இந்த நேரத்துக்கு எல்லாம் ஷம்சுதின் முல்லா வயல்வெளிகளில் இருப்பார். எஞ்சின்களையும் பம்புகளையும் சரிசெய்து கொண்டிருப்பார்.
ஊரடங்கின் இரண்டாவது நாளான மார்ச் 26ம் தேதி சுல்குட் கிராமத்திலிருந்து (கொல்காப்புர் மாவட்டத்தின் காகல் தாலுகாவில் இருக்கிறது) இரு சக்கர வாகனத்தில் நம்பிக்கை வறண்டு போய் ஒரு விவசாயி வீடு தேடி வந்த போது ஷம்சுதின் முல்லா வெளியே கிளம்பினார். “என்னை அவருடைய வயலுக்கு அழைத்துச் சென்றார். டீசலில் இயங்கும் தண்ணீர் பம்பு செட்டின் எஞ்சினை நான் சரி செய்து கொடுத்தேன்”. ஷம்சுதின் அப்படி செய்திருக்காவிட்டால், கரும்பு விளைச்சலுக்கு நீர் பாய்ச்ச வழியின்றி விவசாயி திணறியிருப்பார்.
பத்து வயதில் பழுது நீக்கும் வேலை பார்க்கத் தொடங்கி கடந்த 74 ஆண்டுகளில் இப்போதுதான் இரண்டாவது முறையாக ஒரு இடைவெளி எடுத்திருக்கிறார் 84 வயதான ஷம்சுதின். 2019ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் முதல் இடைவெளி எடுத்திருந்தார். ரத்தக்குழாய் அடைப்பு நீக்கும் அறுவை சிகிச்சைக்காக எடுக்கப்பட்ட இடைவெளி.
எழுபது ஆண்டுகளில் ஆழ்துளை பம்புகளிலிருந்து டீசல் எஞ்சின்கள் வரை 5000க்கும் மேலான எஞ்சின்களை ரிப்பேர் செய்து நிபுணத்துவம் கண்டிருக்கிறார் ஷம்சுதின். கர்நாடகாவில் உள்ள பெலாகவி மாவட்டத்தின் சிக்கோடி தாலுகாவிலிருக்கும் அவரது வீடே இயந்திரங்கள் பழுதாகி தவிக்கும் விவசாயிகளுக்கு உதவி மையமாக இருந்திருக்கிறது. வழக்கமான வருடங்களில் அதிகமான பணிகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் அவருக்கு இருக்கும். அந்த காலகட்டத்தில் பல ரகங்களை சேர்ந்த 30 எஞ்சின்கள் வரை சரி செய்திருப்பதாக குறிப்பிடுகிறார். ஒவ்வொரு இயந்திரத்துக்கும் 500 ரூபாய் கட்டணம் என்றளவுக்கு சம்பாதித்திருக்கிறார். தற்போது அந்த காலகட்டம்தான் ஊரடங்கால் பாதிப்படைந்திருக்கிறது.
பிப்ரவரி மாதத்திலும் மார்ச் மாத தொடக்கத்திலும் அவர் சம்பாதித்த 5000 ரூபாயிலும் அரசு அறிவிக்கும் இலவச அரிசி, பருப்பு உதவியிலும் மட்டுமே அவருடைய குடும்பம் தற்போது பிழைத்துக் கொண்டிருக்கிறது.
சுல்குட்டிலிருந்து வீட்டுக்கு வந்த விவசாயிக்கு பிறகு மேலும் மூன்று விவசாயிகள் தங்களின் பழுதான எஞ்சின்களை ஷம்சுதினிடம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பழுது நீக்கப்படாமலே அவர்கள் திரும்பிப் போக வேண்டியிருந்தது. “கொல்காப்பூர் நகரத்து கடைகளெல்லாம் அடைக்கப்பட்டிருப்பதால், எனக்கு தேவைப்படும் பொருட்களை வாங்க வழியில்லை” என தொலைபேசியில் என்னிடம் குறிப்பிட்டார்.
