“வேலை செய்வதை நாங்கள் நிறுத்திவிட்டால், மொத்த நாடும் மகிழ்ச்சியை இழந்துவிடும்.”
பாபு லாலின் கூற்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவர் அடுத்து சொன்ன விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். “யாரும் கிரிக்கெட் விளையாட முடியாது,” என்கிறார்.
சிவப்பும் வெள்ளையும் கொண்ட கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் வீரர்களால் வெறுக்கவும் நேசிக்கவும்படுகிறது. கோடிக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கவும் படுகிறது. அதற்கான தோல், உத்தரப்பிரதேச மீரட்டிலுள்ள ஷோபாப்பூரின் ஆலைகளில் இருந்து வருகிறது. தோல் பணியாளர்கள் படிகாரக் கல்லைக் கொண்டு தோலை பதனிட்டு, கிரிக்கெட் பந்து தயாரிக்கும் துறைக்கு தேவையான அத்தியாவசிய மூலப்பொருளை தயாரிக்கும் ஒரே பகுதி நகரத்தில் இது மட்டும்தான். தோலுக்குள் ஒளிந்திருப்பவற்றையும் முழுமையான செழுமைக்கு உட்படுத்துவதுதான் பதனிடுதல் முறை.
”படிகார பதனிடுதல், நுட்பமான இழைகளையும் தாண்டி நிறம் உள்ளே செல்ல உதவும்,” என்கிறார் பாபு லால். அவரின் கூற்றை, அறுபதுகளில் மத்திய தோல் ஆய்வு நிறுவன ஆய்வு ஒன்று குறிப்பிட்ட விஷயம் உறுதிப்படுத்துகிறது. அதன்படி பந்து போடுபவரின் கையிலிருக்கும் வியர்வையும் பந்தை பளபளக்கவைக்கவென அவர் பயன்படுத்தும் எச்சில் பந்தை பாதிக்காமலிருக்க பதனிடுதல் உதவுகிறது.
62 வயதாகும் அவர், ஷோபாப்பூரில் சொந்தமாக வைத்திருக்கும் தோல் ஆலையின் ஒரு மூலையில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். சுண்ணாம்பு பூசப்பட்ட தரை மின்னுகிறது. “எங்களின் முன்னோர் 200 வருடங்களாக இங்கு தோல் உற்பத்தி செய்திருக்கின்றனர்,” என்கிறார் அவர்.
பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொரு பதனிடுபவரான பாரத் பூஷன் உள்ளே வருகிறார். 43 வயதாகும் அவர் இத்துறையில் 13 வயதிலிருந்து வேலை செய்து வருகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் ”ஜெய்பீம்” என வாழ்த்து பரிமாறிக் கொள்கின்றனர்.
ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு பாரத்தும் இணைகிறார். “உங்களுக்கு அந்த நாற்றம் அடிக்கவில்லையா?” என தயக்கத்துடன் கேட்கிறார் பாபு லால். ஊற வைக்கப்பட்டிருக்கும் குழிகளை குறித்து அவர் கேட்கிறார். தோலுடன் வேலை பார்ப்பவர்கள் மீது கொட்டப்படும் கோபமும் பாரபட்சமும் கேள்வியில் தொனிக்கிறது. மேலும் பாரத், “சிலர் நீள மூக்கு கொண்டவர்கள். தூரத்திலிருந்தே தோல் பணியை வாசம் பிடித்துவிடுவார்கள்,” என்கிறார்.
பாரத்தின் குறிப்பு குறித்து பாபு லால், “கடந்த ஐந்திலிருந்து ஏழு வருடங்களில் எங்களின் தொழில் காரணமாக பல பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம்,” என்கிறார். 50 வருடங்களாக மீரட் மற்றும் ஜலந்தரின் பெரிய கிரிக்கெட் நிறுவனங்களுக்கு பொருட்களை தயாரித்து கொடுப்பவர்களாக இருந்தும், அவர்களின் வாழ்க்கைகளும் வாழ்வாதாரங்களும் வகுப்புவாத பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றன. “பிரச்சினைகள் வரும்போது யாரும் எங்களுக்கு துணை நிற்பதில்லை. தனியாக நாங்கள் போராட வேண்டும்,” என்கிறார் அவர்.
