பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தலைமை ஆசிரியர் கூறிய இடத்திற்குச் சென்று பதற்றத்துடன் அமர்ந்துள்ளனர். அவர்களின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுவிட்டது. அவர்களின் கல்விச் செயல்பாடு இதற்கு காரணமல்ல. அப்பிள்ளைகளை தண்டிப்பதற்காக அல்ல, உதவுவதற்காக தலைமை ஆசிரியர் அங்கு அனுப்பி வைத்துள்ளார். இது அவர்கள் பள்ளியின் வகுப்பறை கிடையாது. ஆந்திர பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தின் மிகவும் ஏழ்மையான மண்டலங்களில் ஒன்றான அமதாகுரில் இந்த சிறிய நாடகத்தின் இரண்டாவது அங்கம் அரங்கேறியது.
அமதாகுரில் அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் 10 வயது தலித் மாணவி ஜே.இந்து உள்ளிட்ட ஐந்து ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பற்றி ஜனவரி 16ஆம் தேதி பாரி கட்டுரை வெளியிட்டது. ஆதார் அட்டைகளில் அவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் இவர்கள் ஐந்து பேருக்கும் இந்தாண்டு கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இந்துவின் பெயர் ’ஹிந்து’ என்று அவரது அட்டையில் இடம்பெற்றுள்ளது. அவளது குடும்பத்தினர் புதிதாக திருத்தம் செய்ய விண்ணப்பித்துள்ள போதிலும் அப்படியே உள்ளது.
ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ள இந்த பிழையால் பெயர் பொருந்தாமல் இந்து தனது பெயரில் வங்கி கணக்கு தொடங்க முடியவில்லை. மேலும் நான்கு மாணவர்கள் (மூவர் தலித், ஒருவர் இஸ்லாமியர்) இதே சிக்கலை சந்தித்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் ஐந்தாம் வகுப்பு முதல் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பு பின்னணி கொண்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1,200 அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பாரியில் கட்டுரை வெளியான பிறகு, அம்தாகுரில் உள்ள ஆதார் மைய பணியாளர் கே. நாகேந்திராவை ஹைதராபாத்தில் உள்ள யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) மண்டல அலுவலக அதிகாரி அழைத்து பேசியுள்ளார். தலைமை ஆசிரியர் எஸ். ரோசையாவை (அவரும் தலித்) நாகேந்திரா தொடர்புகொண்டு, ஒரு மணி நேரத்திற்குள் ஆதார் அட்டைகளில் உள்ள பிழைகளை திருத்த விரும்புவதாக கூறியுள்ளார். பொங்கல் விடுமுறை என்பதால் பள்ளி மூடப்பட்டுள்ளதாக ரோசையா அவரிடம் தெரிவித்துள்ளார். விடுமுறை முடிந்து அரசு சேவை மையத்திற்கு அப்பிள்ளைகளை அனுப்பி வைப்பதாக நாகேந்திராவிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
வங்கி கணக்குகள் இல்லாத பிள்ளைகளை ரோசையா அழைத்திருந்தார். அவர்களில் ஒருவரான பி. அனிஃப் (அவரது ஆதார் அட்டையில் திருத்தம் செய்த பிறகும் அனைஃப், அனேஃப் என்று இருக்கிறது), பேசும்போது, விடுமுறை நாட்களுக்கு முன்புதான் அவரது குடும்பம் திருத்தங்களுக்கு விண்ணப்பித்திருந்தது. இந்து உள்ளிட்ட மற்ற நான்கு பேரை மட்டும் ரோசையா பள்ளி ஆவணங்கள் வைக்கும் அறைக்கு அழைத்துச் சென்று வருகை பதிவேட்டு உதவியோடு, புதிய பள்ளி சான்றிதழ்களை சரியான விவரங்களுடன் மாணவர்களுக்கு எழுதித் தந்துள்ளார். அரசு சேவை மையத்தில் உள்ள ஆதார் சர்வர்களில் இச்சான்றிதழ்களை நாகேந்திரா பதிவேற்றம் செய்வார்.
