சுக்மதி தேவியின் கால்கள் சமீப காலமாக நடுங்க துவங்கியுள்ளது. செங்குத்தான மலைகளில் பல ஆண்டுகளாக ஏறி இறங்கியதால் அவருக்கு இந்த நிலை உருவாகியிருக்கிறது. 65 வயது விவசாயியான சுக்மதி சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் மிகவும் சிரமத்துடன் 3600 அடி உயரத்தில் அமைந்திருக்கும் தனது மலை பிரதேச கிராமமான ‘கூட்டி’க்கு பல ஆண்டுகளாக நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இக்கிராமத்தில் வாழ்கிறார். பனி விழும் மீத மாதங்களில் 70 கிலோ மீட்டர் தூரம் கீழிறங்கி 900 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் தார்சுலா நகரில் வாழ்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சில நேரங்களில் செங்குத்தாக இருக்கும் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தை குதிரையை பயன்படுத்தி கடக்கிறார். ஆனால் தற்போது மழையின் காரணமாக கற்களும் சேறும் நிரம்பியதால் அந்த வழியும் பயன்படுத்த முடியவில்லை. இங்கு வசிக்கும் கிராமவாசிகள் எல்லைபுற சாலைகள் அமைப்பு சாலை அமைக்க மலைகளை வெடி பொருட்களால் தகர்ப்பதால்தான் தாங்கள் பயன்படுத்தும் சாலைகள் பாழடைந்து விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இடிபாடுகள் நிறைந்த இச்சாலை காரணமாக சுக்மதியின் கூட்டி கிராமத்திற்கான பயணம் மேலும் சிரமம் நிறைந்தாகி விட்டது. இச்சாலையில் கொடுமையான குறுகிய பாதைகளும், காளி மற்றும் கூட்டி- யாங்டி நதிகளை கடந்து செல்வதுமாகும். “ஒரு நாள் எனது கிராமத்திற்கு காரில் செல்ல முடியும் என நம்புகிறேன்” என 2017ம் ஆண்டு மே மாதம் அவரோடு பயணம் செய்த போது என்னிடம் தெரிவித்திருந்தார். இமாலய வியாஸ் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் அவரது 363 பேர் வசிக்கும் கூட்டி கிராமத்திற்கு செல்ல எங்களுக்கு ஐந்து நாட்கள் தேவைப்பட்டது.
போட்டியா என்னும் பிரிவை சேர்ந்த சுக்மதி தேவி இந்திய-சீன எல்லையில் அமைந்திருக்கும் ஏழு கிராமங்களில் வசிக்கும் 2,059 பேரில் ஒருவர். இவர்களை பொறுத்த வரையில் அனைத்து சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற பொது தேர்தல்களில் சாலை வசதிதான் முக்கிய பிரச்சனை. இந்த கிராமங்கள் ஏப்ரல் 11ந் தேதி வாக்களிக்கும்.
கூட்டி தவிர கழுதையை பயன்படுத்திய பண்டி, கர்ப்பியாங்க், கன்சி, நபாலச்சு, ரவுங்க் காங் மற்றும் நவி கிராமங்களில் தற்போது சாலைகள் வரத் துவங்கியுள்ளன. இக்கிராங்கள் அனைத்தும் உத்தராகண்ட் மாநிலம் பித்ரோகர்க் மாவட்டத்தின் தார்சுலா வட்டத்தில் அமைந்துள்ளன. கிராமவாசிகள் இடம்பெயரவும் தங்கள் தேவைக்கான பொருட்களையும் தார்சுலா நகரத்திலிருந்துதான் பெற்றுக் கொள்கின்றனர். இந்த பாதை இந்திய ராணுவத்திற்கும் மிக முக்கியமானதாகும். சாலை முடிவடையும் நஜங்க் பகுதியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பண்டி கிராமம் செல்ல இரு நாட்கள் தேவைப்படும் போது கூட்டி கிராமத்தை அடைய 5-6 நாட்கள் தேவைப்படும்.
