அவர்களுக்கு எந்த வழியிலும் இல்லாததால், விஜய் கொரேடியும் அவரது நண்பர்களும் வீட்டிற்கு நடக்க முடிவு செய்தனர்.

அது ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதி. கோவிட் -19 தொற்றுநோயால் இந்தியா கடுமையான ஊரடங்கில் இருந்தது. தொலைதூர தேசத்தில் தங்களின் சிறிய குடிசைகளில் எவ்வளவு காலம் சிக்கித் தவிக்க முடியும் என்று அவர்கள் எண்ணினர்.

"இரண்டு முறை காவல்துறையினர் எங்கள் நண்பர்களை அவர்கள்  கிளம்ப முயன்றபோது நடுவழியில் நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்பினர்" என்று கொரேடி நினைவு கூர்ந்தார். "ஆனால் ஒருவர் பின் ஒருவராக அவர்கள் அனைவரும் எப்படியோ கிளம்பினர், வீட்டை அடைய நடந்தே சென்றனர்."

நண்பர்களுக்கிடையில், ஜி.பி.எஸ்ஸுடன் ஒரு ஸ்மார்ட்போன் கூட இல்லாத நிலையில், சாத்தியமான வழியை அவர்கள் கண்டறிந்தனர்:

தெலங்கானாவின் கோமரம் பீம் மாவட்டத்தில் உள்ள சிர்பூர்-ககாஸ்நகரில், அவர்கள் பருத்தி வித்துநீக்கல் மற்றும் அழுத்தும் ஆலையில் பணிபுரிந்தனர். அது ஹைதராபாத்-நாக்பூர் ரயில்வே பிரிவில் அமைந்துள்ளது.

அங்கிருந்து மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தின் அர்ஜுனி மோர்கான் தாலுகாவில் உள்ள அவர்களின் கிராமமான ஜாஷினகர் வரை, அவர்கள் ரயில்தடங்கள் வழியாக நடந்து சென்றால், அதன் தூரம் 700-800 கிலோமீட்டர் இருக்கும். அது கொடுமையானது, ஆம், ஆனால் முயற்சி செய்ய சிறந்த வழியாகும். அவர்கள் ரயில் பாதைகளில் நடந்து சென்றால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.

எனவே, நாடு முழுவதும் உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்களைப் போலவே, 39 வயதான, ஒரு ஏக்கர் கோண்ட் ஆதிவாசி விவசாயி  மற்றும் ஜாஷினகரைச் சேர்ந்த மற்றவர்கள் - காகஸ்நகரிலிருந்து அந்த கடினமான பயணத்தைத் தொடங்கினர், இதன்மூலம், வீடு திரும்ப 13 இரவுகளும் 14 நாட்களும் ஆகும்.

ரயில் அல்லது பேருந்து மூலம் அரை நாளில் மூடக்கூடிய தூரம் அது. ஆனால் அவர்கள் அதை நடந்தே செய்து கொண்டிருந்தனர்.

Vijay Koreti and his daughter, Vedanti, at their home in Zashinagar village, Gondia district
PHOTO • Sudarshan Sakharkar

கோண்டியா மாவட்டத்தின் ஜாஷினகர் கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டில் விஜய் கொரேடி மற்றும் அவரது மகள் வேதாந்தி

அவர்கள் தங்களை இரண்டு குழுக்களாகப் பிரித்துக் கொண்டனர். அவர்களில் பதினேழு பேர், 44 வயதான ஹம்ராஜ் போயார் தலைமையில், ஏப்ரல் 13 ஆம் தேதி, கொரேடி மற்றும் மற்ற இருவர் - தன்ராஜ் ஷாஹரே, 30, மற்றும் கெண்ட்லால் ஹோடிகர், 59 - விட ஒரு வாரத்திற்கு முன்னதாக, ஜாஷினகருக்கு புறப்பட்டனர்.

