"எங்களை ஏன் எல்லோரும் இத்தனை வெறுப்புணர்வுடன் பார்க்கிறார்கள்?" இது ஷீத்தலின் கேள்வி. ”ஒரு திருநங்கையாக இருப்பதால் எங்களுக்கு எந்த மாண்பும் இல்லையா?”
ஷீத்தல் இந்த வேதனையை காலம் கொடுத்த கசப்பான அனுபவத்தால் பேசுகிறார். அவருக்கு 22 வயது தான். இதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் நிறையவே புறக்கணிப்பையும் ஒடுக்குமுறையையும் சந்தித்துவிட்டார். பள்ளி தொடங்கி பணியிடம், சாலைகள் என கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கசப்பனுபவம் தான்.
ஷீத்தல் அப்போது ஈச்சல்கரன்ஜியில் உள்ள நேரு நகரில் வசித்தார். அதுதான் அவரது வீடு, அங்குதான் இது தொடங்கியது. அப்போது அவருக்கு வயது 14 இருக்கும். எல்லோரும் அவரை அரவிந்த் என்றே அழைத்து வந்தனர். "நான் 8 அல்லது 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என் வகுப்புத் தோழிகள் போல் பெண்கள் அணியும் உடை அணிய விருப்பம் ஏற்பட்டது. எனக்குள் நடப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் என்னையே அடிக்கடி கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருப்பேன். என் தந்தை எனைக் கண்டு கோபத்தில் திட்டுவார். ’எதற்காக, ஒரு (பெண்ணைப் போல) உன்னை நீயே கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருக்காய். வெளியே சென்று மற்ற ஆண் பிள்ளைகளுடன் விளையாடு’ என்பார். எனக்கு சேலை அணிந்து ஒரு பெண்ணைப் போலவே வாழ விரும்புகிறேன் என்று என் தந்தையிடம் சொன்னபோது அவர் என்னை அடித்தார். என்னை மனநல காப்பகத்தில் சேர்த்துவிடுவதாக எச்சரித்தார். என்னை அவர் அடித்தபோது நான் கதறி அழுதேன்..."
ஷீத்தலின் (அவரது வேண்டுகோளுக்கு இணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடும்பத்தினர் அவரை ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்று தங்கள் மகனின் மீதான சாபத்தை விலக்க பூஜைகள் நடத்தக் கோரியுள்ளனர். "என் அம்மாவோ யாரோ எனக்கு பில்லி, சூனியம் செய்துவிட்டதாகக் கூறினார். என் தந்தை நான் சரியாக வேண்டி ஒரு கோழியைப் பலி கொடுத்தார். (அவர் பழைய பொருட்கள் வியாபாரியாக இருந்தார்) ஆனால், என் பெற்றோருக்கு நான் பிறப்பால் ஓர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக வாழ விரும்புவது புரியவில்லை. அதை நான் சொல்லியும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை".
16 வயதில், ஷீத்தல் வீட்டைவிட்டு வெளியேறினார். தெருவில் கையேந்தியும் கிடைக்கும் வேலைகளைப் பார்த்தும் பிழைத்துவந்தார். அன்றாடம் காலை 10 மணிக்குக் கிளம்பினால் மாலை மயங்கும் வரை பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்துவார். அருகிலுள்ள ஜெய்சிங்பூர், கோலாபூர், சாங்கிலி ஆகிய பகுதிகளுக்கும் சென்று பிச்சை எடுப்பார். தினமும் ரூ.100 முதல் ரூ.500 வரை சம்பாதிப்பார். சில நேரங்களில் பொதுமக்கள் திருமணம், பெயர் வைக்கும் வைபவம், மதச் சடங்குகள் அல்லது வேறு சில நிகழ்ச்சிகளுக்காக கூட்டமாக 4, 5 திருநங்கைகளை அழைப்பர். அப்படியான நிகழ்வுகளில் அவர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரை பணம் கிடைக்கும்.
