யாஷ் மஹலுங்கே மழைக்காலத்தில் பள்ளிக்குச் செல்வதற்காக ஒவ்வொரு நாளும் தனது உயிரைப் பணயம் வைத்துள்ளான். பள்ளிக்கு செல்லக்கூடிய எண்ணற்ற மாணவ,மாணவிகள் மற்றும் சிலரின் பெற்றோருடன், எட்டு வயதே ஆன யாஷும் உடைந்த பாலத்தின் தூணின் மீதுள்ள குறுகலான வழுக்கக்கூடிய நிலையில் உள்ள சுவரின் மீது நடந்து பள்ளிக்குச் சென்று வருகிறான். அந்த சுவரிற்கு நேர் கீழ், பல அடி ஆழத்தில் புதர்களும்,சேறும் சகதியுமாக நிறைந்துள்ளது.
ஒவ்வொரு பகல் பொழுதிலும் பள்ளிக்குச் சென்று மாலை அவர்கள் வீடு திரும்ப உடைந்த பாலத்தில் நடக்கும் இரண்டு தடவையும், அவர்கள் குழுவானது ஒரே வரிசையில் ஒரு கையில் குடையுடனும் தோளில் அதிக எடைக்கொண்ட பையுடனும் காலில் செருப்பு ஏதுமின்றியும் அந்த பாலத்தில் நடந்து சென்று வருகின்றனர். இவ்வளவு ஆபத்து நிறைந்த 30 நிமிட நடைக்கு பின்னர், அவர்களது பாதங்கள் பாலத்தின் மிச்ச பகுதியான பாதுகாப்பான கான்கிரீட் பகுதியை அடைகின்றது. பின்னர் மண் பாதையில் நடந்து ஆவூர்பல்ஹேரி குக்கிராமத்தில் உள்ள அவர்கள் வீட்டை அடைகின்றனர். அவர்களின் வீட்டிலிருந்து அவர்கள் படிக்கும் பள்ளி இருக்கக்கூடிய, அவார் கிராமம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
“நான் பாலத்திலிருந்து கீழே பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கும். மயக்கம் வருவதாக உணர்வேன். அப்போது என் பாபாவின்(அப்பாவின்) கைகளை இறுக்கமாக பற்றிக் கொள்வேன்” என்றான் யாஷ்.
ஆவூர் பல்ஹேரி கிராமத்தில் உள்ள 77 குடும்பங்களும் (அவார் கிராமப்பஞ்சாயத்து புள்ளிவிவரப்படி) கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை, இத்தகைய அந்தரத்தில் தொங்குகின்ற கயிற்றின் மீது நடப்பது போன்ற அபாயகரமான நடையை மேற்கொண்டிருக்கவில்லை. அதற்கு முன்னர் வரை,பாட்சா ஆற்றின் நீரோடையைக் கடப்பதற்காக அவர்கள் சிறிய அளவிலான பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், கடந்த 2005 ஜூலை 28 அன்று பெய்த கனமழையில் 1998 ஆம் ஆண்டு தானே மாவட்ட குழு நிர்வாகத்தால் கட்டப்பட்ட அந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பாலத்தின் இரண்டு குறுகிய சுவர்களும், மதகுகளும் மட்டுமே மழையால் அடித்து செல்லப்படாமல் உடைந்த அந்தப்பாலத்திலிருந்து எஞ்சியுள்ள்ளது.