அந்த இரவுகளிலும் பகல்களிலும், கொரேடி தனது ஏழு வயது மகள் வேதாந்தியை மீண்டும் பார்க்க ஏங்கினார். அது அவரைத் தொடர்ந்து நடந்து செல்ல செய்தது.  அவள் அவருக்காகக் காத்திருப்பாள், அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, வலிக்கும் கால்களில் எரியும் வெயிலில் தொடர்ந்து நடந்துசெல்வார். "அம்ஹலே ஃபக்ட் காரி போச்ச்சே ஹோட் [நாங்கள் வீட்டை அடைய விரும்பினோம்]," ஒரு குறுகிய ஆனால் உறுதியான கொரேடி இப்போது புன்னகையுடன் கூறுகிறார். நவேகான் வனவிலங்கு சரணாலயத்தின் விளிம்பில் அமைந்துள்ள ஜாஷினகரில் ஒரு சூடான, புழுக்கமான நாளில், அவர்கள் செய்த நீண்ட பயணத்திற்கு பின்னர், பல மாதங்கள் கழித்து, அவரையும் அவரது நண்பர்கள் சிலரையும் நாங்கள் சந்திக்கிறோம். வெளியில் இருப்பவர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க, அந்த கிராமம் கட்டியிருந்த தடுப்புகளை நீக்கியிருந்தது. ஆனால் தொற்றுநோயைப் பற்றிய பதற்றமும் பயமும் இன்னும் காற்றில் அலைந்துக்கொண்டிருக்கின்றது.

***

கொரேடி 9 ஆம் வகுப்புக்குப் பிறகு உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியேறினார். மேலும், 2019க்கு முன்னர் தனது கிராமத்திலிருந்து ஒருபோதும் வேலைக்காக வெளியில் வந்ததில்லை. அவர் தனது ஒற்றை ஏக்கரில் உழுவு செய்து, அருகிலுள்ள பகுதிகளில் சிறு வன விளைபொருட்களை சேகரிப்பது, விவசாயத் தொழிலாளியாக இருமடங்கு உழைப்பது அல்லது அருகிலுள்ள சிறிய நகரங்களுக்கு சென்று அவசரகால வேலைகளை செய்வது என இருந்தார். அவர் தனது கிராமத்தின் பலரைப் போல ஒருபோதும் நீண்ட தூரத்திற்கு வேலைக்குச் சென்றத்தில்லை.

ஆனால் 2016 ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்புக்கு பின்னர், நிலைமை மோசமாகின, சில மாத விவசாய உழைப்பைத் தவிர, அவருக்கு தனது கிராமத்தில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வேறு எந்த வேலையும் கிடைக்கவில்லை. நிதி தொடர்பான விஷயங்கள் கடினமாகிவிட்டன.

40 வயதான லக்ஷ்மன் ஷாஹரே, அவரது குழந்தை பருவ நண்பர், நிலமற்ற தலித் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்வு செய்வதில் மூத்தவர், அவரை 2019-யில் ககாஸ்நகர் செல்ல தூண்டினார்

ஷஹாரே தனது 18 வயதிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் தனது கிராமத்திலிருந்து வேலைக்கு புலம்பெயர்ந்து செல்கிறார்  (காணொளியைப் பார்க்கவும்). தொற்றுப் பரவல் பரவியப்போது, அவர் ககாஸ்நகரில் ஒரு தொழிலதிபரின் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். அவர் மூன்று பருத்தி வித்துநீக்கல் மற்றும் அழுத்தும் பிரிவுகளில் சுமார் 500 தொழிலாளர்களை நிர்வகித்து வந்தார் . அவர்கள் பெரும்பாலும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலிருந்தும், அவரின் சொந்த கிராமத்திலிருந்தும், அதன் சுற்றியுள்ள பகுதியிலும் உள்ள ஆண் தொழிலாளர்களை புலம்யெயர்ந்து இருந்தனர்.

ஷாஹரே வீட்டிற்கு நடக்கவில்லை, ஆனால் ஜூன் தொடக்கத்தில் ஒரு வாகனத்தில் திரும்பினார். இருப்பினும், தனது ஆட்கள் நீண்ட நடைப்பயணத்தை மேற்கொள்வதை அவர் கண்டார் - அவர்களில், கொரேடியின் அணியில் இருந்த அவரது சொந்த தம்பி தன்ராஜூம் அடங்குவார். அவர் ஆலைகளில் ஊதியத்தை வழங்குவதற்கும், உணவுப்பொருள்களை கட்டுவதற்கும், "அவர்களுக்குத் தேவையானதை அவர்கள் பெற்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்யவும்" அவர் அங்குமிங்கு அலைந்துக்கொண்டிருந்தார்.

