“இந்த இயந்திரங்கள் முன்பே கொண்டு வரப் பட்டிருந்தால், என் குழந்தைகளின் தந்தை அவர்களை விட்டு போயிருக்க மாட்டார். அவற்றால் இப்போது எனக்கு எந்த பயனும் இல்லை. குறைந்தபட்சம் பிற பெண்களுக்கேனும் பயன்படும். அவர்கள் வீட்டு ஆண்கள் மலக்குழிகளில் இனி இறக்க மாட்டார்கள். நான் துயருற்ற மாதிரி வேறு யாரும் துயருறக் கூடாது,” என ராணி சொல்லிவிட்டு அமைதியாகிறார்.
மனிதர்களே மனிதக் கழிவை அகற்றும் கொடுமை மற்றும் தொடர் மலக்குழி மரணங்கள் ஆகியவற்றை எதிர்த்து தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்ட சஃபாய் கரம்சாரி அந்தோலன் இயக்கத்தின் நிகழ்வு தில்லியில் கடந்த வருடம் நடந்தபோது, அங்கு படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த ராணியை முதன்முறையாக சந்தித்தேன். மனிதரே மனிதக் கழிவை அகற்றும் போக்குக்கு மாற்றாக பல தொழில்நுட்ப தீர்வுகள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த 36 வயது ராணி நெகிழிப் பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தார். அது அவரது இணையரான 30 வயது அனில் குமாரின் புகைப்படம். வெள்ளை நிற துப்பட்டாவை கொண்டு புகைப்படத்தை துடைத்தவர் அமைதி இழந்தார். அவரது குழந்தைகளான ஏழு வயது லஷ்மி 11 வயது கவுரவ் மற்றும் 2.5 வயது சோனம் ஆகியோருடன் மேலும் கீழுமாக நடந்து கொண்டிருந்தார்.
குடும்ப உறுப்பினர் ஒருவரை இந்தியாவின் மலக்குழிகளுக்குள் தொலைத்த பெண், இழப்பை கடக்கும் முயற்சிக்குள் செல்ல முடிவதில்லை. நீதிக்கும் நஷ்ட ஈட்டுக்கும் குடும்பத்தின் வாழ்தலுக்கும் போராட வேண்டியிருக்கிறது. ராணியின் நிலை இன்னும் கொடுமையானது. தென்மேற்கு தில்லியின் தப்ரியில் இருக்கும் அவரின் வீட்டுக்கு சென்ற போது இன்னும் பல விஷயங்களை பேசினோம்.
“நான் அவரை முறையாக திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் நான்தான் அவருக்கு எல்லாமும். அவர்தான் என்னுடைய அன்புக்குரியவர். அவர் எனக்கு அன்பையும் மரியாதையையும் கொடுத்தார். என் குழந்தைகளை அவரின் குழந்தைகள் போல பார்த்துக் கொண்டார்,” என்கிறார் அவர். முன்னாள் கணவரை பற்றி ராணி அதிகம் பேச விரும்பவில்லை. குழந்தைகளின் தந்தையான அவர் வன்முறை நிறைந்தவராக இருந்திருக்கிறார். அவரால் ஏற்பட்ட தீக்காயங்கள் ராணியின் கைகளிலும் கால்களிலும் இன்னும் இருக்கின்றன. இறுதியில் அவர் வேறு நகரத்துக்கு சென்றுவிட்டார். “அனிலும் நானும் ஒன்றாக (கடந்த 3-4 வருடங்களாக) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களின் இதயங்கள் ஒன்றாகவே இருந்தன. ஆனாலும் நாங்கள் மணம் முடிக்கவில்லை. நான் முன்பே ஒருவரை மணம் முடித்திருந்தேன். ஆனால் அனில் யாரையும் மணம் முடித்திருக்கவில்லை. எங்களின் உறவு ரகசியமாக இருக்கவில்லை. எல்லாருக்கும் நாங்கள் கணவன், மனைவியாக வாழ்கிறோம் என தெரியும். என் குழந்தைகளுக்கு தந்தையின் அன்பு முதன்முதலாக கிடைத்தது. வறுமையில்தான் இருந்தோம். ஆனால் சந்தோஷமாக இருந்தோம்.”
