சவிந்தானேயில் குளிர்ந்த ஏப்ரல் இரவு அதிகாலை 2 மணி. மேற்கு மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தின் ஷிரூர் தாலுகாவில் உள்ள இந்த கிராமத்தின் கோயிலுக்கு எதிரே உள்ள திறந்தவெளி மைதானத்தில் ஒளிரும் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடும் பெண்களைக் கண்டு இந்த கிராமமே உயிரோட்டமாக உள்ளது. ஆனால் லாலன் பஸ்வானும் அவரது சக ஊழியர்களும் இந்த நிகழ்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் பார்வையாளர்களுக்கு மத்தியில் ஆரவாரம் செய்யும் ஆண்களிடமிருந்தும், ஒலிபெருக்கிகளின் சத்ததிலிருந்தும் விலகிச் சென்று ஒரு குட்டித் தூக்கம் போடுவதற்கான இடத்தைத் தேடிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களில் சிலர் தங்களது தொலைபேசிகளில் திரைப்படத்தைப் பார்த்து நேரத்தைக் கடத்துகின்றனர்.
"இந்த வேலை மிகவும் களைப்பானதாக இருக்கிறது. நாங்கள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியிருக்கிறது, நாங்கள் எப்போதும் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் கோருகிறார்கள்", என்கிறார் லாலன் பஸ்வான். இப்போது 19 வயதாகும், லாலன் ( கவர் படத்தில் இருப்பவர்) அவரது 13 ஆவது வயதில் இருந்து 'மங்கலா பன்சோட் மற்றம் நிதின் குமார் தமாஷா மண்டல்' உடன் பணியாற்றி வருகிறார். 30 தொழிலாளர்களைக் கொண்ட குழுவில் அவரும் ஒருவர் - இதில் பெரும்பாலானோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது வயது 15 முதல் 45 வரை இருக்கிறது - இவர்கள் அனைவரும் உத்திர பிரதேசத்தின் லக்னோ மாவட்டத்தின் மால் தொகுதியிலுள்ள மாலிகாபாத் தாலுகாவை சேர்ந்தவர்கள். இந்தக் குழுவில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினராகவோ அல்லது ஏதேனும் ஒரு சமூகப் பின்னலின் மூலம் தொடர்பு உடையவர்களாகவோ இருக்கிறார்கள்.
இவர்கள் நிகழ்ச்சிகளுக்கு மேடை மற்றும் கூடாரங்களை அமைக்கின்றனர், ஏனெனில் தமாஷா குழு ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கும். செப்டம்பர் முதல் மே வரையிலான எட்டு மாதங்களில், குறைந்தது 210 தடவையாவது அவர்கள் இதைச் செய்கிறார்கள் - அதுவே தமாஷாவிற்கான காலம் - இது மகாராஷ்டிராவின் ஒரு நாட்டுப்புற கலை வடிவம் ஆகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் அமைக்கப்படும் வெளிப்புற மேடையில் இது நிகழ்த்தப்படுகிறது. இது பாடல் மற்றும் நடனம், சிறு மற்றும் பெரு நாடகங்களைக் கொண்ட ஒரு பொழுதுபோக்குத் தொகுப்பாகும். இந்தக் குழுவில் கலைஞர்கள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், வயர் மேன்கள், மேலாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் ஆகியோர் அடங்குவர்.
லாலனுக்கு இந்த வேலை அவரது கிராமமான ஔமௌவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் மூலம் கிடைத்தது. அதற்கு முன்னர் அவர் லக்னோவில் கொத்தனாராக பணியாற்றினார். ஆனால் வேலையும் தொடர்ந்து கிடைக்கவில்லை மேலும் சம்பளமும் போதுமானதாக இல்லை. இப்போது, ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு பள்ளியிலிருந்து இடைநின்ற லாலன், தனது கிராமத்தைச் சேர்ந்த குழுவினருக்கு மேலாளராக பணியாற்றி மாதம் ஒன்றுக்கு 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவர் தேவைப்படும் போது புது தொழிலாளர்களையும் குழுவிற்கு கொண்டு வருகிறார். " சிறுவர்கள் எவரேனும் நோக்கமின்றி, படிக்கவோ வேலை செய்யவோ இல்லாமல் ஊர் சுற்றித் திரிந்தால், அவர்களை நாங்கள், எங்களுடன் தொழிலாளர்களாக சேர்த்துக் கொள்ள அழைத்து வருகிறோம்", என்கிறார் அவர். "இதை நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைத்து, பணம் சம்பாதிக்க, ஒரு நல்ல வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம்", என்கிறார்.