காணொளியைப் பார்க்கவும்: ‘இந்த ஆண்டு நாங்கள் திரும்பி செல்லவதாக இல்லை’

கொரேடி 2019 நவம்பரில் ககாஸ்நகருக்குப் புறப்பட்டு, சம்பா விதைப்பு நேரத்தில், அதாவது 2020 ஜூன் மாதம் திரும்புவதற்காக திட்டமிட்டிருந்தார். வித்துநீக்கல் தொழிற்சாலையில் அவர் பணியாற்றும் மணிநேரத்தைப் பொறுத்து, அவர் வாரத்திற்கு ரூ. 3,000 மற்றும் ரூ. 5,000 ஈட்டுவார். ஏப்ரல் 2020-யில் அவர் வீடு திரும்பியபோது, தொழிற்சாலையில் ஐந்து மாத வேலைகளில் இருந்து 40,000 ரூபாய் சேமித்திருந்தார்.

அது, ஒரு வருடத்தில் அவர் தனது கிராமத்தில் ஈட்டியதை விட அதிகமாக இருந்தது என்று அவர் கூறுகிறார்.

ககாஸ்நகரில் 21 நாள் ஊரடங்கு முடிவடையவும், மீண்டும் போக்குவரத்து சேவைகள்  தொடங்குவதற்காகவும் அவர்கள் பொறுமையாக காத்திருந்தனர். அதற்கு பதிலாக, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

ஆலைகளின் உரிமையாளர் அவர்களுக்கு உணவு பொருட்களையும் ஆதரவும் தந்தார், ஆனால் வேலை நிறுத்தப்பட்டது. "ஊரடங்கு காலத்தில், நாங்கள் வேறு நாட்டில் இருந்தோம்" என்று கொரேடி கூறுகிறார். "எங்கள் குடிசைகளில் குழப்பம் இருந்தது; எல்லோரும் எங்கள் நல்வாழ்வைப் பற்றி கவலைப்பட்டனர்; கோவிட் -19 பற்றிய பயமும் [நம்மைச் சுற்றி] மூழ்கியது. நாங்கள் காத்திருக்க வேண்டுமா அல்லது கிளம்ப வேண்டுமா என்று யோசித்தோம். என் மனைவி மிகவும் கவலையாக என்னை திரும்ப வரச்சொல்லி வலியுறுத்திக்கொண்டிருந்தார்”. பின்னர், ஒரு புயல் தொழிற்சாலை வளாகத்தில் இருந்த அவர்களின் குடிசைகளில் வீசியது. அதுதான் அவர்களை முடிவு எடுக்க செய்தது.

"நாங்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்கினோம் என்று நினைக்கிறேன்," என்று அவரே கட்டிய ஓர் அழகான மண் வீட்டில் இருந்தபடி கொரேடி கூறுகிறார்.

அவர்கள் வடக்கு-தெற்கு ரயில் பாதையின் நாக்பூர்-ஹைதராபாத் பிரிவில் வடக்கு நோக்கி நடந்தார்கள். மகாராஷ்டிராவைக் கடந்து, அவர்கள் சந்திரபூர் மாவட்டத்தை அடைந்தனர், பின்னர் கோண்டியாவில் உள்ள தங்கள் கிராமத்திற்கான புதிய அகல பாதையில் கிழக்கு நோக்கி திரும்பி, இடையில் அடர்ந்த காடுகளின் வழியாக நடந்து சென்றனர்.

வழியில், அவர்கள் வர்தாவையும் பல சிறிய ஆறுகளையும் கடந்தனர். அவர்கள் நடக்கத் தொடங்கிய இடத்திலிருந்து, அவர்களின் கிராமம் வெகு தொலைவில் இருப்பதாக கொரேடி கூறுகிறார்.

அவர்கள்  ஒரு சமயத்தில் ஒரு செயலைத்தான் செய்தனர்.