எழுபது வயதாகியிருக்கும் மனைவி குல்ஷன் மற்றும் ஐம்பதுகளில் இருக்கும் மகன் இசாக்கின் உதவியுடன் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார் ஷம்சுதின். சாதாரண காலங்களிலேயே விவசாயத்துக்கான தண்ணீர் சரியான நேரத்தில் வருவதில்லை (பல நேரங்களில் அதிகாலை இரண்டு மணிக்கே விடப்படும்). அதுவும் ஒழுங்குடன் விடப்படுவதில்லை. இப்போது நிலத்துக்கு செல்லவே அவர் பயப்படுகிறார். நிலம் அருகேயே இருந்தாலும் காவல்துறை ஒடுக்குமுறைக்கு பயந்து போகாமல் இருக்கிறார். பயிரின் நிலை என்னவானது என தெரியவில்லை.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து நாற்பது நாட்களாக ஷம்சுதின் ஒரு எஞ்சினை, ஒரு இயந்திரத்தை கூட சரி செய்யவில்லை. அவருடைய கணக்குப்படி, “குறைந்தபட்சம் 15000 ரூபாய் இந்த ஐந்து வாரங்களில்” இழந்திருக்கிறார். “இதுவரை இப்படியொரு நிலையை நான் கண்டதேயில்லை (தொற்று மற்றும் ஊரடங்கு).” எட்டு வயதில் இருக்கும்போது கொல்காப்புரிலிருக்கும் கிராமத்தில் அவரின் குடும்பம் இருந்த காலத்தில், அருகே இருந்த ஹட்கனாங்களே தாலுகாவின் பட்டான் கோடொலி கிராமத்தில் பிளேக் நோய் பரவத் தொடங்கியது அவருக்கு ஞாபகத்தில் இருக்கிறது.
”அந்த நாட்களில் வீடுகளை விட்டு வெளியேறி நிலங்களில் தங்க வேண்டுமென சொன்னார்கள். இப்போது எங்களை வீட்டிலேயே இருக்கச் சொல்கிறார்கள்” என சொல்லிவிட்டு சிரிக்கிறார்.
83 வயதானபோதும் ஹட்கனாங்களே தாலுகாவின் ரெண்டல் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசந்த் டாம்பே கரும்பு வெட்டும் வேலையை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் பிரதான வருமானம் முற்றிலும் வேறொரு தொழிலிலிருந்து வருகிறது. 2019ம் ஆண்டில் ரெண்டல் கிராமத்தின் மிகவும் வயதான நெசவாளர் என்கிற நிலையிலிருந்து ஓய்வு பெறும் வரை, அப்பகுதியின் திறமையான கைத்தறி வேலை செய்பவராக அவர் இருந்தார். அவருடைய அனுமானப்படி, அவர் வேலை பார்த்த அறுபது வருடங்களில் ஒரு லட்சம் மீட்டர் துணியை நெய்திருக்கிறார்.
நெசவாளராக அவர் திறமை கொண்டிருந்தபோதும், நசிவில் இருக்கும் அத்தொழிலிலிருந்து சிறப்பான வாழ்க்கையை அவர் அடைந்துவிட்டதாக அர்த்தமில்லை. கடந்த 25 வருடங்களில் பிறரது நிலங்களிலும் சகோதரர்களுடன் சேர்ந்து உரிமை வைத்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்திலும் பல மணி நேரங்கள் உழைப்பை அவர் கூடுதலாக செலுத்த வேண்டியிருந்தது. ஊரடங்கு அவருடைய மெல்லிய வாழ்க்கையையும் உலுக்கிப் போட்டது.
“மூன்று மணி நேரத்தில் (சாதாரண காலத்தில்) பத்திலிருந்து பதினைந்து மோல்யா (ஒரு மோல்யா என்பது 200 கிலோ வரை இருக்கும் ஒரு கட்டு)வரை நான் வெட்டியிருக்கிறேன்” என பிறரது நிலங்களில் பார்த்த வேலையை குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு நாள் கூலியாக நூறு ரூபாய் மதிப்பிலான தீவனத்தை எருமை மாட்டுக்கும் கன்றுக்குட்டிக்கும் வசந்த் பெற்றிருக்கிறார். இந்த வயதிலும் தீவனத்தை சைக்கிளிலேயே வீடு வரை சுமந்து கொண்டு வருகிறார். இயல்பான நேரத்தில், ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு கிளம்பி பிற்பகல் இரண்டு மணிக்கு வீடு திரும்பி விடுவார்.
”நான் கடைசியாக கரும்பு வெட்டியது மார்ச் 31ம் தேதி” என்கிறார் வசந்த். அதாவது 32 நாட்களுக்கு கரும்பு வெட்டும் வேலையை அவர் இழந்திருக்கிறார். கிட்டத்தட்ட 3200 ரூபாய் மதி்ப்பிலான தீவனத்தை இழந்திருக்கிறார். ஆனால் பேரிடரின் பாதை அந்த நாளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
2019ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வந்த வெள்ளம் 60 சதவிகித கரும்புகளையும் அவரும் அவரின் சகோதரர்களும் ஒரு ஏக்கர் நிலத்தில் விதைத்திருந்த சோளத்தையும் அழித்தது. அவருக்கு உரிமையான 0.33 ஏக்கரில் அறுவடை செய்த ஏழு டன்னுக்கு தலா 2875 ரூபாய் கிடைத்தது. (அதற்கு முந்தைய வருடத்தில் அவர் 21 டன்கள் அதே அளவு நிலத்தில் அறுவடை செய்திருந்தார்). ”இந்த ஏழு டன் விற்ற 20000 ரூபாயை வைத்துக் கொண்டு நாங்கள் எப்படியாவது ஒரு வருடத்துக்கு வாழ்க்கை ஓட்ட வேண்டும் (அந்த பணத்தையும் அவர் மார்ச் மாதத்தில்தான் பெற்றார்).
