மே 4ம் தேதி இறுதியாக இருந்த இரண்டு சடலங்களை தகனத்துக்கு தயார் செய்யுமாறு பப்புவிடம் ஹரிந்தர் சிங் சொன்னபோது மற்றவர்கள் குழம்புவார்கள் என அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன.
”அங்கே இரண்டு சிறுவர்கள் கிடக்கின்றனர்,” எனக் கூறினார் ஹரிந்தர். முதலில் ஆச்சரியம் அளித்த அவரின் வார்த்தைகள் ஊக்கமிகுதியில் சொல்லப்பட்டதை சக ஊழியர்கள் புரிந்து கொண்டதும் ஆச்சரியம் சிரிப்பானது. புது தில்லியில் தொடர்ந்து வேலை இருக்கும் நிகாம் போத்தின் சுடுகாட்டின் கடுமையான வேலைகளுக்கு இடையில் அத்தகைய ஆறுதல் கொடுக்கும் தருணம் மிகவும் அரிது.
ஆனாலும் என்னிடம் விளக்க வேண்டும் என விரும்பினார் ஹரிந்தர். தகனம் நடக்கும் இடத்துக்கு அருகே இருக்கும் சிறு அறையில் சக ஊழியர்களுடன் உணவு உண்டு கொண்டிருந்தார். ஆழமாய் மூச்சுவிட்டார். கோவிட் தொற்று இருக்கும் சூழலில் மூச்சுவிடும் வாய்ப்பு பெற்ற அவர் அதிர்ஷ்டசாலிதான். ”அவற்றை நீங்கள் சடலங்கள் என அழைப்பீர்கள். நாங்கள் சிறுவர்கள் என அழைப்போம்,” என்றார்.
“இங்கு கொண்டு வரப்படும் ஒவ்வொருவரும் யாருடைய மகனோ மகளோதான்,” என்கிறார் பப்பு. தகன உலைக்கு அவர்களை அனுப்புவது மிகவும் வலி கொடுக்கும் விஷயம். அவர்களின் ஆன்மாவுக்காக நாங்கள் அதை செய்ய வேண்டுமல்லவா?”. 200 சடலங்கள் கடந்த ஒரு மாதத்தில் நிகாம் போத்தின் உலையிலும் சிதைகளிலும் எரிக்கப்பட்டிருக்கின்றன.
மே 4ம் தேதி 35 சடலங்கள் தகன உலையில் எரிக்கப்பட்டன. கோவிட் இரண்டாம் அலை தில்லியை தாக்கிய ஏப்ரல் முதல் வாரத்தின் தினசரி சராசரி 45-50லிருந்து கொஞ்சம் குறைவான எண்ணிக்கைதான். தொற்றுக்கு முன்பு ஒரு மாதத்துக்கே 100 சடலங்கள்தான் எரிக்கப்பட்டன.
தில்லியின் யமுனா நதிக்கரையின் கஷ்மெரே வாசலுக்கு அருகே பெரிய சுவர் எழுத்துகள் இருக்கின்றன. “என்னை இங்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இங்கிருந்து நான் தனியே செல்வேன்”, என்ற எழுத்துகள். ஆனால் இந்த வருடத்தின் ஏப்ரல்-மே மாதங்களில் கோவிட் தொற்று வந்த பிறகு, இறந்தவர்கள் தனியே செல்லவில்லை. இறப்புக்கு பின்னான பயணத்தில் அவர்களின் நண்பர் ஒருவரேனும் இருந்திருப்பார்.
எரியும் உடல்களின் நாற்றத்துடன் மாசடைந்த யமுனாவின் வாசனையும் கலந்து காற்றில் பரவி என்னுடைய இரட்டை முகக்கவசத்தில் ஊடுருவியது. சற்று தூரத்தில் ஆற்றுக்கு அருகே கிட்டத்தட்ட 25 சிதைகள் எரிந்து கொண்டிருந்தன.ஆற்றங்கரைக்கு செல்லும் குறுகலான பாதையின் இருபக்கங்களிலும் இன்னும் அதிகமான சிதைகள் இருந்தன. ஐந்து சிதைகள் வலப்பக்கத்திலும் மூன்று இடப்பக்கத்திலும் எரிந்து கொண்டிருந்தன. இன்னும் காத்திருப்பில் பல சடலங்கள் இருந்தன.