ஆண்டு தோறும் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை சீனாவில் நடைபெறும் வர்த்தக நிகழ்வில் எல்லையை கடந்து செல்ல வியாபாரிகளும் அவர்களது குதிரைவண்டிகளும் இந்த பாதையை தான் பயன்படுத்துகின்றனர். காப்பி, உலர் பழங்கள், துணிகள், தானியங்கள் மற்றும் இதர தயாரிப்புகளை கம்பளி ஆடை, தரை விரிப்புகள் போன்ற
பொருட்களை பெற்று வருவது வழக்கம். ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜீன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். தார்சுலா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த ஏழு கிராமங்களும் மாநிலத்தின் ஒரே ரிசர்வ் தொகுதியான அல்மோரா பாராளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. இத்தொகுதியின் கீழ் வரும் 14 சட்டமன்ற தொகுதிகள் அல்மோரா, பாகேஷ்வர், சம்பாவாத் மற்றும் பித்ரோகர்க் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
1996 முதல் 2009 வரை நாங்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் பாஞ்சி சிங் ராவத்தும் 2009ல் காங்கிரஸ் கட்சியின் பிரதீப் தம்தாவும் வெற்றி பெற்றனர்.
2014ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தார்சுலா சட்டமன்ற தொகுதியில் பிரதீப் தம்தா பா.ஜ.க வேட்பாளரான அஜய் தம்தாவை விட 2,520 வாக்குகளை பெற்றார். ஆனால் மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சரான அஜய் தம்தா மற்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். (தம்தா பிரிவினர் செம்பினால் பொருட்கள் செய்யும் பட்டியல் இனத்தவர்). 2019ல் மீண்டும் அஜய் தம்தா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அஜய் தம்தா மற்றும் பிரதீப் தம்தா ஆகிய இருவரும் குமோவன் பகுதிகளில் வசித்து வருகின்றனர். அஜய் தம்தா அல்மோரா நகரத்திலும், பிரதீப் தம்தா நைனிடால் மாவட்டம் ஹல்துவானி நகரிலும் (சொந்த ஊர் மாகேஷ்வர் மாவட்டம் ஆகும்) வசிக்கின்றனர். இவ்விரு நகரங்களும் தார்சுலாவிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தனை தூரத்தில் வசிக்கும் இவர்களின் காதுகளில் மலை உச்சியில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகள் விழவில்லை என்பதே உண்மையாகும்.
2003ம் ஆண்டு 95 கிலோ மீட்டர் தூர சாலை பணிகள் துவங்கின. இது தார்சுலா அருகேயுள்ள தவாகட் முதல் லிபுலே பள்ளத்தாக்கு வரை நீண்டு இந்திய சீன எல்லையின் வியாஸ் பள்ளத்தாக்கு வரை இணைக்கும்.
2008ம் ஆண்டு இந்த சாலை பணியை முடிக்க முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரிய பாறைகள் உடைத்தல் உள்ளிட்ட மிகக் கடுமையான பணிகள் காரணமாக பணிகளை முடிக்க 2012, 2016, 2018 என கால நீட்டிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமாக 2022ல் பணிகளை முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான காலம் தாழ்த்துதலை தொடர்ந்து இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் 2017ம் ஆண்டின் அறிக்கையில் மோசமான கட்டுமானம் மற்றும் அதிக செலவுகளை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை தவாகட் முதல் லகான்பூர் வரையிலான 23 கிலோ மீட்டர் சாலை காங்கிரீட் சாலையாகவும், லகான்பூர் முதல் நஜங்க் வரையிலான 2.5 கிலோமீட்டர் தூரம் மண் சாலையாக உள்ளது. நஜங்க் முதல் சியாலே வரையிலான சாலை பணி நடைபெற்று வருகிறது. சியாலே முதல் கூட்டி வரை சாலை அமைக்க பாறைகளை உடைத்து நிலப்பரப்பினை சமன் செய்துள்ளமையால் எல்லைபுற சாலைகள் அமைப்பின் வாகனங்கள் செல்ல வழி ஏற்பட்டுள்ளது. லிபூலே முதல் நவி டங் வரையிலான ஐந்து கிலோ மீட்டர் சாலை பணி மீதமுள்ளது. (இது தார்சுலா துணை மண்டல நீதிபதி அலுவலத்தில் சரி பார்க்கப்பட்டது).