மார்ச் 26ம் தேதி அரசு அறிவித்த இலவச அரிசியை வசந்த்தாலும் அவருடைய 76 வயதான மனைவி விமலாலும் உடனடியாக சென்று பெற முடியவில்லை. அவர்கள் வைத்திருந்த குடும்ப அட்டையை கொண்டு ஏப்ரல் 2ம் தேதி ஆறு கிலோ கோதுமையை பதினெட்டு ரூபாய்க்கும் நான்கு கிலோ அரிசியை எட்டு ரூபாய்க்கும் நியாய விலைக்கடையில் பெற்றுக் கொண்டார்கள். பத்து நாட்கள் கழித்துதான் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஐந்து கிலோ இலவச அரசி கிடைத்தது.
கணவன், மனைவி இருவரும் மகாராஷ்டிரத்தின் மேய்ச்சல் பழங்குடி சாதியான தங்கர் சாதியை சேர்ந்தவர்கள். இருவரும் முதியோர் ஓய்வூதியமாக மாதாமாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். ஷம்சுதின்னும் குல்ஷனும் கூட அதே ஓய்வூதியம் பெறுகிறார்கள். வசந்த்தும் அவர் சிறுவயதிலிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது கொல்காப்புர் கிராமங்களை பீடித்த ப்ளேக் நோயை நினைவுகூருகிறார். “அந்த நேரத்தில் நிறைய பேர் இறந்து போனார்கள். எல்லாரையும் வீடுகளை விட்டு வெளியேறி கிராமங்களுக்கும் வெளியே போகச் சொன்னார்கள்” என நினைவிலிருந்து சொல்கிறார்.
வசந்த்தின் முதன்மை வேலையாக இருந்து அவர் நிபுணத்துவம் பெற்றிருந்த நெசவு வேலையிலிருந்து அவர் ஓய்வு பெற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே ஊரடங்கு வந்துவிட்டது. “எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. நெசவு செய்ய கடுமையான உடலுழைப்பு தேவை. ரெண்டால் கிராமத்திலிருந்து கொல்காப்பூருக்கு ஒவ்வொரு நாளும் நடந்து செல்வதை போன்ற வேலை (27.5 கிலோமீட்டர் தூரம்),” என சொல்லிவிட்டு சிரிக்கிறார்.
துயரதொனியில், “என்னுடைய மொத்த வாழ்க்கையிலும் இப்படியொரு நெருக்கடியை நான் பார்த்ததில்லை” என்றார்.
அறுபது வயதாகவிருக்கும் தேவு போரே கர்நாடக மாநிலத்தின் பெல்காவி மாவட்டத்திலுள்ள போரகோன் கிராமத்தில் 30 வருடங்களாக கயிறு செய்யும் வேலை செய்தவர். ஐந்து தலைமுறைகளாக போரோ குடும்பத்தார் கயிறு செய்யும் கலையை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். ஊரடங்கு காலத்தில் உயிர் வாழ்வதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றனர்.
“கயிறு செய்வதற்கு தேவையான பொருட்கள் எங்களிடம் இருக்கிறது. நாங்கள் வேலையைத் தொடங்க வேண்டும், அவ்வளவுதான்,” என 31 வயதான போரேவின் மகன் அமித் ஏப்ரல் 4ம் தேதி என்னிடம் தொலைபேசியில் சொன்னார். விவசாயப் பொருளாதாரம் நொறுங்கப் போகிறது என்பதை ஊகித்து பதைபதைப்பில் இருக்கிறார் அவர். மேலும் “ஏப்ரம் முதல் வாரத்திலிருந்து பெண்தூருக்கென நாங்கள் கயிறுகள் செய்யத் தொடங்க வேண்டும்” என்றார். காளைகளை கொண்டாடுவதற்கென ஜூன் மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடையில் கொண்டாடப்படும் திருவிழா அது.