அவசரத்துக்கு பயன்படுத்தும் வகையில் வளாகத்தில் இருந்த ஒரு பகுதி சடலம் எரிக்க தயார் செய்யப்பட்டிருந்தது. 21 புதிய இடங்கள் இருந்தன. ஆனாலும் போதாது. நடுவே ஒரு மரம் நின்றது. அதன் இலைகள் சடலம் எரிக்கும் தீயில் கருகிக் கொண்டிருந்தன. காஃப்காவின் எழுத்துகளில் தென்படும் ஓர் இருண்மை சூழலுக்குள் நாடு இருப்பதை குறிப்பது போலிருந்தது அக்காட்சி.
அதை பற்றி கொஞ்சமும் ஊழியர்கள் தெரிந்திருந்தது. அவர்கள் வேலை பார்க்கும் உலை இருக்கும் வளாகத்துக்குள்ளே பலர் நடந்து கொண்டும் அழுது கொண்டும் அரற்றிக் கொண்டும் இறந்தவரின் ஆன்மாவுக்காக பிரார்த்தித்துக் கொண்டும் இருந்தனர். விட்டு விட்டு எரியும் குழல் விளக்குகள் இருக்கும் காத்திருப்பு பகுதிகளை எவரும் பயன்படுத்தவில்லை.
அங்கிருக்கும் ஆறு உலைகளில், “பாதி உலைகள் கடந்த வருடம் (2020) கோவிட் பாதிப்பில் இறந்தோரின் சடலங்கள் குவியத் தொடங்கிய பிறகு அமைக்கப்பட்டவை,” என்கிறார் பப்பு. கோவிட் தொற்று தொடங்கியதிலிருந்து, தொற்றினால் இறந்தவர்களை மட்டுமே எரிக்க உலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சடலத்தை கொண்டு வந்திருந்தவர்களோ மருத்துவ ஊழியர்களோ அல்லது தகன ஊழியர்களோ சடலத்தை உலைக்கு கொண்டு வருகிறார்கள். சில அதிர்ஷ்டம் பெற்ற சடலங்கள் பிறவற்றை போலல்லாமல் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டிருக்கும். பிறவை வெள்ளை பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டிருக்கும். நேரடியாக ஆம்புலன்சிலிருந்து கொண்டு வருவார்கள். சிலவற்றை ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு வருவார்கள். இன்னும் சிலவற்றை கட்டடத்துக்குள் தூக்கி வருவார்கள்.
தகன ஊழியர்கள் பிறகு சடலத்தை தூக்கி, உலைக்கு செல்லும் சக்கரத்துடனான ரயில் தளத்தில் உள்ள மேடையில் வைக்கின்றனர். அடுத்த பகுதிக்கு விரைவாக செயல்பட வேண்டும். சடலத்தை உலைக்குள் தள்ளிய உடனே, ஊழியர்கள் வேகமாக மேடையை வெளியே இழுத்து, உலையின் கதவை அடைத்து தாழிட வேண்டும். நேசத்துக்குரியவர்கள் உலையில் மறைவதை கண்ணீருடன் நிற்கும் குடும்ப உறுப்பினர்கள் பார்க்கிறார்கள். புகைக் கூண்டிலிருந்து கரிய புகை உயர எழும்புகிறது.
“ஒருநாளின் முதல் சடலம் எரிய இரண்டு மணி நேரங்கள் ஆகும்,” என்கிறார் பப்பு. “ஏனெனில் உலை சூடாவதற்கு நேரமாகும். அதற்கு பிறகு வரும் சடலங்கள் ஒவ்வொன்றும் ஒன்றரை மணி நேரத்தில் எரிந்து விடும்.” ஒவ்வொரு உலையாலும் ஒரு நாளில் 7-9 சடலங்களை எரிக்க முடியும்.
