இந்த வாரம் செவ்வாய்க்கிழமை பெய்த மழையில், மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா சேறும், சகதியுமாகச் சறுக்குகிறது. அந்தப் பூங்காவே நடப்பதற்கு ஆபத்தானதாக இருக்கிறது. சக்குபாய் கிஷோர் கீழே விழுந்து, அவரின் காலில் அடிபட்டு விட்டது. ஓரிரு பற்கள் மட்டுமே மிஞ்சியிருக்கும் பொக்கைவாய் நிறைய அவர் சிரித்தபடியே, ''என்னோட தேவர் (கடவுள்) உடைய பாதங்களைத் தொடுறதுக்காக இங்கே வந்திருக்கேன். என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் இங்க வந்துட்டே இருப்பேன். என் கையும், காலும் ஓயுற வரை வருவேன். என் கண்ணு தெரியுற வரை, நான் இங்கே வந்துட்டே இருப்பேன்.' என்கிறார்.
சக்குபாய் மட்டுமல்ல அங்கே கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் கடவுள் டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர். சக்குபாய் அவர்கள் நவ் பௌத்த தலித் ஆவார். ஜல்கான் மாவட்டத்தின் புஷாவல் கிராமத்தில் இருந்து எழுபது வயதிலும் அம்பேத்கரின் நினைவுநாள் அன்று அஞ்சலி செலுத்த டிசம்பர் ஆறு, புதன்கிழமை அன்று சக்குபாய் வந்துவிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைச் செதுக்கிய தலைமை சிற்பியான அம்பேத்கர் தாதரில் உள்ள சைத்ய பூமியில் 1956-ல் புதைக்கப்பட்டார். அங்கும், அதற்கு அருகில் உள்ள சிவாஜி பூங்காவிலும் அவரின் நினைவு நாளன்று ஆயிரக்கணக்கான தலித் சமூக மக்கள் பெருவெள்ளமென ஒன்று கூடுகிறார்கள். அம்பேத்கர் இந்தியாவின் தலைசிறந்த சீர்த்திருத்தவாதிகளில், தலைவர்களில் ஒருவராகத் திகழ்பவர். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அயராமல் குரல் கொடுத்த அந்த உயர்ந்த ஆளுமைக்குத் தங்களுடைய மரியாதையைச் செலுத்த மக்கள் இங்கே ஒன்று கூடுகிறார்கள். இந்த இடத்திற்குப் பேருந்துகள், தொடர்வண்டிகளில் பயணித்து வருகிறார்கள். இன்னும் பலர் நெடுந்தூரம் நடந்தே நினைவிடத்தை வந்தடைகிறார்கள். மும்பை, மகாராஷ்டிராவின் கிராமங்கள், நகரங்கள் ஏன் பிற மாநிலங்களில் இருந்து கூட நாட்கணக்கில் பயணித்து மக்கள் வருகிறார்கள். அவர்களின் கண்களில் அம்பேத்கரின் மீதான மரியாதை, நன்றியுணர்வு, அன்பு ஒளிர்கிறது.
கடந்த 42 ஆண்டுகளாக, லீலாபாய் செயின் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் இருந்து இங்கே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார். ஜபல்பூர் தாதரில் இருந்து 1,100 கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கிறது. தன்னுடைய ஊரிலே லீலாபாய் மாலிஷ்வாலியாக (சுளுக்கு எடுப்பவராக)வேலை பார்க்கிறார். அவருடைய கணவர் முடி திருத்தும் வேலை பார்க்கிறார். தான் நை சாதியை சேர்ந்தவர் என்கிறார். இந்த முறை அறுபது பெண்களோடு மெதுவாக ஊர்ந்தபடி வரும் தொடர்வண்டியில் மூன்று நாட்கள் பயணித்துத் தாதருக்கு வந்து சேர்ந்திருக்கிறார். "நாங்க நடுராத்திரி ரெண்டு மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே ஸ்டேசனிலேயே தூங்கிட்டோம். இன்னைக்கு ராத்திரி இந்த (சிவாஜி பூங்காவிற்கு வெளியே உள்ள) நடைபாதையில் தூங்கிப்போம்." என்கிறார் உற்சாகமாக. "நாங்க இங்க பாபாசாகேப் மேலே உள்ள பாசத்தால வந்திருக்கோம். நாட்டுக்கு பல நல்ல காரியங்களை அவர் செய்ஞ்சாரு. வேறு யாரும் செய்ய முடியாததை எல்லாம் சாதிச்சு காமிச்சாரு." என்கிறார் லீலாபாய்.