Vijay Koreti (in the red t-shirt), Laxman Shahare (in the green shirt) and others from Zashinagar who walked about 800 kilometres to get home from Telangana's Komaram Bheem district during the lockdown
PHOTO • Sudarshan Sakharkar

விஜய் கொரேடி (சிவப்பு சட்டை), லக்ஷ்மன் ஷாஹரே (பச்சை நிற சட்டையில்) மற்றும் ஜாஷினகரைச் சேர்ந்தவர்கள் தெலங்கானாவின் கோமரம் பீம் மாவட்டத்திலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் பயணம் செய்தனர்

ஏப்ரல் 28 அன்று முதல் குழுவாக 17 ஆண்கள் அடங்கிய குழு ஒன்று, இரண்டு குழுக்களாக கிராமத்தை அடைந்ததாக ஜாஷினகர் கிராம பஞ்சாயத்துடனான பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் 5 பேர், 12 பேரிடமிருந்து பிரிந்து, மூன்று நாட்களுக்குப் பிறகு, மே 1ம் தேதியன்று,அடைந்தனர். அவர்கள் அவர்களின் சோர்வு இருந்து மீள நடுவழியில் தங்கியிருந்தனர்.

கொரேடியும் அவரது இரண்டு நண்பர்களும் மே 3 ஆம் தேதி கிராமம் வந்தடைந்தனர், அவர்களின் கால்கள் வீங்கி, அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அவர்கள் ஜாஷினகரை அடைந்தபோது, அவர்களின் காலணிகள் கிழிந்துவிட்டன. அவர்களின் அலைபேசிகள் இறந்து நீண்ட காலமாகியிருந்தது; அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை. வழியில், அவர்கள் மனிதயினத்தின் நல்லத்தையும் கெட்டதையும் கண்டனர் என்று அவர்கள் கூறுகின்றனர் - அவர்கள் ரயில்வே அதிகாரிகளை, கிராமவாசிகளைச் சந்தித்தனர், அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் அவர்கள் வழங்கினர். ஆனால் கிராமங்களுக்குள் நுழைய அனுமதி மறுத்தவர்களும் இருந்தனர். பலரும், பெரும்பாலும், வெறுங்காலுடன் நடந்து சென்றன, அவர்களின் காலணிகள் எப்படியும் சேதமடைந்தன. அது கோடை காலம் என்பதால், அவர்கள் ஒவ்வொரு நாளும் வெப்பமான பொழுதில் ஓய்வெடுத்து, மாலையில் நடந்தனர்.

இப்போது, நினைத்து பார்த்தால்,  அவர்களுக்கு உண்மையில் வழங்கப்பட்ட நான்கு மணிநேரத்திற்கு பதிலாக ஊரடங்குப் பற்றி 48 மணிநேரத்திற்கு முன்னர் அறிவிப்பு கிடைத்திருந்தால், அவரும் அவரது நண்பர்களும் இந்த அளவுக்கு தாங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கொரேடி நினைக்கிறார்.

"டான் திவாசா டைம் பெல்டா அஸ்தா, தார் அம்ஹி சுப்சாப் கரி போஹோக்லோ அஸ்டோ [எங்களுக்கு இரண்டு நாட்கள் நேரம் கிடைத்திருந்தால், நாங்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வீடு திரும்பியிருப்போம்]," என்று அவர் கூறுகிறார்.

***

மார்ச் 24, 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவு தொடங்கி நான்கு மணிநேர அறிவிப்பில் நாட்டை ஊரடங்கில் வைத்தார். கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக செய்யப்பட்டிருந்தாலும், அதன் குறுகிய கால அறிவிப்பும் திடீர் மாற்றமும்,  பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதன் மூலம் தங்கள் கிராமங்களை அடைய முற்பட்டனர் - ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்றனர், நூற்றுக்கணக்கானவர்கள் ஆபத்தான பாதைகளில் பயணம் செய்தனர், தங்கள் சைக்கிள்களில் ஓட்டினர் அல்லது வெறுமனே தங்கள் வீடுகளை அடைவதற்கு லாரிகள் மற்றும் பிற வாகனங்களில் ஏறினார்கள் - கிட்டத்தட்ட அனைத்து பொது போக்குவரத்து வழிகளிலும் நிறுத்தப்பட்டால்தான் இந்த நிலை ஏற்பட்டது.