நிகாம் போத்தில் உள்ள உலைகளை நான்கு ஊழியர்கள் பார்த்துக் கொள்கின்றனர். நால்வரும் உத்தரப்பிரதேசத்தின் பட்டியல் சாதியான கோரி சமூகத்தை சேர்ந்தவர்கள். வயதில் மூத்தவரான 55 வயது ஹரிந்தர் பல்லியா மாவட்டத்தை சேர்ந்தவர். 2004-லிருந்து அங்கு பணிபுரிகிறார். கன்ஷிராம் நகர் மாவட்டத்தை சேர்ந்த, 39 வயது பப்பு 2011ம் ஆண்டில் சேர்ந்தார். 47 வயது ராஜு மோகனும் 28 வயது ராகேஷ்ஷும் புதியவர்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஏப்ரல் - மே மாதங்கள் தொடங்கி 15-17 மணி நேரங்கள் ஒவ்வொரு நாளும் பணிபுரிகின்றனர். காலை 9 மணி தொடங்கி நள்ளிரவையும் தாண்டி உயிருக்கு ஆபத்து நேரும் சூழலில் பணிபுரிகின்றனர். வைரஸ்ஸிலிருந்து அவர்கள் தப்பினாலும் கூட உலையிலிருந்து வெளியாகும் 840 டிகிரி செல்சியஸ் வெப்பம் அவர்களை உருக்கிவிடும். “உள்ளே ஒரு சடலம் இருக்கும்போது இரவில் உலையை அணைத்துவிட்டால் காலையில் எங்களுக்கு சாம்பல்தான் கிடைக்கும்,” என்கிறார் ஹரிந்தர்.
விடுப்பு இல்லாமல் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். “தண்ணீரோ தேநீரோ குடிக்கவே நேரம் கிடைக்காதபோது நாங்கள் எப்படி விடுப்பு எடுப்பது?” எனக் கேட்கிறார் பப்பு. “சில மணி நேரங்கள் நாங்கள் விட்டுச் சென்றாலும் இங்கு குழப்பமாகி விடும்.”
எனினும் அவர்களில் யாரும் நிரந்தர ஊழியராக்கப்படவில்லை. நகராட்சி சுடுகாடான நிகாம் போத், பாடி பஞ்சாயத்து வைசிய பீசே அகர்வால் என்கிற (சன்ஸ்தா என்றும் அழைக்கப்படும்) தொண்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
அந்த நிறுவனம் ஹரிந்தருக்கு 16000 மாத ஊதியம் வழங்குகிறது. ஒருநாளைக்கு 533 ரூபாய். நாளொன்றுக்கு எட்டு சடலங்கள் அவர் எரிக்கிறாரென வைத்துக் கொண்டால் ஒரு சடலத்துக்கு 66 ரூபாய். பப்புவுக்கு 12000 ரூபாய் ஊதியம். ராஜு மோகனும் ராகேஷ்ஷும் 8000 ரூபாய் ஊதியம் பெறுகின்றனர். ”எங்களின் ஊதியங்களை உயர்த்துவதாக சன்ஸ்தா வாக்கு கொடுத்திருக்கிறது. எவ்வளவு உயர்த்துவார்கள் என சொல்லவில்லை,” என்கிறார் ஹரிந்தர்.
ஆனால் ஒரு தகனத்துக்கு 1500 ரூபாய் (தொற்றுக்கு முன்னால் ரூ.1000) கட்டணம் வசூலிக்கும் சன்ஸ்தா, ஊதிய உயர்வு கொடுக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரியவில்லை. அதன் பொதுச்செயலாளர் சுமன் குப்தா சொல்கையில், “அவர்களின் ஊதியங்களை உயர்த்தினால், வருடம் முழுவதும் அந்த ஊதியத்தை கொடுக்க வேண்டியிருக்கும்,” என்கிறார். ஊக்கப்பரிசு மட்டும் அளிக்கப்படுவதாக கூறுகிறார்.
அவர்கள் உண்ணும் சிறு அறையை ஊக்கப்பரிசென அவர் குறிப்பிட்டிருக்க மாட்டாரென நம்புவோம். உலையிலிருந்து ஐந்து மீட்டர் தூரத்தில் இருக்கும் அறை, கோடைகாலத்தில் நீராவி அறை போல் இருக்கிறது. பப்பு சென்று அனைவருக்கும் குளிர்பானங்கள் வாங்கி வருகிறார். 50 ரூபாய்க்கும் மேல் அவருக்கு செலவு. அந்த நாளில் அவர் எரித்த ஒரு சடலத்தின் மதிப்பை காட்டிலும் அதிக தொகை அது.