“நீங்கள் உங்களின்முழுக்கவனத்தோடும்,சமநிலையோடும் [அந்த சுவற்றின் மீது] நடக்க வேண்டும். குழந்தைகளால் இந்தப் பாதையில் தனியாக நடந்து செல்லவே முடியாது. எனவே, குழந்தைகளோடு வயதில் பெரியவர்கள் எப்போதும் நடந்து செல்ல வேண்டும். அவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு, வேறு எந்த வழிகளும் இங்கு இல்லை. ஏன் பெரியவர்கள் கூட இந்தப் பாதையில் தனியாக நடந்து விட முடியாது. சில சமயம் நீரோடையில் நீரின் அளவு குறைவாக உள்ள போது (ஒன்றில் இருந்து ஒன்றரை அடி ஆழமுடைய ஆற்றில்;மழைக்காலத்தில் மூன்று அடி வரை நீரின் அளவானது உயரும்) நாங்கள் இந்த நீரோடையின் வழியாகவே நடந்து அடுத்தக் கரைக்கு செல்வோம். பிற கிராமங்களைச் சேர்ந்த யாரும் எங்கள் பகுதிக்கு வருவதில்லை. ஏன் அவர்கள் அவர்களின் உயிரை விஷப்பரிட்சைக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும்? எங்கள் கிராமம் பிற கிராமங்களின் இறுதியாக உள்ளது” என்று யாஷின் தந்தை ஆனந்த் மஹாலுங்கே கூறினார். இவர்,ஷாகாபூர் நகர்ப்பகுதியில் ஆட்டோ ரிக்க்ஷா ஒட்டி வருகிறார். இதன் மூலம் நாளொன்றுக்கு ரூபாய் 200-300 வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
கடந்த 14 ஆண்டுகளாக இந்தப் பாலம் சீரமைக்கப் படாமல் புதர்களும் மரங்களும் மண்டிய நிலையில், உடைந்த பாலத்தின் சிமெண்ட்மும்-சேறுமாகக் இருந்தப் பகுதியினை மூடியுள்ளது. இந்த 14 வருடங்களும் இந்த கிராமத்தின் மக்கள் பள்ளிக்கும்,மருத்துவ உதவிகளுக்கும்,சந்தைக்கும்,பணிக்கும் மற்றும் இதர வேலைகளுக்கும் செல்ல அபாயகரமான இந்த வழியில் பயணிப்பது அவர்களின் வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறியுள்ளது. மேலும், பிற பருவக்காலங்களிலும் இப்பகுதி மக்கள் குறுகிய ஈரமான,வழுக்கக்கூடிய அந்த பாலத்தின் குறுகிய சுவரை தங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர் அல்லது நீரோடையின் வழியாக கடந்து செல்கின்றனர். “மழைக்காலமோ,கோடைக்காலமோ நாங்கள் இந்த பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றோம். இந்தப் பாலத்தில் இதர மாதங்களில் கடப்பதை விட மழைக்காலத்தில் அதிக கவனத்தோடு கடக்கிறோம். நாங்கள் வேறு என்ன செய்ய?” என்றார் ஆனந்த். .
ஆவூர் பல்ஹேரி கிராமத்தைச் சார்ந்த ஒன்பது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த குடும்பத்தினர் கூறுகையில், 1970-71ஆம் ஆண்டு அவர்கள் இந்தப்பகுதிக்கு இடம்பெயர்த்துள்ளதாக குறிப்பிட்டனர். இந்தக் கிராமத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானே மாவட்டத்தின் சாஹபூர் தாலுகாவில் உள்ள பச்சிவார் கிராமம் பாட்சா நீர்பாசனத் திட்டத்தால் நீரில் மூழ்கியதற்கு பின்னர் அவர்கள் இந்தக் கிராமத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களைப் போன்று இடம்பெயர்ந்த இதர 118 குடும்பத்தினரும் மகாராஷ்டிர அரசு திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு சட்டம்,1999 ன் கீழ் மறுவாழ்வு பெறுவதற்காக தற்போது வரைக் காத்துக்கிடக்கின்றனர். இந்தச் சட்டத்தினால் அளிக்கப்படும் மறுவாழ்வு என்பதில் வேறொரு பகுதியில் வழங்கப்படும் மாற்று இடம் ஆகியவையும் அடங்கும்.இதன்காரணமாக, இடம்பெயர்ந்த சில குடும்பத்தினர்கள் அருகில் உள்ள கிராமங்களிலும், குக்கிராமம்களிலும் புதிய வாழ்வினைத் தொடங்க முயற்சித்துள்ளனர்.(பார்க்க ‘பல குடும்பங்கள் இப்போது மறைந்தே போய்விட்டனர் ’)
மழை நின்ற போதுதான் நாங்கள் மறுகரைக்கு செல்வதற்கு பாலம் இல்லை என்பதையே அறிந்தோம், எப்படியோ, நாங்கள் ஆற்றைக் கடந்து அவார் கிராமத்தின் தலைவரிடம் இதுகுறித்து தெரிவித்தோம்”
கடந்த 2005 ஆம் ஆண்டு, அந்தப் பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் போது 21 வயதுடையவராக இருந்த ஆனந்த் அதுகுறித்து நினைவு கூறுகையில்,”பல நாட்களுக்கு கனமழை பொழிந்துக் கொண்டிருந்தது. வெள்ளமானது ஆற்றுப்பாலத்திற்கும் மேலே ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் உயிருக்கே அச்சுறுத்தலாக இருந்ததால், நாங்கள் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. அப்போது எங்கள் கிராமம் வெளியுலக தொடர்பே இல்லாது இருந்தது. மழை நின்ற போது தான் ,அப்போது தான் நாங்கள் மறுகரைக்கு செல்ல பாலம் இல்லை என்பதை அறிந்தோம், எப்படியோ, நாங்கள் ஆற்றைக் கடந்து அவார் கிராமத்தின் தலைவரிடம் இதுகுறித்து தெரிவித்தோம். கிராமப் பஞ்சாயத்து குழுவிலிருந்து அதிகாரிகள் வந்து ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட அந்தப் பாலத்தைப் பார்வையிட்டனர். ஆனால்,அதற்கு பின்னர் அவர்கள் எதுவும் செய்துதரவில்லை. அப்போதிலிருந்தே அந்தப் பாலத்தை மறுபடியும் கட்டித்தர வேண்டுமென நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம்” என்றார்.
