அரசே, பதில் கூறு!
ஓ அரசே! பதில் கூறு!
பதில் கூறு!
தன் கருப்பையில் பிள்ளையை சுமந்து
வெற்றுக்காலுடன்
பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நடந்தே
ஏன் அந்த கர்ப்பிணி ஊர் திரும்புகிறார் ?
என்று தல்லேஸ்வர் டண்டி பாடுகிறார். “எனது ராப் பாடல்கள் மூலம் எனது வேதனைகளையும், ஆத்திரத்தையும் நான் பாடுகிறேன்” என்று அவர், தான் எழுதி, பாடிய அரசே, பதில் கூறு என்ற பாடல் குறித்து கூறுகிறார்.
“இந்தியாவில் ஊரடங்கு துவங்கிய நாள் முதல், நாட்டின் ஏழை மக்கள் பாதிக்கப்பட ஆரம்பித்துவிட்டனர்” என்று அவர் மேலும் கூறுகிறார். “தொழிலாளர்கள், தங்கள் வேலையை இழந்து, வீடிழந்வர்களாகி, பல நாட்களாக பட்டினியும் கிடக்கின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் வெற்றுக்காலுடன், அவர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நடந்து செல்ல வற்புறுத்தப்பட்டுள்ளனர். அரசால் இதையெல்லாம் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு உதவி வழங்க முடியாது என்று இல்லை. ஆனால், மாறாக, இந்தியாவின் ஏழைகளை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள். இவற்றையெல்லாம் பார்த்து நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அப்போதுதான் நான் அரசை கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.”
இந்த பாடல் கோஸ்லி அல்லது சம்பல்புரி மொழிப்பாடலாகும். தல்லேஸ்வர், ஒரு சிறந்த ராப் பாடகர் மற்றும் தாலாட்டு பாடல்கள் பாடுபவர். இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் பாடுவார். ஆனால், அவரது கோஸ்லி ராப் பாடல்கள் ஒடிஷாவின் இளம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
கலாஹந்தி மாவட்டம், போர்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தல்லேஸ்வர் (27). அவரது கிராமத்தில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பவானி பாட்னா நகரில் உள்ள அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித்தவர். அவரது குடும்பத்தினர் டாம் என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்.அவரும், தாயார் பிரமிளா மட்டுமே வீட்டில் உள்ளனர். அவரது தாயார் ஒரு விவசாயி மற்றும் விறகு சேகரிப்பவர். மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் தொகையான ரூ. 500 பெறுகிறார். அவரது தந்தை, நிலாமனி டண்டி, விவசாயி மற்றும் உள்ளூர் காவல் நிலைய உதவியாளராக இருந்தவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
அரசு நிவாரணம் வழங்க விரும்பாமல் இருக்கலாம். ஏழைகளை ஏழைகளாகவே இருக்கட்டும், இல்லையென்றால் யாரும் அரசுக்கு ஆதரவுகொடுக்கமாட்டார்கள்
அவர்கள் குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது என்று தல்லேஸ்வர் கூறுகிறார். ஆனால், விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் தனது தாய்க்கு அறுவைசிகிச்சை செய்வதற்காக, அந்நிலத்தை 2014ம் ஆண்டு வங்கியில் ரூ.50 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளனர். அந்த கடன் வட்டியுடன் தற்போது ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.
“நிலம் அடமானம் வைக்கப்பட்டிருந்தாலும், நாங்கள் அதில் தற்போதும் நெல் பயிரிட்டு வருகிறோம். நாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்ட் வைத்துள்ளோம்” என்று கூறுகிறார். வருமானத்திற்காக தல்லேஸ்வர், போர்டாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு தனிப்போதனை வகுப்புகள் நடத்தி வருகிறார். அருகில் உள்ள கட்டிடப்பணிகளில் பணியாற்றி வருகிறார்.
அவர் ராப் பாடல்கள் பாடுவதை கல்லூரிகளில் காலங்களில் துவக்கினார். நான் கதை மற்றும் கவிதை போட்டிகளில் கலந்துகொண்டேன் என்று அவர் கூறுகிறார். நான் எழுதியதை அனைவரும் பாராட்டினர், எனது எழுத்து நடைமுறையை பிரதிபலிப்பதாக இருந்ததாக அவர்கள் கூறினர். அது என்னை ஊக்கப்படுத்தியது. எனவே நான் தொடர்ந்து எழுதினேன். எனது கதைகள் மற்றும் கவிதைகள் வாரப்பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டபோது மகிழ்ச்சியடைந்தேன். நான் நாடகத்தில் நடித்து மக்களை உற்சாகப்படுத்தினேன். நாடோடி பாடல்களையும் பாடத்துவங்கினேன்.