மடங்க் என்ற பட்டியல் சாதியை சார்ந்த போரேக்கள் இரண்டு வகையான கயிறுகளை விவசாயிகளுக்கு தயாரிக்கிறார்கள். கலப்பையுடன் கட்டப்படும் 12 அடி நீள கஸ்ரா என்கிற கயிறு ஒரு வகை. அறுவடை செய்யப்பட்ட விளைச்சலை கட்டுவதற்கும் அது பயன்படும். சில வீடுகளில் குழந்தைகளுக்கான தொட்டில் கட்டுவதற்கும் பயன்படுகிறது. இன்னொரு வகை, கண்டா எனப்படும் மூன்று அடி நீள கயிறு. காளையின் கழுத்தில் கட்ட பயன்படுவது. கஸ்ரா கயிறை நூறு ரூபாய்க்கும் ஒரு ஜோடி கண்டா கயிறுகளை ஐம்பது ரூபாய்க்கும் அவர்கள் விற்பதுண்டு.
அமித்தின் பதைபதைப்புக்கு காரணம் இல்லாமலில்லை. பல வாரங்களாக வேலை கிடையாது. ஊரடங்குக்கு முன்பு, தேவூவும் ஐம்பது வயதுகளில் இருக்கும் அவரின் மனைவி நந்துபாய்யும் அமித்தும் ஒவ்வொரு நாளின் எட்டு மணி நேர உழைப்புக்கும் தலா நூறு ரூபாய் சம்பாதித்திருந்தார்கள். ஊரடங்கின் காரணத்தால் 350 மணி நேரங்கள் வேலையை அவர்கள் இழந்திருக்கிறார்கள். 13000 ரூபாய் வரை இழந்திருப்பதாக கணக்கு சொல்கிறார்கள்.
இந்த வருடத்தின் கர்நாடகி பெந்தூர் திருவிழா ஜூன் 7ம் தேதி நடக்கவிருக்கிறது. தேவ், நந்துபாய் மற்றும் அமித் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மீரஜ் டவுனிலிருந்து அவர்கள் வாங்கும் கலர்ப் பொடிகள் இப்போது ஊரடங்கு நேரத்தில் வாங்க முடியாது. மேலும் அவர்கள் வேலை செய்வதற்கு 120 அடி வரை வீட்டுக்கு வெளியே இருக்கும் பாதையை பயன்படுத்த வேண்டும். மொத்த வேலையும் கைகளிலேயே செய்யப்படுவதென்பதால் எளிதாக காவல்துறை கவனத்தை அது ஈர்த்துவிடும்.
எப்படியோ சமாளித்து கயிறு தயாரித்தாலும் விற்பதில் சிக்கல்கள் இருக்கும். பல விவசாயிகள் கஸ்ரா மற்றும் கண்டா கயிறுகளை பெந்தூர் திருவிழாவில்தான் வாங்குவார்கள். அவர்களுக்கு விற்பதற்கென தேவூவும் அமித்தும் அக்கொல், பொஜ், கலாட்கா, கரடகா மற்றும் சவுந்தல்கா ஆகிய ஆறு கிராமங்களில் நடக்கும் வாரச் சந்தைகளுக்கு பயணிப்பார்கள். “திருவிழாவுக்கு சில நாட்களுக்கு முன் இச்சல்கரஞ்சி டவுனில் கூட நாங்கள் நிறைய கயிறுகளை விற்போம்” என்கிறார் அமித்.
இந்த முறை, கர்நாடகி பெந்தூர் திருவிழா ஜூன் 7ம் தேதி நடக்குமா என உறுதியாக தெரியவில்லை. அதை தொடர்ந்து நடக்கும் பிற விழாக்களும் நடக்குமா என தெரியவில்லை. பெந்தூர் திருவிழா காலத்தில்தான் கயிறுகள் விற்று 15000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியுமென்பதால், அது நடக்காமல் அவர்களுக்கு கஷ்டம்தான். அதன் பிறகு, வியாபாரம் மந்தமாகிவிடும்.
தேவூவும் அவருடைய மூன்று சகோதரர்களும் சொந்தமாக வைத்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தை 10000 ரூபாய் வருடக் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். குத்தகைக்கு எடுத்திருப்பவரால் இந்த வருடம் பணத்தை கொடுக்க முடியுமா என்பதில் அவர்களுக்கு சந்தேகம்தான்.
பெந்தூர் திருவிழாக்கள் இந்த வருடம் நடக்குமா என்பது போரேக்களுக்கு உறுதியாக தெரியவில்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முந்தைய மாத சம்பாத்தியமான 9000 ரூபாய்யும் கையை விட்டு வேகமாக கரைந்து கொண்டிருக்கிறது.
“ஏற்கனவே தாமதமாகிவிட்டது” என்னும் அமித், ”ஊரடங்கு தொடர்ந்தால் நாங்கள் ஒன்றும் சம்பாதிக்க முடியாது” என்கிறார்.
தமிழில்: ராஜசங்கீதன்