ஜீவன்பாய் பரியாவிற்கு நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை நெஞ்சு வலி ஏற்பட்டுவிட்டது. 2018ஆம் ஆண்டு வீட்டில் இருந்தபோது அவருக்கு முதல்முறை வலி வந்தது. அவரது மனைவி கபிபென் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 2022 ஏப்ரலில் அரபிக் கடலில் இழுவை படகை வழிநடத்தியபோது திடீரென மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சக தொழிலாளர்கள் அவரை படுக்க வைத்தனர். கரைக்கு செல்ல ஐந்து மணி நேரம் தேவைப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் உயிருக்கு போராடிய நிலையில் ஜீவன்பாய் இறந்துப் போனார்.
கபிபெனின் அச்சம் உண்மையாகிவிட்டது.
முதல் நெஞ்சு வலி ஏற்பட்டு ஓராண்டிற்கு பிறகு ஜீவன்பாய் மீண்டும் மீன்பிடித் தொழிலை தொடங்க முடிவு செய்தபோது, அவரது மனைவி அதை விரும்பவில்லை. உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். “நான் அவரை போக வேண்டாம் என்றேன்,” எனும் கபிபென், குஜராத்தின் அம்ரேலி மாவட்டம் ஜஃப்ராபாத்தின் கடலோர சிறு நகரில் வெளிச்சம் குறைவான ஒரு குடிசையில் அமர்ந்திருந்தார்.
நகரில் இருக்கும் மற்றவர்களைப் போன்றே 60 வயது ஜீவன் பாயும் மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு எதிலும் ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வருவாய் கிடைக்காது என்பதை அறிந்திருந்தார். “40 ஆண்டுகளாக அவர் இத்தொழிலில் இருந்தார்,” என்கிறார் 55 வயது கபிபென். “நெஞ்சு வலி வந்து அவர் ஓராண்டு ஓய்வில் இருந்தபோது குடும்பத்தை நடத்துவதற்காக நான் தொழிலாளராக [மற்ற மீனவர்களுக்கு கருவாடு காய வைத்தல்]வேலை செய்தேன். நலமடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு அவர் மீண்டும் வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.”
ஜஃப்ராபாதின் மிகப்பெரும் செல்வந்த மீனவர்களில் ஒருவருக்கு சொந்தமான இழுவை படகில் அவர் வேலை செய்தார். மழைக்காலம் தவிர ஆண்டின் எஞ்சிய எட்டு மாதங்களும் இத்தொழிலாளர்கள் அரபிக் கடலில் இதுபோன்ற இழுவை படகுகளை 10-15 நாட்கள் வரை இயக்குகின்றனர். இரண்டு வாரங்களுக்கு தேவையான குடிநீர், உணவுகளையும் அவர்கள் எடுத்துச் செல்கின்றனர்.
“அவசர மருத்துவ சேவைகள் கிடைக்காமல் கடலில் பல நாட்கள் இருப்பது ஒருபோதும் பாதுகாப்பானது கிடையாது,” என்கிறார் கபிபென். “அவர்களிடம் முதலுதவி பொருட்கள் மட்டும் உள்ளது. இதய நோயாளிக்கு அது உதவாது.”
இந்திய மாநிலங்களில் 39 தாலுகாக்களையும், 13 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 1,600 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையை கொண்டுள்ளது குஜராத் மாநிலம். நாட்டின் கடல்வாழ் உயிரின உற்பத்தியில் 20 சதவிகிதத்துக்கு இது பங்களிக்கிறது. இம்மாநிலத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் 1000க்கும் அதிகமான கிராமங்களில் மீன்வளம் சார்ந்த துறையில் பணியாற்றுகின்றனர் என்கிறது மீன்வளத்துறை ஆணையரின் இணையதளம் .
பெரும்பாலானோர் நான்கு மாதங்களுக்கு கடலுக்கு செல்வதாலும் ஆண்டுதோறும் கடலுக்குள் செல்லும் நாட்களிலும் மருத்துவ சேவைகள் எதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.
நெஞ்சு வலி ஏற்பட்டு ஓராண்டிற்கு பிறகு ஜீவன்பாய் கடலுக்குள் செல்லும் போதெல்லாம் கபிபென் கவலையும், பதற்றமும் கொள்வார். நம்பிக்கை ஒருபுறம், அச்சம் மறுபுறம் என மனம் பதறும்போது உறக்கமின்றி விட்டத்தை பார்த்தபடி இரவுகளை கழிப்பார். ஜீவன்பாய் பாதுகாப்பாக வீடு திரும்பியதும், அவர் நிம்மதி அடைவார்.
