ரத்தத்தை கசிய விடும் சிகிச்சை 3000 வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஹிப்போக்ரெட்டிஸ்ஸுக்கு உதித்த சிந்தனையிலிருந்து உருவான முறை இது. மத்தியகால ஐரோப்பாவில் பரவலாக இருந்தது. உடலில் இருக்கும் நான்கு நீர்மங்கள் சமமின்மையை அடைந்தால் உடல் கோளாறு ஏற்படும் என்பதே இம்முறையின் அடிப்படை. ரத்தம், கபம், பித்தம், வாதம் ஆகிய நான்கு நீர்மங்கள். 500 வருடங்களுக்கு பிறகு கேலன் ரத்தமே முக்கியமான நீர்மம் எனக் கூறினார். பிறகு இன்னும் பல சிந்தனைகள் அறுவை சிகிச்சை பரிசோதனைகளின் விளைவாக உருவாகின. பலவை மூட நம்பிக்கைகளாகவே கூட இருந்தன. நோயாளியை காப்பாற்ற வேண்டிய தேவையிருந்தால் உடலிலிருந்து ரத்தத்தை வெளியேற்றி, அது கெட்ட ரத்தம் என்று கூட சொல்லப்பட்டது.

ரத்தத்தை வெளியேற்ற ஹிருடோ மெடிசினாலிஸ் போன்ற அட்டைப் பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. 3000 வருடங்களில் எத்தனை உயிர்கள் இந்த முறையில் பறிக்கப்பட்டன எனத் தெரியாது. எத்தனை மனிதர்கள் பிணங்கள் ஆக்கப்பட்டனர் என தெரியாது. மருத்துவர்களின் கற்பனை கருத்தியலுக்கு எத்தனை பேர் ரத்தம் சிந்தி உயிரிழந்தனர் என்பதும் தெரியாது. இங்கிலாந்து நாட்டின் அரசனான இரண்டாம் சார்லஸ் மட்டும் 24 அவுன்ஸ்கள் ரத்தம் எடுக்கப்பட்ட பிறகு இறந்தான் என்பது தெரியும். ஜார்ஜ் வாஷிங்டனின் மூன்று மருத்துவர்கள் இரண்டாம் சார்லஸ்ஸின் தொண்டையில் ஏற்பட்ட தொற்றை குணமாக்க, அவனின் விருப்பத்துக்கு இணங்கி ரத்தத்தை எடுத்திருக்கின்றனர். அரசன் இறந்து போயிருக்கிறான்.

கோவிட் 19 நமக்கு நவதாராளமயத்தை தெளிவாக கூறுபோட்டுக் காட்டியிருக்கிறது. முதலாளித்துவத்தை முழுவதுமாக அம்பலப்படுத்தியுள்ளது. பிணம் மேஜையில் வெட்ட வெளிச்சத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நரம்பும் உறுப்பும் நாளமும் எலும்பும் நம் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றது. தனியார்மயம், உலகமயம், செல்வக்குவிப்பு, சமமின்மையின் பல நிலைகள் உள்ளிட்ட எல்லா அட்டைப் பூச்சிகளையும் நீங்கள் பார்க்கலாம். சமூக மற்றும் பொருளாதார நோய்கள் உழைக்கும் மக்களின் மதிப்புக்குரிய வாழ்க்கையையும் இருத்தலையும் ரத்தமாக உறிஞ்சுவது தெளிவாக தெரிகிறது.

3000 வருட மருத்துவ முறை அதன் உச்சத்தை ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டில் எட்டியது. அதன் மீதான நம்பிக்கையின்மை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டிலும் ஏற்பட்டது. ஆனால் அதன் கொள்கையும் செயல்பாடும் பொருளாதாரம், தத்துவம், வணிகம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் இன்னும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

PHOTO • M. Palani Kumar

மனிதகுலத்தின் எதிர்காலத்தை பற்றிய எந்த விவாதத்திலும் சமத்துவமின்மை பற்றிய கேள்வி முக்கிய பங்கு வகிக்கிறது

அதிகாரமிக்க சில சமூக மற்றும் பொருளாதார மருத்துவர்கள் பிணத்தை சுற்றி நின்று கொண்டு ஆராய்கிறார்கள். மத்திய கால ஐரோப்பாவின் மருத்துவர்கள் சொன்னதையே இவர்களும் சொல்கிறார்கள். Counterpunch-ன் நிறுவனரான காலம் சென்ற அலெக்சாண்டர் காக்பர்ன் சொன்னது போல், மத்திய கால மருத்துவர்களின் நோயாளி உயிரிழந்துவிட்டால், அநேகமாக அவர்கள் தலைகளை குலுக்கி விட்டு, “தேவையான அளவுக்கு ரத்தம் எடுக்கவில்லை போல!’ என சொல்லியிருக்கலாம். பல தசாப்தங்களாக உலக வங்கியும் சர்வதேச நிதியமும் இதே பாணியைத்தான் கடைப்பிடிக்கின்றன. இன அழிப்பை ஒத்த அவர்களின் அமைப்பு ரீதியான மாற்றம் ஏற்படுத்தும் சேதத்துக்கு காரணம், இங்கிருக்கும் ரவுடிகளால் தடுக்கப்பட்டு முழுமையாக அம்மாற்றம் அனுமதிக்கப்படாததே எனக் கூறுகின்றன.

சமத்துவமின்மை என முட்டாள்தனமாக முன் வைக்கப்படும் வாதம் உண்மையில் பெரும் ஆபத்தெல்லாம் இல்லை. தனி மனித முயற்சியையும் ஆரோக்கியமான போட்டியையுமே அது முன்வைக்கிறது. சமத்துவமின்மையை பிரதிபலிக்கும் விஷயங்கள் இன்னும் அதிகமாக நமக்கு தேவை.

மனிதகுலத்தின் எதிர்காலத்தை பற்றிய எந்த விவாதத்திலும் சமத்துவமின்மை பற்றிய கேள்வி முக்கிய பங்கு வகிக்கிறது.