ஷீத்தலின் குடும்பம் அவரை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றது. ‘பில்லி சூனியம் வைத்துவிட்டதாக அம்மா சொன்னார். அப்பா கோழியை காவு கொடுத்தார். நான் ஏன் பெண்ணாக விரும்புகிறேன் என்று அவர்களுக்கு புரியவில்லை’
ஆனால் அவர் விரும்பியது போல் ஒரு பெண்ணாகவே வாழ்வது அவ்வளவு சுலபமாக இல்லை. அவர் செல்லும் இடமெல்லாம் சமூகப் பாகுபாடு அவரைத் தொடர்ந்தது. "நான் சந்தைக் கடைகளில் காசு கேட்டுச் சென்றால், எல்லோரும் எனது சேலை முந்தானையைப் பிடித்து இழுப்பார்கள். சிலர் பாலியல் ரீதியான சமிக்ஞைகளை செய்வர். சிலர் எங்களைத் திருடர்களாகவே பாவித்து சந்தேகக் கண்களுடன் பார்ப்பார்கள்". "வீட்டிலும்கூட சில இரவுகளில் அக்கம்பக்கத்திலிருக்கும் ஆண்கள் கதவைத் தட்டி எங்களை உறவுக்கு அழைப்பார்கள். நான் தனியாக வாழ்கிறேன், எப்போதும் பயத்தில் இருப்பேன்."
ஷீத்தல் தனது வீடு என்று குறிப்பிடும் இடம் ஈச்சல்கரன்ஜியில் ஷாஹாபூர் எனும் பகுதியில் ஒரு சேரியில் இருக்கிறது. அந்த வீட்டை வாடகைக்குப் பெறுவதற்கே ஷீத்தல் பெரும்பாடு பட வேண்டியிருந்தது. பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறிய புதிதில், ஷீத்தல் பேருந்து நிலையங்களில் தான் தூங்குவார். "நான் வசிக்கும் வீட்டுக்கு ரூ.2000 மாத வாடகை கொடுக்கிறேன். ஆனால், உண்மையில் அந்த வீட்டில் ஒரு ஆடு,மாடு கூட தங்கத் தயங்கும். அப்படித்தான் அந்த அறையின் சூழல் இருக்கும். பருவமழை காலம் வந்துவிட்டால், வீட்டுக்குள் மழை நீர் புகுந்துவிடும். அப்போதெல்லாம் பேருந்து நிலையம் எனக்கு மீண்டும் வீடாகிவிடும். நான் இருக்கும் வீட்டுக்கு மாத வாடகையைத் தவறாமல் கொடுக்கிறேன். ஆனாலும் கூட எனக்கு தங்க நல்லதோர் அறை கிடைப்பதில்லை. ஒரு நல்ல வீட்டில் வசிக்க வேண்டும் என்றெனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால், என்னைப் போன்றோருக்கு வீடு வாடகைக்குத் தர யாரும் விரும்புவதில்லை. எங்களது சொந்த குடும்பத்தினரும், நான் சார்ந்த சமுதாயமும் என்னைப் புறக்கணித்தால், என் போன்றோர் எங்கு செல்வோம்?”
ஷீத்தலின் நீண்ட நெடிய போராட்டம், 2.88 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாபூர் மாவட்டம் ஹட்கனன்கலே தாலுகாவில் உள்ள ஈச்சல்கரன்ஜி என்ற டவுனில் வாழும் ஒட்டுமொத்த மூன்றாம் பாலினத்தவரின் போராட்டங்களைப் பற்றிப் பேசுகிறது. வீடு, பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள், வசிப்பிடங்கள், தெருக்களில் அன்றாடம் அவர்கள் சந்திக்கும் போராட்டங்களைப் பற்றிப் பேசுகிறது.