எல்லைபுற சாலைகள் அமைப்பின் வாகனகள் சமன்படுத்தப்பட்ட சாலைகளில் பயணிக்கும் போதும் தார்சுலா முதல் மற்ற பகுதி சாலைகளில் மக்கள் தடுமாறியவாறே பயணிக்க வேண்டியுள்ளது. எல்லை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஜிவான் சிங் ரோங்கலே என்னும் 75 வயது வணிகர் ஆண்டிற்க்கு ஐந்து முறை இச்சாலையில் பயணிப்பது கடினமானது என கூறினார். “எனது எண்ணிலடங்கா குதிரைகளையும் பொருட்களையும் நான் இழந்துள்ளேன். சாலை அமைக்க வெடிகள் வைத்து தகர்க்கும் போது நடைபாதைகள் இடிந்து விழும் பாறைகளால் மூடிவிடுகின்றன. மழை காலங்களில் அனைத்தும் அரிக்கபட்டு நடக்க பெரும் சிரமங்கள் ஏற்படுகிறது” என்கிறார்.
இதனால் பெரிய கற்களின் மீது ஏறியும் வேகத்தில் ஓடும் ஆறுகளை கயிறுகள் உதவியுடன் பிடித்துக் கொண்டும், மரத் தடிகளால் உருவாக்கப்பட்ட பாலங்களை பயன்படுத்தியும் கடக்க வேண்டிய சூழல் உருவாகிறது. “அரசாங்கத்திற்க்கு எங்களை பற்றிய கவலை எதுவும் இல்லை” என ஆவேசமாக கூறுகிறர் ரோங்கலே. “இன்னும் சாலை பணிகளுக்காக பாறைகள் உடைக்கப்படும் போது எங்களது பயணம் மேலும் சிரமம் நிறைந்ததாக மாறிவிடும்” என வருந்துகிறார்.
இந்த சாலை பணியை முடிப்பவர்களுக்கே வாக்களிக்க இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் எந்த அரசாங்கத்தாலும் சாலை பணியை முடிக்க இயலுமா எனவும் அவர்கள் சந்தேகப் படுகின்றனர். சுற்றுலா பயணிகளுக்காக வீட்டில் விடுதி நடத்தி வரும் 50 வயது லஷ்மண் சிங் குட்யால் “சாலை அமைக்கும் வேகம் எங்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. ஆளும் அரசு எந்த கட்சி சார்ந்தாக இருந்தாலும் அவர்களும் பணியை முடிக்க முனைப்பு காட்டவில்லை” என கூறுகிறார்.
எந்த அரசியல் கட்சியும் தங்களுக்கு உதவியதில்லை என கூறும் கிராம மக்கள், தற்போதைய பா.ஜ.க அரசு இயற்க்கை சீற்றத்தின் போது எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். 2017 ஆகஸ்ட் மாதத்தில் இந்த பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒன்பது பொது மக்கள் மரணமடையவும், ஆறு ராணுவ விரர்கள் உட்பட 18 பேர் காணாமலும் போயினர்.
“வயது முதிர்ந்தவர்களால் ஆபத்தான சாலைகளை கடக்க முடியாதென்பதால் நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மக்களை மீட்க ஹெலிகாப்டர் வசதிகளை கோரினோம். சாலை வசதிகள் உள்ள கன்சி கிராமத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் நாங்கள் இருந்தோம். ஆனால் கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்களை மீட்க மட்டுமே ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் என வந்துவிட்டால் எங்கள் வீட்டு நாய்களுக்கு கூட மரியாதை செலுத்தும் அரசியல்வாதிகள் வெற்றி பெற்றவுடன் எங்கள் கோரிக்கைகளை மறந்து விடுகின்றனர்” என கூறுகிறார் ரோங்கலே. அந்த நிலச்சரிவின் போது தனது குதிரைகளும் வியாபார பொருட்களும் அடித்து சென்றதை வருத்ததுடன் தெரிவித்த அவர், அதற்கான இழப்பீட்டை அரசாங்கம் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இது எப்போதாவது நடக்கும் சம்பவம் அல்ல. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிராம மக்கள் தங்கள் குளிர்கால வசிப்பிடமான தார்சுலாவுக்கு செல்லும் போது சிறிய பாதைகள் மழையில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. அப்போதும் ஹெலிகாப்டர் வசதி கோரிய மக்களை அரசாங்கம் புறக்கணித்தது. “நாங்கள் தார்சுலா செல்ல காளி நதியை கடந்து நேபாளம் வழியாக வழக்கமாக நடக்கும் தூரத்தை விட 20 கிலோமீட்டர் அதிகம் நடந்து மீண்டும் இந்தியாவிற்குள் வரும் அவல நிலை உருவானது” என கூறுகிறார் கூட்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான திவான் சிங் குட்யால்.
