அன்புள்ள இந்திய தலைமை நீதிபதி அவர்களுக்கு,
“ஊடக வரைப்படத்திலிருந்து புலனாய்வு ஊடகவியல் என்பது துரதிஷ்டவசமாக மறைந்து வருவதாகக் கூறிய தங்களின் முக்கியமான கருத்திற்கு நன்றி.. “நாம் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில், மிகப்பெரும் மோசடிகளை வெளிப்படுத்தும் செய்தித்தாள்களை ஆவலுடன் படித்திருக்கிறோம். செய்தித்தாள்கள் நம்மை ஒருபோதும் ஏமாற்றியதில்லை,” என்று சொல்லி இருக்கிறீர்கள்.
ஊடகத்தைப் பற்றி இதை விட உண்மையான வார்த்தைகளை சமீப காலங்களில் கேட்டிருக்க மாட்டோம். சிறு காலத்திற்காவது உங்களது பணியாக இருந்த துறை எப்படி இருந்தது என்பதை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.. நீங்கள் ஈநாட்டில் 1979ஆம் ஆண்டு இணைந்த சில மாதங்களில்தான் நானும் ஊடகத்துறைக்கு வந்தேன்.
அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் சொன்னது போல – அப்போதெல்லாம் நாம் எழுந்தவுடன், “செய்தித்தாள்களில் வெளிவரும் மிகப்பெரும் ஊழல் செய்திகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்தோம்.” ஐயா, இன்று நாம் எழுந்தவுடன் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் (UAPA) எனும் கொடூரச் சட்டத்தின் கீழ் ஊழல்களை தோலுரிக்கும் பத்திரிகையாளர்கள் எப்படி குற்றம்சாட்டப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள் போன்ற செய்திகளைதான் படிக்கிறோம். அல்லது அண்மையில் நீங்கள் கடுமையாக விமர்சித்த, அந்நிய செலாவணி தடுப்புச் சட்டம் (PMLA) போன்ற சட்டங்கள் எப்படி மிக மோசமான வகையில் தவறான வகையில் பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி படிக்கிறோம்.
நீங்கள் உங்கள் உரையில் குறிப்பிட்டது போல, “கடந்த காலங்களில் ஊழல்கள், தவறான செயல்பாடுகள் குறித்து செய்தி வெளியிட்டு ஊடகங்கள் ஏற்படுத்திய அதிர்வுகளுக்கு அதனால் ஏற்பட்ட கடுமையான பின்விளைவுகளுக்கு நாம் சாட்சியாக இருந்தோம்”. ஆனால் இன்று கடும் பின்விளைவுகளை இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் சந்திக்கின்றனர். நேரடி செய்திகளை மட்டுமே அளிப்பவர்களுக்கும் இதே கதிதான். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராசில் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற வழியிலேயே சித்திக் கப்பான் கைது செய்யப்பட்டார் . ஓராண்டிற்கு மேலாகியும் அவர் பிணை கிடைக்காமல் சிறையில் தவித்து வருகிறார். வழக்கு விசாரணை ஒவ்வொரு நீதிமன்றத்திலும் பந்தாடப்படுவதால் அவரது உடல்நிலையும் மோசமடைந்துவிட்டது.
நம்முன் உள்ள இதுபோன்ற உதாரணங்கள் இருக்கும் போது ஊடகவியல் - புலனாய்வு மற்றும் பிற வகையிலான ஊடகவியல் – விரைவிலேயே மறைந்துவிடும்.
நீதிபதி ரமணா அவர்களே, நீங்கள் சரியாக சொன்னீர்கள், கடந்த காலங்களில் ஊழல், மோசடி வெளிப்பட்டது போல “அண்மைக் காலங்களில் எந்த செய்தியும் வெளிவந்ததாக நினைவில்லை. எல்லாம் நன்றாக இருப்பது போன்ற ஒரு தோற்றம் இப்போது இருக்கிறது. எல்லாவற்றையும் உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். ”
சட்டம், ஊடகம் என இரு துறைகளிலும் ஆழ்ந்த அறிவுள்ள நீங்கள், இந்திய சமூகத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறீர்கள் என்கிற அடிப்படையில் நீங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்று, புலனாய்வு ஊடகவியல் மட்டுமல்ல, பொதுவாகவே இந்திய ஊடகவியலை அழுத்தி வைத்திருக்கும் காரணிகளை முன் வைத்திருக்கலாம். எங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்று நீங்கள் சொல்லியிருப்பதால் மூன்று வகை காரணிகளை உங்கள் முன் வைக்கலாமா?
