எஸ். என். கோபாலா தேவி கூறுகிறார், "என் குடும்பம் ஒரு தனி நுழைவாயிலுடன் கூடிய தனி அறையைக் கொண்ட ஒரு வீட்டைக் கண்டுபிடித்தது”. அது 2020ஆம் ஆண்டு மே மாதம்; சில குடும்பங்கள் மற்ற குடும்பத்தினரை பாதுகாக்க கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தபோது - மிகவும் ஆபாயம் நிறைந்த அவரது பணியில், அவர்களது குடும்பத்தினரின் சுமையையும் எளிதாக்கினார்.
50 வயதான கோபாலா தேவி ஒரு செவிலியர். சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கோவிட் வார்டில் பணிபுரியும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் கணிசமான நேரத்தை செலவிட்ட 29 வருட அனுபவமுள்ள செவிலியர். அதே நகரத்தில் அருகிலுள்ள புலியாந்தோப்பில் உள்ள ஒரு சிறப்பு கோவிட் பராமரிப்பு மையத்தின் ஒரு குறுகிய காலத்திற்கு அவர் பொறுப்பேற்று இருந்தார்.
இப்போது, ஊரடங்கு காலம் தளர்த்தப்பட்ட பிறகு, பல விஷயங்கள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், கோபாலா தேவி கோவிட் -19 வார்டில் பணியாற்றும் போது பெரும்பாலும் தனிமைப்படுத்தலில் நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். "என்னைப் பொறுத்தவரை, ஊரடங்கு இன்னும் தொடர்கிறது," என்று அவர் சிரிக்கிறார். "செவிலியர்களைப் பொறுத்தவரை, அதன் முடிவு இன்னும் வெகு தொலைவில் உள்ளது."
பல செவிலியர்கள் இதை நிருபரிடம் கூறியது போல்: "‘எங்களுக்கு எப்போதும் ஊரடங்கும் வேலையும் உள்ளது."
"என் மகளுக்கு செப்டம்பரில் திருமணம் நடந்தது, முந்தைய நாள் மட்டுமே நான் விடுப்பு எடுத்தேன்", என்று கோபாலா தேவி கூறுகிறார். "எனது கணவர் உதய குமார் திருமணத்தின் முழுப் பொறுப்பையும் அவரது தோள்களில் ஏற்றுக் கொண்டார்." குமார் சென்னையின் மற்றொரு மருத்துவமனையான சங்கரா நேத்ரயலாவின் கணக்கு பிரிவில் பணிபுரிகிறார். "அவர் என் தொழிலின் நெருக்கடிகளை புரிந்துகொள்கிறார்", என்று அவர் கூறுகிறார்.
அதே மருத்துவமனையில் கோவிட் வார்டில் விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்ததற்காக விருது வென்றவர் 39 வயதான தமிழ் செல்வி. "தனிமைப்படுத்தப்பட்ட நாட்களைத் தவிர, நான் ஒருபோதும் விடுப்பு எடுக்கவில்லை. எனது விடுமுறை நாட்களில்கூட நான் வேலை செய்தேன், ஏனென்றால் பிரச்சினையின் தீவிரத்தை நான் புரிந்துக்கொண்டுள்ளேன், ”என்று அவர் கூறுகிறார்.
"என் இளம் மகன் ஷைன் ஆலிவரை விட்டு, பல நாட்கள் தனித்திருந்த வலி மிகவும் ஆழமானது. சில நேரங்களில் நான் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறேன். ஆனால் இந்த தொற்றுக்காலத்தில் நாங்கள் முன்னணி பணியாளர்களாக இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். எங்கள் நோயாளிகள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பிச் செல்கிறார்கள் என்று அறியும்போது ஏற்படும் மகிழ்ச்சி - என் குடும்பத்திலிருந்து விலகியிருப்பதற்கு ஒரு மதிப்பை ஏற்படுகிறது. ஆனால், எங்களின் 14 வயது சிறுவனை நன்றாக கவனித்துக்கொள்வதற்கும், என் பணி என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் என் கணவர் இருக்கிறார். இல்லையெனில், இது சாத்தியமில்லை. ”
ஆனால் எல்லோரும் அவ்வளவு புரிந்து கொள்ளவில்லை, ஏனெனில் செவிலியர்கள் தங்கள் குடியிருப்பு கட்டடங்களுக்கு வேலை முடிந்து திரும்பும்போது அதனை கடினமான முறையில் கற்றனர்.