தலித் வால்மீகி சமூகத்தை சேர்ந்த அனில் குமார், அவரின் வீடு இருந்த தப்ரியிலிருந்து குறைவான தூரத்தில் இருந்த பிரதானச் சாலையின் மலக்குழி ஒன்றில் 2018ம் ஆண்டின் செப்டம்பர் 14 அன்று இறந்து போனார். உள்ளூர் காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கையின்படி நேரம் மாலை 7 மணி. மாலை 5.30 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததும் அனில் குமார் வேலைக்கு புறப்பட்டு சென்றதாக ராணியும் அண்டைவீட்டாரும் சொல்கின்றனர். முதல் தகவல் அறிக்கையில் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி சொன்னபடி, உள்ளூர் ஒப்பந்தக்காரர் ஒருவர் அனிலை மலக்குழிக்குள் தனியாக ஒரு மெல்லிய கயிற்றின் உதவியுடன் இறங்க வைத்திருக்கிறார். கயிறு அறுந்திருக்கிறது.
வீட்டில் காத்திருந்த ராணி, தொலைபேசி அழைப்புகளை அனில் ஏற்காததால் பதைபதைத்திருக்கிறார். வெளியே சென்று தெருக்கள்தோறும் அவரை தேடியிருக்கிறார். யாரோ ஒருவர், மலக்குழியில் விழுந்த தகவலை சொல்லியிருக்கிறார். உடனே ராணி அந்த இடத்துக்கு சென்று பார்த்ததில், அனிலின் ஷூக்கள் மட்டும் இருந்திருக்கின்றன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த அனில், உயிரிழந்து விட்டிருந்தார்.
15 வருடங்களாக அவர் மலக்குழிகளை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். கால்வாய் சுத்தப்படுத்துவதற்கென அவரின் தொலைபேசி எண் போட்ட ஒரு போர்டை கூட வீடு இருந்த சந்து முனையில் வைத்திருந்தார். அவர் இறந்தபிறகு, போலீஸ் அந்த போர்டை எடுத்துவிட்டது.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி சொன்னபடி, உள்ளூர் ஒப்பந்தக்காரர் அனிலை மலக்குழிக்குள் ஒரு மெல்லிய கயிற்றின் உதவியுடன் இறங்க வைத்திருக்கிறார். கயிறு அறுந்திருக்கிறது
சிறு மலக்குழிகளுக்கு 200-300 ரூபாய், பெரிய மலக்குழிகளுக்கு 500-1000 ரூபாய் என்ற அளவில் அவருக்கு கூலி கொடுக்கப்பட்டது. சராசரியாக அனில் மாதத்திற்கு 7000 ரூபாய் சம்பாதித்தார். வழக்கமாக அவரின் வேலையும் வருமானமும் பருவகாலம் தொடங்கும்போது அதிகரிக்கும். 3-4 வீடுகளில் தரை பெருக்கி சுத்தம் செய்யும் வேலை பார்த்து ராணி 2500 ரூபாய் மாதத்துக்கு ஈட்டுகிறார். ஆனால் வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் அவரால் தொடர்ந்து செய்ய முடிவதில்லை. அவரின் மூத்த மகள் சத்துகுறைபாட்டால் உரு நலிந்த கால்கள் கொண்டவர். சரிவர பேசவும் முடியாது. கைக்குழந்தை சோனம், அவரின் உதவியின்றி நடக்க முடியாது. எனவே அனிலுடன் சேர்ந்து வாழத் தொடங்கியபிறகு ராணி வீட்டு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.
ராணி மற்றும் அனில் இருவருக்கும் பூர்வீகம் ஹரித்வாரில் இருக்கும் கங்கல். ராணியின் பெற்றோர் இறந்துவிட்டனர். அவரின் ஒரே குடும்பம் குழந்தைகள்தான் என்கிறார். அனில் இறந்துபோய் 10 நாட்களுக்கு பிறகு ராணிக்கும் அனிலுக்கும் பிறந்த நான்கு மாத ஆண் குழந்தை நிமோனியா தாக்கி இறந்து விட்டது.
