”பொம்மைகளோ நாடகமோ மட்டுமல்ல,” என்கிறார் ராமச்சந்திர புலவர். அவர் 40 வருடங்களாக தோல்பாவைக்கூத்து நடத்திவரும் கலைஞர். கேரளாவின் மலபார் பகுதியில் ஒருங்கிணைந்துள்ள பல்வேறு சமூகங்களின் பலதரப்பட்ட பண்பாட்டுக் கதைகளை கலைஞர்கள் சொல்வதுதான் அக்கலையை சிறப்பானதாக ஆக்குவதாக அவர் நம்புகிறார்.
“நம் பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால தலைமுறைகளுக்கு கடத்துவதில்தான் அச்சிறப்பு இருக்கிறது. தோல்பாவைக்கூத்தின் வழியாக நாங்கள் சொல்லும் கதைகளில் ஆழமான அர்த்தம் இருக்கிறது. மக்கள் நல்லவர்களாக மேம்பட அவை ஊக்குவிக்கிறது,” என்கிறார் அவர்.
தோல்பாவைக்கூத்து கேரளாவின் பாரம்பரிய பொம்மலாட்டக் கலை ஆகும். மலபாரின் பாரதப்புழா (நிலா) ஆற்றங்கரை கிராமங்களில் அது காணப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த பொம்மலாட்டக்காரர்கள் இக்கலையில் இயங்குகின்றனர். நாடகங்கள் அனைவருக்குமானதாக நடத்தப்படுகிறது.
கோவில் வளாகத்துக்கு வெளியே உள்ள நிரந்தர நாடகக் கொட்டகையான கூத்துமடத்தில் தோல்பாவைக்கூத்து நடத்தப்படுகிறது. எல்லா தரப்பு மக்களும் வந்து இந்த கலையை ரசிப்பதற்கு இது வழிவகுக்கிறது. பத்ரகாளியின் புனிதத் தோப்புகளில் பாரம்பரிய வருடாந்திர விழாவின் ஒரு பகுதியாக நடந்து வரும் இந்நிகழ்வு, ராமனுக்கும் ராவணனுக்கும் இடையேயான ராமாயணப் போரை பிரதிபலிக்கிறது. ராமாயணத்தில் இடம்பெற்றிருக்கும் மதக் கதைகள் மட்டுமின்றி நாட்டுப்புறக் கதைகளையும் இந்நிகழ்வு கொண்டிருக்கிறது.
பொம்மலாட்டக் கலைஞர் நாராயணன் நாயர் சொல்கையில், “எங்களின் நிகழ்வுகளுக்கு நிதியும் ஆதரவும் பெற நாங்கள் சிரமப்படுகிறோம். பலருக்கு தோல்பாவைக்கூத்தின் மதிப்பு தெரிவதில்லை. மேலும் அது பாதுகாக்கப்பட வேண்டிய கலை என்றும் அவர்களுக்கு தோன்றுவதில்லை,” என்கிறார்.
பல சவால்கள் இருந்தாலும் இக்கலையை தொடரும் பாலகிருஷ்ணா புலவர், ராமச்சந்திர புலவர், நாராயணன் நாயர் மற்றும் சதானந்த புலவர் ஆகியோரின் குரல்களை இப்படம் நமக்கு வெளிப்படுத்துகிறது
இக்கட்டுரை, மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளை (MMF) ஆதரவில் எழுதப்பட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்