தல்லேஸ்வரும் வேலைக்காக இடம்பெயர்ந்தார். படித்து முடித்தவுடன் 2013ம் ஆண்டு அவர் ராய்பூருக்குச் சென்றார். “சில நண்பர்கள் ஏற்கனவே அங்கு வேலையிலிருந்தனர். நானும் அங்குள்ள உணவகங்களில் மேஜை துடைக்கும் பணி செய்யத்துவங்கினேன். மாதம் ரூ.3 ஆயிரம் வரை சம்பாதித்தேன். உணவகம் மூடியவுடன் எங்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்கப்பட்டது. என்னைப்போன்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அது சிறந்தது. நான் சில காலம் தினசரி நாளிதழ் வினியோகமும் செய்திருக்கிறேன்.”
வருமானத்திற்காக பல்வேறு பணிகள் செய்தபோதும், பாடல்கள் பாடும் எனக்கு விருப்பமான ஒன்றை அவர் கைவிடவுமில்லை. “எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும்போதெல்லாம் நான் பயிற்சி எடுத்துக்கொள்வேன். நான் பாட்டு பாடும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளேன். அதை மக்கள் பார்க்கவும் துவங்கியுள்ளனர். 2014ம் ஆண்டில் ஒரு நாள், எனக்கு சண்டிகரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. ஒரு ராப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார்கள். அது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அங்கு என்னைப்போல் பாடல் பாடும் குழுவினர் இருந்தனர். நாங்கள் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி நடத்தினோம். போட்டிகளில் பங்கேற்றோம். அங்கு நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று அவர் கூறுகிறார்.
2015ல் தல்லேஸ்வர் புவனேஸ்வருக்குச் சென்று அவரது அதிர்ஷ்டத்தை முயற்சித்துப்பார்த்தார். “பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், ஸ்டுடியோக்கள் மற்றும் பல்வேறு நபர்களை சந்தித்தேன். ஆனால், அங்கெல்லாம் நிராகரிக்கப்பட்டேன்” என்று அவர் கூறுகிறார். பின்னர் அவர் தனது கிராமத்திற்கு திரும்பிவிட்டார். அங்கு அவர் தற்போது, பாடல் எழுதியும், பாடியும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
“ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், நான் புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலையை பார்க்கிறேன். ஒரு புலம்பெயர் தொழிலாளியாக, நான் எழுதி, பாடி இந்தப்பாடலை முகநூல் பக்கத்தில் மே 21ம் தேதி பதிவேற்றினேன். நான் அங்கு நேரலையில் மற்றவர்களுடனும் பேசுவேன்” என்று கூறினார். “பெரும்பாலானோர் எனது பாடல்களை விரும்பியுள்ளனர். மேலும், என்னை பாடச்சொல்லி உற்சாகப்படுத்தியுள்ளனர்” என்று அவர் கூறுகிறார். ஒடிசாவைத்தவிர, சட்டிஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து கூட வந்து இணைகிறார்கள் என்று அவர் கூறுகிறார். தல்லேஸ்வர் அண்மையில் தனது பாடல்களை யூடிபிலும் பதிவேற்ற துவங்கியுள்ளார்.
“அரசு நிவாரணம் வழங்க விரும்பாமல் இருக்கலாம். ஏழைகளை ஏழைகளாகவே இருக்க அனுமதிக்கிறது. நிவாரணம் வழங்காவிட்டால், யாரும் அரசுக்கு ஆதரவுகொடுக்கமாட்டார்கள்” என்று அவர் கூறுகிறார். “ஆனால், நாம் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும். இது வறுமையைப் பற்றியது, அது நமது வாழ்வின் அங்கம்.”
அண்மையில், சில உள்ளூர் ஸ்டுடியோக்கள் அவரை அழைத்து, அவரது இசையை பதிவு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளனர். இது ஊரடங்கு முடிந்து நடக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.