ஒரு உடலை எரிக்க 14 கிலோ எரிவாயு செலவாவதாக பப்பு சொல்கிறார். “முதல் சடலத்துக்கு நாம் வீட்டில் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர்களில் இரண்டு சிலிண்டர் அளவுக்கு எரிவாயு தேவைப்படுகிறது. அடுத்தடுத்த சடலங்களுக்கு சற்று குறைவாக, ஒன்று அல்லது ஒன்றரை சிலிண்டர்கள் அளவுக்கு தேவைப்படுகிறது.” ஏப்ரல் மாதத்தில் நிகாம் போத்தின் உலைகள் 543 சடலங்களை எரித்ததாக சொல்கிறார் குப்தா. அம்மாதம் சன்ஸ்தாவுக்கு வந்த எரிவாயு கட்டணம் ரூ.3,26,960.
எரிவதை வேகப்படுத்த ஊழியர்கள் உலையின் கதவை சற்று தூக்கி ஒரு நீள குச்சியை கொண்டு உடலை அசைத்து இன்னும் ஆழமாக இயந்திரத்துக்குள் தள்ளி விடுகின்றனர். “இப்படி செய்யவில்லையெனில், ஒரு சடலம் முழுமையாக எரியவே 2-3 மணி நேரங்கள் ஆகிவிடும்,” என்கிறார் ஹரிந்தர். “வேகமாக செய்தால்தான் எரிவாயுவை சேமிக்க முடியும். இல்லையெனில் சன்ஸ்தாவுக்கு நஷ்டம் ஏற்படும்.”
நிறுவனத்தின் செலவுகளை குறைக்க அவர்கள் உதவினாலும் அவர்களின் ஊதியத்தை நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தவே இல்லை. “ ஆபத்து நேரும் சூழலில் இருந்து கொண்டு கோவிட் தொற்றில் பலியானோரின் உடல்களை நாங்கள் தகனம் செய்து கொண்டிருக்கிறோம்,” என்கிறார் பப்பு ஊதியம் உயர்த்தப்படாதது குறித்த அதிருப்தியுடன். “உதவியிலும் நன்கொடையிலும்தான் சன்ஸ்தா நடத்தப்படுவதாக சொன்னார்கள். நாங்கள் என்ன செய்வது?” என்கிறார் ஹரிந்தர். உண்மையில் அவர்களுக்கென ஒன்றும் செய்யப்படவில்லை.
அவர்கள் முழுமையாக தடுப்பு மருந்துகள் கூட போட்டுக் கொள்ளவில்லை. பப்புவும் ஹரிந்தரும் வருடத்தின் தொடக்கத்தில் முன்னணி பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்ட போது முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். “இரண்டாம் ஊசியை போட்டுக் கொள்ள நேரம் கிடைக்கவில்லை. தகன வேலைகள் இருந்தன,” என்கிறார் பப்பு. “எனக்கு தடுப்பூசி நிலையத்திலிருந்து அழைப்பு வந்தபோது என்னுடைய தடுப்பூசியை வேறு யாருக்காவது போடச் சொல்லிவிட்டேன்.”
உலைக்கு அருகே இருக்கும் குப்பை தொட்டியில் அங்கு வந்தவர்களின் பாதுகாப்பு உடைகள் இருந்ததை பார்த்தார் பப்பு. அவற்றை வெளியே இருக்கும் பெரிய குப்பை தொட்டியில் போடும்படி அறிவுறுத்தியபோதும் வந்தவர்கள் பாதுகாப்பு உடைகளை வளாகத்திலேயே போட்டிருந்தனர். குச்சியை கூட பயன்படுத்தாமல் அவற்றை அப்படியே இழுத்து வெளியே கொண்டு வந்தார் பப்பு. அவரே பாதுகாப்பு உடை அணியாமல்தான் இருந்தார். கையுறைகள் கூட அணிந்திருக்கவில்லை.