தொற்றுநோயைத் தடுக்க எஞ்சியவர்கள் வீட்டிலேயே இருந்தோம்.

Millions of migrants walked long distances to return home during the lockdown; some came by trucks or other vehicles as there was no public transport
PHOTO • Sudarshan Sakharkar
Millions of migrants walked long distances to return home during the lockdown; some came by trucks or other vehicles as there was no public transport
PHOTO • Sudarshan Sakharkar

மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோர் வீட்டிற்குச் செல்ல நீண்ட தூரம் நடந்தார்கள்; பொது போக்குவரத்து இல்லாததால் சிலர் லாரிகள் அல்லது பிற வாகனங்களில் சென்றனர்

சாலைகளில் உள்ள அந்த லட்சக்கணக்கானவர்களுக்கு இது ஒரு கெட்ட கனவாக இருந்தது. சமூக ஊடகங்களில் பல மோசமான கதைகள் வெளிவந்தன, சில நிருபர்கள் தங்கள் பணியில்  முதல்முறையாக புலம்பெயர்ந்தோரின் போராட்டங்களை விவரிப்பதற்காக வெளியில் சென்று சந்தித்தனர். ஒரு சில வர்ணனையாளர்கள் விரிவடையும் நெருக்கடியை தலைகீழ் இடம்பெயர்வு என்று விவரித்தனர். 1947யில் பிரிவினையின் போது, இந்தியா கண்ட இடம்பெயர்வுகளை விட இது பெரியது என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில், சுமார் 500 பேருக்கு கொரோனா வைரஸ் பரவல் இருந்தன. சில மாவட்டங்களும் முழு பிராந்தியங்களும் ஒருவர்கூட பாதிக்கப்பட்டாமலும் இருந்தன. கோவிட் -19 சோதனை கூட இன்னும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு முக்கியமான நேரத்தை இழந்து, ஒரு நெறிமுறையை உருவாக்கி, சோதனை கருவிகளை வாங்குவதற்கான டெண்டர்களையும் ஒப்பந்தங்களையும் வைப்பதில் திணறியது.

ஏப்ரல் மாத இறுதியில், கோவிட் -19 பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல ஆயிரம் உயர்ந்து, ஜூன் இறுதிக்குள் பத்து லட்சத்தைத் தொட்டன. சுகாதாரத்துறையில் விரிசல் ஏற்பட்டது. நடப்பு வாரத்தின் முடிவில், இந்தியாவில் 11 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 நோயாளிகள் மற்றும் 150,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியிருக்கும். பொருளாதாரம் சிக்கலில் உள்ளது - மிகவும் ஏழ்மை நிலையிலுள்ளவர்கள், குறிப்பாக நடைப்பயணம் மூலம் குடியேறியவர்களுக்கு பெரும் அடியாக இருந்தது. அவர்கள் தொற்றுநோய்க்கு முன்னரும், அது ஏற்பட்டப்போதும் மிகவும் பலவீனமான குழுக்களுக்கு ஒருவராக இருந்தனர்.

***

அவர் முதல் நாள் சுமார் மாலை 4 மணியளவில்,  ககாஸ்நகரை விட்டு கிளம்பியதை கொரேடி நினைவு கூர்ந்தார். அவர் இரவு நெடுந்நேரம் வரை நடந்துக்கொண்டிருந்தார். அவர்களின் சாமான்களில் ஒரு ஜோடி உடைகள், ஒரு சில கிலோவில் அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை, மசாலா, ஒரு சில பிஸ்கட் பாக்கெட்டுகள், சில பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை அடங்கும்.

நேரம், தேதிகள் அல்லது இருப்பிடங்கள் - அவருக்கு இப்போது அதன் விவரங்கள் நினைவில் இல்லை. அவர் நினைவில் வைத்திருப்பது சோர்வான நடைப்பயணம் மட்டுமே.