ஒரு நாள் அவர் திரும்பவில்லை.
*****
உயர்நீதிமன்றத்திற்கு குஜராத் அரசு அளித்த வாக்குறுதியின்படி ஐந்தாண்டுகளுக்குள் செயல்பட்டிருந்தால் ஜீவன்பாய்க்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது.
ஜாஃப்ராபாத் கடற்கரையில் உள்ள ஷியால் பெட் தீவில் வசிக்கும் 70 வயது ஜந்துர்பாய் பாலாதியா, படகு ஆம்புலன்ஸ் எனும் நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் 2017 ஏப்ரலில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவுடன் அவரை வழிநடத்தியவர் 43 வயதாகும் அரவிந்த்பாய் குமான் எனும் சமூகநீதிக்கான மையத்துடன் தொடர்புடைய வழக்கறிஞர்-செயல்பாட்டாளர். அஹமதாபாத்தை தளமாகக் கொண்ட பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளுக்காக அவர் பணியாற்றி வருகிறார்.
மாநில அரசு மீனவர்களின் “அடிப்படையான அரசியலமைப்பு உரிமைகளை மீறிவிட்டதாகவும்” வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவை புறக்கணித்துவிட்டதாகவும் மனுவில் கோரப்பட்டது.
"தொழில் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்பு தொடர்பான குறைந்தபட்ச தேவைகளை" வகுத்துள்ள 2007 ஆம் ஆண்டு மீன்பிடி மாநாட்டை அது மேலும் மேற்கோளிட்டுள்ளது.
குறிப்பிட்ட உறுதிமொழிகளை மாநில அரசு அளித்ததை ஏற்று இம்மனுவை 2017 ஆகஸ்டில் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாநில அரசின் சார்பில் ஆஜரான மணிஷா லவகுமார், அரசு, “கடலோர பகுதிகளில் வசிக்கும்” மக்கள் மற்றும் “மீனவர்களின் உரிமைகளில் மிகுந்த கவனம் கொண்டுள்ளதாகவும்,” தெரிவித்தார்.
1,600 கிலோமீட்டர் நீளமுள்ள கடலோரப் பகுதிகளில் இயங்குவதற்காக “எவ்வித அவசர சூழலையும் கையாளக் கூடிய அனைத்து வசதிகளுடன் கூடிய” ஏழு படகு ஆம்புலன்சுகளை மாநில அரசு வாங்க முடிவு செய்துவிட்டதாக நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
ஐந்தாண்டுகள் ஆகியும் மீனவர்கள் மருத்துவ அவசரத் தேவைகளை பெற முடியவில்லை. உறுதி அளிக்கப்பட்ட ஏழு படகு ஆம்புலன்சுகளில் இரண்டு மட்டுமே உள்ளன. ஒன்று ஒக்காவிலும், மற்றொன்று போர்பந்தரிலும் செயல்பாட்டில் உள்ளது.
“பெரும்பாலான கடலோர பகுதிகள் இப்போது ஆபத்தானவையாகவே உள்ளன,” என்கிறார் ஜாஃப்ராபாதின் 20 கிலோ மீட்டர் வடக்கில் உள்ள சிறு நகரமான ரஜூலாவைச் சேர்ந்த அர்விந்த்பாய். “தண்ணீர் ஆம்புலன்ஸ்கள் வேகப் படகுகள் ஆகும். அவை மீன்பிடி இழுவை படகுகள் எடுக்கும் அதே தூரத்தை பாதி நேரத்தில் கடக்கும். இப்போதெல்லாம் மீனவர்கள் கரைக்கு அருகில் செல்லாததால், இந்த ஆம்புலன்ஸ்கள் எங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது.”
உயிர் பறிக்கும் நெஞ்சு வலி ஏற்பட்ட போது, கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல்கள் அல்லது 75 கிலோ மீட்டர் தொலைவில் ஜீவன்பாய் இருந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மீனவர்கள் அரிதாகவே கடலுக்குள் அதிக தூரம் செல்வார்கள்.