இந்தியாவின் தொன்மையான உற்பத்திகளில் தோல் துறையும் ஒன்று. கிட்டத்தட்ட30 லட்சம் பேர் இத்துறையில் பணிபுரிகின்றனர். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தோல் ஏற்றுமதி கவுன்சிலின்படி , 2021-22-ம் ஆண்டில் உலகின் 13 சதவிகித தோல் பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
ஷோபாப்பூரின் பெரும்பாலான தோல் ஆலை உரிமையாளர்களும் பணியாட்களும் ஜாதவ சமூகத்தை (உத்தரப்பிரதேசத்தின் பட்டியல் சாதி) சேர்ந்தவர்கள். 3000 ஜாதவ குடும்பங்கள் அப்பகுதியில் இருப்பதாக பாரத் கணக்கிடுகிறார். கிட்டத்தட்ட “100 குடும்பங்கள் இந்த வேலையில் இருக்கின்றன.” வார்டு எண் 12-ல் வரும் ஷோபாப்பூரில் 16,931 பேர் வாழ்கின்றனர். வார்டில் வசிப்பவர்களில் பாதி பேர் பட்டியல் சாதி சமூகங்களை சேர்ந்தவர்கள் (கணக்கெடுப்பு 2011).
மீரட் நகரத்தின் மேற்குப்பகுதியில் இருக்கும் ஷோபாப்பூர் குப்பத்தின் எட்டு தோல் ஆலைகளில் ஒன்றை பாபு லால் சொந்தமாக வைத்திருக்கிறார். “இறுதி உற்பத்தி பொருளை சஃபெத் கா புத்தா என குறிப்பிடுவோம். கிரிக்கெட் பந்துகளின் மேல் தோலை தயாரிக்க இது பயன்படுகிறது,” என்கிறார் பாரத். பித்காரி என அழைக்கப்படும் பொட்டாசியம் அலுமினியம் சல்ஃபேட் பதனிட பயன்படுகிறது.
பிரிவினைக்கு பிறகுதான் பாகிஸ்தானின் சியால்கோட்டிலிருந்து மீரட்டுக்கு விளையாட்டுப் பொருட்களின் உற்பத்தி வந்தது. பாபு லால் நெடுஞ்சாலையை தாண்டி 1950களில் மாவட்ட தொழில்துறையால் திறக்கப்பட்ட தோல் பதனிடுவதற்கான பயிற்சி மையத்தை சுட்டிக் காட்டுகிறார்.
சில பதனிடுவோர் ஒன்றிணைந்து “21 பேர் உறுப்பினராக கொண்ட ஷோபாப்பூர் தோல் பதனிடுவோர் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டது,” என்கிறார் பாரத். “தனி ஆலைகளை நடத்த முடியாததால் அம்மையத்தை பயன்படுத்தி, அதற்கான செலவுகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.”
*****
மூலப்பொருட்கள் வாங்க பாரத் அதிகாலை எழுகிறார். ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து ஐந்து கிலோமீட்டர் பயணித்து மீரட் ஸ்டேஷன் அடைந்து, ஹாபூர் செல்லும் குர்ஜா ஜங்ஷன் எக்ஸ்பிரஸை அதிகாலை 5.30 மணிக்கு பிடிக்கிறார். “உலகெங்கும் தோல்கள் வந்திறங்கும் ஹாபூர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் தோல் வாங்குவோம்,” என்கிறார் அவர்.
இந்த வாரச்சந்தை ஷோபாப்பூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மார்ச் 2023-ல், ஒரு மாட்டுத் தோலின் விலை 500லிருந்து 1,200 ரூபாய் வரை தரத்தை பொறுத்து இருந்தது.
