மாறுபட்ட வடிவங்கள் மற்றும் பூச்சு ஓவியங்கள் கொண்ட கலையால் அறியப்பட்டவர்கள் வர்லிகள். ஆனால், வட மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் மரம், கற்கள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கொண்ட அவர்களின் நடுத்தரமான வீடுகள் கொண்ட குடியிருப்பில் அக்கலைகளை செய்யாமல் அச்சமூகத்தினர் வாழ்கிறார்கள்.
“ஒரே ஒரு வர்லி கலைஞர்தான் இங்கு இருக்கிறார்“ என்று 43 வயது ஆஷா காலே கூறுகிறார். அவர் ராவல்பாடாவில் வசிப்பவர். “எஞ்சிய நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்க்கைக்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம்“. ஆஷா மற்றும் அவரது இரு சகோதரர்களும் ஓவியங்கள் வரையக் கற்றுக் கொள்ளவில்லை. “அது முக்கியம் என நாங்கள் கருதவில்லை“ என்று ஆஷா கூறுகிறார்.
25 வயது நிறைந்த தினேஷ் பாராப் என்ற ஒரே ஒரு கலைஞர்தான் இருக்கிறார். சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா நவபடாவில் உள்ள அவரது குடும்பத்துடன் வசிக்கிறார். “வர்லிகள் அவர்களின் சொந்தக் கலையில் ஆர்வமின்றி உள்ளார்கள்“ என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார். தினேஷ் அவரது பாட்டியிடம் இருந்து இக்கலையை கற்றுக்கொண்டார். அவரது தாய் ஷாமு பால்வாடியில் பணி செய்கிறார். அவரது தாயிடம் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டார். “ஆனால், இதை பழகிக்கொள்வதற்கு எனது தாய் எனக்கு நேரம் கொடுக்கவில்லை. ஏனெனில் எங்களிடம் பணம் இல்லை“ என்று அவர் கூறுகிறார்.
“இதற்கிடையில் நீண்ட காலமாக தேசியப் பூங்காவில் உள்ள வர்லிகள் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளார்கள்“ என்று ஆஷா கூறுகிறார். “அவர்கள் எங்களை எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றுவோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் என்ன செய்வோம்? நாங்கள் எங்களுக்கு தெரியாத இடத்தில் வீடு கட்டிக்கொள்ள வேண்டும்“. ஆஷாவின் குடும்பத்தினர் இந்த நிலத்தில் 7 தலைமுறைகளாக வசித்து வந்தாலும் இதுதான் நிலை. “அவர்கள் எங்கள் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக ஏதோ உதவி செய்வது போல எங்களுக்கு சிறிய வேலைகளைத் தருவது என்னை ஆத்திரமூட்டுகிறது“ என்று அவர் கூறுகிறார்.
சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் பல வர்லிகள் பாதுகாப்பாளர்களாகவும், காவலாளிகளாகவும், தினக்கூலித் தொழிலாளர்களாகவும், தோட்டக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பூங்காவிற்குள் வசிக்கலாமா என்ற விவாதம் 1997ம் ஆண்டு நீதிமன்ற ஆணை வழங்கப்பட்டது முதலே நடந்துகொண்டே இருக்கிறது
அங்கு தொழிலாளர்களாக வேலை வழங்கப்பட்டவர்களுள் ஆஷாவின் கணவரும் ஒருவர். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஆஷா, சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவிற்குள்தான் பிறந்தார். அவருக்கு 5 வயது துவங்கியது முதல், அவரது தாயுடன் விறகுகள் மற்றும் காய்கறிகள் விற்பதற்கும் போரிவலி சந்தைக்கு சென்றுவிட்டார். பதின் வயதுகளில் தொழிற்சாலைகளில் வேலை செய்தார். 2001ம் ஆண்டு முதல் பூங்காவில் இயற்கை தகவல் மையத்தில் தோட்ட வேலைகள் செய்து வருகிறார். சுத்தம் செய்வது, பயணிகளின் கேள்விகளுக்கு பதில் கூறுவது என்று 10 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்கிறார். அவருக்கு மாதம் ரூ.7 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது.
சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா பகுதிகளில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை வர்லி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். அது கிட்டத்தட்ட 103 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. 1950ம் ஆண்டு வன நிலத்தின் கீழ் கிருஷ்ணகிரி தேசியப் பூங்கா நிறுவப்பட்டது. அதனுடன் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலத்துடன் அது 1968ம் ஆண்டு போரிவாலி தேசிய பூங்காவானது. 1981ல் அது சஞ்சய் காந்தி தேசிய பூங்கா என்று பெயர் மாற்றப்பட்டது. வர்லிகள் பட்டியல் பழங்குடிகளாவர். வர்லி என்று மக்கள்தொகை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்கள் நலசுபாரா, ஜாவார், தஹாணு மற்றும் துலே உள்ளிட்ட மஹாராஷ்ட்ராவின் மற்ற பகுதிகளிலும், குஜராத், தாதர் நாகர்ஹவேலியிலும் வசிக்கிறார்கள்.
பல தலைமுறைகளாக இங்கு வசிப்பதற்கான ஆதாரம் ஆஷாவிடம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மும்பை நகராட்சியின் முறையான வரி ரசீதுகள் 1968 முதல் உள்ளன. “நாங்கள் இங்கு மாடி வீடு கட்டி வசிப்பதற்கு எங்களுக்கு அனுமதியில்லை. எங்களில் பெரும்பாலானோருக்கு கழிவறை வசதிகள், கேஸ் இணைப்பு அல்லது வீடுகளில் தண்ணீர் வசதி ஆகியவை இல்லை.”
கேல்டாப்படாவில் வசிக்கும் லட்சுமி வார்ஹண்டே, ஆஷா கூறும் அனைத்து புகார்களையும் வழிமொழிகிறார். அவரது குடியிருப்பில் கழிவறை வசதிகள் இல்லாதது ஒன்றுதான் அவருக்கு பெரிய குறை. அதனால் பெண்கள் காலைக்கடன்களை முடிப்பதற்கு காட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது. 60 வயதான லட்சுமி பூங்காவை சுத்தம் செய்யும் வேலை செய்கிறார். மாதம் ரூ.800 சம்பாதிக்கிறார். அவரது மகனைச்சார்ந்து வாழ்கிறார். அவரது மகன் பூங்காவின் சவாரிப் பகுதியில் பராமரிப்பு பணியாளராக உள்ளார்.
இங்குள்ள மற்ற குடும்பத்தினரைப்போல், வார்கண்டேசும் பொதுத் தண்ணீர் குழாயையே பயன்படுத்துகிறார். விறகடுப்பில்தான் சமைக்கிறார். பெரும்பாலான குடும்பத்தினரைப்போல் அவர்களும் மின்நிறுத்தம் செய்யப்படும் என்ற அச்சத்திலே வாழ்கிறார்கள். அவர்கள் வனத்துறையினருடன் மின் பகிர்மான முறையை பின்பற்றுகிறார்கள். அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து இணைப்பை பெறுகிறார்கள். 7 முதல் 8 குடும்பத்தினர் வாய்மொழியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின் கட்டணத்தை பகிர்ந்துகொள்கிறார்கள்.