லீலாபாயின் குழுவினர் அருகில் உள்ள நடைபாதையில் தங்களுடைய பைகளோடு அமர்ந்திருக்கிறார்கள். எண்ணற்ற கதைகள், ஓயாத சிரிப்பு, கண் கொள்ளாத காட்சிகள், சப்தங்கள் என்று அந்த இடம் களைகட்டுகிறது. இப்பெண்களின் கொண்டாட்டம் தங்களுக்காகக் குரல் கொடுத்த மகத்தான தலைவருக்கு உற்சாகமாக நன்றி சொல்வது போல இருக்கிறது. சைத்ய பூமி நோக்கி செல்லும் தெருவெங்கும் தலித் செயல்பாட்டாளர்கள் பாடல்கள் பாடிக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் புரட்சி கீதங்கள் இசைக்கிறார்கள். சிலர் உரையாற்றுகிறார்கள். சிலர் தரையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தர், பாபாசாகேபின் சிலைகள், அணிகலன்கள், ஓவியங்கள் ஆகியவற்றை வேடிக்கை பார்த்தபடி நிற்கிறார்கள். நீல நிற பகுஜன் கொடிகள், பதாகைகள், சுவரொட்டிகள் எங்கும் அலையடிக்கின்றன. காவல்துறையினர் கூட்டத்தை நெறிப்படுத்திக்கொண்டும், கண்காணித்துக் கொண்டும் இருக்கிறார்கள். சில காவலர்கள் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்கள். நாள் முழுக்க உழைத்துவிட்டு சில காவலர்கள் கண்ணயர்ந்து உள்ளார்கள்.
சிவாஜி பூங்காவின் உள்ளே டஜன்கணக்கான கூடாரங்கள் உள்ளன. அவற்றில் உள்ள பல அரங்குகள் எதையும் விற்பதில்லை. இவை இலவச உணவு, தண்ணீர், காப்பீட்டு திட்ட படிவங்கள் முதலிய சேவைகளை வழங்குகின்றன. சில அரங்குகள் இங்கே வந்திருக்கும் மக்களை வரவேற்க மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் பல தொழிலாளர் கூட்டமைப்புகள், தலித் அரசியல் கட்சிகள், இளைஞர் செயல்பாட்டுக் குழுக்கள் ஆகியோரால் அமைக்கப்பட்டவை. இவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதும் அரங்குகள் உணவு அளிக்கும் அரங்குகளே ஆகும். இங்கே சேறு அப்பிக்கொண்ட வெறுங்கால்களோடு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். இவர்களில் ஒருவரான பேபி சுரேதால் தனக்கு உரிய கிராக் ஜாக் பிஸ்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளக் காத்திருக்கிறார். ஹிங்கோலி மாவட்டம் அவுந்தா நாக்நாத் வட்டத்தில் உள்ள ஷிரத் ஷாஹாபூர் கிராமத்தை சேர்ந்தவர் பேபி சுரேதால். 'இந்தத் திருவிழாவை பாக்க தான் ஊரில இருந்து வந்தேன்' என்கிறவர், அங்கே நிலவும் பரபரப்பை சுட்டிக்காட்டி, ' இங்க நான் பாபாசாகேப் அம்பேத்கரை நினைச்சிக்கிட்டு மகிழ்ச்சியா இருக்கேன்' என்கிறார்.
சக்குபாயும் 'கிராக் ஜாக் கூடாரத்திற்கு' அருகில் காத்திருக்கிறார். அவரின் கையில் இருக்கும் சிவப்புப் பையில் ஒரே ஒரு புடவையும், ஒரு ஜோடி ரப்பர் செருப்பும் மட்டுமே இருக்கிறது. அதே பையில் ஆர்வலர்கள் கொடுத்த இரண்டு வாழைப்பழங்களும் இருக்கின்றன. அவர் கையில் நயா பைசா கூட இல்லை. சக்குபாயின் மகன் ஊரில் விவசாயக் கூலியாக இருக்கிறார். அவருடைய கணவர் நான்கு மாதங்களுக்கு முன்பே காலமாகி விட்டார். "நான் தனியாத்தான் வந்திருக்கேன். ரொம்பக் காலமாவே இந்த நாளன்னிக்கு இங்க நான் எல்லா வருசமும் வந்திருவேன். இங்க வந்தாதான் மனசு நிறைவா இருக்கு." என்று உற்சாகமாகிறார்.