சமத்துவமின்மைக்கும் மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பிரச்சாரத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர்கள் மிருகத்தனமாக செய்து வருகின்றனர். இந்த மில்லின்னிய தொடக்கத்தில் கூட ப்ரூக்கிங்ஸ் நிறுவனம் சமத்துவமின்மை குறித்த பலவீனமான விவாதங்களை எதிர்த்து எச்சரித்தது. கோவிட் -19 உலகத்தை பாதிப்பதற்கு 90 நாட்களுக்கு முன், நவதாராளமயத்தின் தேவப் பிரதிநிதியான தி எகனாமிஸ்ட் பத்திரிகை, இறந்து கொண்டிருக்கும் கோழியின் தன்மையை புரிந்துகொண்டு கசப்பான ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

சமத்துவமின்மையின் மாயைகள்: ஏன் செல்வமும் வருமான இடைவெளிகளும் பிரச்சினைகளாக தோன்றுவதில்லை.

பிரபலமான ’பஞ்ச்’ வசனமாக இது எதிர்காலத்தில் மாறக்கூடும்.

வருமானம் மற்றும் செல்வம் ஆகியவற்றை பற்றிய புள்ளிவிவரங்களை கட்டுரை அள்ளி எறிந்தது. அந்த புள்ளிவிவரங்களில் உண்மை இல்லை என்றும் குறிப்பிட்டது. இத்தகைய நம்பிக்கைகள் “வெறுப்புணர்வும் போலிச் செய்திகளும் சமூக தளமும்” இருக்கும் இந்த காலத்தில் கூட இருக்கிறது என்றது.

கோவிட் 19-தான் உண்மையான கூராய்வு அறிக்கையை கொடுத்தது. நவதாராளமயத்தின் சூனியக்கார மருத்துவர்களின் பொய்களை அம்பலப்படுத்தியது. இருந்தும் அவர்களின் சிந்தனைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த சேதங்களை எந்த விதத்திலும் முதலாளித்துவத்துடன் தொடர்பு படுத்திடக் கூடாது என்பதற்கான வழிகளை கார்ப்பரேட் ஊடகங்கள் தீவிரமாக தேடுகின்றன.

பெருந்தொற்றை பற்றியும் மனித குலத்தின் முடிவை பற்றியும் விவாதிக்க நாம் எத்தனை தயாராக இருக்கிறோம்? நவதாராளமயம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் முடிவை பற்றி பேச எத்தனை தயக்கம் நாம் கொண்டிருக்கிறோம்?

பிரச்சினையை வெகு சீக்கிரமாக கடந்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான தேடல் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் இயல்பு நிலைக்கு திரும்புவதல்ல பிரச்சினை.

இயல்பு நிலையே பிரச்சினைதான். (ஆளும்வர்க்கம் ‘புதிய இயல்பு நிலை’ என ஏற்கனவே பேசத் தொடங்கிவிட்டது’)

Two roads to the moon? One a superhighway for the super-rich, another a dirt track service lane for the migrants who will trudge there to serve them
PHOTO • Satyaprakash Pandey
Two roads to the moon? One a superhighway for the super-rich, another a dirt track service lane for the migrants who will trudge there to serve them
PHOTO • Sudarshan Sakharkar

நிலவுக்கு இரு பாதைகளா? சிறந்த நெடுஞ்சாலை பெரும் பணக்காரருக்கு. அழுக்கு படிந்த பாதை தொழிலாளர்களுக்கு

கோவிட்டுக்கு முந்தைய ’இயல்பு நிலை’யின் போது, அதாவது ஜனவரி 2020ல், உலகின் 22 பணக்காரர்கள் ஆப்பிரிக்க பெண்கள் அனைவரும் கொண்டிருக்கும் சொத்தை விட அதிக சொத்தை கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை OXFAM மூலம் தெரிந்து கொண்டோம்.

உலகின் 2153 கோடீஸ்வரர்கள் மொத்த பூமியின் 60% மக்கள்தொகை வைத்திருக்கும் செல்வத்தை விட அதிகம் வைத்திருக்கிறார்கள்.

புதிய இயல்பு நிலை: வாஷிங்டனில் உள்ள கொள்கை கல்விக்கான நிறுவனம், அமெரிக்க பணக்காரர்கள் 1990ம் ஆண்டில் வைத்திருந்த செல்வத்தை (24000 கோடி டாலர்), கொரோனா பரவிய மூன்றே வார காலத்தில் அதிகப்படுத்தியிருப்பதாக (28200 கோடி டாலர்) குறிப்பிடுகிறது.

உணவு அளவுக்கதிகமாக உற்பத்தி செய்யப்படும் உலகில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியில் உழலுவது ’இயல்பு நிலை’. இந்தியாவில் ஜூலை 22ம் தேதி வரை 9 கோடியே 10 லட்சத்து மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உபரியாக அரசிடம் இருந்தது. இங்குதான் அதிக எண்ணிக்கையில் பட்டினி கிடக்கும் மக்களும் இருக்கின்றனர். புதிய இயல்புநிலை என்ன தெரியுமா? அந்த தானியத்தில் மிகக் குறைந்த அளவை மக்களுக்கு அரசு விநியோகிக்கிறது. அதிக அளவு அரிசியை எத்தனாலாக மாற்றி சானிடைசர் தயாரிப்புக்கு அனுமதிக்கிறது .

பழைய இயல்பு நிலைப்படி, நாம் 5 கோடி டன் தானியங்கள் உபரியாக கொண்டிருந்தோம். பேராசிரியர் ஜீன் ட்ரெசே 2001ல் கூறியது போல், “நம் தானிய மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்தால், 10 லட்சம் கிலோமீட்டர்களுக்கு நீளும். பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள தூரத்தின் இரு மடங்கு தூரம் அது.” புதிய இயல்பின்படி தானிய அளவு 10 கோடியே 40 லட்சத்தை ஜூன் மாத தொடக்கத்திலேயே எட்டிவிட்டது. அதாவது நிலவுக்கு இரண்டு சாலைகள் போடுமளவுக்கு! சிறப்பான ஒரு நெடுஞ்சாலை பெரும் பணக்காரர்களுக்கு. அழுக்கு படிந்த பாதை தொழிலாளர்களுக்கு. அவர்களும் பணக்காரர்களுக்கு சேவகம் செய்ய அங்கேயே தள்ளாடிக் கொண்டிருப்பார்கள்.