சாலையில், அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளவே இல்லை. சில நேரங்களில் கொரேடி முன்னால் நடந்தால், சில நேரங்களில் மற்ற இருவருக்கு பின்னால் நடப்பார். அவர்கள் சாலையில் தங்கள் உடமைகளையும் ரேஷன்களையும் தலையிலும் முதுகிலும் சுமந்தனர்.  அவர்கள் எங்கு கிணறோ அல்லது குழாய்க் கிணறோ பார்த்தாலும், அவர்கள் தங்களை போதுமான அளவு நீர்சத்துடன வைத்திருக்க தங்கள் தண்ணீர் பாட்டில்களை நிரப்பினர்.

அவர்களின் முதல் இளைப்பாறியது, ரயில்தடங்கள் வழி ஒரு ரயில்வே தங்குமிடத்தில். முதல் நாள் மாலை, அவர்கள் சுமார் ஐந்து மணி நேரம் நடந்து, உணவு சமைத்து, புல்வெளி நிலத்தில் தூங்கிவிட்டனர்.

அடுத்த நாள் அதிகாலையில், அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினர், சூரியன் தீப்பிழம்புகளை வெளியேற்றும் வரை நடந்து சென்றனர். வயல்களில், ஒரு மரத்தின் கீழ், ரயில்தடங்கள் வழியாக, அவர்கள் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மாலையில் மீண்டும் நடந்து, சுயமாக சமைத்த பருப்பு-அரிசியை சாப்பிட்டனர், சில மணிநேரம் தூங்கினர். மீண்டும் அதிகாலையில் தங்கள் பயணத்தைத் தொடங்கினர், சூரியன் மீண்டும் தங்கள் தலைக்கு மேல் நேரடியாக வரும் வரை நகர்ந்தனர். மூன்றாவது இரவு, அவர்கள் மகாராஷ்டிரா எல்லைக்கு அருகிலுள்ள மாகோடி என்ற இடத்தை அடைந்தனர்.

Left: Laxman Shahare has been migrating for work for more than 20 years. Right: Vijay Koreti with Humraj Bhoyar (centre) and Amar Netam (right) in Zashinagar
PHOTO • Sudarshan Sakharkar
Left: Laxman Shahare has been migrating for work for more than 20 years. Right: Vijay Koreti with Humraj Bhoyar (centre) and Amar Netam (right) in Zashinagar
PHOTO • Sudarshan Sakharkar

இடது: லக்ஷ்மன் ஷாஹரே 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைக்காக புலம்பெயர்ந்து வருகிறார். வலது: ஜாஷினகரில் ஹம்ராஜ் போயர் (நடுவில்) மற்றும் அமர் நேதம் (வலது) உடன் விஜய் கொரேட்டி

2-3 நாட்களுக்குப் பிறகு, அவர்களின் மனம் வெறுமையானது; அவர்களால் சிந்திக்க முடியவில்லை.

"நாங்கள் ரயில் தடங்கள் வழியாக, கிராமங்கள், குக்கிராமங்கள், ரயில் நிலையங்கள், ஆறுகள் மற்றும் காடுகளை கடந்து சென்றோம்" என்று 17 பேரின் முதல் குழுவை ஜாஷினகருக்கு வழிநடத்திய குறு விவசாயி ஹம்ராஜ் போயர் கூறுகிறார்.

இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு நடக்க முடியும், ஆனால் கடுமையான கோடை அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

சிறிய மைல்கற்கள் பெரிய சாதனைகள் போன்றவை. மராத்தியில் விளம்பரப்பலகைகளைக் கண்டபோது அவர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தனர் - அவர்கள் மகாராஷ்டிராவில் இருந்தார்கள்!

"இப்போது எந்த பிரச்சனையும் இருக்காது என்று நாங்கள் நினைத்தோம்," என்று ஹம்ராஜ் நினைவு கூர்ந்தார். கொரேடியும் அவரது இரண்டு நண்பர்களும் சில நாட்களுக்கு முன்னர் ஹம்ராஜின் குழு நடந்து சென்ற அதே பாதையில் பயணித்து, அதே இடங்களில் ஒய்வு எடுத்தனர்.