சாந்தாபாயை போலக் கொடிய வறுமையில் சிக்குண்டிருக்கும் மக்கள் பலர் டிசம்பர் 6 அன்று தாதர்-சிவாஜி பூங்காவிற்கு வருகிறார்கள். அவர்கள் கையில் கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு வருவதுண்டு. பலர் வெறுங்கையோடு வருவதும் நிகழ்கிறது. களிமண் தரையில் அமர்ந்து கொண்டு, காய்ந்த இலையைக் கொண்டு வேயப்பட்ட கிண்ணங்கள், சில்வர் தாளால் ஆன காகித தட்டுகளில் பருப்பும், ரொட்டியும் உண்ண தரப்படுகிறது. அதனை உண்டபடி சாந்தாபாய், 'நிறையப் பேரு இந்தச் சாப்பாட்டை நம்பித்தான் சும்மாவே வந்துடறாங்க' என்கிறார். அவருடைய கணவர் மனோகர் அமைதியாக இருக்கிறார். மனோகர் ஒரு துணியில் சில ரொட்டிகளை இரவு உணவுக்கும், அடுத்த நாளைக்கும் உதவுமென்று எடுத்து முடிந்து கொள்கிறார். யவத்மால் மாவட்டத்தின், பூசத் வட்டத்தில் உள்ள சம்பால் பிம்ப்ரி கிராமத்தில் இருக்கும் விவசாயக் கூலிகளின் குடும்பமே சாந்தாபாயின் குடும்பம். அவர்கள் இரவுமுழுக்கச் சாலையில் பயணித்து வந்து சேர்ந்திருக்கிறார்கள். பொதுவாகச் சிவாஜி பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களில் தூங்குவதே வழக்கம் என்றாலும், இந்த ஆண்டு ஈரமாகி விட்ட மண்தரையில் படுக்க முடியவில்லை என்கிறார் சாந்தாபாய்.
ஆனந்தா வாக்மரே, நந்தேத் மாவட்டத்தின் அம்புல்கா கிராமத்தில் இருந்து பன்னிரெண்டு வயது மகள் நேஹாவோடு வந்திருக்கிறார். விவசாயக் கூலித்தொழிலாளியான ஆனந்த இளங்கலை பட்டம் பெற்று எந்த வேலையும் கிடைக்காமல் இருந்திருக்கிறார். "எனக்குன்னு சொந்தமா நிலம் இல்லை. அதனால மத்தவங்க வயக்காட்டில கூலிக்கு வேலை பாத்து ஒரு நாளைக்கு 100-150 ரூபாய் சம்பாதிச்சிடுவேன்' என்கிறார். மேலும், "நான் இங்க பாபாசாகேப்பை பார்க்க ஓடோடி வந்திருக்கேன். அவரால தான் எங்களுக்கு இவ்வளவு நல்லது நடந்திருக்கு. (நவ் பவுத்தர்கள்-இவர்கள் முன்னாள் மகர்கள்). அவர் மக்களின் மகாத்மா'" என்று மெய்சிலிர்க்கிறார் ஆனந்தா.
ஆனந்தா வாக்மரே தன்னுடைய மகள் நேஹாவோடு நந்தேத்திலிருந்து வந்திருக்கிறார். வலது: பூங்காவிற்கு வெளியே உள்ள நடைபாதையில் ஜெய் பீம் எனப் பொறிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள், அணிகலன்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
பூங்கா சேறும், சகதியுமாக இருப்பதால் அங்கே இருக்கும் சிற்சில அரங்குகளில் பெரிதாக விற்பனை இல்லை. எம்.எம்.ஷேக், இரண்டு நீண்ட மேசைகள் முழுக்கச் சமூகப் பிரச்சினைகள், சாதி பிரச்சினைகள் குறித்த புத்தகங்களைக் கடைபரப்பி வைத்துள்ளார். அவர் மாரத்வாடா மாவட்டத்தின் பீட் நகரத்தில் இருந்து இங்கே வந்திருக்கிறார். அந்நகரிலும் இதே புத்தக விற்பனையில் அவர் ஈடுபட்டுள்ளார். "நான் ஒவ்வொரு வருஷமும் வந்துருவேன். இந்தவாட்டி பெருசா விக்கலை. கடையை ஏறக்கட்டிக்கிட்டு இன்னைக்கு ராத்திரி ஊருக்கு கிளம்பிருவேன்." என்கிறார் ஷேக்.