லட்சுமி, ஆஷா போன்றவர்களைப்போல் பல வர்லிகள் பூங்காவில் பாதுகாப்பாளர், காவலாளி, தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் தோட்டக்காரர்கள் போன்ற வேலைகளை செய்பவர்களாக இருந்தபோதும், அவர்கள் இந்த பூங்காவுக்குள் வசிக்கலாமா வேண்டாமா என்ற விவாதம் இன்னும் தொடர்கிறது. வர்லிகளுக்கும், மாநில அரசுக்குமான பிரச்சனை 1997ம் ஆண்டு உயர்நீதிமன்ற ஆணைக்குப் பின்னரும் தொடர்கிறது. 1995ம் ஆண்டு பம்பாய் சுற்றுச்சூழல் செயற்பாட்டுக் குழுவால் தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கின் குறிப்பிடப்பட்ட வனத்துறையின் கணக்கெடுப்பின்படி 4 லட்சம் பேர் பூங்காவின் எல்லைக்குள் வசிக்கிறார்கள். அவர்கள் 1995ம் ஆண்டுக்கு முன்பிருந்து இங்கு வசிப்பதற்கான ஆதாரத்தை நிரூபித்தால், அங்கேயே ரூ.7 ஆயிரம் அபராதம் செலுத்திவிட்டு, மீண்டும் அங்கு குடியிருந்து கொள்ளலாம். மற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அவர்களின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
உதவி வனப்பாதுகாவலர் மற்றும் பூங்காவின் செய்தி தொடர்பாளருமான கல்பனா டெம்கிரே கூறுகையில், 11,380 குடும்பத்தினர் மறுகுடியமர்த்தப்பட தகுதியாகியுள்ளனர். அவர்களுக்கு சந்திவாலியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. 13,698 குடும்பங்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார். 2002ம் ஆண்டு மே மாதம், போரிவலி சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள அறிக்கையின் கூற்றுப்படி, 1997ம் ஆண்டு 67 ஆயிரம் குடிசைகள் பூங்கா பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. 2000மாவது ஆண்டில் 49 ஆயிரம் குடிசைகள் அகற்றப்பட்டன.
இங்குள்ள பெரும்பாலான வர்லிகள் 1995ம் ஆண்டுக்கு முன்னர் இருந்தே வீட்டுக்கான ஆதாரம் வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த அபராதத் தொகையை கட்ட முடியாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள், பூங்காவிற்குள்ளேயே வசித்து வருகிறார்கள். அது ஆஷாவின் குடும்பத்தினரையும் உள்ளடக்கியது. ஆஷாவின் குடும்பத்தில் இரண்டு மகன்கள், இரண்டு மருமகள்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகள் உள்ளனர். அவரால் ரூ.7 ஆயிரம் செலுத்த முடியாது. அவர் வேறு இடத்திற்கு செல்லவும் விரும்பவில்லை. “அப்படி செல்லும் இடத்திலும் தூயக் காற்று மற்றும் ஜன்னலுடன் கூடிய திறந்தவெளி நிலம் மற்றும் இரும்பு வாயில் ஆகிய இதுபோன்ற சூழலை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்“
1997ல் நடந்ததை ஷம்மு பாராப் நினைவு கூறுகிறார், “காட்டை விட்டு வெளியே சென்று 220 சதுர அடி கொண்ட வீட்டில் வசிக்க விருப்பமில்லை. எங்களுக்கு கிராமமும் இல்லை நகரமும் இல்லை என்பதைப்போல் இருந்தது.” ஷம்முவின் மருமகள் 28 வயதான மன்சி, “எங்களின் சொந்த நிலத்தில் வசிப்பதற்கு நாங்கள் ஏன் ரூ.7 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்?“, எனக் கேட்கிறார். மன்சி தனது தையல் இயந்திரத்தின் மூலம் சணல் பைகள் தைக்கிறார். கைவினைப்பொருட்களும் செய்கிறார். அதை உள்ளூர் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் மூலம் விற்கிறார். அதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை சம்பாதிக்கிறார்.
நவப்படாவில் உள்ள பாராப்பின் குடும்பத்திற்கு, இங்குள்ள சிலரைபோல் வீட்டிலேயே கழிவறை, கேஸ் மற்றும் தண்ணீர் வசதி உள்ளது. தற்போது 47 வயதான ஷம்மு, நவப்படாவுக்கு 14 வயதில் புதுமணப்பெண்ணாக வந்ததை நினைவில் வைத்துள்ளார். அவரது வீடு போரிவலியின் நுழைவாயிலில் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நளசோபாராவில் உள்ளது. “எனது மாமியார், அவர்களின் இடங்கள் எப்படி இருந்தது என்று எனக்கு இந்த இடங்களை காட்டினார்“ என்று அவர் கூறுகிறார்.
