முக்கியமான கேள்வி விழுமியங்களைப் பற்றியதுதான். இந்த விழுமியங்கள் எங்கள் வாழ்க்கைகளின் ஒரு பகுதி. எங்களை நாங்கள் இயற்கையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறோம். சண்டையிடும்போது ஆதிவாசிகள் அரசாங்கத்தையோ பன்னாட்டு நிறுவனத்தையோ எதிர்த்து சண்டையிடுவதில்லை. அவர்களுக்கு என ‘பூமி சேனை’ ஒன்று இருக்கிறது. பேராசையிலும் சுயநலத்திலும் வேரூன்றியிருக்கும் விழுமியங்களை எதிர்த்தே அவர்கள் சண்டையிடுகின்றனர்.
நாகரிகங்களின் வளர்ச்சியிலிருந்துதான் சிக்கல் தொடங்கியது. தனிமனிதவாதம் வளரத் தொடங்கிய பிறகு, நாம் மனிதர்களை இயற்கையிலிருந்து வேறாக பார்க்கத் தொடங்கினோம். இங்குதான் சிக்கல் தொடங்கியது. ஆற்றிலிருந்து நம்மை நாம் பிரித்துக் கொண்டு விட்ட பிறகு, நமது கழிவு நீரும் ரசாயன, ஆலைக் கழிவுகளும் அதில் கலக்கச் செய்ய நாம் தயங்கியதில்லை. நாம் ஆற்றை ஒரு வளமாக உரிமை கொண்டாடத் தொடங்கினோம். இயற்கையிலிருந்து வேறுபட்டவர்களாகவும் அதை விட உயர்ந்தவர்களாகவும் நம்மை நாம் கருதத் தொடங்கிய பிறகு, அதைச் சுரண்டி கொள்ளையடிப்பது சுலபமாகிறது. மறுபக்கத்தில் ஆதிவாசிகளின் விழுமியங்கள் வெறும் விழுமியங்கள் கிடையாது. சாதாரணத் தாளில் எழுதப்பட்டவை கிடையாது. எங்களின் விழுமியங்கள்தான் எங்களின் வாழ்க்கை முறை.
நான்தான் பூமியின் கரு
நான்தான் பூமியின் வேர்-விதை-கரு
நான்தான் சூரியன், உணர்வு, வெப்ப உணர்ச்சி,
நித்தியம்
நான்தான் பில், முண்டா, போடோ, கோண்ட், சந்தாலும்
ஆவேன்
பல யுகங்களுக்கு முன் பிறந்த முதல் மனிதன் நான்தான்
நீங்கள் என்னை வாழ்கிறீர்கள்
முழுமையாக வாழ்கிறீர்கள்
நான்தான் இந்த பூமியின் சொர்க்கம்
நான்தான் பூமியின் வேர்-விதை-கரு
நான்தான் சூரியன், உணர்வு, வெப்ப உணர்ச்சி,
நித்தியம்
நான்தான் சாகியாத்ரி, சத்புரா, விந்தியா, ஆரவல்லி
நான்தான் இமயத்தின் உச்சி, தெற்குக் கடலின்
முனை
வடகிழக்கின் பிரகாசப் பச்சையும் நான்தான்.
நீங்கள் மரம் வெட்டும்போதெல்லாம் மலையை நீங்கள்
விற்கும்போதெல்லாம்
நீங்கள் என்னை ஏலம் விடுவீர்கள்
ஒரு ஆற்றை நீங்கள் கொல்லும்போது நான் இறக்கிறேன்
உங்களின் சொந்த மூச்சில் என்னை நீங்கள் சுவாசிக்கிறீர்கள்
நான்தான் வாழ்க்கையின் அமுதம்
நான்தான் பூமியின் வேர்-விதை-கரு
நான்தான் சூரியன், உணர்வு, வெப்ப உணர்ச்சி,
நித்தியம்
நீங்கள் என் குழந்தைதான்
என் ரத்தமும் நீங்கள்தான்
சலனம், பேராசை மற்றும் அதிகாரம் ஆகிய இருண்மைகள்
நீங்கள் உண்மையான உலகை பார்க்க விடுவதில்லை.
நீங்கள் பூமியை பூமி என்றழைக்கிறீர்கள்
நாங்கள் அவளைத் தாய் என்கிறோம்
நீங்கள் ஆற்றை ஆறு என்றழைக்கிறீர்கள்
அவள் எங்களுக்கு சகோதரி
மலைகள் உங்களுக்கு வெறும் மலைகள்தான்,
அவர்கள் எங்களை சகோதரர்கள் என்றழைப்பார்கள்
சூரியன் எங்களுக்கு தாத்தா
நிலா எங்களுக்கு தாய்மாமன்.
இந்த உறவு நீடிக்கவேனும்
உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு எல்லை வகுக்க
அவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் நான் ஒப்புக் கொள்ள மறுக்கிறேன்.
நீங்களாகவே உருகி விடுவீர்கள் என நம்புகிறேன்.
வெப்பத்தை உறியும் பனி நான்
நான்தான் பூமியின் வேர்-விதை-கரு
நான்தான் சூரியன், உணர்வு, வெப்ப உணர்ச்சி,
நித்தியம்
தமிழில் : ராஜசங்கீதன்