பிறகு ஜனவரி 23ஆம் தேதி காலை அமத்குரில் உள்ள அரசு சேவை மையத்திற்கு நான்கு பிள்ளைகளும் சென்றுள்ளனர். அங்கு இணைய தளத்தை திறந்து அவர்களின் பெயர், பிறந்த தேதி போன்ற விவரவங்களை நாகேந்திரா சரிசெய்யும் வரை காத்திருந்தனர். இந்த அமைப்புகளில் உள்ள குறைகளால், பயோமெட்ரிக் புதுப்பித்தலின்போது பல பிள்ளைகளின் பிறந்த தேதி ஜனவரி 1 என்று மாற்றப்பட்டு இருந்தது.
"உங்கள் எல்லோருக்கும் பெற்றோரின் கைப்பேசி எண்கள் தெரியுமா?" என அவர் பிள்ளைகளிடம் கேட்டார். "ஆதார் அட்டையை மீண்டும் அச்சிட ஓடிபி [ஒருமுறை கடவுச்சொல்] தேவை." இந்துவிடம் அவரது மாமாவின் கைப்பேசி எண் இருந்தது. இரட்டை சகோதரர்களிடம் பெற்றோரின் கைப்பேசி எண்கள் இருந்தன. நான்காவது மாணவர் ஆதார் அட்டையின் நகலை கொண்டுவர மறந்துவிட்டதால் அவரது திருத்தம் மட்டும் நிலுவையில் உள்ளது.
இந்துவின் விவரங்களைப் பெற்ற பிறகு அச்சிடப்பட்ட ஒப்புகைச் சீட்டைத் தர முடியாது என்பதால் கையெழுத்து ரசீதை நாகேந்திரா கொடுத்துள்ளார். "அச்சு இயந்திரம் வேலை செய்யவில்லை," என்றார் அவர். தரவுகள் புதுப்பிக்கப்பட ஒரு வாரம் ஆகும் என அவர் தகவல் அளித்தார். “ஆதார் இணைய தளத்திற்கு ஸ்கேன்களை நான் இன்னும் பதிவேற்றம் செய்யவில்லை. என் மடிக்கணினியில் [ஆஃப்லைன்] அவற்றை கோப்புகளாக சேமித்துள்ளேன்,” என்றார் அவர். வேறு ஒரு ஆபரேட்டர், நாகேந்திரன் அன்றைய தினம் பெற்ற கோரிக்கைகளை மறு-அங்கீகாரம் செய்ய வேண்டும். பின்னர் அவர் தனது மடிக்கணினியை அந்த ஆபரேட்டரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
"கல்வி உதவித்தொகைக்கான பொறுப்பில் உள்ளவர் வங்கியில் [ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சர்வரில்] பிரச்னை உள்ளது என்கிறார். அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை யாரும் கணக்கு தொடங்க முடியாது," என்கிறார் ரோசையா. ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்படுவதால் ஐந்து பிள்ளைகளுக்கும் உதவித்தொகை கிடைக்கும் என அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். "வங்கிக் கணக்கைத் தொடங்கிய பிறகு, கல்வி உதவித்தொகையில் பெயர்களை பதிவு செய்ய சில மணி நேரங்களே ஆகும்," என்கிறார் ரோசையா. “இந்தாண்டு மாணவர்களுக்கு கட்டாயம் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.”
ஆயிரக்கணக்கில் ஆதார் குறைபாடுகள் ஏற்படும் போது, இதற்கு மட்டும் உடனடி பதில் எப்படி கிடைத்தது? "இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டதால் இது சாத்தியப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்குகள் உள்ளன,” என்கிறார் ஆந்திர பிரதேசம், தெலங்கானாவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைக் கழக மத்திய ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரும், முன்னாள் கல்லூரி முதல்வருமான ஏ. சந்திரசேகர். "இந்த முறையில் அவர்கள் [அதிகாரிகள்] நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஒரு லட்சம் வழக்குகள் இருந்தால் 10,000 வழக்குகளைத் தீர்க்க [சரிசெய்ய] வேண்டும். அப்போது மக்களும் [ஆதார்] முறையின் மீது நம்பிக்கையைப் பெறுவார்கள். அவர்கள் இதை ஒரு மட்டத்தில் முயற்சி செய்கிறார்கள், ஆனால் மற்றொரு மட்டத்தில் கள நிலவரத்தையும் அறிவார்கள்."
தமிழில்: சவிதா