வேறுவழியே இல்லாததால் இந்த அபாயகரமான சுவரின் மீதும் அல்லது நீரோடையின் உள்ளாக நடந்தும் அருகில் உள்ள கிராமங்களுக்கும், ஷாபூரில் உள்ள சந்தைக்கும், பேருந்து நிலையத்திற்கும் (கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) அல்லது வேலைக்ககும் சென்று வருகின்றனர். மேலும், பாலம் அடித்துச் செல்லபட்டப்பட்டதற்கு பின்னரான இந்த சில ஆண்டுகளில் ஆவூர் பல்ஹேரி கிராமத்தைச் சேர்ந்த பலருக்கும் இந்த அபாயகரமான பாதையில் நடக்கும் போது விபத்துகளும் ஏற்ப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 2016 ஆம் ஆண்டு, 65 வயதான துக்காராம் வைடு மற்றும் 35 வயதான அவரது மகன் ரவீந்திரா,இருவரும் இரண்டு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு ,இந்த வழுக்கக்கூடிய பாதையின் வழியாக ஷாகாபூர் தாலுகாவில் பால் விநியோகிக்க சென்றுள்ளனர். அப்போது துக்காராம் வைடு அந்தச் சுவரிலிருந்து வழுக்கி கீழே மண்டி இருந்த புதருக்குள் விழுந்துள்ளார். இதன் காரணமாக அவரது இடது கால் உடைந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும் போது,“நான் மயக்கம் அடைந்திருந்தேன். எங்கள் கிராமத்தினர் மூங்கிலால் செய்யப்பட்டப் (தற்காலிக) படுக்கையில் வைத்து அவார் கிராமம் வரை என்னைத் தூக்கிச் சென்றனர். பின்,அங்கிருந்து ஆட்டோவின் மூலம் ஷாகாபூரில் (துணை -மாவட்டத்தில்) உள்ள மருத்துவமனைக்கு என்னைக் கூட்டிச் சென்றனர். நான் அங்கு ஆறு மாதங்கள் இருந்தேன்.இப்போது என் காலில் இரும்புக்கம்பி(rod) வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
“ஒருவேளை இங்குப் பாலம் கட்டப்பட்டால் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியும். எங்கள் மகள்களை பிரசவத்துக்காக ஆபத்து நிறைந்த இந்த பாதையின் வழிதான் அழைத்து செல்கிறோம். எங்களது குழந்தைகள் வீட்டை விட்டு அந்த வழியாக போகும் ஒவ்வொரு தடவையும் நாங்கள் கடவுளிடம் வேண்டிகொள்வோம்”. என்கிறார் துக்காராம். அவருக்கு 14 வயது இருந்த போது பாட்சா நீர்பாசனத் திட்டத்தால் அவர்கள் இடம்பெயர நேர்ந்ததால் அவரது பெற்றோர்களுடன் இங்கு வந்து குடியேறி இருக்கிறார் . தற்போது மூன்று எருமை மாடுகளை வைத்து பால் விற்பனை செய்கிறார். அவரது மகன் ரவீந்திரா அதை விற்பனைச் செய்து வருகிறார். அவரது குடும்பத்தினர் இரண்டு ஏக்கரில் நெல் விவசாயமும் செய்து வருகின்றனர்.
மேலும்,துக்காரம் கூறுகையில்,”எங்களுக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது? எங்களால் வெறுமனே வீட்டில் உக்கார்ந்திருக்க விட முடியாது. எனவே, நாங்கள் அந்த அபாயத்தை எதிர்கொள்கிறோம். பஞ்சாயத்து குழு அதிகாரிகளும் நெடுநாளாக கிடப்பில் இருக்கிற எங்களது பாலம் கட்டித்தரப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை முக்கியமாகக் கருதவில்லை. எங்களது வலிகளை புறந்தள்ளுவதின் வழியாக எங்களை அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.