"நாங்கள் மகாராஷ்டிரா எல்லையில் விஹிர்கான் என்ற இடத்தில் தங்கினோம், மறுநாள் மணிக்கரில் - சந்திரபூர் மாவட்டத்தில் பல சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்ற இடத்தில் தங்கினோம்" என்று கொரேடி கூறுகிறார்.

அவர்கள் நடக்கும் ஒவ்வொரு இரவுக்கும் நிலாவும் நட்சத்திரங்களும் அவர்களுக்குத் துணையாக இருந்தன.

சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார்பூர் ரயில் நிலையத்தில், அவர்கள் குளித்தனர், நாள் முழுவதும் தூங்கினர், நல்ல உணவை சாப்பிட்டனர். ரயில்வே அதிகாரிகளும் உள்ளூர்வாசிகளும் புலம்பெயர்ந்தோருக்கு உணவு ஏற்பாடு செய்திருந்தனர், அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

"ஆஸ் வட்டாட் ஹோட், பூர்ரா தேஷ் சலுன் ரஹிலா [இது முழு நாடும் நடந்து கொண்டிருந்தது போல் இருந்தது"] என்று கொரேடி கூறுகிறார். "நாங்கள் தனியாக இல்லை." ஆனால்  சோர்வடைந்த, சோர்வுற்ற, உதவியற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. "வேதாந்தியும் என் மனைவி ஷம்கலாவும் வீட்டில் பாதுகாப்பாக இருந்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்," என்று எங்களிடம் கூறும்போது அவர் அவர்களைப் பார்த்துக் கூறுகிறார்.

அடுத்த நிறுத்தம் சந்திரபூர் நகரம். அங்கு, அவர்கள் ஒரு ரயில்வே பாலத்தின் கீழ் ஓய்வெடுத்து, பின்னர் கோண்டியாவுக்குச் செல்லும் ரயில்தடங்களுடன் நடந்து சென்றனர். அவர்கள் புலி நடமாடும் பகுதிக்கு நடுவில் உள்ள மொஃபுசில் நிலையமான கெல்சாரையும், பின்னர் சந்திரபூர் மாவட்டத்தில் முல் பகுதியையும் கடந்து வந்தனர். “கெல்சருக்கும் முலுக்கும் இடையில் தான் ஒரு சிறுத்தையைப் பார்த்தோம். நள்ளிரவில் குடிக்க வந்த ஒரு நீர்நிலையைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருந்தோம், ”என்கிறார் கொரேடி. அவர் பேசும்போது அவருக்குப் பின்னால் இருந்து ஷம்கலா உன்னிப்பாகக் கவனிக்கிறார். தன் கணவனை உயிரோடு வீட்டிற்கு அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் வார்த்தைகளை முணுமுணுக்கிறாள். "சிறுத்தை புல்வெளிகளுக்குள் ஓடியது," என்று அவர் கூறுகிறார். அவர்கள் உயிருக்கு பயந்து வேகமாக நடந்தார்கள்.

கெல்சருக்குப் பிறகு, அவர்கள் ரயில்தடங்களை விட்டுவிட்டு சாலையை நடக்க தொடங்கினார்கள்

Vijay with Shamkala and Vedanti. Shamkala says she was tense until her husband reached home
PHOTO • Sudarshan Sakharkar

ஷம்கலா மற்றும் வேதாந்தியுடன் விஜய். கணவர் வீட்டிற்கு வரும் வரை பதற்றமாக இருந்ததாக ஷம்கலா கூறுகிறார்

சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா நகரமான பிரம்ஹாபுரியை அடைந்தபோது மூன்று பேரும் - குறிப்பாக வயதானவர், ஹோடிகர், சோர்வடைந்தனர். அங்கிருந்து அவர்கள் கட்சிரோலியில் உள்ள வாட்சாவுக்குச் சென்று, பின்னர் ஜாஷினகருக்கு ஒரு மாற்றுப்பாதையில் நடக்கத் தொடங்கினர். செப்டம்பரில் நாங்கள் அவர்களைப் சந்திக்கச் சென்றப்போது ஹோடிகர் கிராமத்தில் இல்லை. அதைத் தொடர்ந்து, நாங்கள் அந்த குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்.