இந்தியாவின் இயல்பு நிலைப்படி முழு நேர விவசாயிகள் 24 மணி நேரத்துக்கு 2000 பேரென 1991-லிருந்து 2011 வரையிலான 20 வருடங்களில் குறைந்து கொண்டிருந்தார்கள். சரியாக சொல்வதெனில் அக்காலகட்டத்தில் முழு நேர விவசாயிகளின் எண்ணிக்கையில் ஒன்றரை கோடி குறைந்துபோனது.

மேலும் 3,15000 விவசாயிகள் 1995லிருந்து 2018க்குள் தங்கள் உயிர்களை மாய்த்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கையும் (பெரிய எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது) தேசிய குற்ற ஆவண நிறுவன அறிக்கை யில் கிடைத்தது.

The ‘normal’ was an India where full-time farmers fell out of that status at the rate of 2,000 every 24 hours, for 20 years between 1991 and 2011. Where at least 315,000 farmers took their own lives between 1995 and 2018
PHOTO • P. Sainath
The ‘normal’ was an India where full-time farmers fell out of that status at the rate of 2,000 every 24 hours, for 20 years between 1991 and 2011. Where at least 315,000 farmers took their own lives between 1995 and 2018
PHOTO • P. Sainath

இந்தியாவின் இயல்பு நிலைப்படி 24 மணி நேரத்துக்கு 2000 முழு நேர விவசாயிகள் 1991 தொடங்கி 2011 வரையிலான 20 வருடங்களில் குறைந்து கொண்டிருந்தார்கள். குறைந்தபட்சம் 3,15000 விவசாயிகள் 1995லிருந்து 2018க்குள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்

புதிய இயல்பு நிலை: 130 கோடி பேர் இருக்கும் ஒரு நாட்டின் பிரதமர் ஊரடங்கு உத்தரவை வெறும் நான்கு மணி நேரங்களுக்கு முன் கொடுத்ததும் பல லட்சம் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு நகரங்களிலிருந்து திரும்பத் தொடங்குகின்றனர். சிலர் தங்களின் கிராமங்களை அடையவே ஆயிரம் கிலோமீட்டர்கள் நடக்க வேண்டியிருந்தது. மே மாதத்தின் 43-47 டிகிரி வெப்பத்தில் அவர்கள் நடந்தனர்.

புதிய இயல்பு என்பது சில தசாப்சங்களுக்கு முன் நாம் அழித்து முடித்துவிட்ட வாழ்விடங்களை தேடி லட்சக்கணக்கானோர் அணிவகுத்து செல்வதுதான்.

மே மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1 கோடி பேர் வரை ரயில்களில் சென்றனர். அந்த ரயில்களும் மிகப் பெரும் அலட்சியத்துடன் அரசுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தன. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்துக்கு பிறகுதான் அதுவும் நடந்தது. ஏற்கனவே அநாதரவாக பட்டினியில் திரும்பிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களிடம் அரசு ரயில்களில் செல்வதற்கு முழுக் கட்டணம் கேட்கப்பட்டது.

இயல்பு நிலை என்பது அதிகபட்ச தனியார்மயம் சுகாதாரத்துறையில் இருப்பது ஆகும். அமெரிக்காவில் தனிநபர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டது மருத்துவ செலவுகள்தாம். இந்தியாவில் கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வருடத்தில் மட்டுமே ஐந்தரை கோடி பேர் மருத்துவத்துக்கு செலவு செய்து வறுமைக் கோட்டுக்கு கீழே சென்றிருக்கினர்.

புதிய இயல்பு நிலை: இன்னும் அதிகப்படியாக சுகாதாரத்துறையை கார்ப்பரெட்மயம் ஆக்குதல். இந்தியா போன்ற நாடுகளில் தனியார் மருத்துவமனைகளின் கொள்ளை யை அதிகப்படுத்துதல். கோவிட் பரிசோதனைகளிலிருந்து கூட பணம் கறப்பது அவற்றில் ஒரு வழி. ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற முதலாளித்துவ நாடுகள் கூட தனியார் மருத்துவமனைகளை அரசுடமையாக்கின. 90களில் ஸ்வீடன் வங்கிகளை தேசியமயப்படுத்தி வளர்த்தெடுத்து பின் மீண்டும் தனியாருக்கு தாரை வார்த்ததை போல், ஸ்பெயினும் அயர்லாந்தும் சுகாதாரத்துறையில் செய்யக் கூடும்.

தனி நபர்களும் நாடுகளும் மேலும் மேலும் கடன்படுவதே ’இயல்பு நிலை’. புதிய இயல்பு நிலை எது தெரியுமா?

Left: Domestic violence was always ‘normal’ in millions of Indian households. Such violence has risen but is even more severely under-reported in lockdown conditions. Right: The normal was a media industry that fr decades didn’t give a damn for the migrants whose movements they were mesmerised by after March 25
PHOTO • Jigyasa Mishra
Left: Domestic violence was always ‘normal’ in millions of Indian households. Such violence has risen but is even more severely under-reported in lockdown conditions. Right: The normal was a media industry that fr decades didn’t give a damn for the migrants whose movements they were mesmerised by after March 25
PHOTO • Sudarshan Sakharkar

இடது: குடும்ப வன்முறையே லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களில் இயல்பு நிலை. அது ஊரடங்கால் அதிகரித்திருந்தாலும் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன. வலது: பல்லாண்டுகளாக புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்படுத்தாத ஊடகம் திடுமென மார்ச் 25லிருந்து அவர்கள் மீது பாசம் பொழிவதும் ஒரு இயல்பு நிலை

இந்தியாவை பொறுத்தவரை புதிய இயல்பு நிலை என்பது பல நேரங்களில் பழைய இயல்பு நிலைதான். அன்றாட வாழ்க்கையில் ஏழைகள்தான் வைரஸ்ஸை பரப்புவதற்கான காரணமாக நினைக்கிறோம். நோய் உலகமயமாக்கப்படும் சாத்தியத்தை இருபது வருடங்களுக்கு முன்னமே பறந்து பரப்பிய வர்க்கத்தை மறந்துவிடுகிறோம்.