கால்நடையின் உணவு, நோய் போன்ற விஷயங்களை பொறுத்து தரம் மாறும் என சுட்டிக் காட்டுகிறார் பாபு லால். “ராஜஸ்தானை சேர்ந்த தோல்கள் வழக்கமாக கருவேல முள் வைத்து குறிப்பிடப்படும். ஹரியானா தோல்களில் டிக் குறியீடுகள் போடப்படும். இவை இரண்டாம் தரம் வாய்ந்தவை.”
2022-23ல், 1.84 லட்ச கால்நடைகள் தோல் நோயினால் இறந்ததாக செய்தி வந்தது. தோல்கள் திடீரென அதிகமாக கிடைத்தது. பாரத் சொல்கையில், “பெரிய தழும்புகள் இருந்ததால் அவற்றை வாங்க முடியவில்லை.
சட்டவிரோதமாக இயங்கும் மாட்டுக்கறி நிலையங்களை மூடும்படி மாநில அரசாங்கம் வெளியிட்ட மார்ச் 2017 அரசாணையால் தோல் தொழிற்துறையில் இருக்கும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டதாக அவர்கள் சொல்கின்றனர். தொடர்ந்து ஒன்றிய அரசு, கறிக்காக கால்நடைகளை வாங்குவதும் விற்பதும் தடையென ஓர் அறிவிக்கையை வெளியிட்டது. விளைவாக இப்போது, “சந்தை பாதியளவுக்கு குறைந்துவிட்டது. சில நேரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அவை திறந்திருப்பதில்லை,” என்கிறார் பாரத்.
மாடுகளையும் தோல்களையும் எடுத்துச் செல்வதற்கு மாட்டுக் காவலர்கள் அச்சுறுத்தலாக இருந்தனர். “ மாநிலத்துக்குள்ளே எடுத்து செல்ல பதிவு செய்தவர்கள் கூட மூலப்பொருட்கள் எடுத்து செல்ல தற்போது அஞ்சுகின்றனர். சூழ்நிலை இப்படியாகிவிட்டது,” என்கிறார் பாபு லால்.
2019-ன் வன்முறை நிறைந்த மாடுகள் பாதுகாப்பு முறையால், “மே 2015க்கும் டிசம்பர் 2018க்கும் இடையில் குறைந்தபட்சம் 44 பேர் - 36 பேர் இஸ்லாமியர் - இந்தியாவின் 12 மாநிலங்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதே காலக்கட்டத்தில் 20 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட சம்பவங்களில் 280 பேர் காயமுற்றிருக்கின்றனர்,” என்கிறது மனித உரிமை ஆணைய அறிக்கை.
”என் தொழில் முற்றிலும் சட்டப்பூர்வமானது. எல்லாவற்றுக்கும் ரசீதுகள் வழங்கிவிடுவோம். ஆனாலும் அவர்கள் பிரச்சினை செய்கின்றனர்,” என்கிறார் பாபு லால்.
ஜனவரி 2020-ல், ஷோபாப்பூரின் பதனிடுபவர்கள் இன்னொரு பிரச்சினையை சந்தித்தனர். மாசு ஏற்படுவதாக ஒரு பொது நல வழக்கு அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டது. “நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தால் எந்த பதனிடும் ஆலையும் தெரியக்கூடாது என ஒரு நிபந்தனையை விதித்தார்கள்,” என்கிறார் பாரத். இன்னொரு இடத்துக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டுமென வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது பொருட்படுத்தாமல், எல்லா தோல் ஆலைகளும் மூடப்பட வேண்டுமென்ற நோட்டீஸ்களை உள்ளூர் காவல்துறையிடமிருந்து பெற்றதாக சொல்கிறார் அவர்.
“ஏதேனும் பிரச்சினை இருந்தால், 2003-4ல் தங்கர் கிராமத்தில் தோல் ஆலையை கட்டிக் கொடுத்தது போல, அரசாங்கம் எங்களுக்கு முறையான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்க வேண்டும்,” என்கிறார் பாபு லால்.
“சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் முடித்துக் கொடுக்காதது எங்களின் கவலையாக இருந்தது,” என்கிறார் பாரத். நகராட்சி நிர்வாகத்துக்குக் கீழ் அப்பகுதி வந்து 30 வருடங்கள் ஆகிறது. “மழைக்காலங்களில் சமப்படுத்தப்படாத மனைகளில் நீர் தேங்கி விடுகிறது.”
*****
ஷோபாப்பூரில் இருக்கும் எட்டு ஆலைகள், கிரிக்கெட் பந்துகள் தயாரிப்பதற்கான வெள்ளைப்படுத்தப்பட்ட தோல்களை கொடுக்கிறது. தோல் ஆலை ஊழியர்கள் முதலில் அலசுவார்கள். அழுக்கையும் தூசையும் மண்ணையும் எடுப்பார்கள். பதனிடப்படும் ஒவ்வொரு தோலுக்கும் 300 ரூபாய் வரை வருமானம் பெறுவார்கள்.
”தோலை சுத்தப்படுத்திய பிறகு, தரம் சார்ந்து அவர்களை பிரிப்போம். குறிப்பாக அவற்றின் அடர்த்தி கொண்டு பிரிப்போம்,” என்கிறார் பாபு லால். அடர்ந்த தோல்களை படிகாரம் கொண்டு பதனிட 15 நாட்கள் ஆகும். மெல்லிய தோல்களை காய்கறி கொண்டு பதனிட 24 நாட்கள் ஆகும். “பெரும் அளவுகளில் பதனிடப்படும்போதுதான் ஒவ்வொரு கத்தை தினமும் தயாராக முடியும்.”
பிறகு தோல்கள் எலுமிச்சையும் சோடியம் சல்ஃபைடும் கலக்கப்பட்ட நீர்க்குழிகளுக்குள் மூன்று நாட்களுக்கு ஊற வைக்கப்படுகின்றன. அதன்பின் ஒவ்வொரு தோலும் சமதளத்தில் விரிக்கப்பட்டு, எல்லா முடிகளும் ஓர் இரும்புக் கருவி கொண்டு அகற்றப்படுகிறது. இம்முறையை சுட்டாய் எனக் குறிப்பிடுகின்றனர். “இழைகள் உப்பியதும், முடி எளிதாக வெளிவந்துவிடும்,” என்கிறார் பாரத். தோல்கள் மீண்டும் உப்பவைக்கப்பட நனைக்கப்படும்.
பாபு லாலின் நிபுணத்துவம் வாய்ந்த வல்லுநரான 44 வயது தாராசந்த், ஒரு கத்தியை பயன்படுத்தி தோலுக்கு கீழே இருக்கும் சதையை நுட்பமாக எடுப்பார். தோல்களில் இருக்கும் எலுமிச்சை போக பிறகு அவை வெறும் நீரில் மூன்று நாட்களுக்கு ஊற வைக்கப்படும். மீண்டும் நீரிலும் ஹைட்ரஜன் பெராக்ஸ்டிலும் நனைக்கப்படும். கிருமிகள் போகவும் வெளுக்கவும் அது செய்யப்படுவதாக பாபு லால் கூறுகிறார். “எல்லா அழுக்கும் மணமும் முறைப்படி நீக்கப்படும்,” என்கிறார் அவர்.
”பந்து தயாரிப்பவர்களுக்கு சுத்தமான பொருளாக சென்று சேரும்,” என்கிறார் பாரத்.
பதனிடப்படும் ஒரு தோல், கிரிக்கெட் பந்து உற்பத்தியாளர்களுக்கு 1,700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோலின் கீழ்பகுதியை சுட்டிக்காட்டி, “முதல் தரமான 18-24 கிரிக்கெட் பந்துகள் வலிமையான பகுதியான இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த பந்துகளை வெளிநாட்டு பந்துகள் என குறிப்பிடுவார்கள். ஒவ்வொன்றும் (சில்லரை வணிகத்தில்) 2,500 ரூபாய்க்கு விற்பார்கள்,” என விளக்குகிறார்.