“நான் தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும், நான் நடந்து செல்லும் பாதையில் மக்கள் மஞ்சள் மற்றும் வேப்பம் தண்ணீரை ஊற்றுவதைக் பார்த்தேன். அவர்களின் பயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, ஆனால் அது வலித்தது, ”என்கிறார் நிஷா (பெயர் மாற்றப்பட்டது).
நிஷா சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் மகளிர் மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும் செவிலியர். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட கர்ப்பிணி நோயாளிகளை அவர் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. "இது மிகவும் கடினமாக இருந்தது, ஏனென்றால் நாங்கள் தாய்மார்களையும் அவர்களின் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டியிருந்தது." மிக சமீபத்தில், நிஷாவுக்கும் தொற்று ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு, அவரது கணவர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். "கடந்த எட்டு மாதங்களில் எங்கள் மருத்துவமனையில் குறைந்தது 60 செவிலியர்களள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று நிஷா கூறுகிறார்.
"வைரஸை விட எங்களை பற்றிய சமூகப் பார்வையை கையாள கடினமாக உள்ளது," என்று அவர் மேலும் கூறுகிறார்.
நிஷாவின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம், அவரது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் உட்பட, சென்னையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்கள் பக்கத்தில் வசிப்பவர்களின் பயம் மற்றும் விரோதப் போக்கு ஆகியவற்றால் வெளியேற்றப்பட்டனர்.
ஒவ்வொரு முறையும் ஒரு கோவிட் -19 வார்டில் பணிபுரிந்தபின் நிஷா தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருந்தது. பாலூட்டும் தாயான நிஷா, தனது ஒரு வயது குழந்தையிடம் இருந்து பல நாட்கள் விலகி இருக்க வேண்டியிருந்தது. "கோவிட் -19 தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பிரசவிக்க உதவுவதில் நான் பணியாற்றியபோது என் மாமியார் குழந்தையை கவனித்துக்கொண்டார்," என்று அவர் கூறுகிறார். "இது மிகவும் விசித்திரமாக இருந்தது; தொடர்ந்து இருக்கிறது."
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) வழிகாட்டுதல்களின்படி பாலூட்டும் தாய்மார்களுக்கும், நோயுற்றவர்களுக்கும் கோவிட் வார்டுகளில் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் செவிலியர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக நிஷா போன்ற பலருக்கு வேறு எந்த வழியும் இல்லை. தெற்கு தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னைக்கு வர தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறுகிறார். "இது என் வாழ்க்கையின் கடினமான காலம் என்று நான் கூறுவேன்’.
21 வயதான ஷைலா, தற்போதுதான் ஒரு செவிலியராகத் தொடங்குகிறார். அவரும் இதை ஒப்புக்கொள்வார். அக்டோபர் 2020-ஆம் ஆண்டு, சென்னையில் உள்ள ஒரு கோவிட் -19 பராமரிப்பு மையத்தில் இரண்டு மாத ஒப்பந்த வேலையில் தற்காலிக செவிலியராகத் தொடங்கினார். மாசு மண்டலங்களில் வீடு வீடாக பரிசோதனை செய்வது, முகமூடிகள் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் பிற பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவரது பணிகளில் அடங்கும்.
"பல இடங்களில், மக்கள் சோதனை செய்ய மறுத்து எங்களுடன் வாக்குவாதம் செய்தனர்", என்று ஷைலா கூறுகிறார். எங்களை மீது எப்போதும் ஒரு அவதூறு பார்வை இருந்தது. "நான் ஒரு வீட்டிற்குச் சோதனைகளை நடத்துவதற்காக சென்றிருந்தேன், அங்கு புதிய பரிசோதனைப் பெட்டியை திறக்க நாங்கள் ஒரு ஜோடி கத்தரிக்கோலை எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்ந்தோம். அங்குள்ளவர்களிடம் கத்தரிக்கோல் நாங்கள் கேட்டோம், அவர்கள் எங்களுக்கு மிகவும் மோசமான ஒன்றைக் கொடுத்தார்கள். அதனைக் கொண்டு பேக்கைத் திறப்பதும் வெட்டுவதும் கடினமாக இருந்தது. நாங்கள் இறுதியாக முடித்ததும், கத்தரிக்கோலை அவர்களிடம் திருப்பித் தந்தோம். அவர்கள் அதை திரும்ப எடுக்க மறுத்து, அதை குப்பைக்கு போடச் சொன்னார்கள். ”
மேலும், சென்னையின் வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தில் 7 முதல் 8 மணி நேரம் ’பிபிஇ சூட்’ அணிவது பெரும் அவதியாக இருந்தது. இது தவிர, "நாங்கள் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் வேலை செய்ய வேண்டியிருக்கும், மக்களின் வீடுகளில் கழிப்பறையைப் பயன்படுத்தவும் முடியாது", என்று அவர் கூறுகிறார்.