குடும்ப வன்முறை லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களை பொறுத்தவரை இயல்பு நிலையாகவே இருக்கிறது.

புதிய இயல்பு நிலை? சில மாநிலங்களில் உள்ள ஆண் காவல்துறையினர் கூட அதிகரித்து வரும் இந்த வன்முறை பற்றிய அச்சத்தை தெரிவித்து முன்னை விட தற்போது இன்னும் குறைவாக அவை பதிவு செய்யப்படுகின்றன எனவும் தெரிவித்திருப்பதே ஆகும்.

தில்லியின் இயல்பு நிலை என்பது ரொம்ப நாட்களுக்கு முன்பே உலகிலேயே அதிகமாக மாசுப்படுத்தப்பட்ட நகரம் என்கிற போட்டியில் அது பெய்ஜிங்கை தோற்கடித்ததுதான். தற்போதைய நெருக்கடி கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான விஷயம் என்னவென்றால் தில்லியின் வானம் முன்னெப்போதையும் விட இப்போது சுத்தமாகவும் தெளிவாகவும் இருப்பதுதான். ஆலைக்கழிவுகளின் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.

புதிய இயல்பு நிலை: சுத்தமான காற்று என்கிற அருவருப்பை நிறுத்துங்கள். இந்த தொற்றுநோய்க் காலத்தில் நம் அரசு செய்திருக்கும் மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டு தனியாரை அனுமதித்து கட்டுக்கடங்கா உற்பத்தியை தொடங்க ஊக்குவித்திருப்பதுதான்.

காலநிலை மாற்றத்தால் இந்திய விவசாயமே காணாமலடிக்கப்பட்டும் அந்த வார்த்தைகள் பொதுவெளியிலும் அரசியல் உரையாடல்களிலும் இல்லாமல் இருப்பதே இயல்பு நிலை.

புதிய இயல்பு நிலை என்பது பெரும்பாலும் ஊதிப் பெருக்கப்பட்ட பழைய இயல்பு நிலையாகத்தான் இருக்கிறது.

பெரும்பாலான மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. தொழிலாளர் சட்டத்தின் சர்வதேச தர நிபந்தனையான 8 மணி நேர வேலை என்பதே அழிக்கப்பட்டு 12 மணி நேர வேலையாக மாற்றப்பட்டிருக்கிறது. சில மாநிலங்களில் அந்த அதிகப்படியான நேரங்களும் ஓவர்டைமுக்கான ஊதியம் இல்லாமலே சுமத்தப்படும். உத்தரப்பிரதேச அரசு எந்த போராட்டமும் தப்பிக்கூட வந்துவிடக் கூடாது என தெளிவாக 38 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்திருக்கிறது.

1914ம் ஆண்டில் 8 மணி நேர வேலையை அமல்படுத்திய சில முதலாளிகளில் ஹென்றி ஃபோர்டும் ஒருவர். ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் லாபம் அடுத்த இரண்டு வருடங்களிலேயே இரண்டு மடங்கு ஆனது. எட்டு மணி நேரத்தை தாண்டி வேலை பார்த்தால், உற்பத்தி திறன் குறைவது கண்டறியப்பட்டது. புதிய இயல்பு நிலை: கிட்டத்தட்ட ஒப்பந்த அடிமை முறையை வேண்டும் இந்திய முதலாளிகள், முன்னணி ஊடக ஆசிரியர்களிடமிருந்து ‘ஒரு நல்ல நெருக்கடியை தவற விட வேண்டாம்’ என வரும் அழைப்புகளால் ஆனந்தம் கொண்டிருக்கின்றனர். ஒருவழியாக அந்த தொழிலாளர்களை நாம் மண்டி போட வைத்துவிட்டோம். இனி அட்டைப்பூச்சிகளை அவர்கள் மீது ஏவுங்கள். இந்த வாய்ப்பை தவற விடுவது முட்டாள்தனம்.

Millions of marginal farmers across the Third World shifted from food crops like paddy (left) to cash crops like cotton (right) over the past 3-4 decades, coaxed and coerced by Bank-Fund formulations. The old normal: deadly fluctuations in prices crippled them. New normal: Who will buy their crops of the ongoing season?
PHOTO • Harinath Rao Nagulavancha
Millions of marginal farmers across the Third World shifted from food crops like paddy (left) to cash crops like cotton (right) over the past 3-4 decades, coaxed and coerced by Bank-Fund formulations. The old normal: deadly fluctuations in prices crippled them. New normal: Who will buy their crops of the ongoing season?
PHOTO • Sudarshan Sakharkar

மூன்றாம் உலக நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகள் நெல் போன்ற (இடது) உணவுப்பயிர்களிலிருந்து பருத்தி போன்ற (வலது) பணப்பயிர்களுக்கு மாறி 30-40 வருடங்கள் ஆகிவிட்டன. பழைய இயல்பு நிலை: விலைகளிலிருந்த நிச்சயமின்மை அவர்களை முடமாக்கியது. புதிய இயல்பு நிலை: தற்போதைய பருவத்தின் பயிர்களை யார் வாங்குவது?

விவசாயத்தில் ஒரு அச்சத்துக்குரிய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகள் வங்கி நிதி கொண்ட மாற்றங்களால் வேறு வழியின்றி பருத்தி போன்ற பணப்பயிர்களுக்கு 30-40 வருடங்கள் முன் மாறியது நினைவிலிருக்கலாம். பணப்பயிர்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றார்கள். உடனடி விலை கிடைக்கும் என்றார்கள். வறுமையிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று கூட சொன்னார்கள்.

என்ன லட்சணத்தில் அது நடந்தது என்பதை நாம் பார்த்தோம். பருத்தி சாகுபடி செய்த குறு விவசாயிகள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டார்கள். அதிகமாக கடன்பட்டவர்களும் அவர்கள்தாம்.