68 வயது மதிக்கத்தக்க துவராகபாய் வைடு, ஒரு தளம் கொண்ட அவரது கான்கிரிட் வீட்டின் ஒரு அறையிலிருந்து ஊன்றுகோலின் துணையுடன் அவரது வீடு முழுவதும் இயங்கி வருகிறார். கடந்த வருடம் வரை,அவரது குடும்பத்திற்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாய வேலைகளை செய்து கொண்டிருந்தார் அவர். இந்நிலையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷாகாபூர் பகுதிக்கு மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற போது,அவரும் அந்த சுவரிலிருந்து வழுக்கி கீழே விழுந்துள்ளார். நான் அவரை பார்த்த போது,நாற்காலியில் அமர்ந்து சன்னலையே பார்த்துக்கொண்டிருந்தார்.
துவராகாவின் மருமகள் தாரா கூறுகையில், "அந்த விபத்திற்குப் பிறகு அவர் அவ்வளவாக பேசுவதில்லை.அவர் மிகுந்த பயத்திற்கு உள்ளாகியுள்ளார். இல்லையென்றால் அவர் நிறைய பேசுவார்” என்றார். துவராகாபாயின் குடும்பம் நான்கு ஏக்கரில் காய்கறி மற்றும் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். அவரது மூத்த மகன் பிவாண்டி பகுதியில் உள்ள கிடங்கில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். மேற்கொண்டு தாரா கூறுகையில்,”குறைந்தபட்சம் காய்ச்சல்,இருமல் போன்ற சிறியப் பிரச்சனைகளுக்கும் அல்லது திடீரென்ற பிரசவவலி போன்ற அவசர உதவிகளுக்கு சிகிச்சையளிக்க கூட எங்கள் கிராமத்தில் எவ்வித வசதியும் இல்லை. இது மிகப்பெரும் பிரச்சனை” என்று கூறினார்.
ஆவூர் பல்ஹேரி கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் 2 லிருந்து 5 ஏக்கர் பரப்பு கொண்ட பட்டா இல்லாத நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் மழைக்காலத்தில் நெல் விதைகின்றனர். நெல் அறுவடை முடிந்ததும்,காய்கறிகளான புடலங்காய்,பீன்ஸ் மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றை பயிர் செய்து அருகில் உள்ளக் கிராமங்களில் விற்பனை செய்கின்றனர்.மேலும், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுகிறார்கள் அல்லது ஷாகாபூர் பகுதியில் சிறிய உணவகங்களை நடத்தி வருகின்றனர்.
ஷாகாபூர் பகுதியில் ஆட்டோ ரிக்சா ஓட்டும் 35 வயதான ஜெய்வந்த் மகாலுங்கே கூறும் போது,பாதுகாப்பான பாதை வசதிகள் இல்லாததால் இந்த கிராமத்தினருக்கு வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளன என்றார். “இந்த பாதையில் மின்விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் எங்களால் அப்பகுதியில் நடக்க முடியாது. அதனால் கல்யாண், தானே போன்ற பகுதிகளுக்கு எங்களால் வேளைக்கு செல்ல இயலாது(50 முதல் 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது). தினமும் அவ்வளவு தூரம் பயணித்து,இரவு 7 மணிக்கு மேல் திரும்புவது சாத்தியம் இல்லாத ஒன்று. யார் அந்த நகரங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களோ, அவர்கள் கிடங்குகளிலும் அல்லது பிள்ளைகளை கல்லூரிக்கு படிக்கவும் அனுப்புகின்றனர்.இல்லையென்றால்,இது முற்றிலும் சாத்தியமற்றது. மின்விளக்கு இல்லாததால் இரவு 7 மணிக்குள்ளாக நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும். இதனாலயே எங்கள் வயதிலுள்ள[30-35]யாரும் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரைக்கூட படிக்கவில்லை” என்றார். ஜெய்வந்த் 15 பேரைக் கொண்ட கூட்டுகுடும்பத்துடன் வசிக்கிறார். அவரது இரண்டு தம்பிகள் ஷாகாபூர் அல்லது அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி விற்று, தனித்தனியே மாதம் 4000 ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.