முதலாவது, ஊடக உடைமையின் கட்டமைப்பு பெரும் லாபத்தை ஈட்டும் சில கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் குவிந்துள்ளன.
இரண்டாவது, சுதந்திர ஊடகத்தின் மீது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிகழும் அரசின் தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள்.
மூன்றாவது, அறம் சார்ந்த இதழியலின் சிதைவு மற்றும் அதிகார வர்க்கத்திற்கு ஸ்டெனொகிராப்பராக வேலைபார்க்கவும் தயாராக இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள்.
பத்திரிக்கைத் துறையை கலையாக கற்பிக்கும் ஆசானாக, பத்திரிகை அல்லது ஸ்டெனோகிராஃபி என நம் துறையில் இரண்டு வகையான பள்ளிகள் உள்ளன – அவற்றில் எதை தேர்வு செய்வீர்கள் என நான் எனது மாணவர்களிடம் கேட்கிறேன்.
கடந்த 30 ஆண்டுகளாகவே இந்திய ஊடகம் என்பது அரசியல் ரீதியாக சுதந்திரமாக இருந்தாலும், லாப நோக்கில் செயல்படுகின்றன என்ற வாதத்தை நான் முன்வைத்து வருகிறேன். இன்றும் அவை லாப நோக்கில் செயல்படுகின்றன. நம்மிடையே உள்ள சில சுதந்திர குரல்களும் அரசியல் ரீதியாக சிறை வைக்கப்படுகின்றன.
ஊடக சுதந்திரத்தின் மோசமான நிலை குறித்து ஊடகங்களுக்குள்ளேயே மிகக் குறைவாவே விவாதம் எழுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நான்கு முன்னணி அறிவுஜீவிகள் – அனைவரும் பத்திரிகை துறையுடன் தொடர்புள்ளவர்கள் – கடந்த சில ஆண்டுகளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பழம்பெரும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் முழு நேர பத்திரிகையாளர். ரைசிங் காஷ்மீரின் ஆசிரியர் சுஜாத் புகாரி துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார். மற்ற மூவரும் முறையான எழுத்தாளர்கள், ஊடகங்களில் கட்டுரை எழுதுபவர்கள். நரேந்திரா தபோல்கர் சுமார் 25 ஆண்டுகளாக மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பத்திரிகை ஒன்றை நிறுவி நடத்தி வந்தவர். கோவிந்த் பன்சாரி, எம்.எம். கல்புர்கி ஆக்கப்பூர்வமான எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள்.
அனைவருக்குமான ஒற்றுமை ஒன்றுதான்: அவர்கள் பகுத்தறிவுவாதிகள், இந்திய மொழிகளில் எழுதும் பத்திரிகையாளர்கள். அவர்களது கொலையாளிகளுக்கு இதுவே அச்சுறுத்தலாக மாறியது. நான்கு பேரையும் படுகொலை செய்தவர்கள் எந்த அமைப்பையும் சாராதவர்கள் என்றாலும், அரசின் சலுகைகளை அனுபவிக்கின்றனர். இதுபோன்ற அமைப்பற்றவர்களின் தாக்குதல் பட்டியலில் மேலும் பல சுதந்திர ஊடகவியலாளர்கள் உள்ளனர்.
ஊடகவியலின் இந்த மோசமான நிலையை கொஞ்சமாவது சரி செய்ய வேண்டுமென்றால், ஊடக சுதந்திரம் சுதந்திர இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிக மோசமாக இருக்கிறது என்கிற உண்மையை நீதித்துறை எதிர்கொள்ள வேண்டும். பெகாசஸ் வழக்கில் நீங்கள் சந்தேகமில்லாமல் கவனித்திருக்க கூடும், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட அரசு எப்படிப்பட்ட அடக்குமுறையை ஏவக்கூடும் என்பதை. அவசரகால கொடுமைகள் பரவாயில்லை என்கிற அளவுக்கு அது இருக்கிறது.