வீட்டில், குடும்பத்தினர் கோபம், நம்பிக்கையின்மை, புறக்கணிப்பு, கட்டாயத் திருமணம் என்று பல்வேறு விதத்திலும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். ஷகினா (அவர் பெண் அடையாளத்துக்கான வைத்துக் கொண்ட பெயர்), அவரது குடும்பத்தினரிடம் தான் பெண்ணாக வேண்டும் என்று சொன்னபோது, அவர்கள் நீ ஆண், ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றுள்ளனர். சமூக நெருக்கடிக்குப் பணிந்து பயந்து ஷகினா 27 வயதில் திருமணம் செய்துகொண்டார். நேரு நகரில் உள்ள வீட்டில் அவர்/அவள் ஓர் ஆணாகவே குடும்பத்திலும் சமூகத்திலும் வாழ்கிறார்.
"ஆனால், எப்போது எங்கு திருநங்கைகளுக்கான விழா நடந்தாலும் நான் ரகசியமாக சேலை அணிந்து கொண்டு சென்றுவிடுவேன்", என்று சொல்லும் ஷகினாவுக்கு வயது 33. "வீட்டில் நான் ஒரு தந்தையாக, கணவராக வாழ வேண்டியிருக்கிறது. இதனால் ஒரு பெண்ணாக வாழ வேண்டும் என்ற எனது ஆசை முழுமையாக நிறைவேறவில்லை. மனதளவில் ஒரு பெண்ணாகவும், உலகத்திற்காக ஓர் ஆணாகவும் நான் இரட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்."
ஷகினா போல் அல்லாமல், சுனிதா (அவரின் சொந்தப் பெயர் அல்ல), 30, வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டத் திருமணத்தை எதிர்த்தார், ஷகினா போல் உலகத்தார் மத்தியில் ஓர் ஆணாகவே வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். சுனிதாவுக்கு இதை அவரின் குடும்பத்தாரிடம் சொல்லும் துணிச்சல் இல்லை. அவரது தந்தை மளிகைக் கடை வைத்துள்ளார். அவரது தாய் இல்லத்தரசி. "அவர்கள் என்னை திருமணத்துக்காக நிர்பந்தித்தனர். ஆனால், அப்படித் திருமணம் செய்து நான் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்க முடியும்? அதனால், வீட்டைவிட்டு வெளியேறினேன். எங்களது (மராத்தா) சமூகத்தினர் மத்தியில் நான் திருநங்கை என்பது தெரியவந்தால் அது என் குடும்ப கவுரவத்தைக் குறைத்துவிடும், எனது சகோதரிகளுக்குத் திருமணம் நடக்காது, எனது குடும்பமே வருந்தும். அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் எனத் தெரியாது, அதனால் வீட்டைவிட்டு வெளியேறினேன்."
சுனிதா வீட்டைவிட்டு வெளியேறும்போது அவருக்கு வயது 25. நேருநகரில் உள்ள ஒரு சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். "அதன் பின்னர் என்னைப் போன்றோர் நிறைய பேரை நான் சந்தித்துவிட்டேன்". "ஆனால் வாழ்க்கையை நடத்த அவர்கள் பிச்சையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தது. அவர்களுக்கு வேலை தர யாரும் தயாராக இல்லை. வீடு தரவும் விரும்பவில்லை. அவர்களின் போராட்டங்களைப் பார்த்தபின்னர் நான் விரும்பியவாறு சேலை அணிந்து கொள்ள துணிச்சல் இல்லாமல் போனது. இப்படியே வாழ்க்கையை நகர்த்துவது என்பது மிகவும் கடினம்"
ஒரு சில குடும்பங்களில், சிறிதளவேனும் சகிப்புத்தன்மை இருக்கிறது. 13 வயது இருக்கும்போது, ராதிகா கோசாவி, இப்போது 25, (கட்டுரையின் முகப்புப் படத்தில் இருப்பவர்), தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்தார், அதை அவருடையை தாய் மற்றும் இரண்டு சகோதரிகளும் ஆரம்பத்தில் எதிர்த்தனர். அவருடைய தந்தை அவருக்கு 10 வயது இருக்கும்போதே இறந்துவிட்டார்.