அனில் இறந்தவுடன் மிகவும் மன உளைச்சலில் இருந்தார் ராணி. தற்கொலை செய்து கொள்ளக் கூட விரும்பினார். “ஒருநாள் இக்கதையை முடித்துக் கொள்ள வேண்டுமென நினைத்தேன்,” என்கிறார் அவர். “எத்தனை இடங்களில்தான் நான் போராடுவது? என்னுடைய கோபம் அதிகமானது. வீட்டிலிருந்து என் உடைகளை குவித்து தீ வைத்தேன். வீட்டு உரிமையாளர் ஓடி வந்து அதை அணைத்தார். நான் அழுது கொண்டிருந்தேன். கோபத்திலிருந்தேன். வலி கொண்டிருந்தேன்.”
காவல்துறையோ அனிலின் மரணத்துக்கு காரணமானவரை பிடிக்காமல் ராணி அவருடன் வாழ்ந்த முறையை பற்றி கருத்து கூறிக் கொண்டிருந்ததாக ராணி சொல்கிறார். “அவர்கள் கொடூரமாக சிரித்துவிட்டு, ‘எத்தனை பேருடன் படுத்தாளென யாருக்கு தெரியும்.. அவளுக்கு எத்தனை புருஷன்கள் என்பது யாருக்கு தெரியும். நாளையும் உடனிருப்பாளென யாரால் சொல்ல முடியும்? அவள் சொல்வதை யார் கேட்பார்?’ என்றார்கள். இப்போது சொல்லுங்கள், நான் என்ன செய்வது?’
ஒரு சிறிய இருளடைந்த வீட்டில் வாடகைக்கு வாழும் ராணியும் அவரின் மூன்று குழந்தைகளும் அனிலின் மரணத்துக்கு பிறகு கடுமையான சூழல்களை எதிர்கொண்டிருக்கின்றனர். ராணியால் தொடர்ந்து வாடகை கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் அவருக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினர். மலக்குழி சம்பவத்துக்கு பிறகு பிற மாணவர்களை எதிர்கொள்ள முடியாமல் பள்ளிக்கு செல்வதை கவுரவ் நிறுத்திவிட்டான்.
சஃபாய் கரம்சாரி அந்தோலன் 2003ம் ஆண்டில் தொடுத்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் 2014ம் ஆண்டில் கொடுத்த உத்தரவின்படி, மலக்குழியில் மரணமடைந்தவரின் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். உடன் வாழ்ந்தவர் என்கிற முறையில் ராணிக்கு அந்த நிவாரணம் கிடைக்க வேண்டும். “ஆரம்பத்தில் அனைவரும் எனக்கு 10 லட்ச ரூபாய் கிடைக்க உதவுவதாக கூறினார்கள்,” என்கிறார் அவர். “ஆனால் வெவ்வேறு காரணங்கள் சொல்லி அதிலிருந்து பின்வாங்கி விட்டார்கள். இந்த அமைப்புக்குள் நானும் என் குழந்தைகளும் இல்லை.”
இருவரும் வெளிப்படையாக ஒன்றாக வாழ்ந்ததாலும் ராணியும் அதை பற்றி வெளிப்படையாக பேசியதாலும் அனைவரும் அவர்களிடமிருந்து விலகி விட்டதாக கூறுகிறார் அவர். முதலில் உதவுவதாக சொன்ன பல அமைப்புகள் பின்னர் தயக்கம் காட்டின. பிறகு சில தொண்டு நிறுவனங்கள் கூட்டுமுயற்சியில் நிதி திரட்டி, 50 லட்ச ரூபாய் அளவிலான பணத்தை (இந்த அளவை என்னால் உறுதிபடுத்த முடியவில்லை) 10 வருட வைப்பு நிதியில் கவுரவின் பெயரில் போட்டு வைத்திருக்கின்றனர். கவுரவ் சிறுவன் என்பதால் ராணி அந்த வங்கிக் கணக்கை இயக்க முடியும். அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு குடும்பச் செலவுகளை பார்த்துக் கொள்கிறார். பிற தனிநபர்களின் வழியாக கிடைத்த 50000 ரூபாய் பணமும் வங்கிக் கணக்கில் போடப்பட்டிருக்கிறது.
