தனுஷ்கோடி ஒரு வெறுமையான நகரம். வெள்ளை நிற கடல் மண்ணால் சூழப்பட்ட,தொலை தூரமாக ஒதுங்கியிருக்கிற பகுதி. இந்தியாவின் தென்கோடி முனையான அதன் கரையோரங்களாக வங்காள விரிகுடாவும் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியின்போது அது 1914இல் சிறு துறைமுகமாக மேம்படுத்தப்பட்டது. அதன் தொட்ர்ச்சியாக புனித யாத்ரிகர்கள், பயணிகள், மீனவத் தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கான நகரமாக மாறியது.
அரை நூற்றாண்டுக்குப் பிறகு 1964இல், ஒரு மாபெரும் சூறாவளி டிசம்பர் 22 அன்று நடுஇரவில் தாக்கியது. டிசம்பர் 25 காலை வரை அது நீடித்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் தாலுகாவில் உள்ள துறைமுக நகரமான தனுஷ்கோடியை நான்கு நாட்கள் அடித்த அந்த சூறாவளி தரைமட்டமாக ஆக்கியது. சூறாவளியால் எழுந்த மாபெரும் அலைகள் ஒட்டு மொத்த நகரத்தையும் சூறையாடின. 1800க்கும் மேற்பட்டோரின் மரணத்துக்கும் அந்த அலைகள் காரணம் ஆகின. முப்பது கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள, பாம்பன் நகரிலிருந்து 100 பேரை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த ஒரு ரயிலும் அப்படியே கடலில் மூழ்கிவிட்டது.
அந்த சூறாவளிக்குப் பிறகு அந்த இடம் பேய் நகரம், வாழ்வதற்கு தகுதி இல்லாத இடம் என்று பலவகையாக அழைக்கப்பட்டது. முழுமையாக அந்த இடம் கைவிடப்பட்டது. ஆனாலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் ஒருவரின் குத்துமதிப்பான எண்ணிக்கையின்படி, 400 மீனவத் தொழிலாளர் குடும்பங்கள் தனுஷ்கோடியில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன. இந்த வெறுமையான பகுதியை தங்களின் வீடாக நினைத்து அவை வாழ்ந்தன. அவற்றில் சில அந்த சூறைக்காற்று ஏற்படுத்திய அழிவுக்குத் தப்பி வாழ்பவை. அங்கே மின்சாரம் கிடையாது. கழிப்பறைகள் கிடையாது. குடி தண்ணீர்கூட கிடையாது.
தமிழில் : த. நீதிராஜன்