“நான் முதலில் மீன் பிடிக்கும் போது ஐந்து அல்லது எட்டு கடல் மைல்களுக்குள் போதிய மீன்கள் கிடைத்துவிடும்,” என்கிறார் கபிபென். “அது கடலோரத்திலிருந்து சுமார் ஒன்று அல்லது இரண்டு மணி நேரமே ஆகும். ஆண்டுகள் செல்ல செல்ல நிலைமை மோசமடைந்துவிட்டது. இப்போதெல்லாம் நாங்கள் கடலோரத்திலிருந்து 10 அல்லது 12 மணி நேர பயணத் தொலைவிற்கு செல்கிறோம்.”
*****
மீனவர்களை வெகுதூரம் கடலுக்குள் தள்ளும் இரண்டு காரணிகள் உள்ளன: கடலோர மாசுபாடு அதிகரிப்பு மற்றும் குறையும் சதுப்புநிலப் பரப்பு.
பரவலான தொழிற்பேட்டை மாசினால் கடலோர பகுதிகளில் உள்ள கடல்வாழ் உயிரினங்களின் உயிர்சூழல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, என்கிறார் தேசிய மீனவ தொழிலாளர்கள் அமைப்பின் செயலாளர் உஸ்மான் கனி. “கடலோரங்களில் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,” என்கிறார். “அவர்கள் இன்னும் ஆழ செல்லும் போது, அவசர தேவைகள் கிடைப்பது இன்னும் கடினமாகிவிடுகிறது.”
மாநில சுற்றுச்சூழல் அறிக்கை (SOE), 2013 -ன்படி, குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் ரசாயனங்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ், இரும்பு, உலோகங்கள் போன்ற 58 முதன்மை தொழிற்சாலைகள் உள்ளன. முறையே 822 மற்றும் 3156 குத்தகை சுரங்கம் மற்றும் குவாரிகள் உள்ளன. 2013ஆம் ஆண்டு அறிக்கை வெளிவந்த பிறகு, இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கக்கூடும் என்று செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.
மாநிலத்தின் 70 சதவீத மின் உற்பத்தி திட்டங்கள் 13 கடலோர மாவட்டங்களில் குவிந்துள்ளன. மீதமுள்ள 20 மாவட்டங்கள் எஞ்சிய 30 சதவிகிதத்தை வழங்குகின்றன என்று அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
“தொழிற்சாலைகள் அவ்வப்போது சுற்றுச்சூழல் விதிகளை மீறுகின்றன. நேரடியாக அல்லது ஆறுகளின் வழியாக தங்களின் கழிவுகளை கடலுக்குள் கொட்டுகின்றன,” என்கிறார் பரோடாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரோஹித் பிரஜாபதி. “குஜராத்தில் 20 ஆறுகள் மாசடைந்துள்ளன. அவற்றில் பல அரபிக் கடலில் இணைக்கப்பட்டுள்ளன.”
கடலோரப் பகுதிகளில் வளர்ச்சி என்ற பெயரில், சதுப்புநிலங்களையும் மாநில அரசு தொந்தரவு செய்துவிட்டது என்கிறார் கனி. “கடலோரங்களை சதுப்பு நிலங்கள் பாதுகாத்து மீன்கள் முட்டையிடுவதற்கு பாதுகாப்பான இடங்களை அளிக்கிறது,” என்றார் அவர். “ஆனால் குஜராத் கடலோரங்களில் எப்போது வர்த்தக தொழிற்சாலைகள் வந்தாலும் சதுப்பு நிலங்களின் பரப்பளவு தான் குறைக்கப்படுகின்றன.”
2021ஆம் ஆண்டு இந்திய வனத்துறை அறிக்கை யில், 2019ஆம் ஆண்டிலிருந்து குஜராத் சதுப்பு நிலபரப்பு 2 சதவிகிதம் சுருங்கியுள்ளது என்றும் அதே காலகட்டத்தில் தேசிய அளவில் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குஜராத்தில் மொத்தமுள்ள 39 கடலோர தாலுகாக்களில் 38 தாலுகாக்கள் பல்வேறு அளவுகளில் கரையோர அரிப்புக்கு ஆளாகின்றன என்று அறிக்கை மேலும் கூறுகிறது. சதுப்பு நிலங்களால் மட்டுமே இவற்றை தடுக்க முடியும்.