தமாஷா குழுவின் உரிமையாளர்களும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே விரும்புகின்றனர். "அவர்கள் மிகக் கடின உழைப்பாளிகள், அவர்கள் எங்களை நடுவழியில் விட்டுச் செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு", என்று கூறுகிறார் அக்குழுவின் மேலாளர் அனில் பன்சோட். குழு உரிமையாளர்கள் உத்திரப் பிரதேசத் தொழிலாளர்களை விரும்புவதற்கு மற்றும் ஒரு காரணம், இவர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய ஒப்புக் கொள்கிறார்கள், என்று புனேவை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளரும் மற்றும் தமாஷாவைப் பற்றிய ஆராய்ச்சியாளருமான சந்தோஷ் பண்டாரே கூறுகிறார்.
லாலனும் அவரது சக ஊழியர்களும், மேடை அமைப்பதே மற்ற பணிகளை விட கடினமானது, என்று கூறுகிறார்கள். பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் நிகழ்ச்சி நடத்தப்பட திட்டமிடப்பட்ட கிராமத்தை அடைந்ததும், தொழிலாளர்கள் மரப் பலகைகள், உலோக சட்டகங்கள், ஒளி மற்றும் ஒலிக்கான உபகரணங்கள் ஆகியவற்றை இறக்கத் துவங்குவர். அவர்கள் உலோகச் சட்டகங்கள் பலவற்றை வரிசையாக வைத்து அவற்றின் உதவியுடன் அதன் மீது மரப் பலகைகளைப் பொருத்தி மேடையைத் தயார் செய்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் மேடையின் கூரை மற்றும் மின் சாதனங்களை பொருத்த தேவையான சட்டகத்தை அமைக்கின்றனர். மேடையின் பலமானது, இசைக் கருவிகளையும் மற்றும் 15 - 20 நபர்களையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவிற்கு வலுவானதாக இருக்க வேண்டும். சில நேரங்களில் ஒரு மோட்டார் சைக்கிளோ அல்லது ஒரு குதிரையோ அவர்களின் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக இருக்கும் அப்போது இந்தக் கூடுதல் எடையையும் தாங்கக்கூடிய அளவிற்கு மேடை வலுவானதாக இருக்க வேண்டும்.
"மேடையை உருவாக்கும் முழு குழுவும் தமாஷா முடியும் வரை தொடர்ந்து இருக்க வேண்டும், இதைத்தான் உரிமையாளர்கள் எங்களிடம் கோருகின்றனர்", என்று கூடாரங்கள் அமைக்கும் 8 தொழிலாளர்களைக் கொண்ட குழுவிற்கு பொறுப்பாளரான லாலன் கூறுகிறார். "ஆனால் உரிமையாளர்கள் (எங்கள் வேலையை) சரி பார்க்கவோ அல்லது குறுக்கிடவோ மாட்டார்கள், அவர்கள் அடிப்படைை வழிமுறைகளை மட்டுமே எங்களிடம் கூறுவர். இந்த வேலை முழுவதும் எங்கள் பொறுப்பு மேலும் நாங்களே அதை கவனித்துக் கொள்கிறோம்", என்று அவர் பெருமையுடன் கூறுகிறார் லாலன்.