ஆனாலும், அவர் அந்த பணியைத் தொடர்ந்தார். “நான் ஒரு டாக்டராக வேண்டும் என்பது என் தந்தையின் கனவு. எனவே நான் முதலில் செவிலியர் சீருடை மற்றும் பிபிஇ கிட் அணிந்தபோது, கடினமாக இருந்தபோதிலும் நான் அப்பாவின் கனவுக்கு நெருக்கமாக இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்,”என்று அவர் கூறுகிறார். ஷைலாவின் தந்தை மனிதக் கழிவை அகற்றும் தொழிலாளராக இருந்தார். அவர் ஒரு செப்டிக் தொட்டியை சுத்தம் செய்யும் போது இறந்துவிட்டார்.
ஆபத்து மற்றும் சமூகப் பார்வை தவிர, செவிலியர்கள் மூன்றாவது முன்னணி பணியாளர்களாக போராடுகின்றனர். வேலை நிலைமைகள் மற்றும் மிகவும் மோசமான ஊதியம் என்ற நிலை. ஷைலா, ஒரு தொடக்க பணியாளராக, அந்த இரண்டு மாதங்களில் தலா ரூ.14,000 ஈட்டினார். நிஷா செவிலியராக 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, அதிலும் ஆறு ஆண்டுகள் ஒரு அரசு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக இருந்தும், வீட்டிற்கு ரூ. 15,000 எடுத்து செல்கிறார். மூன்று தசாப்த கால சேவைக்குப் பிறகு, கோபாலா தேவியின் மொத்த சம்பளம் ரூ. 45,000 - ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நுழைவு நிலை எழுத்தர் விட இது அவ்வளவு அதிகமாக இல்லை.
அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், சுகாதார ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்களின் எண்ணிக்கை 30,000 முதல் 80,000 வரை இருக்கலாம் என்று கூறுகின்றனர். செவிலியர்களுக்கு இது கடினம் என்பதை ஒப்புக் கொண்ட இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் டாக்டர் சி. என். ராஜா, ஐ.எம்.சி அவர்களுக்கான மனநல ஆலோசனைகளை ஏற்பாடு செய்ய முயற்சித்ததாக கூறுகிறார். “குறிப்பாக ஐ.சி.யூ பராமரிப்பில் பணிபுரிபவர்களுக்கு. அவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதை நன்கு அறிந்து தங்கள் கடமையை நிறைவேற்ற அவர்கள் முன்வருகின்றனர், நாங்கள் அவர்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”
தங்களை நன்றாக கவனித்துக்கொள்வதாக செவிலியர்கள் நினைக்கவில்லை.
"இந்த மாநிலத்தில் 15,000 க்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியர்கள் உள்ளனர்" என்று கள்ளக்குரிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் செவிலியரும், தமிழக அரசு செவிலியர் சங்கத்தின் தலைவருமான கே.சக்திவேல் கூறுகிறார். "எங்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று சரியான சம்பளம். இந்திய நர்சிங் கவுன்சிலின் தரத்தின்படி ஆட்சேர்ப்புகளோ பதவி உயர்வுகளோ செய்யப்படுவதில்லை."
"18,000 க்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியர்களில், 4,500 பேர் மட்டுமே நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்", என்று சுகாதாரத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் ஏ. ஆர். சாந்தி கூறுகிறார். இது தமிழ்நாட்டில் சுகாதாரப் பணியாளர்களின் நலனுக்கான அமைப்பு. "மீதமுள்ள செவிலியர்கள் நிரந்தர வேலையில் இருப்பவர்களை விட, அதே அளவு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும் என்ற போதும், மாதத்திற்கு ரூ.14,000 வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். நிரந்தர செவிலியர்களைப் போல அவர்கள் விடுப்பு பெற முடியாது. அவசர நேரங்களில்கூட அவர்கள் விடுப்பில் சென்றால், அவர்கள் அந்நாளுக்கான ஊதிய இழப்பை சந்திக்க நேரிடும்".
