“ஹார்மோனியம் தான் எங்கள் வாழ்க்கை, உயிர்நாடி, எங்கள் நிலம், எங்கள் வீடு.”
ஹார்மோனியத்தின் ஒலி எழுப்பும் பகுதியில் காற்று கசிவை கண்டறிவதற்காக காற்றடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் அந்த 24 வயது ஆகாஷ் யாதவ். அவர் பொத்தான்களை தளர்வு செய்து மேலும், கீழும் நகர்த்தி சுத்தம் செய்து கொண்டு சொல்கிறார், “எங்களுக்கு உணவு கிடைப்பதே சிரமமாக உள்ளது. எங்கள் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை – பசிக்கிறது என்று சொல்லக்கூடத் தெரியாத அவர்கள் உணவின்றி உறங்குகின்றனர். இந்த ஊரடங்கு தான் வாழ்வின் மிக துயர்மிகுந்த, மோசமான காலம்.”
ஆகாஷ் மற்றும் அவருடன் 17 பழுதுநீக்குவோர் மத்திய பிரதேசத்திலிருந்து 20 நகரங்களை கடந்து ஹார்மோனியம் பழுது நீக்குவதற்காக ஆண்டுதோறும் மகாராஷ்டிரா நகரங்களுக்கு அக்டோபர் மாதங்களில் வருகின்றனர். இப்பழுது நீக்கும் பணிக்கு கூடுதலான செவ்வியல் இசையறிவு, அதீத கேட்கும் திறன் போன்ற திறமைகள் தேவைப்படுகின்றன.
ஹார்மோனியங்களையும், கருவிப் பெட்டிகளையும் எங்கும் சுமந்து செல்வதால் அவர்களை பெட்டிவாலாக்கள் என்கின்றனர். மத்திய பிரதேசத்தின் யாதவ சாதிப் பிரிவில் (ஓபிசி) காவ்லி அல்லது அஹிர் சமூகங்களின் துணைப் பிரிவான இவர்கள் கராஹிர்ஸ்.
மகாராஷ்டிராவின் லத்தூர் நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேனாப்பூரில் ஆகாஷ் என்னிடம் பேசினார்.18 ஹார்மோனியம் பழுது நீக்குவோரின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்தால் 81 பேர் உள்ளனர். ரேனாப்பூர் முனிசிபல் குழு அனுமதி அளித்துள்ள திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் அவர்கள் சிக்கியுள்ளனர்.
இவர்கள் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டம் சிஹோரா தாலுக்காவில் 940 மக்கள்தொகை (கணக்கெடுப்பு 2011ன்படி) கொண்ட காந்திகிராமைச் சேர்ந்தவர்கள். “இந்த தொற்று [கோவிட்-19] தொடர்ந்து, பயணம் செய்ய விடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், நாங்களும் இறந்துவிடுவோம். எங்களிடம் பணமில்லை. ஆண்டுதோறும் பயணம் தொடங்குவதற்கு முன் எங்களின் அனைத்து முக்கியமான கோப்புகளையும், எங்கள் வீடு மண் வீடு என்பதால் கிராமத்திலுள்ள அண்டை வீட்டாரிடம் கொடுத்துவிடுவோம். எனவே எங்களிடம் ‘மஞ்சள்‘ குடும்ப அட்டைகள் இல்லை. நாங்கள் இங்கு பசியால் வாடுகிறோம். தயவு செய்து எங்களை திரும்ப அனுப்புவதற்கு நீங்கள் அதிகாரிகளிடம் கோர முடியுமா?” என கேட்கிறார் ஆகாஷ்.
'ஹார்மோனியத்தின் பழுதை நீக்குவதற்கு அதன் தன்மைகள் குறித்த கூடுதல் ஞானம் இருக்க வேண்டும்'
ஊரடங்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் ஹோலியன்று மார்ச் 15 வாக்கில் இக்குழுவினர் லத்தூர் வந்துள்ளனர். “அந்த சில நாட்களில் நான் வெறும் ரூ.1500 தான் சம்பாதித்தேன்,” என்று சொல்கிறார் ஆகாஷ். “மற்றவர்களின் நிலையும் இதுதான். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. எங்களிடம் பணமே இல்லை.”