அவருடைய கடைக்குக் கொஞ்சம் தள்ளி, இலவச மருத்துவச் சேவைகள் வழங்கும் முகாம் ஒன்று நிறுவப்பட்டு இருக்கிறது. இங்கே வரும் மக்களில் சுமார் நான்காயிரம் பேருக்கு தலைவலி, தோல் சிராய்ப்பு, வயிற்றுவலி முதலிய உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அவர்களைக் கவனித்துக் கொள்ள டாக்டர். உல்ஹாஸ் வாக் தலைமையில் ஒரு மருத்துவர் குழு இயங்குகிறது. உல்ஹாஸ் தன்னோடு 12-15 மருத்துவர்களை அழைத்து வருவதாகச் சொல்கிறார். "இங்க வர்றவங்க எல்லாம் கிராமம், சேரிகளில் இருந்து வர்ற மக்கள். அங்க ஒழுங்கான மருத்துவ வசதியே இருக்கிறதில்லை." என்று கவலைப்படுகிறார். நாட்கணக்காகப் பயணிப்பதும், வெறும் வயிற்றோடு இருப்பதும் சோர்வாக உணரவைப்பதாகச் சொல்லிக்கொண்டு பலர் முகாமிற்குள் வருகிறார்கள்
பர்பானி மாவட்டத்தின் ஜின்தூர் வட்டத்தில் உள்ள கன்ஹா கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயிகளான நிதின் (28) ராகுல் தவண்டே ஆர்வத்தோடு இவற்றைக் கண்ணுற்ற படியே நடக்கிறார்கள். அண்ணன், தம்பிகளான இவர்கள் இருவரும் நவ பௌத்தர்கள். தங்களுடைய கிராமத்தில் மூன்று ஏக்கர் நிலத்தில் பருத்தி, சோயாபீன்ஸ், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றைப் பயிரிடுகிறார்கள். இந்த இரவிற்குத் தங்கிக்கொள்ளச் சில தன்னார்வலர்களின் உதவியால் ஒரு கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. "எங்களுடைய ஷ்ரதாஞ்சலியை செலுத்த வந்திருக்கோம். நான் விடாம இங்க வந்த எங்க பசங்களும் வருவாங்கன்னு நம்புறோம். இந்த வழக்கம் தொடர்ந்துக்கிட்டே இருக்கணும்." என்கிறார் நிதின்.
அந்திமாலை நேரத்தில், சைத்ய பூமி நோக்கி வந்தடையும் மக்களின் எண்ணிக்கை, கால்வைக்க முடியாத அளவுக்குப் பெருங்கடலாகி விட்டது. லத்தூர் மாவட்டம் அவுசா வட்டத்தில் உள்ள உட்டி கிராமத்தை சேர்ந்த சந்தீபன் காம்ப்ளே உள்ளே நுழைய வழி கிடைக்காமல் காத்திருக்க முடிவு செய்துவிட்டார். ஒரு மர நிழலில் குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருக்கிறார். "இங்க இப்போதான் முதல் முறை வந்திருக்கேன். என் பொண்டாட்டி, புள்ளைங்களையும் கூட்டிகிட்டு வந்திருக்கேன். இந்த முறை அவங்க எல்லாருக்கும் டிசம்பர் 6 இங்க எப்படி இருக்குனு காட்டணும்னு நினைச்சேன்.' என்கிறார் அந்த விவசாயக் கூலித்தொழிலாளி.
ஷேக்கின் புத்தகக் கடைக்கு அருகில், ஒரு சிறுமி வழிதவறி போய், முன்னும், பின்னும் ஓடிக்கொண்டிருக்கிறாள். அம்மா என்று பெருங்குரலெடுத்து அழுகிறாள். மக்கள் அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அவர்கள் அந்தச் சிறுமியை கனிவன்போடு தேற்றி பேச வைக்கிறார்கள். அவளுக்குக் கன்னடம் மட்டும் தான் பேச வருகிறது என்றாலும், சாதுரியமாக ஒரு அலைபேசி எண்ணை சரியாகத் தருகிறாள். வயதில் இளைஞரான காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு வந்து சேர்ந்து, பொறுப்பேற்றுக் கொள்கிறார். . அந்தப் பெண்ணின் பதற்றத்தை ஏன் இத்தனை கவனமாகக் கையாள்கிறார்கள்? இவ்வளவு பெருங்கூட்டத்தில், பெண்களை மானபங்கப்படுத்துவது, குழப்பம் விளைவிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்ததே இல்லை. இதுவரை எந்தச் சலசலப்பும், களேபரமும் ஆனதில்லை. புத்தகக் கடைக்குக் கொஞ்ச தூரம் தள்ளி, இன்னொரு சிறுமி ஒரு கூடாரத்துக்குள் ஓடுகிறாள். அதன் உள்ளே இருக்கும், டாக்டர் அம்பேத்கரின் மாலையிட்ட புகைப்படத்தின் முன் சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி, வெகுநேரம் அமைதியாக நிற்கிறாள்.