இறந்த பெண்ணின் உறவினர்கள் "அவரின் உடலைச் சிதையில் இட்டு, எரிப்பதற்கு முன்னர் தயவுசெய்து இந்த சேலையை போர்த்த முடியுமா" என்று வேண்டுகோள் விடுத்தனர். மினுமினுக்கும் பச்சை சேலையை சந்திப்பன் வால்வ்விடம் கொடுத்தனர். சந்திப்பனுக்கு இந்த வேண்டுகோள் ஒன்றும் அசாதாரணமானதாகத் தோன்றவில்லை. அவரும் அவர்கள் தெரிவித்தவாறே செய்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஓஸ்மனாபாத் நகரில் உள்ள மயானத்தில், பதினைந்து சடலங்கள் எரியூட்டப்படுவதற்காக வரிசையாகக் காத்துக்கிடக்கிறது. வால்வ் இந்த மயானத்தில் சடலங்களை தகனம் செய்வதற்காக நியமிக்கப்பட்டவர். அவர் தனது பி.பி.இ உடையை அணிந்து கொண்டு கையில் கையுறை அணிந்தவாறு இறந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டுள்ளக் காற்றுப்புகாத அளவிற்கு நன்றாக மூடப்பட்டுள்ள வெண் நிற பையின் மீது, அந்த சேலையை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, "அந்த பெண்ணின் உறவினர்கள் எங்கே தங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவிடுமோ என்று பயந்தனர்" என்று தெரிவித்தார்.
ஓஸ்மானாபாத் முனிசிபல் கவுன்சிலின் கீழ் பணிபுரியும் தொழிலாளாரான 45 வயதான வால்வ், கடந்த மார்ச் 2020 கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே, தொற்றால் இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்து வருகிறார். அவர் தற்போது வரை, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்திருக்கிறார். மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையைக் காட்டிலும் ஊரகப் பகுதிகளில் அதிகம் பரவத் தொடங்கியதால், ஒவ்வொரு நாளும் 15 முதல் 20 சடலங்கள் வரை மயானத்தில் தகனம் செய்வதற்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார். இதன்காரணமாக மயானத்தில் பணிபுரிந்த சந்திபனிற்கும், அவரது சக பணியாளர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. மக்கள் மத்தியில் பீதியும் கூடியிருக்கிறது.
"வைரஸ் தொற்றுப் பரவிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதைக்கூட தவிர்த்தனர்" என்கிறார் வால்வ். ”நாங்கள் எரியூட்டுவதற்கு முன்னர் சில முக்கியமானச் சடங்குகளை செய்யுமாறு எங்களிடம் கேட்டு கொண்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினர் இன்றி இறந்தவர்களை எரியூட்டுவதை பார்க்கும் போது, நெஞ்சை உலுக்கக்கூடியதாக இருந்தது. ஆனாலும், இறந்தவர்களுக்கு அவர்களுக்கு நடக்கும் இறுதிசடங்குகள் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமே, எங்களிடம் மிஞ்சியிருக்கும் ஆறுதல்" என்று மேலும் சொல்கிறார்.
கொரோனா இரண்டாம் அலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக ஏற்பட்டுள்ள பயம் மற்றும் கட்டுப்பாடுகளால் இறந்தவர்களுக்கான இறுதிச்சடங்கிலிருந்து அவர்களது உறவினர்களை விலகியிருக்கவே செய்துள்ளது. மேலும், மயானத்திற்குள்ளும் ஒரே ஒரு உறவினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார். இதனால் மற்ற உறவினர்கள் அனைவரும் இறந்தவருக்கு செய்யும் இறுதி மரியாதையைக் கூட செலுத்த இயலவில்லை. இதன்காரணமாக அவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்தவாறே ஒருவரையொருவர் தேற்றிக் கொள்ள புதிய வழியை கண்டடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பலரும் தங்கள் அன்புக்குரியவரின் இறப்பில் அவருக்கு கண்ணியமான முறையில் அஞ்சலி செலுத்துவதும் சிக்கலாகியுள்ளதாக உணர்ந்துள்ளனர்.
ஓஸ்மனாபாத் நகரின் ஓய்வுபெற்ற ஜில்லா பரிஷத் அதிகாரியான சுனில் படூர்க்கர் தனது தந்தையின் உடலை அடையாளம் காட்டுவதற்காக பிணவறை சென்றபோது, அங்கு அவரது தந்தையின் உடல் அழுகத்தொடங்கியிருந்தது. "பிணவறையில் வீசிய துர்நாற்றத்தை சகிக்க முடியவில்லை. அங்கிருந்த பல சடலங்களில் எனது தந்தையின் சடலமும் ஒன்று, மேலும் அதில் சில சடலங்கள் அழுகத்தொடங்கி இருந்தன" என்றார் அவர்.
