“எந்த பெற்றோரும் குழந்தையை இழக்கும் கொடுமையை அனுபவிக்கக் கூடாது,” என்கிறார் சிர்விக்ரம்ஜீத் சிங். ஜனவரி 26ம் தேதி தில்லியில் நடந்த விவசாயிகளின் ட்ராக்டர் ஊர்வலத்தில் நவ்ரீத் சிங் என்கிற தன் மகனை பறிகொடுத்தவர்.
உத்தரப்பிரதேசத்திலுள்ள அவர்களின் வீட்டுச் சுவரில் நவ்ரீத்தின் புகைப்படம் தொங்குகிறது. 45 வயது சிர்விக்ரம்ஜீத் மற்றும் 42 வயது பரம்ஜீத் கவுர் ஆகியோர் வசிக்கும் அந்த வீட்டுக்கு ஆறுதல் தெரிவிக்கவென பலர் வந்து கொண்டிருக்கின்றனர். மகனின் மரணம் சரிசெய்ய முடியாத வெறுமையை பெற்றோரின் வாழ்க்கைகளில் உருவாக்கியிருக்கிறது. “அவன் விவசாயத்தில் எனக்கு உதவினான். எங்கள் மீது அக்கறை கொண்டவன். பொறுப்பான குழந்தை அவன்,” என்கிறார் சிர்விக்ரம்ஜீத்.
தில்லியில் நடக்கும் குடியரசு தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள 25 வயது நவ்ரீது தில்லி எல்லையில் இருக்கும் காசிப்பூருக்கு சென்றார். அவருடைய தாத்தாவான 65 வயது ஹர்தீப் சிங் திப்திபா, விவசாயப் போராட்டங்கள் தொடங்கிய நவம்பர் 26, 2020லிருந்து அங்குதான் இருக்கிறார். நவ்ரீத் ஒரு ட்ராக்டரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். தீன்தயாள் உபாத்யாய் மார்கில் போடப்பட்டிருந்த தடைகளுக்கருகே நின்றிருந்த தில்லி போலீசாரால் ட்ராக்டர் கவிழ்க்கப்பட்டது.
ட்ராக்டரை மீண்டும் நேராக நிமிர்த்தியதில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக நவ்ரீத் இறந்துவிட்டதாக காவல்துறை சொன்னாலும் அந்த விபத்துக்கு முன்பே அவர் சுடப்பட்டார் என அவரின் குடும்பம் நம்புகிறது. “நீதிமன்றத்தில் நாங்கள் நிரூபிப்போம்,” என்கிறார் ஸ்ரீவிக்ரம்ஜீத். நவரீத் மரணத்தை விசாரிக்க வேண்டுமென ஹர்தீப் சிங்கால் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சம்பவம் நடந்ததிலிருந்து வடமேற்கு உத்தரப்பிரதேச எல்லை மாவட்டமான ராம்பூரின் விவசாயிகள், மத்திய அரசு செப்டம்பர் 2020ல் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வைத்துவிட வேண்டுமென உறுதி பூண்டிருக்கின்றனர். ராம்புரில்தான் திப்திபா இருக்கிறது. ராம்பூரின் எல்லையை தாண்டியிருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மற்றும் காஷிப்பூர் மாவட்டங்களின் விவசாயிகளும் திட்டவட்டமாக இருக்கின்றனர்.
திப்திபாவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உத்தம் சிங் நகரின் சைஜானி கிராமத்தில் வசிக்கும் 42 வயது சுக்தேவ் சிங், “பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளைஞன்(நவ்ரீத்) அவன். அவன் இறந்தபிறகு இங்கிருக்கும் விவசாயிகள் போராட இன்னும் அதிக தீர்மானகரமாகிவிட்டனர்,” என்கிறார்.
தில்லி எல்லைகளில் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்தே உத்தரகாண்ட் விவசாயிகள் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பிற விவசாயிகளுடன் அங்கிருக்கின்றனர். பிற மூன்று மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தலைநகரிலிருந்து உத்தரகாண்ட்தான் தூரமான மாநிலம். அந்த தூரம் கூட போராட்டங்களுக்கான அம்மாநில விவசாயிகளின் ஆதரவை குலைக்கவில்லை.
உத்தம் சிங் நகர் மற்றும் காஷிப்பூர் விவசாயிகள் நவம்பரில் தில்லியை நோக்கி செல்லத் தொடங்கியபோது சென்றடைவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை என்கிறார் சுக்தேவ். உத்தரப்பிரதேச காவல்துறை மாநில எல்லையில் அவர்களை நிறுத்தியிருக்கின்றனர். “நெடுஞ்சாலையிலேயே மூன்று பகல்கள் மற்றும் மூன்று இரவுகளுக்கு தங்கியிருந்தோம். எங்களை திருப்பி அனுப்புவதற்கான எல்லா விஷயங்களையும் காவல்துறை முயற்சித்தது. நாங்கள் திரும்ப மாட்டோம் என்பது அவர்களுக்கு புரிந்தபிறகு எல்லையை கடக்க நாங்கள் அனுமதிக்கப்பட்டோம்.”