சாலை வசதி குறைபாடு மட்டுமல்லாமல் ஆளும் பா.ஜ.க அரசு பொது வினியோகதிட்டத்தில் தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டை குறைத்து விட்டதையும் எண்ணி கோபம் கொள்கின்றனர்.
சாலை வசதி குறைபாடு மட்டுமல்லாமல் ஆளும் பா.ஜ.க அரசு பொது வினியோக திட்டத்தில் தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டை குறைத்து விட்டதையும் எண்ணி கோபம் கொள்கின்றனர். மலை பிரதேச கிராமங்கள் நெல், கோதுமை போன்றவற்றை விளைவிக்க முடியாததால் மாதம் தோறும் பொது வினியோக திட்டத்தில் கிடைக்கும் பொருட்களை தான் நம்பி உள்ளனர். நவம்பர் 2017 முதல் ஒரு குடும்பத்திற்க்கு ஏற்கனவே கிடைத்திருந்த 10 கிலோ அரிசிக்கு பதிலாக 2.5 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது (5 கிலோ கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது இவர்களுக்கு சிறிய ஆறுதல்). அரிசிக்கான மானியம் என வெறும் ரூ.75/ மட்டும் இவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால் திவான் சிங் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது முதல் தனக்கு எந்த மானியமும் கிடைக்கவில்லை என்கிறார். “சமவெளியில் கடைகள் ஆங்காங்கே அமைந்திருக்கும். ஆனால் எங்கள் பகுதியில் அப்படி இல்லை. உணவே இல்லாத போது அரசு பணமளித்து எங்களுக்கு என்ன பயன்?” என வினவுகிறார் திவான் சிங்.
இயற்கை பேரிடர்களின் போது இக்கிராமங்களுக்கு எந்தபொருட்களும் கிடைப்பதில்லை. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் கழுதைகள் பயணிக்கும் பாதையும் துண்டிக்கப்பட்ட போது சீன தானியங்களை நேபாளம் வழியாக இக்கிராம மக்கள் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கூட்டி கிராமத்திற்கு வந்து சேரும் பொழுது போக்குவரத்து செலவின் காரணமாக பொருட்களின் விலை மும்மடங்கு அதிகரித்து விடுகிறது. “ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலை ரூ.200/ எனவும், இயற்கை பேரிடர்களின் போது அதிக உயரத்தில் இருக்கும் கிராமங்களில் ஒரு கிலோ உப்பின் விலை ரூ.100/ எனவும் அதிகரித்து விடுகிறது. எந்த அரசாங்கம் எங்களின் இந்த பரிதாபமான நிலையை புரிந்து கொள்ள போகிறது” என வருந்துகிறார் திவான் சிங்.
வியாஸ் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் கடந்த கால வரலாற்றை மனதில் கொண்டு காங்கிரஸ் அரசு தங்களுக்கு சில உதவிளை செய்யும் என நம்புகின்றனர். “காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தால் அரிசி ஒதுக்கீட்டையும், அவசர தேவைகளுக்கு ஹெலிகாப்டர் வசதிகளையும் செய்து தரும்” என நம்புகிறார் ரோங்கலே. “தூரத்தை வைத்து கணக்கிடுகையில் சீனா மற்றும் நேபாள நாடுகளுக்கு அருகில் நாங்கள் வாழ்கிறோம். எங்கள் கோரிக்கைகள் நாட்டின் தலை நகரான டில்லிக்கு எப்போதும் எட்டுவதில்லை. சீனா மற்றும் நேபாள நாடுகள் தான் உணவு, தொலைபேசி வசதி, வேலை வாய்ப்பு என எங்களுக்கு உதவி வருகின்றன. நமது சொந்த அரசங்கமே எங்கள் அடிப்படை உரிமைகளை மறுக்கும் போது, எங்களுக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை” என ஆதங்கத்துடன் விடை பெற்றார் ரோங்கலே.
மொழிபெயர்ப்பு: நீலாம்பரன் ஆ