“பிற பகுதிகள் இந்தளவுக்கு வலிமையாக இருக்காது. மெலிதாக இருக்கும். எனவே இவற்றிலிருந்து செய்யப்படும் பந்துகள் விலைமலிவாக இருக்கும். குறைந்த ஓவர்கள் விளையாடப்படும் பந்தயங்களில் பயன்படுத்தப்படும். ஏனெனில் சீக்கிரமே பந்துகள் வடிவத்தை இழந்துவிடும்,” என்கிறார் பாபு லால். “ஒரு புத்தாவிலிருந்து வெவ்வேறு தரத்திலான 100 பந்துகள் செய்ய முடியும். ஒவ்வொரு பந்தின் விலை 150 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், பந்து தயாரிப்பவர் ஒரு புத்தாவில் குறைந்தது 15,000 ரூபாய் சம்பாதிக்க முடியும்,” என வேகமாக கணக்கு போட்டு சொல்கிறார் பாரத்.
“ஆனால் எங்களுக்கு என்ன கிட்டுகிறது,” என பாரத், பாபு லாலை பார்க்கிறார். ஒரு தோல் துண்டுக்கு அவர்கள் 150 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். “கிட்டத்தட்ட 700 ரூபாய் வல்லுநர்களின் ஊதியமாகவும் மூலப்பொருட்களுக்கும் செலவாகிறது,” என்கிறார் பாரத். “கிரிக்கெட் பந்துகளுக்கான தோல் எங்களின் கைகளாலும் கால்களாலும் தயாரிக்கப்படுகிறது. ஆனால் பெருநிறுவனங்களின் பெயர்களோடு, இந்த பந்துகளில் பதிக்கப்படும் பெயர் என்ன தெரியுமா? ‘படிகார பதனிடப்பட்ட தோல்’. அதற்கு அர்த்தம் என்னவென விளையாட்டு வீரர்களுக்கு தெரியுமா என்று கூட எனக்கு தெரியவில்லை.”
*****
“மாசும், நாற்றமும், பார்வையும்தான் இந்த துறையின் பிரச்சினைகள் என நினைக்கிறீர்களா?”
மேற்கு உத்தரப்பிரதேசத்தின் கரும்பு வயல்களுக்கு பின் சூரியன் இப்போது அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. பணியிடத்தில் தோல் தொழிலாளர்கள் அவசரக் குளியல் போடுகின்றனர். வீட்டுக்கு செல்வதற்கு முன் பணியுடைகளிலிருந்து மாறுகின்றனர்.
“என் தோலில் என் மகனின் இனிஷியல்களான ‘AB’ என எழுதி குறீயிடு வைக்கிறேன்,’ என்கிறார் பாரத். “இந்த வேலையை அவன் எடுக்க விட மாட்டேன்,” என்கிறார் உறுதியாக. “அடுத்த தலைமுறைக்கு படிப்பு கிடைக்க வேண்டும். அவர்கள் முன்னேறுவார்கள். இந்த தோல் தொழில் முடிவுக்கு வரும்.”
நெடுஞ்சாலையை நோக்கி நடக்கையில், “கிரிக்கெட்டில் ஒருவருக்கு ஆர்வம் இருப்பது போல், தோல் தொழிலில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. இப்பணி எங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. நாங்கள் செய்ய வேறு தொழில் இல்லாததால் இதை செய்கிறோம்,” என்கிறார் பாரத்.
இக்கட்டுரையாளர், தங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை செலவிட்டதற்கும் இக்கட்டுரையின் எல்லா கட்டங்களிலும் உதவியதற்கும் பிரவீன் குமார் மற்றும் பாரத் பூஷனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார். இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளை (MMF) மானியப்பணியின் ஆதரவில் எழுதப்பட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்