மேடைக்கு அருகில் பார்வையாளர்களை தடுத்து வைக்கும் உலோக தடுப்புகளை அமைக்கும் பணியில் 4 ஆண்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். டிக்கெட் செய்யப்பட்ட நிகழ்ச்சி நடைபெறும் போது கூடுதலாக 10 - 12 ஆண்கள் தேவைப்படுவர், கூடாரத்தை அமைத்து அதற்குள் மேடை அமைக்கப்படும், மேலும் அவர்கள் கூடாரத்திற்குள் செல்லும் வாயில்களையும் அமைப்பர். ஜெனரேட்டரை கவனித்துக் கொள்வதற்கு என தனியாக ஒரு தொழிலாளி தேவை படுவார், கிராமப்புற மகாராஷ்டிரத்தில் நிலவும் ஒழுங்கற்ற மின்சார விநியோகத்தைக் கணக்கில் கொள்ளும் போது, நிகழ்ச்சியை நடத்துவதற்கு அந்த நபர் இன்றியமையாதவர் ஆகிறார்.
தொழிலாளர்கள், குழுவினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பிலும் உதவுகின்றனர். ஔமௌ கிராமத்தைச் சேர்ந்தவரான, 20 வயதுதான, சாந்த்ராம் ராவத், ஜெனரேட்டரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருக்கிறார். பார்வையாளர்கள் கட்டுக்கடங்காதவர்கள் ஆகும் போது அவர்களை நிர்வகிப்பதிலும் அவர் ஈடுபடுகிறார். "மக்கள் ரஹுதிக்குள் (பெண் கலைஞர்கள் இருக்கும் கூடாரம்) நுழைய முயற்சிக்கவோ அல்லது அதை கிழிக்க முயற்சிக்கவோ செய்யும் போது, நாங்கள் அவர்களை நாகரிகமாக நடந்து கொள்ளும்படி கெஞ்ச வேண்டும். அவர்கள் அதை செய்யக்கூடாது என்று நாங்கள் அவர்களுக்கு விளக்கிக் கூறுகிறோம்", என்கிறார் 5 ஆண்டுகளாக நிகழ்ச்சி காலங்களில் குழுவில் இருந்து வரும் சாந்த்ராம். "நிகழ்ச்சிக்கு ஒரு குடிகாரர் வந்தால் நாங்கள் அவரை 2 -3 முறை தாக்கி அவரை வெளியேறச் செய்வோம்", என்று கூறுகிறார்.
தொழிலாளர்கள் ஓய்வு எடுப்பதற்கான நேரம் நிர்ணயிக்கப்படவில்லை. நிகழ்ச்சி இரவு 10 அல்லது 11 மணிக்கு துவங்கி, அதிகாலை 3 மணி அளவில், சில நேரங்களில் அதிகாலை 5 மணி வரை கூட நடைபெறும், பின்னர் அவர்கள் கூடாரங்கள், மேடை மற்றும் உபகரணங்களை விரைவாக பிரித்து வண்டியில் ஏற்ற வேண்டும். நிகழ்ச்சி டிக்கெட் பெற்றதாக நடக்கும் பொழுது (அதாவது கிராமத்தினர் முன்கூட்டியே பணம் செலுத்தாமல், முன்கூட்டியே பணம் செலுத்தும் பட்சத்தில் கிராமத்தினருக்கு அது இலவசம்), அவர்கள் டிக்கெட் கவுண்ட்டரையும் பிரிக்க வேண்டி இருக்கும். குழுவினரின் அனைத்துப் பொருட்களும் லாரியில் ஏற்றப்பட்ட பிறகு மீதமிருக்கும் நெரிசலான இடத்தில் தொழிலாளர்கள் ஏறுவர், மேலும் அவர்கள் அங்கேயே தூங்க முயற்சிப்பார். லாரிக்களும், கலைஞர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகளும், மொத்தக் குழுவினரையும் அடுத்த கிராமத்திற்கு அழைத்துச் சொல்லும். அங்கு சென்றதும் நண்பகலில் தொழிலாளர்கள், கலைஞர் ஓய்வெடுப்பதற்காகவும் மற்றும் உடை மாற்றுவதற்கும் கூடாரங்களை அமைப்பர். பின்னர் சிறிது நேரம் அவர்கள் தூங்கவோ அல்லது குளிக்கவோ அல்லது சாப்பிடவோ செய்வார்கள். பின்னர் மீண்டும், மாலை 4 மணி அளவில் அவர்கள் மேடையை அமைக்கத் துவங்குவர்.
தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் போது, உணவும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. சிறுவர்கள் (தொழிலாளர்கள்) யாரும் இந்த உணவை விரும்புவதில்லை. நாங்கள் வீடுகளில் கோதுமை ரொட்டி மற்றும் அரிசியை உணவாக உண்கிறோம். ஆனால் இங்கே நாங்கள் பக்ரியை (சோளம் மற்றும் கம்பால் ஆனது) உண்ண வேண்டியிருக்கிறது, என்கிறார் சாந்த்ராம். "அதற்கும் மேல், எல்லாவற்றிலும் நிலக்கடலையும், தேங்காயும், சேர்க்கப்படுகிறது", என்று லாலன் கூற, மற்றவர்கள் அனைவரும் அதை ஆமோதிக்கும் விதமாக தலையை அசைக்கின்றனர். எங்களது உணவுகளில் அவற்றை நாங்கள் பயன்படுத்துவது இல்லை. ஆனால் எங்களால் தேர்ந்தெடுத்து உண்ண முடியாது, கிடைப்பதை நாங்கள் சாப்பிட்டாக வேண்டும்", என்று கூறினார்.
உணவிற்கான நேரமும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். "சில நேரங்களில் காலை 10 மணிக்கு உணவு கிடைக்கும், சில நேரங்களில் மாலை 3 மணிக்கு தான் கிடைக்கும். நிலையான நேரம் என்று ஒன்று இல்லை. நிகழ்ச்சி முடியும் காலத்தில் எங்களது உடல் மிகவும் மெலிந்து விடுகிறது", என்கிறார் லாலன். "சரியான நேரத்தில் உணவு கிடைத்தால் அதை நாங்கள் சாப்பிடுகிறோம், இல்லையேல் வெறும் வயிற்றில் எல்லாவற்றையும் நாங்கள் பிரித்து மூட்டையைக் கட்ட வேண்டும்", என்று லாலனின் தம்பியான, 18 வயது சர்வேஷ் கூறுகிறார்.
இவ்வளவு சிரமமாக இருக்கும் போதிலும் தொழிலாளர்கள் தமாஷாவை விரும்பி தேர்ந்தெடுப்பதற்கான காரணம், இது ஒரு நிலையான வேலை மற்றும் வருமானத்தை தருவதே. அவர்கள் குழுவுடன் இருக்கும் எட்டு மாதங்களுக்கு, மாதத்திற்கு ரூபாய் 9,000 - 10,000 வரை சம்பளம் பெறுகின்றனர், அதுவே முற்றிலும் புதியவர்கள் எனில் வெறும் 5,000 ரூபாயே பெறுகின்றனர்.
சர்வேஷ் 11 -ஆம் வகுப்பில் இருந்த போது பள்ளியை விட்டு இடை நின்றார், அவரது குடும்பத்தினரிடம் பணம் இல்லை என்று கேட்டு கேட்டே அவர் சோர்வடைந்துவிட்டார். "நான் அவர்களிடம் பணம் கேட்பதை விட நானே அதை சம்பாதித்து மேலும் எனது சொந்த பணத்தை நான் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்", என்று கூறினார். அவர்களின் தந்தையும் இக்குழுவில் ஒரு தொழிலாளியே, மேலும் அவர்களின் இளைய சகோதரரும் இங்கு உதவியாளராகப் பணிபுரிகிறார். செலவுகள் எல்லாம் போக குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து 1.5 - 2 லட்ச ரூபாயை எட்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டிற்கு எடுத்துச் செல்வர். இந்த ஆண்டின் தமாஷா வருவாய் முழுவதும் லாலனின் திருமணச் செலவிற்கும் மற்றும் வீட்டை மீண்டும் புனரமைப்பு செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என்கின்றனர்.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் தினசரி செலவுக்காக 50 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணம் அவர்களின் மாத சம்பளத்தில் பிடிக்கப்படும். அதில் பெரும்பாலான பணம் கூடுதல் உணவிற்கே (அவர்களது குழுவிற்கு வழங்கப்படும் இரண்டு வேளை உணவு போக) செலவழிக்கப்படுகிறது. சிலர் அதை புகையிலை வாங்குவதற்கோ அல்லது மது அருந்துவதற்கோ பயன்படுத்துகின்றனர். "நான் மது அருந்த மாட்டேன், ஆனால் இங்குள்ள 5 - 6 ஆண்கள் அதைச் செய்கின்றனர்", என்கிறார் லாலன். மது அருந்துபவர்களில் அவரது தந்தையும் அடங்குவார். சில ஆண்கள் கஞ்சாவிற்கு அடிமையாக இருக்கின்றனர். "இந்த ஆண்கள் நாங்கள் உணவினைத் தேடி கண்டுபிடிப்பதை விட வேகமாக மதுவையும், கஞ்சாவையும் கண்டுபிடித்து விடுவர்", என்று கூறி சிரிக்கிறார் சர்வேஷ்.