2020ஆம் ஆண்டு ஃபிரான்சைச் சேர்ந்த ரிப்போர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் வெளியிட்ட உலக ஊடக சுதந்திர தரவரிசையில் இந்தியா 142ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்தின் மீதான இந்த அரசின் அணுகுமுறை குறித்த என்னுடைய நேரடி அனுபவத்தைப் பகிர்கிறேன். அவமானகரமான 142ஆவது இடத்தால் கோபமடைந்த ஒன்றிய அமைச்சரவைச் செயலர், இந்தியாவில் ஊடக சுதந்திரத்தின் நிலையை சரி செய்ய ஒரு குறியீட்டு கண்காணிப்புக் குழுவை அமைக்கும் எண்ணம் அவரிடம் இருந்தது. உறுப்பினராக இருக்கும்படி என்னை கேட்டபோது, WPFI தரவரிசையை மறுதலிப்பதை விட, இந்தியாவில் ஊடக சுதந்திரத்தின் உண்மையான நிலை குறித்து நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம் என்ற உத்தரவாதத்தின் பேரில் நான் ஏற்றுக்கொண்டேன்.
13 பேர் கொண்ட குழுவில் அரசு அதிகாரிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவன ஆராய்ச்சியாளர்கள் 11 பேர் இருந்தனர். ஊடக சுதந்திரம் குறித்து கையாளும் குழுவில் இரண்டே இரண்டு ஊடகவியலாளர்கள்! அதில் ஒருவர் இருமுறை நடந்த கூட்டத்திலும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. கூட்டங்கள் அமைதியாகவே நடந்தன. நான் மட்டுமே கேள்விகள் எழுப்பும் நபராக இருந்தேன். பணியாளர் குழுவினால் வரையப்பட்ட வரைவு அறிக்கையில் வரைவு என்ற சொல் இல்லை. கூட்டத்தில் எழுப்பப்பட்ட எந்த தீவிர விஷயமும் அறிக்கையில் வெளிப்படவில்லை. எனவே நான் தனியாக சமர்ப்பித்தேன் அல்லது எனது கருத்து வேறுபாட்டை தெரிவித்தேன் எனலாம்.
உடனேயே அறிக்கை, குழு என அனைத்தும் மாயமாகிவிட்டது. இந்தியாவின் மிக சக்திவாய்ந்த இருவருக்கு மட்டுமே பதில் சொல்லும் இடத்தில் இருந்த நாட்டின் உயர் அரசு அதிகாரியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட குழு காணாமல் போய்விட்டது. ஊடக சுதந்திரம் குறித்த அறிக்கையை ஆர்டிஐயால் கூட பெற முடியவில்லை! என்னிடம் அந்த வரைவின் நகல் உள்ளது. குழுவின் நோக்கம் புலனாய்வு இதழியல் பற்றி கூட இல்லை. ஆனால் ஒரே ஒரு கருத்து வேறுபாடு குறிப்பிற்குப் பிறகு, அதுவும் காணாமல் போய்விட்டது.
நீங்கள் உரையில் நினைவுகூர்ந்தது போன்று புலனாய்வுச் செய்திகளை அளிப்பதற்கு பத்திரிக்கையாளர்களில் பலரும் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக அரசுத் துறையில் நடக்கும் ஊழல்கள், மோசடிகளை புலனாய்வதற்குத் தயாராக உள்ளனர். இம்முயற்சியின்போது அரசு ஒப்பந்தங்களுடன் பிணைந்துள்ள கார்ப்ரேட் ஊடக முதலாளிகள், உயர் இடத்தில் உள்ள செல்வாக்கு மிக்கவர்களின் நலனே பெரும்பாலான பத்திரிகையாளர்கள் சந்திக்கும் முதல் தடை.