"நான் எனது தலைமுடியை என் அம்மாவைப் போல் ஜடை பின்னிப்போட்டுக் கொள்ள விரும்பினேன், எனது சகோதரிகளின் உடைகளைப் போட்டுக் கொள்ள விரும்பினேன், காஜல், லிப்ஸ்டிக் எனக்குப் பிடித்திருந்தது. என் சகோதரியைப் போல் வீட்டு வேலைகள் எல்லாம் செய்தேன். ஆனால், எனக்கு ஏன் இப்படியெல்லாம் செய்யத் தோன்றுகிறது என்பது மட்டும் புரியவில்லை," என்கிறார் ராதிகா (முந்தையை பெயர் சந்தீப்). இவரும் நேருநகரில் தான் வசிக்கிறார். அவர் கூறும்போது, "நான் ஒரு பெண்ணாக வாழ விரும்புவதை எனது அம்மாவிடம் தான் சொன்னேன். அவர் நான் சொன்னதைக் கேட்டு பயந்துபோனார். அவர் அடக்கமுடியாமல் அழுகையை வெளிப்படுத்தினார். எனது சகோதரிகளோ, ‘அண்ணா நீ எங்களுக்கு ஒரே சகோதரன். நீ ஆண்மகனைப் போல் வாழ வேண்டும். திருமணம் செய்து கொண்டு ஒரு அண்ணியை இந்த வீட்டுக்கு அழைத்துவர வேண்டும், ஒரு வேலை தேடு- இதையெல்லாம் விட்டுவிடு, உன் புத்தி ஏன் இப்படி சேலை அணியச் சொல்லி முட்டாள்தனம் செய்கிறது’ என்றனர். எங்கள் உறவினர்கள் என் அம்மாவிடம் வந்து என்னை வீட்டு விட்டு வெளியேற்றச் சொன்னார்கள். “ ‘கொஞ்ச நாட்கள் வெளியே அழுது திரிந்தால் திருந்திவிடுவான். பிறகு வீட்டுக்கு வந்துவிடுவான்’ என்று அவர்கள் சொன்னார்கள்.’’
"நான் என் அம்மாவிடம் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கூறினேன்" என்கிறார் ராதிகா. ஆனால், வீட்டு வேலை செய்பவராக இருக்கும் அவரின் தாய் சுமனின் மனம் அதற்கு ஒப்பவில்லை. "எனது மகனை நானே எப்படி வெளியேற்றுவேன்?" என்று என்னிடம் அவர் வினவினார். "அவன் எங்காவது சென்று கெட்ட சகவாசத்தில் ஈடுபடலாம். அந்த ஆபத்துக்கு, அவன் எங்களுடனேயே இருந்துவிடட்டும் என்று முடிவு செய்தோம். எங்களின் உற்றார் உறவினர் எல்லாம் எங்களை விமர்சித்தனர். ஆனால், நாங்கள் எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டோம்."
‘நான் அவர்களது சகோதரன் என்று யாரிடமும் சொல்ல கூடாது என்கிறார்கள். திருமணமான எனது சகோதரிகளின் வீடுகளுக்கோ விசேஷங்களுக்கோ நான் செல்வதில்லை,’ என்கிறார் பிச்சையெடுத்து வாழும் ஆலியா. ‘யாரும் எங்களை மனிதர்களாக பார்ப்பதில்லை.’
ஆலியா ஷேக்கும் நேரு நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார். "எனக்கு இரண்டு சகோதரர்கள். இருவரும் மூத்தவர்கள். அருகிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். என்னைப் பொதுவெளியில் பார்த்தால், நான் திருநங்கை என்பதால் அவர்களின் சகோதரன் என்று சொல்ல அவமானப்படுகிறார்கள். நாங்கள் உனது சகோதரர்கள் என்று யாரிடமும் சொல்லிவிடாதே என சொல்வார்கள். எனது சகோதரிகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவர்கள் மாமியார் வீட்டில் இருப்பதால், அவர்களின் வீட்டு விஷேசங்களுக்கு நான் செல்ல மாட்டேன். அவர்களும் நான் வருவதை விரும்புவதில்லை".