இப்போது நிலைமை இன்னும் மோசமாகி இருக்கிறது. குறுவை பயிர் எப்போதும் மார்ச், ஏப்ரலை ஒட்டி அறுவடை செய்யப்படும். இப்போது அது விற்கப்படாமலோ ஊரடங்கால் அழிந்துபோகும் நிலையையோ எட்டியிருக்கும். பருத்தி, கரும்பு மற்றும் பல பணப்பயிர்களை உள்ளடக்கிய லட்சக்கணக்கான குவிண்டால்கள் விவசாயிகளின் வீட்டுக் கூரைகள் வரை அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

பழைய இயல்பு நிலை: விலையில் நிச்சயமின்மை சிறு பணப்பயிர் விவசாயிகளை இந்தியாவிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் முடமாக்கியது. புதிய இயல்பு நிலை: தற்போதைய பருவத்தின் பயிர்களை அறுவடைக்கு பின் யார் வாங்குவார்?

ஐநாவின் பொதுச் செயலாளரான அண்டோனியோ குட்டெரஸ்ஸின் வார்த்தைகளில் சொல்வதெனில்: “இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நாம் பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்திருக்கிறோம். 1870ம் ஆண்டுக்கு பிறகு வருமானங்களில் மிகப்பெரும் உருக்குலைவை சந்தித்திருக்கிறோம்.” உலகம் முழுக்க வருமானத்திலும் வாங்கும் சக்தியிலும் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி இந்தியாவை நிச்சயமாக விட்டு வைக்காது. முக்கியமாக பணப்பயிர் விவசாயிகளை பெருமளவு பாதிக்கும். கடந்த வருடத்தில் நாம் அதிகம் ஏற்றுமதி செய்த சந்தை சீனாவுடையது. இன்றோ சீனாவுடனான உறவு மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இரு நாடுகளுமே சிக்கலில் மாட்டியிருக்கின்றன. இமாலய அளவுக்கு பருத்தியும் கரும்பும் வெண்ணிலாவும் இன்னும் பல பணப்பயிர்களும் உலகம் முழுக்க குவிந்து கொண்டிருக்கையில் யார் அவற்றை வாங்குவார்? என்ன விலைகளில் வாங்குவார்?

அந்த நிலங்கள் எல்லாவற்றையும் பணப்பயிருக்கென தாரை வார்த்த பின், அதிகரிக்கும் வேலையின்மையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் என்னவாகும்? ”… வரலாற்றிலேயே கண்டிராத அளவுக்கான பஞ்சங்களை காண நேரிடும்.” என குட்டெரஸ் எச்சரித்திருக்கிறார்.

A normal where billions lived in hunger in a world bursting with food. In India, as of July 22, we had over 91 million metric tons of foodgrain ‘surplus’ or buffer stocks lying with the government – and the highest numbers of the world’s hungry
PHOTO • Purusottam Thakur
A normal where billions lived in hunger in a world bursting with food. In India, as of July 22, we had over 91 million metric tons of foodgrain ‘surplus’ or buffer stocks lying with the government – and the highest numbers of the world’s hungry
PHOTO • Yashashwini & Ekta

உணவு அளவுக்கதிகமாக உற்பத்தி செய்யப்படும் உலகில் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியில் உழலுவதே இயல்பு நிலை. இந்தியாவில் ஜூலை 22ம் தேதி வரை 9 கோடியே 10 லட்சத்து மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உபரியாக அரசிடம் இருந்தது. இங்குதான் அதிக எண்ணிக்கையில் பட்டினி கிடக்கும் மக்களும் இருக்கின்றனர்

கோவிட்19 பற்றி குடெரெஸ் இன்னொரு விஷயமும் சொன்னார்: “எல்லா இடங்களிலும் இருக்கும் போலிகளையும் பொய்மைகளையும் அது அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. கட்டற்ற சந்தை எல்லாருக்கும் மருத்துவத்தை கொடுக்கும் என்ற பொய்யை அது உடைத்திருக்கிறது. ஊதியமற்ற வேலைகளெல்லாம் வேலையேயில்லை என்கிற கட்டுக்கதையை இல்லாமல் ஆக்கியிருக்கிறது.”

இயல்பு நிலை: இணையத்தில் திறமை பெற்றிருப்பதை பற்றியும் மென்பொருள் வல்லரசாக நாம் மாறுவதை பற்றியும் உலகின் இரண்டாவது சிலிக்கான் பள்ளத்தாக்கை பெங்களூருவில் உருவாக்கிய தீர்க்கதரிசனத்தை பற்றியும் நம் மேட்டுக்குடியால் பெருமை பீற்றாமல் இருக்க முடியாது. இந்த சுயதம்பட்டம் கடந்த 30 வருடங்களுக்கு இயல்பு நிலையாக இருந்திருக்கிறது.

பெங்களூருவிலிருந்து வெளியே வந்து கிராமப்புற கர்நாட்காவுக்கு சென்று பாருங்கள். யதார்த்த நிலையை தேசிய மாதிரி கணக்கெடுப்பு பதிவு செய்திருக்கிறது. 2018ம் ஆண்டில் வெறும் 2 சதவிகிதம் பேர்தான் கிராமப்புற கர்நாடகாவில் கணிணிகள் வைத்திருந்தனர். (உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலத்தில் கூட அது 4 சதவிகிதமாக இருந்தது).  வெறும் 8.3 சதவிகித கிராமப்புற கர்நாடகாதான் இணையத்தை கொண்டிருந்தது. 37.4 கோடி பேர் கர்நாடகாவின் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். மாநில மக்கள்தொகையில் 61 சதவிகிதம். இரண்டாம் சிலிக்கான் பள்ளத்தாக்காக கருதப்படும் பெங்களூரு 14 சதவிகிதத்தை கொண்டிருக்கிறது.