விளம்பரதாரர் செய்தி, பொதுசொத்துகளை அழிப்பதற்கான உரிமத்தைப் பெறுவது, அரசின் தனியார்மயமாக்கல் எனும் களியாட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி பொதுச் சொத்துக்களைப் பெறுவது, இதற்கு கைம்மாறாக ஆளும் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியுதவி செய்வது – இதுபோன்ற சலுகைகளைப் பெறுவதால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக செயல்பட அவர்கள் அனுமதிப்பதில்லை. ஒருகாலத்தில் இந்தியர்களின் பெருமைமிக்க பணியாக கருதப்பட்ட பணியானது, இன்று வருமானம் என்றளவில் சுருங்கி, நான்காவது எஸ்டேட் மற்றும் ரியல் எஸ்டேட் இடையேயான வேறுபாட்டை மறந்துவிட்டன. அதிகார வர்க்கம் பற்றி உண்மையைப் பேசும் பத்திரிக்கை அவர்களுக்குத் தேவை இல்லை.
எப்போதையும் பெருந்தொற்று காலத்தில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இந்நாட்டு பொதுமக்களுக்கு கூடுதலாக தேவைப்பட்டார்கள் நான் சொன்னால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். ஆனால் பொதுமக்களின், அவர்களது சொந்த வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களின் தேவைகளுக்கு சக்தி வாய்ந்த ஊடகங்களின் உரிமையாளர்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள்? 2,000-2,500 ஊடகவியலாளர்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான ஊடகப் பணியாளர்களை பணிநீக்கம் செய்தார்கள்.
மக்கள் சேவை என்ற சிந்தனையே மறைந்துவிட்டது. 2020 பொருளாதார இழப்பு, விளம்பரங்களுக்காக அரசை சார்ந்திருக்கும் நிலைக்கு ஊடகங்களை தள்ளிவிட்டுள்ளது. இதனால் இன்று பெரும் எண்ணிக்கையிலான ஊடகங்கள் கோவிட்-19 நிர்வாகச் சீர்கேடு குறித்து தாங்கள் எழுதிய சொற்ப எண்ணிக்கையிலான கட்டுரைகளைக்கூட மறந்து விட்டனர். கோவிட்-19 பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்டு உலகிற்கே அனைத்து வகையிலும் இந்திய அரசு வழிகாட்டுவதாக கட்டுக் கதைகளை கூறுகின்றனர்.
இக்காலமானது ‘பிரதமர் நிவாரண நிதி’ என்ற தெளிவற்ற திட்டத்தை கண்டுள்ளது. இதன் தலைப்பில் பிரதமர் என்ற சொல்லும், அதன் இணைய தளத்தில் பிரதமரின் முகத்தையும் காட்டுகிறது. ஆனால் அது பொது அமைப்பு அல்ல,அதனால் ஆர்டிஐக்கு உட்படவில்லை என விவாதிக்கிறது . உண்மையில் அது “இந்திய அரசின் நிதியும் கிடையாது” என்கிறது. இதனால் அரசின் சார்பில் எந்த நிறுவன வரவு செலவு கணக்கையும் சமர்ப்பிக்க கட்டுப்படவில்லை என்கிறது.
இதேகாலகட்டத்தில் தான் ஐயா, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக பிற்போக்கான தொழிலாளர் சட்டங்கள் மாநில அரசுகளால் அவசர அவசரமாக மசோதாக்களாகவும் பின்னர் ஒன்றிய அரசால் கோட்களாகவும் கொண்டுவரப்பட்டன. ஒரு நாளுக்கு எட்டு மணி நேர பணி என்ற தொழிலாளர் உரிமையின் அடிப்படையை தடுப்பது போன்ற சில சட்டங்களால் இந்திய பணியாளர்கள் ஒரு நூற்றாண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல பணியாளர்களைக் கொண்டுள்ள கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சொந்தமான ஊடகங்களில் புலனாய்வு செய்ய இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் அதை செய்ய முயற்சித்த பல ஊடகவியலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
மாண்புமிகு நீதிபதி அவர்களே, அரசின் ஊழல் குறித்தோ, பத்திரிகையாளர்கள் கூட்டாக வெளியேற்றப்பட்டபோது, தொழிலாளர் உரிமை நசுக்கப்பட்டபோது அல்லது வெளிப்படையான வரவு செலவு கணக்கிற்குள் வராத பிரதமரின் பெயர் தவறாக பயன்படுத்தி நிதி திரட்டுதல் போன்ற எந்த குளறுபடிகளையும் தடுத்து நிறுத்த நீதித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது என்னை அதே அளவு துன்புறுத்துகிறது. உள்ளார்ந்த மற்றும் கட்டமைப்புக் குறைபாடுகளை கொண்ட ஊடகங்கள் சமரசம் மற்றும் பணம் அளிப்பவர்களுடன் நட்பு கொள்வதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற விஷயங்களில் நீதித்துறையின் தலையீடு பத்திரிகையாளர்கள் சுவாசிக்க கொஞ்சமாவது உதவக்கூடும்தானே?