வீட்டில் இப்படியான உணர்வு உரசல்கள், வீட்டுக்கு வெளியே அழுத்தம் என்ற சூழலில் கல்வி என்பது மிகப்பெரிய சவால். அதேபோல் சற்றே கவுரவமான முறையில் சம்பாதிப்பது என்பது இன்னும் கடினம். ஷீத்தல் வீட்டை விட்டு 16 வயதில் வெளியேறியபோது 12-வது படித்திருந்தார். "எனக்கு மேலே படிக்க வேண்டும் என்று ஆசை. எனக்கும் சுயமரியாதை இருக்கிறது. எனக்கும் புத்திக் கூர்மை இருக்கிறது. அதனால், தெருவில் பிச்சை எடுத்து சுற்றித்திரிய நான் விரும்பவில்லை. நன்றாகப் படித்து ஓர் அலுவலகத்தில் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது ஆசை."
ஷகினா- ஒரு திருநங்கையாக முழுமையாக மாறாமல் ஆணாகவே வாழ்ந்ததின் விளைவாக மராத்தி இலக்கியத்தில் முதுகலை பட்டமும் பி.எட். பட்டமும் பெற்றார். (அவர் பட்டம் வாங்கிய பல்கலைக்கழகத்தின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை). ஆனால், அந்தப் பட்டத்தைப் பெறுவது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஷகினாவுக்கு கல்லூரி செலவுக்கு பணம் தேவைப்பட்டது. அதற்காக சில ஆண்டுகள் அவர் பாலியல் தொழிலாளியாகப் பணியாற்றினார். அவரின் வகுப்புத் தோழர்கள் சிலருக்கு அது தெரியவரவே அவர்களும் மிரட்டி பாலியல் இச்சைக்குப் பணிய வைத்தனர். சில ஆசிரியர்களும் கூட காலி வகுப்பறைக்கு அவரை அழைத்து சில பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர். "நான் பெண் போன்ற உடை அணியாவிட்டாலும் கூட, எனது குரலும் எனது சில நடவடிக்கைகளுமே நான் திருநங்கை என்பதைக் காண்பித்துக் கொடுத்துவிட்டது" என்கிறார். "எனக்கு நேர்ந்த வன்கொடுமைகள் என்னை விரக்தியில் ஆழ்த்தியது. தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி அடிக்கடி யோசிக்கத் தொடங்கினேன். ஆனால், எனது மூன்று சகோதரிகளையும் திருமணம் செய்து கொடுத்த நிலையில் என் தந்தை (தச்சராக பணிபுரிபவர்) கடனில் ஆழ்ந்தார். நான் பாலியல் தொழிலாளியாக ஈட்டிய பணத்தைக் கொண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டேன். இருந்தாலும் என்னை பாலியல் தொழிலாளியாக மட்டுமே பார்த்தனர்."
ஷகினா தற்போது ஈச்சலகரன்ஜியில் உள்ள, எச்ஐவி, டிபி பாதிப்பினால் அவதிப்படுவோர்க்கும் உதவும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மாதம் ரூ.9000 சம்பாதிக்கிறார்.