ஆகாஷின் மனைவி அமிதி, சொல்கிறார்: “உணவை விடுங்கள், சுத்தமான குடிநீர் கிடைப்பதுகூட பெரிய சவாலாக உள்ளது. தண்ணீர் கிடைக்காததால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் என்னால் துணிகளை துவைக்க முடியவில்லை. ரேனாப்பூர் நகராட்சி வாரத்திற்கு ஒருமுறை தான் தண்ணீர் விநியோகம் செய்கிறது. பொது நீர் குழாயை அடைவதற்கு நான் அரை கிலோமீட்டர் நடக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு இருப்பு வைத்துக் கொள்வதற்கான பாத்திரங்கள் எங்களிடம் இல்லை. “எனவே நாங்கள் நீருக்காக பல முறை நடக்க வேண்டி உள்ளது. “என் மகள்களுக்கு நேரத்திற்கு உணவுகூட கொடுக்க முடிவதில்லை.” அவரது இளைய மகள் யாமினிக்கு 18 மாதங்களும், மூத்த மகள் தாமினிக்கு 5 வயதும் ஆகிறது. அவர் சில சமயம் உணவிற்கு பதிலாக ரொட்டியை தண்ணீரில் நனைத்து கொடுப்பதாக சொல்கிறார்.
81 பேர் கொண்ட இக்குழுவில் 18 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 46 பேர். பெண்கள் அனைத்து குடும்பங்களையும் கவனித்து கொள்கின்றனர். “ஆண்கள் ஹார்மோனியம் பழுதுநீக்கும் பணிகளைச் செய்கிறோம்,” என்கிறார் ஆகாஷ். “நாங்கள் சில சமயம் மாதத்திற்கு ரூ. 6000 சம்பாதிப்போம். சில சமயம் ரூ.500 மட்டுமே கிடைக்கும். ஹார்மோனியத்தில் ஸ்ருதி பிடிக்க வைக்க ஒன்றுக்கு ரூ. 1000- 2000 வரை வாங்குவோம். காற்றுக் கசிவுகளைக் கண்டறிவது, ஒலி எழுப்பியை பரிசோதிப்பது, தோல் மாற்றுவது, பொத்தான்களை சுத்தம் செய்வது போன்றவற்றிற்கு சுமார் ரூ. 500-700 வரை கிடைக்கும். அனைத்தும் நாங்கள் செல்லும் நகரம், அங்குள்ள தேவைகளைப் பொறுத்து தான் அமையும்.”
அவர்கள் ஆண்டுதோறும் குடும்பத்துடன் ஜபல்பூரிலிருந்து மகராஷ்டிராவிற்கு அக்டோபர், ஜூன் மாதங்கள் இடையே பயணம் செய்கின்றனர். மழைக் காலத்தில் மட்டுமே வீட்டில் இருக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக அவர்கள் மகராஷ்டிராவிற்கு ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். ஜல்கான் மாவட்டம் புசவாலுக்கு ஜபல்பூரில் ரயிலேறி புறப்படுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அங்கிருந்து இம்மாநிலத்தின் கொலாப்பூர், லத்தூர், நான்டேட், நாக்பூர், சங்கிலி, வர்தா போன்ற குறைந்தது 20 சிறு நகரங்களுக்கும், பெருநகரங்களுக்கும் செல்கின்றனர்.
கூடாரங்கள், கொஞ்சம் பாத்திரங்கள், சில உணவு மற்றும் மளிகைப் பொருட்கள், ஹார்மோனியங்கள், பழுது பார்க்கும் கருவிகள் ஆகியவையே அவர்களின் பொருட்கள். அவர்களின் சுமை பயணச் செலவையும் அதிகரிக்கிறது. 80 பேருக்கு இரண்டு சிற்றுந்துகளை ரூ.2000க்கு வாடகை எடுத்து 50 கிலோமீட்டர் பயணம் செய்கின்றனர். ரயிலில் அல்லது நடந்து செல்வதையே விரும்புகின்றனர். பலரும் வெறும் கால்களுடன் நான்டேடில் இருந்து ரேனாபூருக்கு ஆறு நாட்கள் நடந்துள்ளனர்.
“இந்த ஊரடங்கு காரணமாக, நாங்கள் அம்ராவதி மாவட்டம் விதர்பாவை இப்போது அடைய உள்ளோம்,” என்கிறார் ஆகாஷின் 50 வயது தந்தை அசோக் யாதவ். “அங்கிருந்து மேலும் 150 கிலோமீட்டர், பிறகு மத்திய பிரதேச எல்லையை அடைந்து விடுவோம். எல்லாம் சரியாகவும், இயல்பாகவும் மாறிவிடும். எனது சொந்த நாட்டிற்குள் பயணம் செய்வது, எங்கள் வாழ்வையே சீர்குலைத்துவிடும் என ஒருபோதும் நினைத்ததில்லை.” அவர் ‘இயல்பு‘ என குறிப்பிட்டாலும், இந்த ஊரடங்கின் தாக்கம் பலரது வாழ்வாதாரத்தையும் மோசமாக பாதித்துள்ளது.
“இந்த கருணைமிக்க அமைப்பினால் நாங்கள் ஓரளவு உயிர் பிழைத்துள்ளோம்”, என்கிறார் அசோக் யாதவ். லத்தூரைச் சேர்ந்த ‘அவர்தான் பிரதிஷ்தான்’ அமைப்பைத் தான் அவர் குறிப்பிடுகிறார். இது இந்துஸ்தானி செவ்வியல் இசையைப் பரப்பும் பணிகளை செய்து வருகிறது. இதுபோன்ற இசைக் கருவி பழுதுநீக்குவோர், அவர்களின் குடும்பங்களுக்கு உதவ முன்வந்துள்ளது. கோதுமை15 கிலோ, பிஸ்கட் பொட்டலங்கள் 2, எண்ணெய் 2 லிட்டர், சோப்புகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அளிப்பதற்கு அந்த அமைப்பு ரூ. 11,500 நிதி திரட்டியுள்ளது.
“செவ்வியல் இசையை பாதுகாப்பவர்களை பாதுகாப்பது நம் கடமை,” என்கிறார் ‘அவர்தான்’ நிறுவனரும், இசை ஆசிரியருமான சஷிகாந்த் தேஷ்முக்.
ஹார்மோனியம் பழுது நீக்குபவர்கள் எப்படி வந்தார்கள்? “என் மகன் ஆகாஷ் இத்தொழிலை நான்காம் தலைமுறையாகச் செய்கிறார்,” என்று என்னிடம் சொன்னார் அசோக் யாதவ். “ஹார்மோனியங்களை பழுது நீக்குவது, சுருதி சேர்ப்பது என்பதை எங்கள் குடும்பத்தில் எனது தாத்தா முதலில் தொடங்கினார். 60-70 ஆண்டுகளுக்கு முன்பு ஜபல்பூரில் இருந்த இசைக் கருவி கடை உரிமையாளர்களிடம் இருந்து இத்திறனை அவர் கற்றார். அந்நாட்களில் ஏராளமானோர் செவ்வியல் இசையிலும், ஹார்மோனியம் வாசிப்பதிலும் ஆர்வமாக இருந்துள்ளனர். இந்தத் திறமை தான் எங்கள் நிலமற்ற குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை அளித்துள்ளது.”
ஐரோப்பாவை பூர்வீகமாக கொண்ட ஹார்மோனியம் கருவி, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் இந்தியாவிற்கு வந்துள்ளது. கைகளால் காற்றை அழுத்தும் முதல் இந்திய வடிவமைப்பு 1875 ஆம் ஆண்டு வந்துள்ளது. வடக்கின் அதிகம் பயன்படுத்தும் இசைக் கருவியானது. இந்நாட்டில் இக்கருவி தோன்றியது முதலே அசோக் யாதவின் குடும்பம் தொடர்பில் இருந்துள்ளது.
எனினும் கடந்த சில பத்தாண்டுகளாக “பிற இசைக் கருவிகள் மிக பிரபலமாகி வருகின்றன.” இதனால் ஹார்மோனியம் மற்றும் அவற்றை நம்பியுள்ள பழுதுநீக்குவோரின் நிலைமை மோசமாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் ஜபல்பூரில் கிராமத்திற்கு ஜூன், அக்டோபர் மாதங்கள் இடையே செல்லும் போது கூலி தொழிலாளியாகி பண்ணைகளில் வேலை செய்வதாகவும் அவர் கூறுகிறார். தினக்கூலியாக ஆண்களுக்கு ரூ. 200, பெண்களுக்கு ரூ. 150 கிடைக்கும் என்றும், வேலை எல்லா நாட்களும் இருக்காது என்றும் சொல்கிறார். இங்கு லத்தூரில், குறிப்பிட்ட சில நாட்களில் ஹார்மோனியம் பழுதுநீக்குவதற்கு ரூ. 1000கூட வருமானம் கிடைக்கிறது.
ஆண்டுதோறும் ஏன் மகராஷ்டிராவிற்கு மட்டுமே பயணம்? சத்திஸ்கர், குஜராத் மாநிலங்களுக்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு சென்று வந்தோம் என்கிறார் அசோக் யாதவ், ஆனால் அங்கு வருவாய் சரியாக கிடைக்கவில்லை. எனவே கடந்த 30 ஆண்டுகளாக மகராஷ்டிராதான் அவர்களின் ஒரே சந்தை.