சுனிலின் தந்தை மனோகர் 81 வயதுடையவர், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடந்த ஏப்ரல் 12 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அனுமதிப்பட்டதற்கு ஒருநாள் கழித்து அவர் இறந்துள்ளார். "என் தந்தை இறந்த அன்று நகரில் எண்ணற்றோர் உயிரிழந்திருந்தனர்" என்று நினைவுகூர்ந்த சுனில் மேலும், கூறுகையில் "அவர் இறந்தபோது எங்களது சுமை அளவிடமுடியதாக இருந்தது. அவருடைய இறுதிச் சடங்கை 24 மணி நேரத்திற்குப் பிறகு மட்டுமே எங்களால் தொடங்க முடிந்தது. தனியார் மருத்துவமனையில் எந்த தந்தையைப் போன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் இறந்தால், அவரது உடல் ஓஸ்மனாபாத்தில் உள்ள மாவட்ட மக்கள் மருத்துவமனையிலுள்ள பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சென்று உடலை அடையாளம் காட்டியப் பிறகே உடல்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது" என்று கூறினார்.
அந்த மயானத்தில் தகனம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களே ஒரு வரிசைக்கு 15-20 உடல்களை வரிசையாக வைத்திருந்தனர். பின்னர் ஒருவர் எல்லா உடல்களுக்கும் தீ மூட்டினார். அங்கு இறந்தவர்களுக்கு எவ்வித மரியாதையும் செலுத்தப்படவில்லை" என்று படூர்க்கர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா அரசின் புள்ளிவிவரப்படி ஓஸ்மனாபாத் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த மார்ச் 2020 லிருந்து தற்போது வரை ஏறத்தாழ 1250 பேர் இறந்துள்ளதாகவும், 56,000 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மரத்வாடா பகுதியிலுள்ள இந்த மாவட்டம் பல ஆண்டுகளாக ஏற்கனவே நீர் பற்றாக்குறை, விவசாயிகளின் தற்கொலை போன்ற எண்ணற்ற ஊரக பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மிக முக்கிய விவசாயப் பகுதியான இந்தப் பகுதியில் வாழக்கூடிய மக்கள் கடன் சுமையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள பணத்தையும் மருத்துவ செலவீனங்களுக்காக செய்ய வேண்டியதுள்ளது.
சில சமயங்களில் , குடும்பத்தினர் இறந்தவர்களின் உடலை பெறுவதில்லை என்றும், பெரும்பான்மையாக தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் என்கிற அச்சத்தின் காரணமாக தவிர்ப்பதாகவும், இதன் காரணமாக மருத்துவமனையின் சுமை கூடியுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் சிலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக ஓஸ்மனாபாத்தைச் சேர்ந்த இஸ்லாமியச் செயல்பாட்டாளர் குழுவொன்று பெறப்படாத இறந்தவர்களின் உடலைக் கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய பாடுபட்டுவருகிறது. 8 முதல் 10 தன்னார்வலர்களைக் கொண்ட அந்தக் குழுவில் 34 வயதான பிலால் தம்போலி கூறுகையில்,"கொரோனா இரண்டாம் அலையில் நாங்கள் ஏறத்தாழ 40 பேருக்கு இறுதி சடங்கு செய்துள்ளோம். கொரோனா தொடங்கியதிலிருந்து ஏறத்தாழ 100 பேருக்கு இறுதி சடங்கு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். "மருத்துவமனை எங்களிடம் தெரிவித்ததும், நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம். ஒருவேளை இறந்தவர் இஸ்லாமியராக இருந்தால் நாங்கள் இஸ்லாமிய சடங்கை மேற்கொள்வோம். ஒருவேளை இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால், நாங்கள் இந்து மதச் சடங்கை மேற்கொள்வோம். இறந்தவர்களின் உடலுக்கான கண்ணியத்தை மீட்கும் இந்த செயல்பாட்டை மேற்கொள்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
தங்கள் குழு இந்த செயல்பாடுகளுக்கு விளம்பரம் தேடுவதில் கவனம் செலுத்தாமல் செயல்பட்டுவருவதாகவும், விளம்பரம் தேடுவது தவறு என்று தான் கருதுவதாகவும் மற்றும் அவர்களது தன்னார்வத் தொண்டினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து விழிப்புணர்வோடு உள்ளதாகவும் பிலால் தெரிவித்தார். இதுகுறித்து, இதுவரை திருமணம் செய்துகொள்ளாத அவர் கூறுகையில்," என் குடும்பம் குறித்து நான் மிகுந்த அச்சத்தில் உள்ளேன். ஒருவேளை நான் கொரோனா தொற்றுக்கு ஆளானால், அதனால் எனக்கு எந்த பாதிப்புமில்லை, அதனால் நான் வருந்தபோவதுமில்லை. ஆனால் நான் என் பெற்றோர்களுடன், தம்பி, தங்கைகளோடும் வசித்து வருகிறேன். எங்கள் வீடும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் அளவுக்கு பெரிதானதில்லை. அதனால் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறேன். ஒவ்வொரு இறுதி சடங்கின் போது மௌனமாக பிராத்தித்துக் கொள்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் இறுதி சடங்கை நிகழ்த்தும் தன்மையானது அதை உள்வாங்குவதற்கும் அல்லது சமாளிப்பதற்கும் கடினமாக உள்ளதாக இறந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து ஓஸ்மனாபாத் நகரின் புறநகர் பகுதியில் வசிக்கக்கூடிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 36 வயதான திப்லி யாதவ் கூறுகையில்,"இறப்பு என்பது ஒரு குடும்பத்தின் துக்க நிகழ்வு, நீங்கள் குடும்பமாக அதை எதிர்கொள்கிறீர்கள், குடும்பமாக அதிலிருந்து மீண்டு வருகிறீர்கள். உறவினர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்துகிறார்கள். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் தேற்றிக்கொள்கிறீர்கள். ஆனால் தற்போது அவை எல்லாமும் இல்லாமல் போய்விட்டன" என்று கூறினார்.