அதுவே இதுப்போன்ற நேரங்களில் அவர்களின் நிலையாக இருக்கிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த கோபாலா தேவி, ஏறக்குறைய ஒரு வருடமாக கோவிட் -19 வார்டில் பணியாற்றுகிறார். இதற்கு முன் பார்த்திராத ஒரு சூழ்நிலையை அது கொண்டு வந்துள்ளதாகக் கூறுகிறார். "இந்தியாவின் முதல் எச்.ஐ.வி நோய் [1986 இல்] சென்னையில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் [ராஜீவ் காந்தி மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது] கண்டுபிடிக்கப்பட்டது," என்று அவர் நினைவு கூர்ந்தார். "ஆனால் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது கூட, நாங்கள் இந்த அளவுக்கு கவலைப்படவில்லை. நாங்கள் ஒருபோதும் எங்களை முழுமையான பாதுகாப்பு உடைகள் அணிந்து மறைக்க வேண்டியதில்லை. கோவிட் -19 மிகவும் கணிக்க முடியாதது மற்றும் அதற்கு மிகப்பெரிய தைரியம் தேவைப்படுகிறது. ”
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது, என்று அவர் மேலும் கூறுகிறார். "முழு உலகமும் ஊரடங்கில் மூடப்பட்டபோது, நாங்கள் கோவிட் -19 வார்டுகளில் முன்பை விட பரபரப்பாக இருந்தோம். நீங்கள் இருப்பது போலவே ஒரு வார்டுக்குள் அப்படியே நடந்து சென்றுவிட முடியாது. நான் காலை 7 மணி பணியில் இருக்கவேண்டும் எனில், 6 மணி முதல் தயாராக இருக்க வேண்டும். நான் ஒரு பிபிஇ சூட் அணிந்து, வார்டில் இருந்து வெளியேறும் வரை நான் ஊட்டத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் - பாருங்கள், என்னால் தண்ணீர் குடிக்கவோ அல்லது பிபிஇ-யில் எதையும் சாப்பிடவோ முடியாது நிலை - வேலை அங்கிருந்து தொடங்குகிறது. ”
"இது இப்படிதான் நடக்கிறது," என்கிறார் நிஷா. “நீங்கள் ஒரு கோவிட் வார்டில் ஏழு நாட்கள் வேலை செய்கிறீர்கள், ஏழு நாட்கள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் வார்டில் சுமார் 60-70 செவிலியர்கள் சுழற்சி அடிப்படையில் வேலை செய்கிறார்கள். நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 3 முதல் 6 செவிலியர்கள் வரை ஒரு வாரம் கோவிட் வார்டில் நீட்டிக்கிறார்கள். [அதாவது 3 அல்லது 6 பிற செவிலியர்கள் ஒரே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள்]. தோராயமாக, நாங்கள் ஒவ்வொருவரும் 50 நாட்களுக்கு ஒரு முறை கோவிட் பணியில் ஈடுபடுவோம். ”
அதாவது ஒரு செவிலியரின் நாட்காட்டியில் ஒவ்வொரு ஏழு செவிலியர் குழுவும் இரண்டு வாரங்கள் கோவிட் -19க்கு எதிரான போரின் அதிக ஆபத்து நிறைந்த பகுதியில் செலவிடப்படுகின்றன. பற்றாக்குறைகள் மற்றும் அவசரநிலைகள் அந்த சுமையை மோசமாக்கலாம். கோவிட் பணியில் உள்ள செவிலியர்களுக்கு அரசாங்கம் மூலம் தனிமைப்படுத்தல் வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஒரு பணிநேரம் தொழில்நுட்ப ரீதியாக ஆறு மணி நேரம் நீடிக்கும், ஆனால் பெரும்பாலான செவிலியர்கள் இரு மடங்கு அதிகமாக வேலை செய்கின்றனர். "இரவு பணிநேரத்தில், தவிர்க்க முடியாமல் 12 மணி நேரம் - இரவு 7 மணி முதல். காலை 7 மணி வரை பணி செய்கிறோம். அப்படி இல்லாவிட்டாலும், நாங்கள் ஒருபோதும் ஆறு மணி நேரத்தில் நிறுத்த மாட்டோம். பெரும்பாலும், பணிநேரம் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணிநேரம் நீடிக்கும்.”
குறைபாடுள்ள ஆட்சேர்ப்பு நடைமுறைகள் அனைவரின் சுமையையும் மோசமாக்குகின்றன.
டாக்டர் சாந்தி சுட்டிக்காட்டியபடி: “புதிய செவிலியர்களை நியமிப்பதற்கு பதிலாக, புதிய [கோவிட்] மையங்கள் இவர்களை மற்ற மருத்துவமனைகளில் இருந்து வரைவு செய்கின்றன. இந்த விஷயத்தில், நீங்கள் மிகவும் சமரசமாக இருக்க வேண்டும். ஒரு பணிநேரத்திற்கு ஆறு செவிலியர்கள் தேவைப்பட்டால், பல மருத்துவமனைகள் இரண்டு பேரை மட்டுமே வைத்து நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மேலும், சென்னையைத் தவிர, எந்த மாவட்டத்திலும் வேறு எந்த மருத்துவமனைகளிலும் கோவிட்-ஐ.சி.யுவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் என்ற முறையை பின்பற்றப்படுவதில்லை. சோதனைகள் மற்றும் படுக்கைகளைக் கிடைப்பதில் தாமதம் குறித்து நீங்கள் கேட்கும் அனைத்து புகார்களுக்கும் உண்மையான காரணம் இதுதான்”.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 2,000 செவிலியர்களை மாநில அரசு பணியில் அமர்த்தியது - குறிப்பாக கோவிட் கடமைக்காக ரூ .14,000 மாத சம்பளத்தில். இந்த எண்ணிக்கை எங்கும் போதுமானதாக இல்லை என்கிறார் டாக்டர் சாந்தி.
ஜனவரி 29 அன்று, மாநிலம் முழுவதும் செவிலியர்கள் ஒரு நாள் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கைகளில் மத்திய அரசாங்கத்துடன் பணிபுரியும் செவிலியர்களுக்கு இணையாக சம்பளத்தை கொண்டு வருவது; நெருக்கடியின் போது கோவிட் வார்டுகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான போனஸ்; மற்றும் பணியில் இறந்த செவிலியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஆகியவை கோரிப்பட்டன.
மற்ற வார்டுகளில் பணிபுரியும் செவிலியர்கள் குறித்து சுகாதார ஆர்வலர்களும் சமமாக கவலைப்படுகிறார்கள். "வெளிப்பாட்டின் அளவு மாறுபடலாம், ஆனால் கோவிட் அல்லாத வார்டுகளில் பணிபுரிபவர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். கோவிட் கடமையில் பணிபுரியும் செவிலியர்கள் பிபிஇ சூட் மற்றும் என் 95 முகமூடிகளைப் பெறுவதால் ஒப்பீட்டளவில் சிறந்தது என்று நான் நம்புகிறேன் - அவர்கள் அதைக் கோரலாம், அது அவர்களின் உரிமை. ஆனால் மற்றவர்களால் அதைச் செய்ய முடியாது ”, என்று டாக்டர் சாந்தி கூறுகிறார்.
கோவிட் நோயாளிகளுக்கு வெளிநோயாளிகள் சேவையை வழங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் முகாமில் செவிலியர் கண்காணிப்பாளராக பணியாற்றிய 55 வயதான அந்தோனியம்மாள் அமிர்தசெல்வியின் சேவையை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். அக்டோபர் 10 ஆம் தேதி, இருதய நோயாளியான அமிர்தசெல்வியின் உயிரை கோவிட் -19 பறித்தது. "அவர் சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், அவர் தன் வேலையைச் செய்துகொண்டே இருந்தார்", என்று அவரது கணவர் ஏ. ஞானராஜ் கூறுகிறார். "இது ஒரு சாதாரண காய்ச்சல் என்று அவர் நினைத்தர், ஆனால் கோவிட் -19 பாசிட்டிவ் என்று வந்தது - அதன் பிறகு, எதுவும் செய்ய முடியவில்லை." அமிர்தசெல்வி ஒரு வருடம் முன்பு மதுரை பொது மருத்துவமனையில் இருந்து மண்டபம் முகாமுக்கு மாற்றப்பட்டார்.
எப்போதும் சமூகத்தின் மதிப்பீடு எங்கள் மீது உண்டு - அதுவே தலித்துகளாக இருக்கும் செவிலியர்களின் விஷயத்தில் அது இரட்டை சுமையே.
விருது பெற்ற தமிழ் செல்வி (மேலே உள்ள அட்டைப் புகைப்படத்தில்) அதற்கு புதியவரல்ல. அவர் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர், முதலில் ராணிப்பேட்டையின் (முன்பு வேலூர்) மாவட்டத்தின் வாலாஜாபேட்டை தாலுகாவில் உள்ள லாலாபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். அவரின் குடும்பம் எப்போதும் பாகுபாட்டை அறிந்திருக்கிறது.
புகழ்பெற்ற தமிழ் கவிஞரும், தமிழ் செல்வியின் சகோதரியுமான சுகிர்தரணி, தனது மூன்று சகோதரிகள் செவிலியர் படிப்பை தங்கள் தொழிலாக ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை நினைவு கூர்கிறார்: “இது நாங்கள் மட்டுமல்ல, தலித் குடும்பங்களைச் சேர்ந்த பலர் செவிலியர்களாக ஆகத் தேர்வு செய்துள்ளனர். என் மூத்த சகோதரி செவிலியரானபோது, எங்கள் இடத்திற்கு வர தயங்கியவர்கள், உதவி கோரி வீட்டிற்கு வந்தார்கள். என் தந்தை சண்முகம் செய்ததைப் போலவே தங்கள் குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்க விரும்புவதாகக் கூறி, செரியில் உள்ள ஊரிலிருந்து எங்கள் வீட்டிற்கு பலரும் வந்தனர். [பாரம்பரியமாக, தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் ஊராகப் பிரிக்கப்படுகின்றன, ஊரில் அங்கு ஆதிக்க சாதிகள் வாழ்கின்றன; செரிகளில் தலித்துகள் வசிப்பார்கள்]. நானே ஒரு பள்ளி ஆசிரியர், மற்றொரு சகோதரனும் ஒரு ஆசிரியர். என் சகோதரிகள் செவிலியர்கள்.
“பொறியியலாளரான ஒரு சகோதரரைத் தவிர, எஞ்சியவர்கள் இந்த சமுதாயத்தை சரியாக அமைக்கும் பணியில் இருக்கிறோம். எங்கள் போன்ற பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு, இது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை அளிக்கிறது. என் மூத்த சகோதரி அந்த செவிலியர் சீருடையை அணிந்தபோது, அது அவளுக்கு மதிப்பையும் மரியாதையையும் கொடுத்தது. ஆனால் அவர்கள் செவிலியர்களாக ஆக காரணங்களில் ஒன்றுதான். உண்மை என்னவென்றால், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் போலவே, நாங்கள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சேவை செய்ய விரும்புகிறோம்”.
சகோதரி தமிழ் செல்வி வார்டில் தன் பணியை முடித்தபிறகு, கோவிட் -19க்கு தொற்று உறுதொ செய்யப்பட்டப்போது, மிகவும் கவலையான நிமிடங்களை கடந்தப்போதும் இப்படிதான் இருந்தது. "அவளால் தொடர்ந்து தனது கடமையைச் செய்ய முடியாது என்று நான் மிகவும் கவலைப்பட்டேன்" சுகிர்தரணி புன்னகைக்கிறாள். "ஆனால், முதல் சில சமயங்களில் நாங்கள் கவலையுற்று இருந்தோம், இப்போது நாங்கள் இந்த நிலைக்கு பழக்கிவிட்டோம்”.
"கோவிட் கடமைக்குள் நுழைவது என்பது அதன் ஆபத்துக்களை அறிந்துக்கொண்டு தீயில் இறங்குவதைப் போன்றது", என்கிறார் கோபாலா தேவி. “ஆனால் நாங்கள் நர்சிங்கைத் தொடர முடிவு செய்தபோது நாங்கள் எடுத்த தேர்வு இயற்கையானது. இது சமூகத்திற்கு சேவை செய்வதற்கான எங்கள் வழி. "
கவிதா முரளிதரன், தாகூர் குடும்ப அறக்கட்டளையின் சுயாதீன பத்திரிகை மானியத்தின் மூலம் பொது சுகாதாரம் மற்றும் குடியியல் உரிமைகள் குறித்து செய்திகள் அளிக்கிறார். இந்த செய்தியின் உள்ளடக்கங்கள் குறித்து தாகூர் குடும்ப அறக்கட்டளை எந்த தலையங்கக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.
அட்டைப் படம்
:
எம். பழனி குமார்
தமிழில்:
ஷோபனா ரூபகுமார்