தொழிலாளர்கள் தமாஷா குழுவினருடன் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவதற்கு மற்றுமொரு காரணம் அதன் பயண வாய்ப்பே. "நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய இடத்தில் இருக்கிறோம், எனவே எங்களுக்கு சுத்தி பார்ப்பதற்கு ஒரு கிராமம் கிடைக்கிறது. நாங்கள் ஒரே இடத்தில் தங்கி இருந்தால் அது சலிப்பை ஏற்படுத்திவிடும்", என்று கூறுகிறார் லாலன்.
ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் தாங்கள் தமாஷாவில் வேலை செய்வதாகச் சொல்வதில்லை. "நாங்கள் ஒரு ஆர்கெஸ்ட்ராவிலோ அல்லது டி ஜே நிறுவனத்திலோ பணியில் இருக்கிறோம் என்று கிராமத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளோம் - அதில் நடனமும் இருக்கிறது என்று கூறியுள்ளோம். அவர்கள் தமாஷாவில் பணிபுரிவதை கண்ணியமற்றதாக எண்ணக்கூடும்", என்கிறார் லாலன். இதே போல ஒரு நாட்டுப்புற நிகழ்ச்சி உத்திர பிரதேசத்திலும் இருக்கிறது, 'நௌதாங்கி' என்றழைக்கப்படும், அதன் ஆடல் கலைஞர்களுடன் தொடர்புடைய அவமதிப்பின் காரணமாக, அவர்கள் அங்கு வேலை செய்வதில்லை, என்று கூறுகிறார். "உத்தரப் பிரதேசத்தைப் போல் அல்லாமல், இங்குள்ள மக்கள் இக்கலையை மதிக்கின்றனர்", என்றும் அவர் கூறினார்.
தமாஷாவின் காலம் மே மாதத்தில் முடிவடையும் போது, அனைத்து தொழிலாளர்களும் ஔமௌ கிராமத்தின் மா பருவத்திற்கு திரும்புகின்றனர். இப்பகுதியில் இருந்து மாம்பழங்கள் நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றன மேலும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது, என்று பெருமையுடன் கூறுகிறார் சர்வேஷ். எங்களது தோட்டத்தில் 7 வகையான மாம்பழங்கள் வளர்கின்றன, என்று கூறுகிறார் சாந்த்ராம்.
இது அவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் மேலும் தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்குமான நேரம். "இங்கிருந்து நாங்கள் திரும்பிச் செல்லும் போது நாங்கள் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டி இருக்கிறது. கிராமத்தில் இரண்டு மாதங்களைக் கழித்த பிறகு நாங்கள் மீண்டும் தயாராகி விடுகிறோம். நாங்கள் மாம்பழங்களை சாப்பிடுவோம், அதிகமாக வேலை எதுவும் செய்யமாட்டோம். சாப்பிடுவது - உறங்குவது - உலாத்துவது - அவற்றை மீண்டும் செய்வது", இதுவே எங்கள் தாரக மந்திரம் என்கிறார் லாலன்.