புதிய இயல்பு நிலை என்னவென்றால் பெருநிறுவனங்கள் பல கோடி ரூபாய் சம்பாதிக்க இணைய வழிக் கல்விக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஏற்கனவே அவர்கள் பெரும் லாபத்தை ஈட்டுகிறார்கள். இப்போது அந்த லாபத்தை சுலபமாக இரண்டு மடங்காக்கி விடுவார்கள். சமூகத்தாலும் சாதியாலும் வர்க்கத்தாலும் பாலினத்தாலும் வாழும் பகுதியாலும் புறக்கணிக்கப்பட்டிருக்கும் பெரும்பகுதி மக்களை தவிர்ப்பது என்பது இந்த தொற்று நோய்க்காலத்தில் சட்டப்பூர்வமாகவே நடக்கிறது. இந்தியாவின் எந்த கிராமப்பகுதிக்கும் கூட சென்று பாருங்கள். பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவை கூட எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை குழந்தைகளிடம் பாடங்களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள ஏதுவான ஸ்மார்ட்பேசிகள் இருக்கின்றன? எத்தனை பேரிடம் இணைய வசதி இருக்கிறது? இருந்தாலும் கடைசியாக எப்போது பயன்படுத்தியிருக்கிறார்கள்?

இன்னும் கொஞ்சம் யோசியுங்கள். எத்தனை பெண்குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களுக்கு வேலை போனதாலும் கட்டணம் செலுத்த முடியாததாலும் படிப்பை பாதிலேயே நிறுத்தியிருக்கிறார்கள்? பண நெருக்கடி வருகையில் பெண் குழந்தையின் படிப்பை நிறுத்துவது பழைய இயல்பு நிலை என்றாலும் தற்போது ஊரடங்கு நேரத்தில் மிக வேகமாக அது அதிகரித்தும் கொண்டிருக்கிறது.

Stop anywhere in the Indian countryside and see how many children own smartphones on which they can download their pdf ‘lessons’. How many actually have access to the net – and if they do, when did they last use it? Still, the new normal is that corporations are pushing for ‘online education'
PHOTO • Parth M.N.
Stop anywhere in the Indian countryside and see how many children own smartphones on which they can download their pdf ‘lessons’. How many actually have access to the net – and if they do, when did they last use it? Still, the new normal is that corporations are pushing for ‘online education'
PHOTO • Yogesh Pawar

இந்தியாவின் எந்த கிராமப்பகுதிக்கும் கூட சென்று பாருங்கள். எத்தனை குழந்தைகளிடம் பாடங்களை தரவிறக்கம் செய்து கொள்ள ஏதுவான ஸ்மார்ட்பேசிகள் இருக்கின்றன என பாருங்கள். எத்தனை பேரிடம் இணைய வசதி இருக்கிறது? இருந்தாலும் கடைசியாக எப்போது பயன்படுத்தியிருக்கிறார்கள்? பெருநிறுவனங்கள் இன்னும் இணையவழிக் கல்விக்கு முயல்வதே புதிய இயல்பு நிலையாக இருக்கிறது

தொற்றுக்காலத்துக்கு முன்பு, சமூகப் பொருளாதார அடிப்படைவாதிகளும் சந்தைப் பொருளாதார அடிப்படைவாதிகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக கார்ப்பரெட் ஊடகம் என்கிற மெத்தையில் படுத்து குலாவிக் கொண்டிருந்ததே இயல்பு நிலையாக இருந்தது. பல தலைவர்களுக்கு இந்த இரு முகாம்களும் உவப்பாகவே இருந்தன.

இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பு நிறைந்த ஊடகம் பல்லாண்டு காலமாக பொருட்படுத்தாத தொழிலாளர்கள் மீது கடந்த மார்ச் 25 முதல் திடுமென பெரும் அக்கறை காட்டியது இயல்பு நிலை ஆகும். எந்த தேசிய நாளிதழும் முழு நேர நிருபர் ஒருவரை தொழிலாளர் துறைக்கோ விவசாயத் துறைக்கோ என பிரத்யேகமாக கொண்டிருக்கவில்லை (விவசாய அமைச்சகம் மற்றும் விவசாய வணிகத்தை பற்றிய செய்திகளை கொடுப்பவரே ‘விவசாய நிருபர்’ என குறிக்கப்படுகிறார்). முழு நேர செய்தியாளரென எவருமே இல்லை. சரியாக சொல்வதெனில் மக்கள்தொகையின் 75 சதவிகிதம் செய்தியில் இடம்பெறுவதே இல்லை.

மார்ச் 25க்கும் பிறகு பல வாரங்களுக்கு செய்தி ஆசிரியர்களுக்கும் நெறியாளர்களுக்கும் புலம்பெயர் தொழிலாளி என்பவர் யாரென தெரியவில்லை. சிலர் மட்டும் குற்றவுணர்வோடு அவர்களை பற்றிய செய்திகளை தாங்கள் அதிகம் சொல்லியிருக்க வேண்டும் என ஒப்புக் கொண்டார்கள். அதே நேரத்தில்தான், கார்ப்பரெட் நிறுவனங்கள் 1000க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் வேலைகளை பறித்தது. கொஞ்சமேனும் ஆழத்துடனும் நிலைத்தன்மையுடனும் புலம்பெயர் தொழிலாளர்களை பற்றிய செய்திகள் வரும் சாத்தியமும் பறிபோனது. இந்த வேலை பறிப்பு தொற்றுநோய்க்கெல்லாம் முன்னமே திட்டமிடப்பட்டிருந்தது. அதைச் செய்த நிறுவனங்களில் பலவை நல்ல லாபத்தை பெற்று, பெரும் நிதியை கையிருப்பில் கொண்டிருந்தவைதாம்.

இயல்பு நிலை என்பதை வேறு எந்த பெயர் கொண்டு அழைத்தாலும் மாறப்போவதில்லை. அதே இழிநிலையைத்தான் கொண்டிருக்கும்.