உலைகளுக்கு அருகே இருக்கும் அளவுக்கதிகமான வெப்பத்தால் பாதுகாப்பு உடை அணிய முடியவில்லை என்கிறார் பப்பு. “உலையிலிருக்கும் சடலத்தின் வயிறு வெடிக்கும் சமயங்களில் நெருப்பு வெளியே வருவதால் பாதுகாப்பு உடை பற்றிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. பாதுகாப்பு உடையை கழற்றுவதற்கு நேரம் ஆகும். எங்களின் உயிரையே கூட அதனால் இழக்க வேண்டியிருக்கலாம்,” என அவர் விளக்குகிறார். ஹரிந்தர் சொல்கையில், “பாதுகாப்பு உடை என்னை மூச்சு திணற வைக்கிறது. எனக்கென சாகும்போது விருப்பம் இருக்குமா இல்லையா?” என்கிறார்.
முகக்கவசம் மட்டும்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு. அதுவும் பல நாட்கள் அணிந்த முகக்கவசம். “வைரஸ் தொற்றுமோ என எங்களுக்கு அச்சம் இருக்கிறது. ஆனால் இந்த நெருக்கடியை நாங்கள் தவிர்க்க முடியாது,” என்கிறார் பப்பு. “மக்கள் ஏற்கனவே துயரத்தில் இருக்கின்றனர். அவர்களை நாம் விரக்தியடைய வைக்கக் கூடாது.”
ஆபத்துகள் அதோடு முடியவில்லை. ஒருமுறை ஒரு சடலத்தை தகனம் செய்கையில் பப்புவின் இடது கையில் தீ பட்டு தழும்பாகி விட்டது. “நான் வலியை உணர்ந்தேன். ஆனால் என்ன செய்ய முடியும்?”. அவர்களை நான் பார்ப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் ஹரிந்தர் காயப்பட்டிருந்தார். “கதவை நான் மூடுகையில் என் முழங்காலில் இடித்து விட்டது,” என்றார் அவர்.
“உலைக்கதவின் கைப்பிடி உடைந்துவிட்டது. ஒரு மூங்கில் குச்சியை அதற்கு பதிலாக நாங்கள் வைத்திருக்கிறோம்,” என்கிறார் ராஜு மோகன். “கதவை சரி செய்ய எங்களின் மேலாளரிடம் சொன்னோம். ‘ஊரடங்கு நேரத்தில் எப்படி சரி செய்வது?’ என எங்களிடம் கேட்டார். எதுவும் நடக்காது என எங்களுக்கு தெரியும்,” என்கிறார் ஹரிந்தர்.
முதலுதவி பெட்டி கூட அவர்களிடம் இல்லை.
இப்போது புதுவகை பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. உலைக்குள் உடலை அனுப்புவதற்கு முன் உறவினர்கள் நெய்யும் நீரும் ஊற்றுவதால் தரை வழுக்கி விடுகிறது. “அதற்கு அனுமதியில்லை. அதில் சுகாதாரமும் இல்லை. ஆபத்தும் இருக்கிறது. ஆனால் மக்கள் கட்டுப்பாடுகளை பொருட்படுத்துவதில்லை,” என்கிறார் தில்லி நகராட்சியின் அதிகாரியான அமர் சிங்.தொற்றுகாலத்தில் நிகாம் போத் சுடுகாட்டின் செயல்பாட்டை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஏழு அதிகாரிகளில் அவரொருவர்.
இரவு 8 மணிக்கு முன் வரும் சடலங்கள் யாவும் அதே நாளில் தகனம் செய்யப்பட்டு விடுவதாக சொல்கிறார் சிங். அதற்கு பிறகு வரும் சடலங்கள் அடுத்த நாள் காலை வரை காத்திருக்க வேண்டும். இரவிலும் காக்க வேண்டும் என்பதால் ஆம்புலன்ஸ் கட்டணம் உயர்ந்துவிட்டது என்கிறார் அவர். “24 மணி நேரமும் உலை செயல்படுவதுதான் உடனடி தீர்வு.”
ஆனால் அது சாத்தியமா? “ஏன் சாத்தியமில்லை? என்கிறார் சிங். “ஒரு கோழியை நீங்கள் தந்தூரி அடுப்பில் வேக வைத்தால், தந்தூரி அடுப்பு அப்படியேதான் இருக்கும். இங்கிருக்கும் உலைகள் 24 மணி நேரங்களும் இயங்கும் திறன் பெற்றவை. ஆனால் சன்ஸ்தா அதை அனுமதிப்பதில்லை.” பப்பு அந்த கருத்தை ஏற்கவில்லை. “இயந்திரமும் மனிதனை போலத்தான். அதற்கும் சற்று ஓய்வு தேவை,” என்கிறார்.
ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதை சிங்கும் பப்புவும் ஒப்புக் கொள்கின்றனர். “அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால், ஏற்கனவே குறைவாக நடந்து கொண்டிருக்கும் வேலையும் குலைந்து போகும்,” என்கிறார் சிங். ஊழியர்களுக்கு காப்பீடு இல்லை என்றும் குறிப்பிடுகிறார். பப்பவின் யோசனை வேறாக இருக்கிறது. “நான் மற்றும் ஹரிந்தர் போல இன்னும் சில ஊழியர்கள் இருந்தால், வேலை சுலபமாகி விடும். எங்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்,” என்கிறார் அவர்.
ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்னாவது எனக் கேட்டதும் குப்தா நிதானமாக, “மீதமுள்ள மூவர் வேலை பார்ப்பார்கள். இல்லையெனில் வெளியே இருந்து ஊழியர்களை அழைத்து வருவாம்,” என்கிறார். ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசு இருக்கிறது என்கிறார். “அவர்களுக்கு நாங்கள் உணவு கொடுக்காமல் ஒன்றுமில்லை.. கொடுக்கிறோம். உணவு, மருந்துகள், சானிடைசர்கள் எல்லாமும் கொடுக்கிறோம்.”
ஹரிந்தரும் அவரின் சக ஊழியர்களும் சிறு அறையில் உணவு உண்டு கொண்டிருந்தபோது, உலையில் எரிந்து கொண்டிருந்த சடலத்தை நெருப்பு விழுங்கிக் கொண்டிருந்தது. ஊழியர்கள் கொஞ்சம் மதுவை அவர்களுக்கு ஊற்றிக் கொண்டனர். “குடிக்காமல் எங்களால் வாழ முடியாது,” என விளக்குகிறார் ஹரிந்தர்.
தொற்றுக்கு முன்னால் மூன்று ‘பெக்’குகள் (ஒரு பெக் என்பது 60 மிலி) மது குடித்தனர். ஆனால் இப்போது அவர்கள் வேலை பார்க்க முழு நாளும் குடியில் இருக்க வேண்டியிருக்கிறது. “காலையில் ஒரு குவார்ட்டர் (180 மிலி), பகலில் ஒரு குவார்ட்டர், மாலையில் அதே அளவு, பிறகு இரவிலும் ஒரு குவார்ட்டர். சில நேரங்களில் நாங்கள் வீட்டுக்கு சென்ற பிறகும் குடிப்போம்,” என்கிறார் பப்பு. “நல்லவேளையாக சன்ஸ்தா எங்களை தடுப்பதில்லை. சொல்லப்போனால் அவர்கள் ஒரு படி மேலே சென்று எங்களுக்கு தினமும் மது கொடுக்கிறார்கள்,” என்கிறார் ஹரிந்தர்.
இறந்த மனித உடலை எரிப்பதிலுள்ள உழைப்பு மற்றும் வலியில் இருந்து இந்த கடைநிலை ஊழியர்கள் ஆசுவாசம் பெற மது உதவுகிறது. “அவர்கள் இறந்துவிட்டார்கள். இங்கு கடுமையான் வேலையில் இருந்து நாங்களும் இறந்துதான் போகிறோம்,” என்கிறார் ஹரிந்தர். “ஒரு பெக் குடித்துவிட்டு, சடலங்களை பார்க்கையில் நான் தெளிவாகி விடுகிறேன்,” என்கிறார் பப்பு. “தூசும் புகையும் எங்களின் தொண்டைகளை அடைத்தால் மது அவற்றை அலசி சுத்தமாக்கி விடுகிறது.”
ஆசுவாசத்துக்கான நேரம் முடிந்தது. இப்போது பப்பு சென்று இரண்டு சிறுவர்களை கவனிக்க வேண்டும். “நாங்களும் அழுவதுண்டு. எங்களுக்கும் கண்ணீர் வரும்,” என்னும் அவரின் குரலில் துயரமும் கண்களில் கண்ணீரும் தேங்கியிருக்கிறது. “ஆனாலும் நாங்கள் எங்கள் இதயங்களை காப்பாற்ற துயரத்தை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.”
தமிழில் : ராஜசங்கீதன்