“குஜராத் கடலோரத்தில் சதுப்பு நிலங்களை பாதுகாக்க தவறியதே கடல் மட்ட உயர்வுக்கு காரணம். இப்போது நாம் கொட்டிய கழிவுகளை கடல் திருப்பி அளிக்கிறது,” என்கிறார் பிரஜாபதி. “மாசும், [விளைவாக] சதுப்பு நிலங்கள் அழிவதும் கடலோர நீரை எப்போது மாசு நிலையில் வைக்கின்றன.”
கடலோரத்தில் இருந்து இன்னும் தொலைவுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு மீனவர்கள் தள்ளப்படுவதால் வலிமையான நீரோட்டங்கள், தீவிர காற்று, கணிக்க முடியாத தட்பவெப்பநிலையை இப்போது அவர்கள் எதிர்கொள்கின்றனர். சிறிய படகுகளில் செல்லும் ஏழை மீனவர்களின் நிலைமை இன்னும் மோசம். இதுபோன்ற மோசமான சூழல்களில் அவர்களின் படகுகளால் சமாளிக்க முடிவதில்லை.
2016 ஆம் ஆண்டு ஏப்ரலில் சானாபாய் ஷியாலின் படகு நடுக்கடலில் நொறுங்கியது. படகில் இருந்த எட்டு மீனவர்களும் கடுமையாக முயற்சித்தும் பலனில்லை. வலிமையான நீரோட்டத்தில் மோதி லேசான வெடிப்பு ஏற்பட்டதில் கடல் நீர் புகுந்து படகு நொறுங்கியது. சுற்றி யாரும் இல்லாததால் உதவி கேட்கவும் முடியாது. அவர்களே தப்பித்துக் கொள்ள வேண்டும்.
படகு நொறுங்கி மூழ்கிய போது உயிரைக்காக்க மீனவர்கள் கடலுக்குள் குதித்தனர். உடைந்து நொறுங்கிய மரத் துண்டுகளை பிடித்து மிதந்தனர். ஆறு பேர் உயிர் தப்பினர். 60 வயது சானாபாய் உள்ளிட்ட இருவர் இறந்தனர்.
இழுவை படகு ஒன்று அவர்களை கண்டறிந்து மீட்கும் வரை சுமார் 12 மணி நேரம் கடலில் தத்தளித்துள்ளனர்.
“அவரது உடல் மூன்று நாட்களுக்கு பிறகு தான் கிடைத்தது,” என்கிறார் ஜாஃப்ராபாதில் வசிக்கும் சானாபாயின் 65 வயது மனைவி ஜம்னாபென். “மீட்பு படகு அவரை உயிருடன் மீட்டிருக்க முடியுமா என்பது தெரியவில்லை. எனினும் அவர் உயிர் பிழைத்திருக்கலாம். படகில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்து அவர் அவசர உதவிக்கு அழைத்திருக்கலாம். ஆனால் என்ன நடந்தது என்பது தெரியாதது மிகவும் சோகம்.”
அவரது மகன்கள் 30 வயது தினேஷ், 35 வயது பூபத் ஆகிய இருவரும் மீனவர்கள். திருமணமாகி இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சானாபாயின் மரணத்திற்குப் பிறகு, அவர்களுக்கு கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது.
“தினேஷ் இப்போதும் மீன்பிடித் தொழில் செய்கிறார். பூபத் முடிந்தவரை அதை தவிர்க்கிறார்,” என்கிறார் ஜம்னாபென். “ஆனால் குடும்பத்தை கவனிக்க வேண்டி உள்ளது. ஒற்றை வருமானம் மட்டுமே உள்ளது. எங்கள் வாழ்க்கை கடலுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.”
*****
மீன்பிடி இழுவை படகு வைத்திருக்கும் ஐம்பத்தைந்து வயதான ஜீவன்பாய் ஷியால், மீனவர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஒரு மௌன பிரார்த்தனையைச் செய்வதாக சொல்கிறார்.
“ஓராண்டிற்கு முன் படகில் இருந்தபோது என் தொழிலாளர்களில் ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது,” என அவர் நினைவுக்கூர்கிறார். “நாங்கள் உடனடியாக கரையை நோக்கி பயணத்தை தொடங்கினோம்.” ஐந்து மணி நேரம் அந்த தொழிலாளர் மூச்சு திணறலுடன் நெஞ்சில் கை வைத்தபடி இருந்தார். அது ஐந்து நாட்களைப் போல எங்களுக்கு இருந்தது என்கிறார் ஷியால். ஒவ்வொரு நொடியும் முந்தையவற்றை விட நீண்டதாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் முன்பைவிட கவலை அளிப்பதாக இருந்தது. கரையை அடைந்தவுடன் அவரை மருத்துவமனையில் அனுமதித்த காரணத்தால் உயிர் பிழைத்தார்.