“எங்களின் சேவைக்கு வேறு எந்த மாநிலமும் இத்தகைய தொடர்ச்சியான, நல்ல வரவேற்பை அளித்தது கிடையாது”, என்கிறார் அசோக். கோலாப்பூர்- சங்கிலி- மிராஜ் பகுதிகளில் தான் ஹார்மோனியம் போன்ற இந்திய இசைக் கருவிகளுக்கு பெரிய சந்தை உள்ளதால் அங்கு நல்ல வருமானம் கிடைக்கும். பந்தர்பூரும், புனேவும் நல்ல வருவாய் அளிக்கின்றன.”
“ஹார்மோனியத்திற்கு ஸ்ருதி மீட்டி சீரமைப்பதற்கு ஸ்வரங்கள், ஷ்ருதிகள் குறித்து அசாத்திய அறிவு தேவைப்படுகிறது,” என்கிறார் அவர்தானின் சஷிகாந்த் தேஷ்முக். “இந்திய செவ்வியல் இசையில் ஏழு ஸ்வரங்கள், 22 ஸ்ருதிகள் ஸ்வரங்களுக்கு இடையேயான இடைவேளையை நிரப்புகின்றன. ஒவ்வொரு ஸ்வரம், ஸ்ருதியின் வேறுபாடுகளை புரிந்து குரலுடன் பொருத்தி சேர்ப்பதற்கு அதிர்வுகள், துடிப்புகள், ஒத்திசைவு, லயங்கள் [ரிதமின் துடிப்பு] போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.”
“மற்றொரு முக்கியமான கூறு கூர்மையான செவித்திறன், நுட்பமான வேறுபாடுகளை பகுத்தாய்வது. ஸ்வர சங்கமத்தை [ஸ்வரங்களின் மையப்புள்ளி] அடைவதற்கு இத்திறமை மிகவும் அவசியம். ஹார்மோனியத்தின் அறிவியலை ஆழ்ந்து அறிந்திருக்க வேண்டும். செவ்வியல் இசையை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் கடமை” ,” என தேஷ்முக் தொடர்கிறார்,
அவர்களின் வருமானம் என்பது அவர்களின் திறமையை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. “சராசரியாக ஒரு பியானோவை ஸ்ருதி சேர்க்க ரூ. 7000-8000 வரை செலவாகிறது,” என்கிறார் தேஷ்முக். “ஆனால் ஹார்மோனியம் ஸ்ருதி சேர்ப்போர் ஒரு கருவிக்கு ரூ. 2000க்கும் குறைவாகத் தான் பெறுகின்றனர்.”
“இந்திய செவ்வியல் இசையை எங்கும் யாரும் மதிப்பதில்லை“ என்று வருத்தமாக சொல்கிறார் அசோக் யாதவ். “இம்மண்ணின் கலை, நுட்பத்தையும் புகழையும் காலப் போக்கில் இழந்து கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் மக்கள் இந்த அழகான கருவியை விலக்கி வைத்துவிட்டு, கீபோர்டுகள் அல்லது கணினி மயமாக்கப்பட்ட கருவிகளைத்தான் [மின்னணு அல்லது டிஜிட்டல் கணினி கருவிகள்] பயன்படுத்துகின்றனர். எங்களின் எதிர்கால தலைமுறைகள் வயிற்றுக்கு என்ன செய்வார்கள்?
பழுது நீக்கி இறுதி வடிவம் கொடுக்கும் போது பேசிய ஆகாஷ்: “ஹார்மோனியத்தில் எங்கு காற்று கசிந்தாலும், நாங்கள் சரிசெய்து விடுவோம். இவற்றை கவனிக்காவிட்டால் ஸ்ருதி சேராமல் ஒத்திசைவின்றி போய்விடும். இது நம் நாட்டிற்கும் பொருந்தும் அல்லவா?”
பின்குறிப்பு : ஜூன் 9ஆம் தேதி அசோக் யாதவ் தொலைப்பேசியில் அழைத்து மத்திய பிரதேசத்தின் காந்திகிராம் வந்தடைந்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தார். அங்கு வந்தபிறகு குடும்பத்திற்கு தலா 3 கிலோ அரிசி பெற்றுள்ளதாகவும், அனைவரும் ‘வீட்டு தனிமைப்படுத்தலில்‘ உள்ளதாகவும் தெரிவித்தார். வேலை இருப்பதாக தெரியாவிட்டாலும், அரசிடம் இருந்து நிதியுதவி கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
தமிழில்: சவிதா