சுதந்திர ஊடகங்களின் அலுவலங்களில் வருமான வரிச் சோதனை செய்து அவற்றின் உரிமையாளர்களை மிரட்டுவது மற்றும் இழிவுபடுத்துவது, பத்திரிக்கையாளர்களை பண மோசடியாளர்கள் போன்று சித்தரிப்பது மாதிரியான இடைவிடாத துன்புறுத்தல் முழு வீச்சில் தொடர்கிறது. பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்காது என்பது உண்மை. அரசின் மனசாட்சியாக செயல்படும் முகமைகளுக்கு அந்தளவே தெரிந்துள்ளது. தண்டனை வாங்கித் தருவதே நோக்கம் என்கிற கொள்கையின் கீழ் அவை வேலை செய்கின்றன. ஊடகத்தில் சுதந்திரமாக குரலெழுப்பும் சிலருக்கு இதிலிருந்து மீள்வதற்கு சில ஆண்டுகள், பல லட்சம் வழக்கறிஞர் கட்டணம், பண இழப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அரிதான சுதந்திர குரலை எழுப்பும் தைனிக் பாஸ்கர் போன்ற பெரிய ஊடகத்தின் நிறுவனத்தில் சட்டவிரோத தொழில் செய்பவர்களைப் போன்று வருமான வரிச்சோதனை நடைபெற்றது .
ஒருவேளை, ஐயா, தெரிந்தே செய்யப்படும் இத்தகைய சட்ட துஷ்பிரயோகத்தைத் தடுக்க நீதித்துறை ஏதாவது செய்யுமா?
இப்போது ரத்து செய்யப்பட்ட விவசாயச் சட்டங்களின் பிரச்னையிலும் நீதித்துறை தன்னை வேறுபடுத்திக் கொள்ளவில்லை. நான் ஒருபோதும் சட்டத்தைப் படித்ததில்லை, ஆனால் இதுபோன்ற சர்ச்சைக்குரிய சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை மறுபரிசீலனை செய்வது மூத்த அரசியலமைப்பு நீதிமன்றத்தின் ஒரு முக்கிய கடமை என்பதை எப்போதும் மறுக்கமுடியாது. அதற்குப் பதிலாக நீதிமன்றம் ஒரு குழுவை உருவாக்கி, விவசாயச் சட்ட நெருக்கடிக்கான தீர்வுகளுடன் ஒரு அறிக்கையைத் தயாரிக்க அவர்களுக்கு உத்தரவிட்டது – பின்னர் அறிக்கை மற்றும் குழு இரண்டையும் காணாமல் செய்துவிட்டது
அதன் மூலம் அது ‘கமிட்டியால் ஏற்பட்ட மரணம்’ என்று சொல்லவேண்டியதை ‘கமிட்டியின் மரணம்’ என்றாக்கிவிட்டது..
மீண்டும், வேளாண் சட்டங்கள் மீதான ‘முக்கிய’ ஊடகங்களின் உள்நோக்கம் கொண்ட அணுகுமுறை மிகப்பெரியவை என்பது உறுதியானது. இச்சட்டங்களில் இருந்து அதிக லாபத்தை பெற இருந்த தனிப்பட்ட கார்ப்பரேட் தலைவர் , நாட்டின் மிகப்பெரும் ஊடக உரிமையாளரும் கூட. அவர் ஊடகத்திற்கு மட்டும் உரிமையாளர் இல்லை, மிகப்பெரும் விளம்பரதாரரும் கூட. இதனால் தான் பல முதன்மை ஊடகங்களும் தங்களின் தலையங்கங்களில் இச்சட்டங்களை போற்றி புகழ்வதில் வியப்பேதும் இல்லை.