புறப்பட்ட அதே நாளுக்குள் திரும்பியதால் ஷியாலுக்கு ரூ.50,000க்கு மேல் செலவானது. “ஒரு சுற்று பயணத்திற்கு 400 லிட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது,” என்கிறார் அவர். “நாங்கள் மீன்களை பிடிக்காமல் கரை திரும்பினோம்.”
மீன்பிடித்தலின் உற்பத்திசாரா செலவுகள் அதிகரித்து வருவதால், உடல்நிலை சார்ந்த பிரச்சினைகளை அலட்சியப்படுத்துவதாக ஷியால் கூறுகிறார். "கையறு நிலையில் அவற்றை கடக்க வேண்டி உள்ளது.”
“இது ஆபத்தானது தான். எவ்வித சேமிப்புமின்றி வாழ்கிறோம். எங்கள் சூழ்நிலையால் உடல்நிலையில் கவனம் செலுத்த முடியவில்லை. படகு பயணத்தில் உடல்நலம் குன்றும்போது ஏற்படும் அசவுகரியத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். வீடு திரும்பும்போது தான் சிகிச்சை பெற முடியும்.”
ஷியால் பெட், குடியிருப்புவாசிகளுக்கு வீட்டிலும் எவ்வித மருத்துவ உதவிகளும் கிடைப்பதில்லை. இத்தீவிலிருந்து வெளியேச் செல்ல 15 நிமிட படகு பயணம் மட்டுமே சாத்தியம். அதுவும் குலுங்கும் படகில் போராட வேண்டும்.
ஷியால் பெட் பகுதியில் மீனவத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள 5000 குடியிருப்பு வாசிகளுக்கு படகு ஆம்புலன்சுகளுடன் ஆரம்ப சுகாதார நிலையமும் (PHC) செயல்பட வேண்டும் என பாலாதியாவின் மனுவில் கோரப்பட்டது.
அதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மருத்துவ அலுவலர்கள் வாரத்தில் 5 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை துணை சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கின்றனர் குடியிருப்புவாசிகள்.
ஓய்வு பெற்ற மீனவரான கானாபாய் பாலாதியா சொல்கிறார், தனது நீண்ட கால முழங்கால் வலிக்கு நிவாரணம் பெற ஜாஃப்ராபாத் அல்லது ரஜூலா சென்றதாக தெரிவிக்கிறார். “PHC அடிக்கடி மூடப்பட்டு கிடக்கிறது,” என்கிறார் அந்த 75 வயது முதியவர். “வாரத்திற்கு ஐந்து நாட்கள் அங்கு மருத்துவர் இருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது. வார இறுதி நாட்களில் யாருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. வார நாட்களில் கூட இங்கு அரிதாகவே மருத்துவ உதவி கிடைக்கிறது. மருத்துவரை பார்க்க வேண்டும் என்றால், ஒவ்வொரு முறையும் நான் படகில் செல்ல வேண்டும்.”
கர்ப்பிணிகளுக்கு இது இன்னும் பெரிய பிரச்சினை.
28 வயதாகும் ஹன்சாபென் ஷியால் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவர் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்காக ஜாஃப்ராபாதில் உள்ள மருத்துவமனைக்கு மூன்று முறை சென்றார். ஆறாவது மாதத்தின் போது ஏற்பட்ட தீவிர வயிற்று வலியை அவர் நினைவுகூருகிறார். அது நள்ளிரவு நேரம். அன்றைய நாளுக்கான படகு போக்குவரத்து முடிந்துவிட்டது. வலியை பொறுத்துக் கொண்டு அதிகாலை வரை காத்திருக்க அவர் முடிவு செய்தார். அது ஒரு நீண்ட, பதற்றமான இரவு.
அதிகாலை 4 மணிக்கு மேல் ஹன்சாபென் காத்திருக்க முடியவில்லை. படகோட்டி ஒருவரை நாடியபோது அவர் உதவியுள்ளார். “நீங்கள் கர்ப்ப காலத்தின் போது வலியுடன் படகில் ஏறி, இறங்குவது மிகுந்த வலி தரும் விஷயம்,” என்றார். “படகு நிலையாக நிற்காது. நீங்களே உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். சிறிது தவறினாலும் நீரில் தள்ளிவிட்டுவிடும். உயிர் ஊசலாடுவது போன்றது தான் அது.”