சஃபாய் கரம்சாரி அந்தோலனை தாண்டி அவரின் சமூகத்தில் இருக்கும் சிலரும் உதவ முனைந்தனர். அனிலுடன் வேலை பார்த்த வீரேந்திர சிங் வங்கிப் படிவங்கள் நிரப்பவும் அந்தோலன் கூட்டங்களுக்கு செல்லவும் ராணிக்கு உதவுகிறார். அனிலை போலவே தில்லியில் திருமணமாகாத பல வால்மீகி சமூக இளைஞர்கள் இருப்பதாக அவர் சொல்கிறார். “எங்களுக்கென நிலையான வேலை இல்லாததால், கிராமத்திலேயே கூட நாங்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. எனக்கும் 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. திருமணம் செய்வதை பற்றி யோசிக்கவே இல்லை. ராணிக்கும் அவரின் குடும்பத்துக்கும் நான் உதவ விரும்புகிறேன். ஏனெனில் சமூகமும் காவல்துறையும் அவர்களை முடித்துக் கட்ட விரும்புகின்றனர்.”
உரையாடலுக்கு பிறகு குழந்தைகளுடன் தப்ரியில் இருக்கும் சந்துமுனை வரை ராணி என்னுடன் நடந்து வந்தார். “இளம்வயதிலேயே பல துயரங்களை நான் சந்தித்து விட்டேன். நான் தாக்கப்பட்டேன். ஆனால் அனிலுடன் இருந்தபோதுதான் முதன்முறையாக சந்தோஷத்தை கண்டேன். அத்தகைய சந்தோஷத்தை கண்ட பிறகு மீண்டும் துயரங்கள் நிரம்பிய வாழ்க்கையை வாழ கடினமாக இருக்கிறது. தனியாக இருக்கும் பெண்ணை இச்சமூகத்தின் கழுகுகள் தாக்க தயாராக இருக்கின்றன. இந்த குழந்தைகளுக்காகதான் வாழ்கிறேன். என்ன நடந்தாலும் இவர்களுக்காக தொடர்ந்து வாழ்வேன். மலக்குழிகளுக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டால், எங்களின் திறன்களை மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்த இயந்திரங்களை சீக்கிரம் கொண்டு வர வேண்டும்...”
நான் முதன்முறையாக ராணியை சந்தித்த சானிடெக் ஃபோரமில் பல இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பந்திக்கூட் என்கிற ஓர் இயந்திரமும் இருந்தது. பரிசோதனை முறையில் அவை கேரளாவில் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அழுத்தத்தை கொண்டு செயல்படும் ஓர் இயந்திரமும் இருந்தது. மலக்குழிக்குள் சுழன்று கணிணிகளுக்கு புகைப்படங்கள் அனுப்பும் கேமரா இருந்தது. மலக்குழிகளில் விஷவாயு தாக்கி நேரும் மரணங்களை போக்க வாயு பரிசோதனை இயந்திரமும் காட்சியில் இருந்தது. மனித தலையீட்டை தவிர்க்கவே முடியவில்லை எனில், அதற்கென முழு பாதுகாப்பு உடையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய தொழில்நுட்ப தீர்வுகளை அறிமுகப்படுத்தவென தில்லி நிர்வாகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் பேச்சுவார்த்தையில் இருக்கின்றன.
ராணியுடன் சேர்ந்து தில்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலெங்கானா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்திருந்த பத்து பெண்கள் பேசினர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கணவர்களையும் பலி கொண்ட சம்பவங்களை நினைவுகூர்ந்தனர். அவர்களின் கோபத்தையும் வருத்தத்தையும் முன் வைத்தனர். பல மொழிகளில் பேசினாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவான துயரங்களை கொடுத்துக் கொண்டிருந்த விஷயத்துக்கான தீர்வுகளை கேட்டு பேசினர். கிட்டத்தட்ட எல்லா பெண்களும் அங்கிருந்த தொழில்நுட்ப தீர்வுகளை ஆதரித்தனர். அவற்றை கையாள கற்றுக் கொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர். அவற்றின் வழி இந்த நாட்டின் மலக்குழிகளை மனிதர்களின்றி சுத்தப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழில் : ராஜசங்கீதன்