புதிய வேளாண் சட்டங்கள் வாழ்க்கைகளை அழித்துவிடும் என்பதால் தங்களின் வீடுகளிலிருந்து நீண்ட தூரத்துக்கு விவசாயிகள் பயணித்திருப்பதாக சொல்கிறார் சுக்தேவ். உத்தம் சிங் நகரின் சைஜானி கிராமத்தில் அவருக்கு 25 ஏக்கர் நிலம் இருக்கிறது. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள்.
இச்சட்டங்கள், விளைவிப்பவரின் முக்கிய ஆதாரங்களான குறைந்தபட்ச ஆதார விலை (MSP), மண்டி (APMC), மாநில அரசின் கொள்முதல் போன்றவற்றை இல்லாமலாக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மண்டி முறை விவசாயிகளுக்கான சிறந்த விற்பனை முறை கிடையாது என்பதை சுக்தேவ் ஒப்புக் கொள்கிறார். “அது சரியாக இருப்பதாக நாங்கள் எப்போதும் சொல்லவில்லை. சீர்திருத்தங்கள் தேவை.” கேள்வி என்னவென்றால் யாருக்கான சீர்திருத்தங்களை அரசு கொண்டு வருகிறது - விவசாயிகளுக்கானதா கார்ப்பரேட்களுக்கானதா?
சில சமயங்களில் விளைச்சலின் தரத்தில் குறை சொல்லி மண்டிகள் வாங்க மறுத்திருக்கின்றன என்கிறார் சுக்தேவ். “எங்களிடம் வாங்குவதற்காக மண்டிகளின் அருகேயே பல நாட்களுக்கு நாங்கள் தங்கியிருக்க வேண்டும். அதற்கு பிறகும் கூட, நேரத்துக்கு பணம் வந்து சேராது,” என்கிறார் சுக்தேவ். “அக்டோபர் 2020ல் 200 குவிண்டால் நெல் நான் மண்டிக்கு விற்றேன். 4 லட்ச ரூபாய் அளவு பணம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.”
சிர்விக்ரம்ஜீத் மற்றும் பரம்ஜீத் சொந்தமாக ஏழு ஏக்கர் நிலத்தை கொண்டிருக்கும் திப்திபாவில் நிலைமை கொஞ்சம் வித்தியாசமானது. “அரசின் மண்டி அருகேயே இருக்கிறது. ஆகவே என் விளைச்சலின் பெரும்பகுதியை குறைந்தபட்ச ஆதார விலைக்கே நான் விற்கிறேன். அது நாங்கள் வாழ்வதற்கு மிகவும் முக்கியம்,” என்கிறார் சிர்விக்ரம்ஜீத். சம்பா பருவத்தில் நெல்லும் குறுவை பருவத்தில் கோதுமையும் அவர் விளைவிக்கிறார்.
எல்லையை தாண்டி சைஜானியில் இருக்கும் விவசாயிகள் விற்கப்படாத பயிரை தனியார் வணிகர்களுக்கு விற்கின்றனர். “அவர்களுக்கு குறைந்த விலையில் நாங்கள் விற்கிறோம்,” என்கிறார் சுக்தேவ். மண்டிகள் வாங்காத சமயத்தில் குறைந்தபட்ச ஆதார விலைதான் விவசாயிகளுக்கு அளவுகோலாக இருப்பதாக சொல்கிறார் சிர்விக்ரம்ஜீத். “அரிசிக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு 1800 ரூபாயாக இருந்தால், தனியார் வணிகர்கள் 1400லிருந்து 1500 ரூபாய் வரை கொடுத்து வாங்குகின்றனர்,” என்கிறார் அவர். “அரசு மண்டிகள் அவற்றுக்கான பயன்பாட்டை இழந்துவிட்டால், தனியார் வணிகர்களுக்கு வேலை சுலபமாகிவிடும்.”
அரசு கொண்டு வரும் சீர்திருத்தங்களை விவசாயிகள் விரும்பவில்லை என்கிறார் சுக்தேவ். “மண்டி முறையை பலவீனப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக, அம்முறையை இன்னும் பரவலாக்கி அதிக விவசாயிகளுக்கு சந்தை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.”
புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் மீதான அதிகாரத்தை பெருநிறுவனங்களுக்கு வழங்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது. “தனியார் துறை நுழைவது எப்போதும் நல்ல விஷயம் இல்லை. அவர்களுக்கு ஓர் எளிய விதி இருக்கிறது: என்ன செய்தேனும் லாபமீட்ட வேண்டும். விவசாயிகளை சுரண்டுவதற்கு அவர்கள் யோசிக்கவே மாட்டார்கள்,” என்கிறார் சுக்தேவ்.
விவசாயப் போராட்டங்களின் தொடக்க நாட்களில் தில்லியை நோக்கி ஊர்வலம் சென்றதற்கு பிறகு உத்தரகாண்ட் விவசாயிகள் உத்திகளை பயன்படுத்தத் தொடங்கினர். ஜனவரி மாத முடிவு வரை காசிப்பூரில் தங்குவதற்கென முறைகள் உருவாக்கிக் கொண்டனர். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் 5லிருந்து 10 விவசாயிகள் கிளம்புவார்கள். ஒன்றிரண்டு வாரங்கள் முடிந்து திரும்பி விடுவார்கள்.
விவசாயப் போராட்டங்களின் தொடக்க நாட்களில் தில்லியை நோக்கி ஊர்வலம் சென்றதற்கு பிறகு உத்தரகாண்ட் விவசாயிகள் உத்திகளை பயன்படுத்தத் தொடங்கினர். ஜனவரி மாத முடிவு வரை காசிப்பூரில் தங்குவதற்கென முறைகள் உருவாக்கிக் கொண்டனர். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் 5லிருந்து 10 விவசாயிகள் கிளம்புவார்கள். ஒன்றிரண்டு வாரங்கள் முடிந்து திரும்பி விடுவார்கள்.
“எல்லையில் எங்களின் இருப்பை தொடர்ந்துகொண்டே, எங்கள் நிலங்களில் வேலைகளையும் பார்த்தோம். ஒன்று அல்லது இரண்டு வாரம் தொடர்ச்சியாக நாங்கள் இருப்பதில்லை. எங்களின் ஒவ்வொருவரையும் அது உற்சாகத்துடன் இருக்க வைத்தது,” என்கிறார் 52 வயது சுக்தியோ சஞ்சல் சிங். சைஜானியில் 20 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி. “இந்த வழியின் மூலம் நாங்கள் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் போராட முடியும்.”
குடும்பத்தின் உறுப்பினர் சென்றுவிட்டால், குடும்பத்திலிருக்கும் பிறர் குடும்பத்தை நடத்துவதாக சொல்கிறார் 45 வயது பல்ஜீத் கவுர். “எங்களின் மூன்று மாடுகளை நான் கவனித்துக் கொள்கிறேன்,” என்கிறார் அவர், சைஜானியில் இருக்கும் வீட்டின் முற்றத்தில் பாத்திரங்களை விலக்கிக் கொண்டே.
குடும்பத்தை பார்த்துக் கொள்வது மட்டுமின்றி, சுத்தப்படுத்துதல் சமைத்தல் முதலிய வேலைகளையும் நான்தான் பார்க்க வேண்டும். என்னுடைய 21 வயது மகன் நிலத்தை பார்த்துக் கொள்கிறேன்.”
பல்ஜீத்தின் கணவரான 50 வயது ஜஸ்பால் காசிப்பூருக்கு இரண்டு முறை சென்றிருக்கிறார். கடைசியாக பிப்ரவரி மாத இறுதியிலிருந்து மார்ச் முதல் வாரம் வரை சென்றிருந்தார். அவர் சென்றிருக்கும்போது சரியாக தூங்க முடியவில்லை என்கிறார் பல்ஜீத். “நல்ல விஷயம் என்னவென்றால், மொத்த கிராமமும் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்கிறது. என் கணவர் சென்ற நேரத்தில், என் மகனால் முடியவில்லை எனில் வேறொருவர் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்.”
இத்தகைய ஆதரவும் ஒற்றுமையும்தான் சிர்விக்ரம்ஜீத் மற்றும் பரம்ஜீத் ஆகியோரின் துயர காலத்தில் உதவியாக இருந்தது. “எங்களின் தொழிலால் (விவசாயம்) நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம்,” என்கிறார் சிர்விக்ரம்ஜீத். “எங்களுக்கு தெரியாத பல விவசாயிகள் பஞ்சாபிலிருந்தும் ஹரியானாவிலிருந்தும் உத்தரகாண்டிலிருந்தும் எங்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வந்தனர்.”
“எங்களை சுற்றியுள்ள மக்கள் ஆதரவாக இருப்பதால் இத்துயரத்தை நாங்கள் கடக்க முடிகிறது,” என்கிறார் சிர்விக்ரம்ஜீத். “விவசாய சமூகம் காட்டும் இரக்கத்தில் பாதி இந்த அரசுக்கு இருந்திருந்தாலும், மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கும்.”
தமிழில் : ராஜசங்கீதன்