60 வயதாகும் அவரது மாமியார் மஞ்சுபென் படகில் ஏறியதும், ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்துவிட்டார். “முன்கூட்டியே அழைத்துவிட்டால் அந்த நேரத்திற்கு வந்துவிடுவார்கள் என நாங்கள் நினைத்தோம்,” என்கிறார் அவர். “ஆனால் ஜாஃப்ராபாத் துறைமுகத்தை அடைந்தவுடன் மீண்டும் அழைக்குமாறு அவர்கள் எங்களிடம் கூறிவிட்டனர்.”
அப்படியென்றால், ஆம்புலன்ஸ் வந்து மருத்தவமனைக்கு அவரை அழைத்துச் செல்லும் வரை 5-7 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.
இந்த அனுபவம் ஹன்சாபெனை மிரளச் செய்துவிட்டது. “என் பிரசவ நேரத்திற்கு செல்ல முடியாமல் போய்விடும் என அஞ்சுகிறேன்,” என்கிறார். “பிரசவ வலியின்போது படகிலிருந்து விழுந்துவிடுவோம் என நான் அஞ்சுகிறேன். மருத்துவமனைக்கு நேரத்திற்கு செல்லாமல் எனது கிராமத்தில் இறந்த பெண்களை குறித்து நான் அறிந்துள்ளேன். குழந்தைகள் பிழைக்காத சம்பவங்களையும் நான் அறிவேன்.”
மனுவில் தொடர்புடைய வழக்கறிஞர், செயற்பாட்டாளர் அர்விந்த்பாய் பேசுகையில், ஷியால் பெட்டிலிருந்து அண்மைக்காலமாக மக்கள் புலம் பெயர்வதற்கு மருத்துவ வசதிகள் இல்லாததும் முக்கிய காரணங்களில் ஒன்று என்கிறார். “சொந்தமான அனைத்தையும் விற்றுச் செல்லும் குடும்பங்களை நீங்கள் காணலாம்,” என்கிறார். “பெரும்பாலான குடும்பங்கள் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். கடலோரங்களை தாண்டி செல்வதோடு திரும்பக் கூடாது என்றும் அவர்கள் உறுதி எடுக்கின்றனர்.”
கடற்கரையை ஒட்டி வாழும் கபிபென் ஒரு உறுதி ஏற்றுள்ளார். தனது குடும்பத்தின் அடுத்த தலைமுறை முன்னோர் தொழிலை தொடரக் கூடாது என தீர்மானித்துள்ளார். ஜீவன்பாய் மரணத்திற்கு பிறகு, பல மீனவர்களின் மீன்களை கருவாடாக்கும் வேலையை அவர் செய்துள்ளார். அது மிகவும் கடினமான வேலை, ஒரு நாளுக்கு ரூ.200 தான் கிடைக்கும். அவர் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஜாஃப்ராபாத் பொதுப் பள்ளியில் படிக்கும் அவரது 14 வயது மகன் ரோஹித்தின் கல்விக்கு உதவும். அவன் வளர்ந்ததும், மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு ஏதேனும் துறையை தேர்வு செய்ய வேண்டும் என அவர் விரும்புகிறார்.
அப்படியென்றால் கபிபெனை வயோதிகத்தில் தனியாக விட்டுவிட்டு ரோஹித் ஜாஃப்ராபாத் செல்ல வேண்டும். ஜாஃப்ராபாதில் ஏற்கனவே நிறைய பேர் அச்சத்தில் வாழுகின்றனர். அவர்களில் கபிபெனும் ஒருவர்.
பார்த் எம் . என் . சுதந்திர ஊடகவியலாளராக தாகூர் குடும்ப அறக்கட்டளையிடமிருந்து நிதியுதவிப் பெற்று பொது சுகாதாரம் , சிவில் உரிமைகள் குறித்து செய்திகளை அளித்து வருகிறார் . இக்கட்டுரையில் இடம்பெறும் எந்த தகவல் மீதும் தாகூர் குடும்ப அறக்கட்டளை அதிகாரம் செலுத்தவில்லை .
தமிழில்: சவிதா