ஒரு மனிதன் இன்று நாட்டையே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை எல்லா தொலைக்காட்சி சேனல்களும் ஒளிபரப்புகின்றன. அமைச்சரவை, அரசு, பாராளுமன்றம், நீதிமன்றங்கள், சட்டசபைகள், எதிர்கட்சிகள் என எதற்கும் மதிப்பில்லை. நம் தொழில்நுட்ப வல்லுனர் பாராளுமன்றத்தை ஒரு நாள் கூட நடத்தவில்லை. சுத்தமாக இல்லை. கிட்டத்தட்ட 140 நாட்களுக்கு எதுவும் இல்லை. நமக்கிருக்கும் தொழில்நுட்ப பேரறிவில் ஒரு துளியை கூட கொண்டிராத பிற நாடுகள் இவை அனைத்தையும் வெகு எளிதாக செய்திருக்கின்றன.

சில ஐரோப்பிய நாடுகளின் அரசுகள், கடந்த நாற்பது வருடங்களில் அவை இல்லாமலாக்கிய மக்கள் நல அரசுக்கான தன்மைகளை மீண்டும் வேண்டா வெறுப்புடன் உயிர்ப்பிக்க முயற்சிக்கின்றன. இந்தியாவிலோ மத்திய காலத்தின் ரத்தம் எடுக்கும் முறைதான் நம் சந்தை மருத்துவர்களால் பின்பற்றப்படுகிறது. அட்டைப்பூச்சிகள், கிடைத்ததை உறிந்து கொள்ள சொல்லி ஏவப்பட்டிருக்கின்றன. ஏழைகளின் ரத்தத்தை இன்னும் போதுமான அளவுக்கு அவை உறிஞ்சவில்லை. அவை ஒட்டுண்ணி புழுக்களாக பரிணாமம் அடைந்திருக்கின்றன.

முற்போக்கு இயக்கங்கள் என்ன செய்கின்றன? பழைய இயல்பு நிலையை அவை ஏற்கவில்லை. ஆனாலும் பழைய சில விஷயங்களுக்கு அவை திரும்பச் செல்ல வேண்டியுள்ளது. நீதிக்கான போராட்டம், சமத்துவத்துக்கான போராட்டம், உலகை காத்து சுயமரியாதையுடனான வாழும் உரிமைக்கான போராட்டம் போன்றவற்றுக்கு திரும்பச் செல்ல வேண்டும்.

’ஒருங்கிணைந்த வளர்ச்சி’ என்ற இறந்த அட்டைப்பூச்சியை நீங்கள் உயிர்ப்பிக்க விரும்ப மாட்டீர்கள். கட்டமைப்பு என்பது நீதியாகவும், இலக்கு என்பது சமத்துவமின்மையை ஒழிப்பதாகவும் இருக்க வேண்டும். அதற்கான செயல்முறைகளை பற்றிதான் நாம் யோசித்தல் வேண்டும். பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் சில ஏற்கனவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கலாம். சில ஆராயப்படாமலே இருக்கலாம். இன்னும் சிலவை முற்றிலுமாக கைவிடப்பட்டிருக்கலாம். எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

It was always normal that the words climate change were largely absent in public, or political, discourse. Though human agency-led climate change has long devastated Indian agriculture. The new normal: cut the clean air cacophony
PHOTO • Chitrangada Choudhury
It was always normal that the words climate change were largely absent in public, or political, discourse. Though human agency-led climate change has long devastated Indian agriculture. The new normal: cut the clean air cacophony
PHOTO • P. Sainath

காலநிலை மாற்றத்தால் இந்திய விவசாயமே காணாமலடிக்கப்பட்டும் அந்த வார்த்தைகள் பொதுவெளியிலும் அரசியல் உரையாடல்களிலும் இல்லாமல் இருப்பதே இயல்பு நிலை. புதிய இயல்பு நிலை: சுத்தமான காற்று என்கிற அருவருப்பை நிறுத்துங்கள்

காலநிலை மாற்றத்தின் பிரச்சினைகளை பொருட்படுத்தவில்லையெனில் விவசாய இயக்கங்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் தீவிரமான நெருக்கடி காத்திருக்கிறது; அவர்கள் தங்களின் காலநிலை மாற்றம் சார்ந்த கடமைகளை புரிந்துகொள்ளாமலும் போராட்டங்களை சூழலியல் அணுகுமுறையுடன் திட்டமிடாமலும் இருந்தால் பெரும் பிரச்சினையை எதிர்கொள்வார்கள். தொழிலாளர் இயக்கங்கள், கேக்கில் பெரிய துண்டுக்கு பேரம் பேசுவதை நிறுத்திவிட்டு, பேக்கரியின் உரிமையையே கேட்கும் நிலைக்கு நகர வேண்டும்.

மூன்றாம் உலக நாட்டுக் கடனை ரத்து செய்வது போன்ற சில இலக்குகள் தெளிவாக இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை கடன்பட்டுக் கிடக்கும் நம் நிலையை ஒழிக்க வேண்டும்.

கார்ப்பரேட்டின் ஏகாதிபத்தியத்தை உடைத்து பல துண்டுகளாக்க வேண்டும். சுகாதாரம், உணவு, விவசாயம் மற்றும் கல்வி ஆகிய துறைகளிலிருந்து அவர்களை வெளியேற்றுவதிலிருந்து தொடங்க வேண்டும்.

வளங்களை மறுபங்கீடு செய்ய அரசுகளை வலியுறுத்தும் இயக்கங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மேலடுக்கில் உள்ள 1% பணக்காரர்களுக்கு மட்டுமே வரி போடுவதென்றாலும் சரி, தொடங்க வேண்டும். வரி விதிப்பு, பன்னாட்டு நிறுவனங்கள் வரி கட்டாமல் தப்பித்துக் கொள்வதிலிருந்து நிறுத்தி வைக்கும். ஏற்கனவே பல நாடுகளில் கைவிடப்பட்ட இத்தகைய வரி முறைகளை மீட்டெடுத்து மேம்படுத்தி செயல்படுத்த வேண்டும்.

மக்கள் திரள் போராட்டங்களால் மட்டுமே நாடு முழுவதற்குமான சுகாதார மற்றும் கல்வி அமைப்புகளை அரசு கட்டமைக்க வைக்க முடியும். சுகாதார நீதி, உணவு நீதி போன்ற பல நீதிகளுக்கென மக்கள் இயக்கங்கள் கட்டப்பட வேண்டும். சிறப்பான சிலவை ஏற்கனவே இருந்தாலும் கார்ப்பரெட் ஊடகத்தால் அவை இருட்டடிப்புக்கு உள்ளாகின்றன.