ராதிகாவுக்கு, வீட்டில் ஆதரவு இருந்தாலும் வேலை தேடுவது மிகவும் கடினமாக இருந்தது. மூன்றாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்ட ராதிகா தந்தையைப் போலவே மறுசுழற்சிக்காக இரும்பு, பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்தார். இல்லாவிட்டால் செங்கல் சூளையில் பணியாற்றினார் "எனக்கு 16, 17 வயது இருக்கும்போது நான் சேலை அணிய ஆரம்பித்தேன், எனக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை" என்றார். அதனால், இப்போதெல்லாம் தினமும் 80 முதல் 100 கடைகள் ஏறி இறங்குகிறார். ஒரு கடையில் ரூ.1 முதல் சில கடைகளில் ரூ.10 வரை அவருக்குக் கிடைக்கும். காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகளில் ஏறி இறங்கினால் அதிகபட்சமாக ரூ.125 கிடைக்கும். அதை அவர் தனது குடும்பத்தினருக்காகக் கொடுத்துவிடுகிறார்.
சுனிதாவிற்கு ஒருவழியாக வேலை கிடைத்துவிட்டது. ஈச்சலங்கரன்ஜியில் ஒரு ஓட்டலில் பாத்திரம் கழுவுதல் மற்றும் சுத்தம் செய்யும் வேலை. அத்தோடு நாள் ஒன்றுக்கு ரூ.50 சம்பளமும் இரு வேளை உணவும் கிடைத்தது. ஆனால், அதற்கு அவர் தனது திருநங்கை அடையாளத்தை மறைக்க வேண்டியிருந்தது. தற்போது அவர் தனது நண்பர் ஒருவர் மூலம் ரூ.25,000 கடனுதவி பெற்று ஒரு சிறிய தொழிலைத் தொடங்கியுள்ளார். (அவரின் கடை பெயர் உள்ளூர்வாசிகளுக்குத் தெரியவேண்டாம் என்பதற்காக மறைக்கிறோம்)
பிழைப்பதற்கு என்னதான் வழி தேடினாலும், எங்கள் மீதான வன்கொடுமையும் பாகுபாடும் தொடரத்தான் செய்கிறது. "சிலர் எங்கள் மீது இறை ஆசி இருப்பதாகக் கருதி எங்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவர். ஆனால் வேறு சிலர் எங்களை மிக அதிகமாக துன்புறுத்துவர்" என்கிறார் ராதிகா. "கடைக்காரர்கள் எங்களைக் கண்டாலே தொலைந்துபோ என்றே திட்டுவார்கள். எல்லா துன்பத்தையும் பசியாற்றுவதற்காக பொறுத்துக் கொள்கிறேன். வெயிலிலும் வெக்கையிலும் நாங்கள் சுற்றித் திரிவது எல்லாம் வெறும் 150 ரூபாய்க்காகவே. சிறு நகரங்களில் என்னைப் போன்றோர் என்னதான் பிச்சை எடுத்து சம்பாதித்து விடுவார்கள். எங்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. நாங்கள் எங்காவது செல்ல விரும்பினால் ஆட்டோக்காரர்கள் எங்களை சவாரி ஏற்ற மாட்டார்கள். பிச்சையெடுப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை, ஆனால் எங்களுக்கு யாரும் வேலை கொடுக்காத போது என்னதான் செய்ய முடியும். ரயில்களில் எங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவார்கள். எங்கள் அருகே யாரும் அமரக்கூட மாட்டார்கள். ஏதோ துர் ஆத்மாவைப் போலவே எங்களைப் பார்ப்பார்கள். இதை ஒவ்வொரு நாளும் பொறுத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமானது. இதனாலேயே மூன்றாம் பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புகைபிடிக்கவும், மது அருந்தவும் செய்கின்றனர்."