ஜெய்வந்த்தின் மருமகன் யாஷ் 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே ஜில்லா பரிஷத் பள்ளியில் படிக்க முடியும்;அதற்கடுத்து,மேல்படிப்புக்காக யாஷ் ஷாகாபூர் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படிப்பதற்காக சேர வேண்டிய சூழல் உள்ளது. ஜெய்வந்த் கூறுகையில்,“எவ்வாறு நாங்கள் முன்னேற முடியும்? எவ்வாறு எங்கள் பிள்ளைகள் அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியும்? என்று அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான சவிதா கூறுகையில்,”பகல் நேரத்திலேயே அந்தப் பாலத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்தில் கடுமையான காயங்கள் ஏற்படும் போது,இரவில் எங்களுக்கு என்னவேண்டுமானலும் நேரக்கூடுமல்லவா?. இதனால் எனது பிள்ளைகள் மழைக்காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர். தற்போது எனது பேரக்குழந்தைகளும் அதுபோலவே செய்து வருகின்றனர்” என்றார். சவிதா அவரது குடும்பத்திற்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
“1998 ஆம் ஆண்டு அந்த பாலம் கட்டப்படும் வரை நாங்கள் எண்ணற்ற போரட்டங்களை நடத்தினோம். இந்நிலையில், அந்தப் பாலம் உடைந்த, போது, நாங்கள் மீண்டும் அதைப் போன்றே கடந்த 2005 ஆம் ஆண்டு தானே மாவட்டக் குழு அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றோம். அதற்கடுத்து மீண்டும் 2007, 2009, 2012, 2016 எனத் தொடர்ந்து பேரணி நடத்தினோம்” என்று கைகளை கவனமாக மடக்கிப் நடந்தப் போரட்டங்களை எண்ணிக்கையோடு தெரிவித்தார். மேலும்,”இதற்கிடையில்,எங்கள் குழந்தைகள் மாவட்ட ஆட்சியருக்கு எண்ணற்ற கடிதங்களை அனுப்பினார்கள். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து பார்த்தோம். ஆனாலும், நீங்கள் இங்கு ஏதேனும் மாற்றத்தை உங்களால் பார்க்க முடிகிறதா? என்றார் சவிதா.
அவரது கருத்தோடு உடன்பட்ட அவரது அண்டை வீட்டுக்காரரான 70 வயதுடைய ராமு வைடு, கூறுகையில்,”எத்தனையோ வருடங்கள் கடந்த பின்னும்,நிலைமை அப்படியே தான் உள்ளது. இந்த ஆற்றைக் கடப்பதில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், யாராவது இறப்பார்களா என்று அவர்கள்(மாநில அரசு) காத்துக்கிடக்கிறார்கள்? உண்மையில் அரசு எங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறது?உடைந்துப் போன தரமற்ற பாலத்தை தானே? அவர்கள் குறைந்தபட்சம் வேறு இடத்தில் குடியமர்த்தக்கூட இல்லை(வேறொரு பகுதியில்)”என்று கோபமாக தெரிவித்தார். ராமுவின் வார்த்தைகளின் வழியாக கடந்த ஐம்பது ஆண்டுகளாக, அவர்களது வாழ்க்கை எவ்வளவு மோசமடைந்திருக்கிறது என்பது தெரிந்தது.
மேலும்,இந்த விவகாரம் தொடர்பாக விவரம் கேட்க தானே மாவட்ட குழு அலுவலகத்தை தொடர்ச்சியாக அணுகிய போது, அவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இந்திய வானியல் ஆய்வு மையத்தின் தரவுகளின் படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் 7 வரை, தானே மாவட்டத்தில் 644 மில்லிமீட்டர் அளவுக்கு மழைப்பொழிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் வார சராசரி வார மழைப்பொழிவான 202 மில்லிமீட்டரை விட இது மிக அதிகமாகும்.இந்நிலையில், ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பொழிந்த கனமழையின் காரணமாக ஆற்றில் அதிகளவிலான வெள்ளம் ஏற்பட்டதால், ஆவூர் பல்ஹேரி கிராமத்து மக்கள் வெள்ள நீர் வடிவதற்காக இரண்டு நாட்கள் கிராமத்தை விட்டு வெளிவர இயலாதசூழலில் தவித்துள்ளனர். ஆனந்த் கூறுகையில்,”ஒவ்வொரு மாலைப் பொழுதும் நாங்கள் உயிரோடு இருந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம்,நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்”என்றார்.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்