ஐ நா சபையின் மனித உரிமை ஆவணப்படி இந்தியச் சட்டப்பிரிவு 23-28 வலியுறுத்துவது போல் ‘சங்கம் உருவாக்கவும் சங்கங்களில் சேரவும்’ உரிமைகள் வலுவாக வென்றெடுக்கப்பட வேண்டும். கார்ப்பரெட் ஊடகங்கள் இதை பற்றிய பேச்சு கூட பொதுவெளியில் பரவிடாமல் இருப்பதை கவனமாக பார்த்துக் கொள்கின்றன. வேலைக்கான உரிமை, சமவேலைவாய்ப்பு மற்றும் சமஊதியம், சுயமரியாதையுடனான வாழ்வை உறுதி செய்யும் வருமானம், ஆரோக்கியம் போன்ற பல உரிமைகள் வென்றெடுப்பதில் நம் கவனம் குவிய வேண்டும்.

இந்திய அரசியல் சாசனம் கொடுக்கும் அரச நெறிக் கட்டளை களை பிரசாரம் செய்ய வேண்டும். வேலைக்கான உரிமை, கல்விக்கான உரிமை, உணவுக்கான உரிமை போன்ற பல உரிமைகளும் நீதி விசாரணைக்குட்படுத்தக் கூடியவையாகவும் செயல்படுத்தப்படக் கூடியவையாகவும் மாற்றப்பட வேண்டும். இந்திய விடுதலை போராட்டத்தின் விளைவாக உருவான சாசனத்தின் உயிர்ச்சாரமே இவைதான். கடந்த நாற்பது வருடங்களில் பல தடவை உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைகள் போலவே அரச நெறிக் கட்டளைகளும் முக்கியமென உத்தரவிட்டிருக்கிறது.

PHOTO • Labani Jangi

விளக்கப்படம் (மேலே மற்றும் முகப்பு): லபானி ஜங்கி, மேற்கு வங்கத்தின் நாதியா மாவட்டத்தை சேர்ந்தவர். கொல்கத்தாவின் சமூக அறிவியல் கல்விகளுக்கான மையத்தில் வங்காளத் தொழிலாளர்களின் புலம்பெயர்வில் முனைவர் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். சுயாதீன ஓவியர். பயணத்தில் விருப்புக் கொண்டவர்.

சொந்த விருப்பங்களை விடுத்து மக்கள் அவர்களின் அரசியல் சாசனம் மற்றும் விடுதலை போராட்ட பாரம்பரியத்தை கொண்டும்தான் ஊர்வலங்கள் போகவிருக்கிறார்கள்.

கடந்த 30 வருடங்களில் ஒவ்வொரு இந்திய அரசும் இந்த கட்டளைகளையும் உரிமைகளையும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து மீறிக் கொண்டே வந்திருக்கிறது. சந்தையை திணித்து அறத்தை அழித்திருக்கிறது. வளர்ச்சி என்கிற பெயரில் போடப்படும் மொத்தப் பாதையும் மக்களை புறக்கணித்தே போடப்படுகிறது. மக்களின் பங்களிப்பு இல்லை. மக்களுக்கு அதிகாரமும் இல்லை.

தற்போது இருக்கும் தொற்றுநோய்ச் சூழலை மக்களின் பங்களிப்பின்றி நீங்கள் வெல்ல முடியாது. கொரோனாவை வீழ்த்தி கேரளா கண்டிருக்கும் வெற்றி மக்களை பங்கு பெற வைத்ததால் மட்டுமே சாத்தியமானது. உள்ளூர் குழுக்கள் அமைத்து செயல்பட்டதிலும் பல சமையலறைகள் அமைத்து மலிவான விலையில் உணவு கொடுத்ததிலும் தொற்றின் தடம் அறிவதிலும் தனிமை சிகிச்சை மற்றும் நோய்த் தடுப்பிலும்  கேரளா சிறப்பாக செயல்பட்டதில் மக்களின் பெரும்பங்கு இருக்கிறது. தொற்றின் ஆபத்தை சமாளித்த விதத்தை தாண்டி கற்றுக் கொள்வதற்கான ஏராளமான விஷயங்கள் அங்கு இருக்கின்றன.

எந்த முற்போக்கு இயக்கத்துக்கும் நீதி மற்றும் சமத்துவம் மீதான பற்று முக்கியம். அரசியல் சாசனத்தில் இருக்கும் ; ‘நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல்….’ போன்றவற்றோடு பாலின நீதியும் காலநிலை நீதியும் கூட சேர்க்கப்பட வேண்டும். நீதிக்கும் சமத்துவத்துக்கும் உந்துசக்தியாக இருப்பது யாரென்பதையும் அரசியல் சாசனம் அடையாளம் காட்டியிருக்கிறது. சந்தைகள் அல்ல, நிறுவனங்கள் அல்ல ‘மக்களாகிய நாம்’.

அதே போல் எல்லா முற்போக்கு இயக்கங்களுக்கும் அபரிமிதமான நம்பிக்கை ஒன்றும் இருக்கிறது. உலகம் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை என்கிற நம்பிக்கை. பல தடங்கல்கள் நேர்கின்றன. செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் முழுமையை நோக்கிய வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன என்கிற நம்பிக்கை.

ஜூன் மாதத்தில் 97 வயதை எட்டிய விடுதலை போராட்ட வீரர் கேப்டன் பாவ் ஒரு முறை என்னிடம் சொல்கையில் கூட, “நாம் சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் போராடினோம். சுதந்திரத்தை பெற்றோம்” என்றார்.

73வது சுதந்திர நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், இதுவரை பெற்றிடாத முழு விடுதலையை கேட்டும் போராட வேண்டும்.

இந்த கட்டுரை ஃப்ரண்ட்லைன் பத்திரிகையில் வெளியானது.

தமிழில்: ராஜசங்கீதன்

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan