இடது: 47 வயதான பிரஃபுல்லா தேப்நாத், கடந்த 23 வருடங்களாக சமபாய் க்ருஷி உன்னயன் சமிதி (ஊரடங்கு காரணமாக இப்போது மூடப்பட்டுள்ளது) சந்தையில் கிடைத்த வேலையை செய்து வந்தார். வாடிக்கையாளர்களின் பொருட்களை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதும் வாகனத்திலிருந்து கடைகளுக்கு சரக்குகளை சுமந்து செல்வதும் அவருக்கு பணியாக இருந்து வந்தது. இதுமட்டுமல்லாமல் மொத்த சந்தையையும் அவரே பெருக்கி சுத்தப்படுத்துவார். இதற்காக தினசரி ஒவ்வொரு காய்கறி வியாபாரிகளிடமும் இரண்டு ரூபாயும் மற்ற கடைக்காரரகளிடம் ஒரு ரூபாயும் பெறுவார். ஆனால் தற்போது தத்தா பேராவில் உள்ள மைதானத்திற்கு சந்தை மாற்றப்பட்டுள்ளதால், அவருக்கு கிடைத்து வந்த குறைவான வருமானமும் இப்போது பாதியாக குறைந்துள்ளது. இருந்தாலும் சில காய்கறி வியாபாரிகள் தேப்நாத்திற்கு காலை மற்று மதிய உணவை வாங்கி கொடுக்கின்றனர். அவர் கூறுகையில், “நான் சுத்தப்படுத்தாவிட்டால் சந்தை அழுக்காகி விடும். நான் சந்தையை சுத்தம் செய்தால் என்னுடைய பெயரை அனைவரும் தெரிந்து கொள்வார்கள். என்னைப்போல் யாராலும் வேலை செய்ய முடியாது” என்றார். வலது: ஒரு சில மணி நேரங்களே சந்தை திறந்திருப்பதால், விலை குறைவாக கிடைக்கும் என பலரும் கடைசி நேரத்தில் வாங்க வருகிறார்கள். கோகோ ராய், 50, தச்சராக இருக்கிறார். முன்பு தனது வீட்டில் வைத்து சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்தார். இப்போது ஊரடங்கு காரணமாக சந்தைக்கு விற்பனை செய்ய வந்துள்ளார். தினசரி ரூ.400-500 வரை சம்பாதித்து வந்த இவர், இப்போது ரூ.200-250 மட்டுமே வருமானம் ஈட்டுகிறார். “எப்போதும் போலீஸ் ரோந்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டே வெளியே வருவதில்லை. இப்படியிருந்தால் நாங்கள் எப்படி காய்கறி விற்க முடியும்?” என்கிறார்