ஓராண்டு கழித்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பின்னர், அவரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என எண்ணினார். ஆனால், “எங்கள் சமூகத்தினருக்கு கல்வி கிடையாது“ என்று அவர் கூறுகிறார். ஒரு தன்னார்வ நிறுவனம் பூங்காவிற்குள் பால்வாடியை துவங்கிய 1990களின் துவக்கத்தில், ஷம்மு அதில் சமையலராக சேர்ந்தார். அங்கு தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். “2000மாவது ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்து இங்குள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப துவங்கினார்கள்“ என்று அவர் கூறுகிறார். எனினும், கல்வி இல்லாததால் பாரம்பரியக் கலையை கற்றுக்கொள்ளலாம் என்று அர்த்த கிடையாது என்று ஷம்மு கூறுகிறார். “எங்களின் பொருளாதாரப் பிரச்சனைகள் எங்களை அரிவாள் எடுத்து வேலை செய்ய வைத்தது. துடைப்பம் எடுத்துப் பெருக்க வைத்தது. அது எங்கள் தூரிகைகளை கீழே போட வைத்தது.“
பூங்காவில் உள்ள அனைத்து வர்லிகளிலும், அவரின் 4 மகன்களில் இளையவரான தினேஷ் மட்டுமே ஓவியங்கள் வரைந்து கொடுப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்கிறார். அவர் பாரம்பரிய பொருட்களையே வர்லி வண்ணத்திற்காக பயன்படுத்துகிறார். மண், மாட்டுச்சாணம், சிவப்புக் காவி ஆகியவற்றை மட்டுமே கொண்டு ஓவியம் வரைகிறார். நாளொன்றுக்கு அவர் 6 முதல் 7 மணி நேரம் வரை புடவைகளிலும், கேன்வாஸ்களிலும் வரைகிறார். அவர் அவற்றை இணையவழியில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறார். இவரது ஓவியங்களுக்கு நாடு முழுவதில் இருந்தும், சர்வதேச அளவில் இருந்தும் பின்னூட்டங்கள் வருகின்றன. அவற்றை அவர் பாதுகாத்து வைத்திருக்கிறார். (ஆனால், அவருக்கு இதிலிருந்து கிடைக்கும் வருமானம் குறித்து அவர் பேச விரும்பவில்லை). அவர் குழந்தைகளுக்கும் வர்லி ஓவியம் வரைய கற்றுக்கொடுக்க முயற்சி செய்து வருகிறார்.
லட்சுமி வார்கண்டே “ஓவியங்கள் தங்களுக்கு வருமானத்தை கொடுக்காது“ என்று இப்போதும் நம்புகிறார். “இளைஞர்கள் தங்கள் கலைக்கு புத்துயிர் கொடுப்பார்கள்“ என்று ஷம்மு நம்பிக்கையுடன் உள்ளார்.
இதற்கிடையில் வர்லிகளின் கோரிக்கைகள் அப்படியேதான் இருக்கின்றன. மின்சாரம், கழிவறை, தண்ணீர் குழாய் வசதிகள் ஆகியவை வீடுகளுக்குள்ளே வேண்டும். மாடி வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வேண்டும். இடம் மாற்றுவது தவிர்க்க முடியாத பட்சத்தில் “எங்களைப் பெரிய கட்டிடங்களில் குடியமர்த்தாதீர்கள், எங்களுக்கு பூங்காவின் வனப்பகுதிக்குள்ளே இடம் கொடுங்கள்“ என்று ஷம்மு கூறுகிறார்.