அவர்களில் யாராவது, விவசாயிகள் அவர்களது கோஷங்களில் குறிப்பிட்ட இரண்டு பெருநிறுவன ஜாம்பவான்கள் குறித்து தங்களின் வாசகர்களிடமோ அல்லது பார்வையாளர்களிடமோ சொல்வார்களா – அந்த இரண்டு மனிதர்களின் சொத்து மதிப்பு பஞ்சாப் அல்லது ஹரியாணாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட மிக அதிகம் என்று கூறுவார்களா? அவர்களில் ஒருவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு பஞ்சாபின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மிஞ்சிவிட்டதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை சொல்கிறது. நிச்சயமாக அத்தகைய தகவல்கள் அவர்களின் பார்வையாளர்கள் அறிய வாய்ப்பை வழங்கியிருக்குமா?
உங்கள் உரையில் நீங்கள் நினைவுகூர்ந்த கருத்துகளுக்கு ஏற்ப எவ்விதமான புலனாய்வு செய்திகளையும் அளிக்கும் திறன் கொண்ட ஊடகவிலாளர்கள் இன்றும் சிலர் உள்ளனர். மனித நிலையை புலனாய்வு செய்வது எனப்படும் கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்த செய்திகளை சேகரிக்கும் பணியில் இன்னும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவராக 41 ஆண்டுகளாக இதை பின்பற்றி வருவபனாக இதை நான் எழுதுகிறேன்.
மேலும் சிலரும் ஊடகவியலாளர்களாக இல்லாவிட்டாலும் மனித நிலையை முடிந்தவரை சிறப்பாக புலனாய்வு செய்கின்றனர். இதுபோன்ற லாப நோக்கற்ற, மனித சமூக நிறுவனங்களின் மீது இந்திய அரசு போர் அறிவித்துள்ளது. வெளிநாட்டு பங்களிப்புகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டங்கள் ரத்து , அலுவலகங்கள் மீது வருமான வரிச் சோதனைகள், கணக்குகள் முடக்கப்படுதல், பணமோசடி குற்றச்சாட்டுகள் – போன்றவற்றால் அவை திவாலாகும் வரை நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றன – அல்லது அந்நிலையில் உள்ளன. குறிப்பாக காலநிலை மாற்றம், குழந்தை தொழிலாளர்கள், வேளாண்மை மற்றும் மனித உரிமைகள் குறித்து பேசும் குழுக்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.
இங்கேதான் இப்போது இருக்கிறோம்! ஊடகங்கள் இப்போது மோசமான நிலையில் உள்ளன – அவற்றை காப்பாற்ற வேண்டிய நிறுவனங்களும் பாதுகாக்க தவறிவிடுகின்றன. உங்களது உரையில் இருந்த ஆழ்ந்த கருத்தே இக்கடிதத்தை எழுத என்னைத் தூண்டியது. ஊடகம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. அவற்றை சிறப்பாக செயல்பட வைக்க நீதித்துறையும் உதவலாம் என நான் கருதுகிறேன் – அது மட்டுமல்ல, நீதித்துறையும் தனது குறைகளை சரி செய்ய வேண்டும்தானே? சித்திக் கப்பான் சிறையில் கழிக்கும் கூடுதலான ஒவ்வொரு நாளும் நாமிருவரும் நமது நிறுவனங்களும் இன்னும் கடுமையாக தீர்ப்பகளை எதிர்கொள்வோம் என்றே நான் நம்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
பி. சாய்நாத்
ஓவியங்கள்: பரிப்லாப் சக்ரபர்த்தி, நன்றி தி வயர்.
இக்கட்டுரை முதலில் தி வயரில் முதலில் வெளியானது
தமிழில்: சவிதா