குழுவில் உள்ள பெரும்பாலான ஆண்களைப் போலவே, லாலன் மற்றும் சர்வேஷின் குடும்பத்திற்கும் சொந்தமாக நிலம் உள்ளது, அங்கே அவர்கள் தங்களது குடும்ப தேவைக்காக கோதுமையும், மற்றும் சந்தைப் படுத்துவதற்காக மாம்பழங்களையும் விளைவிக்கின்றனர். "தமாஷாவின் மைதானத்தின் அளவிற்கு ஈடான நிலம் எங்களுக்கு சொந்தமாக உள்ளது. அது ஒரு ஏக்கர் இருக்கும்", என்கிறார் லாலன். எங்களது தந்தையின் சகோதரரே எங்களது நிலத்திலும் விளைவிக்கிறார், அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், ரூபாய் 60,000 - 70,000 வரை லாலனின் தந்தை பங்காகப் பெறுகிறார். சர்வேஷ் மற்றும் லாலன் ஆகிய இருவரும் தினமும் சில மணி நேரங்களுக்கு மாம்பழங்களை பிறக்கி, மண்டிக்கு அனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் ஓய்வெடுக்க சென்று விடுவர்.
"எங்களுக்குத் தேவையான ஆண்டு வருமானத்தை இந்த நிலத்தில் இருந்தே எங்களால் சம்பாதிக்க முடியும். ஆனால் நாங்கள் கிராமத்திலேயே தங்கி இருந்தால், ஒவ்வொரு நாளும் எங்களது வருமானத்தை செலவு செய்து விடுவோம். ஆனால் இங்கே, நாங்கள் எங்களது வருமானத்தை மொத்தமாகப் பெறுகிறோம், செலவு செய்வதற்கான வழியும் இல்லை. இத்தொகையை வைத்து நாங்கள் எங்கள் வீட்டை கட்டலாம், திருமணங்களுக்கு பணம் செலவழிக்கலாம்… என்று லாலன் விளக்குகிறார்.
அவர் தனது கிராமத்திற்கு திரும்பி வரும்போது சில நேரங்களில் சிறு சிறு வேலைகளை மேற்கொள்கிறார். அவர் லக்னோவில் தினக்கூலியாகவோ, அவர்கள் கிராமத்தில் விவசாயக் கூலியாகவோ அல்லது MNREGA விலோ (100 நாள் வேலைத்திட்டம்) பணியாற்றி நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 வரை சம்பளமாகப் பெறுவார். ஆனால் வேலை எல்லா நாட்களிலும் கிடைக்காது. "சில நேரங்களில் நாங்கள், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலையின்றி காத்திருக்க வேண்டியிருக்கும்..." என்று அவர் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.
ஆனால் திருமணமான பிறகு, அடுத்த ஆண்டு தமாஷா குழுவிற்கு நான் திரும்ப மாட்டேன் என்று லாலன் கூறுகிறார். "நான் கிராமத்திலேயே சில வேலைகளை கண்டுபிடிப்பேன்... என்னால் எல்லா வேலையையும் செய்ய முடியும். என்னால் துணிகள் தைக்க கூட முடியும்", இவருக்கு மனைவியாக வர இருப்பவர் தையல் தைப்பவர் மேலும் அவர் ஒரு இளங்கலை பட்டதாரி.
சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லும் போது திருமணம் செய்து கொள்ளவிருக்கும் சாந்த்ராம், "நான் எங்கள் கிராமத்திலேயே குடியேறப் போகிறேன்", என்று கூறுகிறார். நான் அங்கு ஒரு கடை அமைக்கத் திட்டமிட்டுள்ளேன், அது மளிகைக் கடையாகக் கூட இருக்கலாம். நான் இங்கு வந்துவிட்டால் எனது மனைவியையும் மற்றும் தாயையும் யார் கவனித்துக் கொள்வது? நான் எனக்கு திருமணம் ஆகாததால் மட்டுமே இங்கு வருகிறேன்", என்று கூறினார்.
சர்வேஷ், தானும் தமாஷாவில் இருந்து விலகி, பெரு நகரங்களான சண்டிகருக்கோ அல்லது மும்பைக்கோ செல்ல இருக்கிறேன், என்று கூறினார். "எனக்கு தேவையானது எல்லாம் சரியான உணவு மற்றும் உறக்கமுமே. நாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதும், எங்கும் வேலை செய்ய தயாராக இருக்கிறோம்....", என்று கூறினார்.
தமிழில்: சோனியா போஸ்