருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எங்களிடம் டிராக்டர் டிராலிகள் நிறைய மளிகைப் பொருட்கள் உள்ளன. எங்களுக்கு தேவைப்படும் அனைத்தையும் சீக்கிய சகோதரர்கள் அளிக்கின்றனர். எங்கள் உரிமைகளைப் பெறும் வரை நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம். இச்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களின் போராட்டம். இல்லாவிடில் இனிவரும் எங்கள் தலைமுறைகள் பாதிக்கப்படும். அவர்களின் எதிர்காலத்திற்காக இதைச் செய்தாக வேண்டும். எங்கள் உரிமைகளைப் பெற்ற பிறகே திரும்பிச் செல்வோம்.”
தமிழில்: சவிதா