நிறைய தருணங்களில் காவல்துறையினர் எங்களுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து எங்களுக்கு கொடுமைகளையே செய்கின்றனர். எங்களை துன்பப்படுத்திய இளைஞர்கள் மீது நாங்கள் புகார் கொடுத்தபோது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்களிடம் லஞ்சம் கேட்பார்கள் என வேதனையுடன் கூறினார் ஷீத்தல். அதேபோல் ஷீத்தல் ஒருமுறை காவல் நிலையம் சென்றபோது போலீஸார் அவரிடம், "நீங்கள் தான் அந்த இளைஞர்களைப் பின் தொடர்ந்து கட்டாயப்படுத்தி காசு கேட்டிருப்பீர்கள்." என்றனர். அதுவே போலீஸை நாடும் திருநங்கை ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்துவிட்டால், லஞ்சப் பணம் மிக அதிகமாகிவிடும். அதைக் கொடுக்காவிட்டால் சிறை செல்ல நேரிடும் என்ற எச்சரிக்கையும் வரும். "நீங்கள் பாலியல் தொழிலாளிகள். நீங்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்வதால் மக்கள் உங்களைத் துன்பப்படுத்துகின்றனர் என்று காவலர்கள் விளக்கமும் சொல்வார்கள்" என்கிறார் ஷீத்தல்.
2016-ல், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மக்களவையில் அங்கீகாகரம் பெற்றது. இந்த சட்டம் மூன்றாம் பாலினத்தவரை மற்றவர்கள் என்ற அடையாள வரம்புக்குள் கொண்டு வந்தது. அதேபோல், மூன்றாம் பாலினத்தவர் இந்தியப் பிரஜைக்கு உரித்தான அத்தனை உரிமைகளயும் பெறத்தகுதியானவர் என்று வரையறுத்தது. அதுதவிர, மாநில பாடவாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2% இட ஒதுக்கீடு வழங்கியது. சிறப்பு வேலைவாய்ப்பு மையங்கள் அமைக்கவும் வழி செய்தது. மூன்றாம் பாலினத்தவர் மீதான வெறுப்புப் பேச்சுகளுக்கு சில அபராதங்களையும் நிர்ணயித்தது.
ஈச்சல்கரன்ஜி நகராட்சி கவுன்சில் கடந்த 2018 மே மாதத்தில் ஒரு திட்டத்தை அறிவித்தது (இன்னும் அமலுக்கு வரவில்லை). கவுன்சிலின் தலைமை அதிகாரி கூறுகையில், "மூன்றாம் மாநிலத்தவர் நலனுக்கு ரூ.25 லட்சம் ஒதுக்க அந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது" என்றார்.
ரஸல் மற்றும் வழக்கறிஞர் தில்சாத் முஜாவர் ஆகியோர் மூன்றாம் பாலினத்தவர் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியனவற்றைப் பெற உதவுகின்றனர். இதுவரை 60 பேருக்கு ரேஷன் கார்டு வாங்கிக் கொடுத்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் அடிக்கடி தங்களின் பெயரை மாற்றுபவர்களாகவும், ஒரே முகவரியில் வசிக்காதவர்களாகவும் இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு அடையாள ஆவணங்கள் பெறுவதில் சிக்கல் இருக்கிறது. இவையெல்லாமல் இல்லாமல், அவர்களால் அரசாங்க நலத்திட்டங்களால் பயன்பெற முடியாது.
இப்படியான சில சிக்கல்களால் தான் அவர்களின் எண்ணிக்கையையும் உறுதியாகக் கணக்கிட முடிவதில்லை என்கிறது எச்ஐவி / எய்ட்ஸ் விழிப்புணர்வை மேற்கொள்ளும் மைத்ரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். ஈச்சல்கரன்ஜியில், இந்த அமைப்பு 250-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவருக்கு உதவுகிறது.
"எங்களை மனிதகர்களாகவே பார்க்காதவர்கள் வசிக்கும் இவ்வுலகில் நாங்கள் எண்ணற்ற போராட்டங்களை சந்தித்துவிட்டோம்" எனக் கூறுகிறார் ஆலியா.
வழக்கறிஞர் தில்ஷாத் முஜாவருக்கு நன்றி. அவர் என்னை மூன்றாம் பாலின சமூகத்தினருடன் அறிமுகப்படுத்தினார். புகைப்பட உதவி செய்த சங்கெட் ஜெயின் மற்றும் இந்த நேர்காணலுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.
தமிழில்: மதுமிதா