ஆமபேடா கிராமத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடக்கும் வாரச்சந்தையில் பல்வேறு கிராம பழங்குடியினர் காலை 10 மணிக்கு கூடத் தொடங்குகின்றனர். “45-50 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வருகின்றனர். இப்பகுதியின் முக்கியமான வாரச்சந்தை இதுவே,” என்கிறார் ஆமபேடாவைச் சேர்ந்த கோண்ட் பழங்குடியின செயற்பாட்டாளர் சுகய் காஷ்யப். இங்குள்ள குக்கிராமங்களில் பொதுவான கடைகள் ஏதும் இல்லாததால் சத்திஸ்கரின் கங்கெர் மாவட்டம் அந்தாகர் வட்டாரத்தில் (உத்தர் பஸ்தர்) நடைபெறும் இச்சந்தைக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்க வாரந்தோறும் மக்கள் வருகின்றனர்.
30 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகஞ்சுர் தாலுக்காவைச் சேர்ந்த காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள், தனோரா மற்றும் கேஷ்கால் வட்டாரங்களைச் சேர்ந்த வர்த்தகர்களும் தங்களது சரக்குகளை விற்பதற்கு ஆமபேடா வருகின்றனர். உருளைக்கிழங்கு, வெங்காய வகைகள், தக்காளி, கத்திரிக்காய், முட்டைகோஸ், காளிஃபிளவர், பச்சை மிளகாய் போன்றவை இச்சந்தையில் கிடைக்கும். பழங்குடியினர் பலரும் கேழ்வரகு, சிறுதானியங்கள், அரிசி, இலுப்பைப் பூக்கள், மூங்கில் துடைப்பங்கள், பிற வனப் பொருட்கள் போன்றவற்றை பழங்குடியினர் கொண்டு வருகின்றனர். சிலர் மசாலாப் பொருட்கள், எண்ணெய், சோப் போன்றவற்றை விற்கின்றனர். குயவர்கள் மண்பாண்ட பொருட்களையும், கொல்லர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு தேவையான பல்வேறு இரும்புப் பொருட்களையும் விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். பிராந்தியத்திற்கு வெளியிலிருந்தும் வணிகர்கள் வருவதால் இச்சந்தை பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. அவர்கள் கடிகாரங்கள், பிளாஸ்டிக் வாளிகள், கோப்பைகள், மலிவான சிறு ஆபரணங்கள், ஹேர் கிளிப்புகள் போன்றவற்றைக் கொண்டு வருகின்றனர். பாட்டரியில் இயங்கும் டிரான்சிஸ்டர் ரேடியோக்கள், மின் ஊக்கிகள், அடர் வன பாதைகளில் இரவு அல்லது மாலையின் நடந்து செல்லும்போது தேவைப்படும் பல்வேறு அளவிலான டார்ச் விளக்குகள் போன்றவற்றையும் அவர்கள் விற்கின்றனர்.
அருகாமைக் கிராமங்களில் இதேப்போன்று சில வாரச்சந்தைகள் நடந்தாலும் ஆமபேடா வாரச்சந்தை இங்கு மிகவும் பழமையானது. நான் சந்தித்த பல மூத்தவர்களும் குழந்தைப் பருவம் முதலே இங்கு வந்து செல்வதாக தெரிவித்தனர். முன்பெல்லாம் சந்தைகளில், உதாரணத்திற்கு நெல்லுக்கு உப்பு என்று பண்டமாற்று முறை இருந்துள்ளது. இப்போது தினக்கூலியாக அல்லது வேறு வேலை செய்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்.
“நான் சிறுபிள்ளையாக இருந்தபோது (சுமார் எட்டு வயது) என் மாமாவுடன் இச்சந்தைக்கு வருவேன்,” என்கிறார் கங்கெரில் உள்ள தன்னார்வ நிறுவனத்தில் வேலை செய்யும் 53 வயது கேஷவ் சோரி. “ஹட்காரா கிராமத்தைச் சேர்ந்த என் மாமா அஜூராம் சோரி மூங்கில் கூடை முடைபவர், நாங்கள் மிதிவண்டியில் இச்சந்தைக்கு வருவோம். முதல்நாள் மாலையில் பயணத்தை தொடங்கி, இரவு வந்ததும் வழியில் தங்கிவிட்டு மீண்டும் அதிகாலையில் தொடங்குவோம். அப்போதெல்லாம் பெரும்பாலான சந்தைகள் பண்டமாற்று முறையில் இருந்தன. மிகக் குறைவான மக்களே பணத்தைப் பயன்படுத்தினர். என் மாமாவும் அரிசி மற்றும் பிற பொருட்கள் வாங்குவதற்கு மூங்கில் கூடைகளை விற்பார்.”
கங்கெர் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆமபேடா சந்தை. மோசமான சாலைகள், போதிய போக்குவரத்து வசதியற்ற இந்த வனப்பகுதிக்கு பேருந்துகளும் கிடையாது. டெம்போ அல்லது அதிக பாரம் சுமக்கும் பொலேரோ கார்கள் மட்டுமே இங்கு வருகின்றன. மாநில நக்சலைட் வன்முறையால் இப்பிராந்தியம் பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வாகன சோதனையை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் எங்களையும் சோதித்தனர். எங்கிருந்து வந்தோம், சந்தைக்கு ஏன் செல்கிறோம் என்றும் அவர்கள் எங்களிடம் கேள்வி எழுப்பினர்.
நாங்கள் சந்தையின் உச்ச நேரமான மதிய நேரத்தில் ஆமபேடா சென்றோம். மதியம் 1 முதல் 3 மணி வரை நடக்கும் மதிய நேர சந்தைக்குப் பிறகு மக்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பத் தொடங்குவார்கள். நாங்கள் சென்ற நேரம் சேவற் சண்டை நடப்பதைப் பார்த்தோம். இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பழங்குடியின சந்தைகளில் புகழ்பெற்ற விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் சேவற் சண்டை இருக்கிறது. நான் இதை சத்திஸ்கர், ஒடிசா, ஆந்திர பிரதேசம், ஜார்கண்டில் கண்டிருக்கிறேன். சண்டைச் சேவலை சொந்தமாக வைத்துக் கொண்டு போட்டியில் வெல்வது கிராமத்தினருக்கு பெருமைக்குரிய விஷயம்.
ஆமபேடாவில் பெரிய சண்டைக்காக சுமார் 200 ஆண்கள் (பெண்கள் இல்லை) கூடியிருக்கின்றனர். 50 பேரிடம் சேவல்கள் உள்ளன. சேவல்களின் மீது பந்தயம் கட்டும் பார்வையாளர்களும் உள்ளனர். ரூ.100 முதல் ரூ.5000 வரை (என்னிடம் அவர்கள் சொன்னது ) பந்தயம் கட்டுகின்றனர். 5-10 நிமிடங்களுக்கு என 20-25 சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன, அதில் போட்டியாளர்கள் காயம்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். வென்ற சேவலின் உரிமையாளர் தோற்றுப் போன சேவலை கொன்று பிறகு வீட்டில் விருந்தாக சாப்பிடுகிறார். சண்டை நடைபெறும்போது, மல்யுத்த களத்தில் போட்டியின் போது ஏற்படும் ஆர்ப்பரிப்பை இங்கும் காண முடிகிறது.
தமிழில்: சவிதா