கடந்த ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் 24 மணிநேரத்திற்குள் தீபாலியின் மாமியாரும், மாமனாரும் அடுத்தடுத்து இறந்த போது, மொத்தக் குடும்பமும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்திருக்கின்றனர். "எனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதே சமயம், எனது மூன்று குழந்தைகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். நான் மற்றொரு அறையில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தேன். நாங்கள் உயிர் பிழைத்தலுக்கான இதுபோன்ற வழிகளில் ஈடுபட்டிருந்தோம். ஒரு குறுகிய காலத்தில் எனது குடும்பத்தில் இரண்டு நண்பர்களை இழந்தோம். இன்னொரு பக்கம் , எனது கணவரைக் குறித்து அச்சம் கொண்டிருந்தேன். அந்த அறையில் நான் தனியாக இருந்த போது என் மனம் எதையெதையோ நினைத்துக்கொண்டிருந்தது" என்று கூறினார்.
தீபாலியின் கணவர் அரவிந்த் ஒரு விவசாயியும் கூட. தனது பெற்றோர்களின் இறுதி நாட்களில் கவனிக்க முடியாதது குறித்து வருத்தத்தில் உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"நான் மருத்துவமனையில் இருந்த போது, பி.பி.இ உடை அணிந்து கொண்டு, மயானத்திற்கு சென்று அங்கு அவர்கள் எரியூட்டப்படுவதை பார்தேன். குறைந்தபட்சம் என்னால் அதுதான் செய்யமுடிந்தது" என்று தெரிவித்துள்ளார்.
45 வயதான அரவிந்த், அவரது பெற்றோர்கள் இறந்த பிறகு அவரது குடும்பம் துக்கத்தை வெளிப்படுத்த எவ்வளவு குறுகிய மனநிலையில் இருந்தது என்பதைக் குறித்துக் கூறினார். மேலும் கூறுகையில்,"இறந்தவர்கள் உடலை பெற கோர வேண்டும், அடையாளம் காண வேண்டும், இறந்தவர்களின் உடலை முறையாக மயானத்திற்கு எடுத்து செல்ல வேண்டும், இறுதி சடங்கில் கொரோனாவுக்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் போன்ற பெரும் வேலையைக் கொண்டது" என்றும் தெரிவித்தார்.
“ இறுதி சடங்குகள் அதற்கான தளவாடப் பொருட்களை பொறுத்து சுருக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்காக அழுவதற்குக் கூட நேரமில்லை, உங்களது துக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கூட கால அவகாசமில்லை. உங்கள் உறவினர் உடல் எரியூட்டப்பட்டவுடன், மயானத்தில் காத்துக்கிடக்கும் அடுத்தவரின் உடலை எரியூட்டுவதற்காக உங்களை அங்கிருந்து வெளியேற சொல்லி விடுகிறார்கள்"
கடந்த ஏப்ரல் 16 அன்று, 80 வயதான அரவிந்தின் தந்தை வசந்த் இறந்த அதேநாளில், 67 வயதான அவரது தாயார் ஆஷா இறந்துள்ளார். அவர்களது உடலை மயான ஊழியர்கள் அருகருகில் இரண்டு தகனமேடைகளில் வைத்து எரியூட்டியுள்ளனர். இதுகுறித்து அரவிந்த் கூறுகையில்,"அது ஒன்று தான் அந்த நாளில் நான் அடைந்த ஆறுதல், எனது பெற்றோர்கள் ஒன்றாக வாழ்ந்தனர். அதே போன்று,அவர்கள் அருகருகில் அடுத்தடுத்து எரியூட்டப்பட்டுள்ளார். அவர்களது நிம்மதியாக ஓய்வு கொள்வார்கள்" என்றும் கூறினார்.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்