எனினும், மறுகுடியமர்த்தும் திட்டம் தாமதமாகப்பட்டுக் கொண்டிருக்கிறது.. வனத்துறை அதிகாரி ஒருவர் (தனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை) தாமதம் ஏன் என்று விளக்குகிறார், “மறுகுடியமர்வின் இரண்டாவது கட்டப்பணிகள் வெற்றிகரமாக நடைபெறவில்லை. ஏனெனில் போவாய் அருகே சந்திவல்லியில் போடப்பட்ட திட்டங்கள் விமான நிலைய வரையறைக்குள் வருகின்றன.“
மற்றொரு வன அலுவலர் மறுகுடியமர்வுப்பணிகள் தாமதமாவதற்கான காரணங்களை விளக்குகிறார். “பூங்காவுடன் தொடர்புடைய எண்ணற்ற நிறுவனங்கள் குறைவாகவே ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அவை மும்பை, தானே, மிரா பயாந்தர் மற்றும் வசைவிரர் ஆகிய நான்கு மாநகராட்சிகளில் இருக்கின்றன.குடிசை மறுவாழ்வு ஆணையமும் ஒரு நிறுவனம் ஆகும்.
உதவி வனப்பாதுகாவலர் கே.எம்.தபோல்கர் கூறுகையில், “தகுதியுள்ள வீடுகளை ஆரே அருகே மரோல் மரோசியில் (பூங்காவில் இருந்து 15 கிலோ மீட்டருக்கு அப்பால் போரோவலி நுழைவுவாயில் அருகே உள்ள பகுதி) மறுகுடியமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது,” என்கிறார்.
1997 நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தாமதமான இடமாற்றம் ஆகியவற்றிற்கு மத்தியில் வன உரிமைகள் சட்டம் 2006, வர்லிகளுக்கு நன்மை பயப்பதாக உள்ளது. அச்சட்டம் ஆதிவாசிகளுக்கு அவர்கள் நிலம் மற்றும் காடுகளின் வளங்கள் மீதான உரிமைகளை வழங்குகிறது. அதன் 3 (1)(எம்) என்ற பிரிவு “வனத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் பாராம்பரியமாக வனப்பகுதிகளில் வசிக்கும் மற்றவர்கள், சட்டத்திற்கு புறம்பான முறையில் வெளியேற்றப்பட்டாலோ அல்லது மறுகுடியமர்த்தப்பட்டாலோ அவர்களின் சட்ட உரிமையை பெறாமல் இருந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தருவதை உறுதி செய்கிறது..“
பூங்காவின் செய்தித் தொடர்பாளர் டெம்கிரி கூறுகையில், “அந்த சட்டம் கிராம சபைகளில் முதலில் கவனம் செலுத்தியது. பின்னர் 2015ல் தான் மாநகராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. (பழங்குடியினர் அமைச்சகத்தின் அறிவிப்பு மூலம் மாநகராட்சி குழு அமைக்கப்படும்போது நாங்கள் முன்னேறிச் செல்வோம்.“
வர்லியின் இளைஞர்கள் சிலர் மறுவாழ்வு திட்டங்கள் மீண்டும் துவங்கவேண்டும் என்றும், அவற்றை எதிர்க்காமலும் உள்ளனர். 23 வயது ஆர்த்தி டோக்ரே கூறுகையில், “இது நிறைய வாய்ப்புகளை உருவாக்கித் தரும்,“ என்கிறார். ஆர்த்தி ஒரு ஒப்பந்த தொழிலாளி. அவர் போரிவலி ரயில் நிலையத்தின் சாலைகளை, காலையில் பெருக்கி சுத்தம் செய்கிறார். ஒரு சிறியக் கடையை தனது குடிசையில் வைத்து, திண்பண்டங்களை விற்பனை செய்கிறார். பருவமழைக் காலங்களில் வெள்ளரி மற்றும் காய்கறிகளை வளர்த்து, போரிவலி சந்தையில் விற்று வருமானம் ஈட்டுகிறார்.
அவரது குடிசைக்கு எதிர்ப்புறம், அவரது மாமியாரின் தாய் கவுரி தட்கேயின் குடிசை உள்ளது. அவருக்கு வயது 70-ஐ நெருங்குகிறது. “நாங்கள் வெளியே சமாளித்துக் கொள்வோம். ஆனால், அவர்கள் மாட்டார்கள்“ என்று அவரைப் பார்த்து கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.