"நாங்கள் முலை அடைந்த பிறகு, உள்ளூர்வாசிகள் எங்களைப் போன்றவர்களுக்காக வைத்திருந்த தங்குமிடம் முகாம்களில் நாங்கள் நல்ல உணவை சாப்பிட்டோம்", என்று கொரேடி கூறுகிறார். 14 ஆம் நாள், மே 3ம் தேதியன்று, அவர்கள் இறுதியாக ஜாஷினகரை அடைந்து கிராமவாசிகள் வரவேற்றபோது, அது ஒரு பெரிய சாதனை என்று உணர்ந்தேன்.”,

அவர்களின் வீங்கிய கால்கள் குணமடைய பல நாட்கள் ஆனது.

"ஜாவா பரியந்த் ஹெ லோக் கரி போஹோக்லே நவ்தே, அம்ஹலே லாகிட் டென்ஷன் ஹாட் (இவர்கள் வீடு திரும்பும் வரை நாங்கள் மிகுந்த பதற்றத்தில் இருந்தோம்," என்று ஷம்கலா கூறுகிறார். "நாங்கள் பெண்கள் ஒவ்வொரு முறையும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வோம், மேலும் அவர்களின் நிலையைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று பார்க்க அவர்களின் நண்பர்களை அழைக்க முயற்சிப்போம்."

"வேதாந்தியைப் பார்த்தபோது நான் கண்கலங்கிவிட்டேன்" என்று கொரேடி நினைவு கூர்ந்தார். "நான் அவளையும் என் மனைவியையும் தூரத்தில் இருந்து பார்த்தேன், வீட்டிற்கு செல்லும்படி கூறினேன்." அவர் தொடர்பைத் தவிர்க்க வேண்டியிருந்தது. திரும்பி வருபவர்களை கட்டாயமாக 14 நாள் தனிமையில் தங்க வைக்க இரண்டு பள்ளிகள், ஒரு பெரிய மத்திய மைதானம் மற்றும் அனைத்து கிராம பஞ்சாயத்து கட்டிடங்களும் திறக்கப்பட்டுள்ளன. இது சில சமயங்களில், அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப  7-10 நாட்களாகக் குறைக்கப்பட்டது. இது பெரும்பாலும் திரும்பி வந்தவர்களில் சிலர் தங்கள் தனிமையான பயணங்களில் மற்றவர்களுடன் மிகக் குறைந்த தொடர்பைக் கொண்டிருந்திருந்ததால் இருக்கலாம்.

அந்த இரவு, அவர் ஒரு வாரம் தனிமையில் கழித்த கிராமப் பள்ளியில், பல வாரங்களில் முதல் முறையாக கொரேடி நன்றாகவும் அமைதியாகவும் தூங்கினார். அது ஒரு வீடுதிரும்புதல்.

***

ஜாஷினகர், முதலில் தம்போரா என்று அழைக்கப்பட்டது.  இன்று சுமார் 2,200 குடியிருப்பாளர்களைக் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,928) கொண்ட ஒரு பெரிய கிராமம். 1970 ஆம் ஆண்டில் இட்டியாடோ நீர்ப்பாசனத் திட்டத்தால் அசல் குடியேற்றம் விழுங்கப்பட்ட பின்னர், இது இந்த புதிய இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டது. ஐந்து தசாப்தங்களுக்குப் பின்னர், புதிய தலைமுறைகள் நகர்ந்திருக்கலாம், ஆனால் பழைய மக்கள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் போன்ற சிக்கல்களுடன் தொடர்ந்து போராடுகின்றனர்.

The migrants walked through fields, forest pathways and along railway tracks
PHOTO • Sudarshan Sakharkar

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வயல்கள், காடுகள் மற்றும் ரயில் தடங்கள் வழியாக நடந்து சென்றனர்

கோண்டியா மாவட்டத்தின் அர்ஜுனி மோர்கான் தாலுகாவில் உள்ள நவேகான் சரணாலயத்தைச் சுற்றியுள்ள காடுகளுக்கு நடுவே உள்ள ஜாஷினகர் கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறையில் தவிக்கிறது. அதன் விவசாயிகள் லிப்ட் பாசன திட்டத்தை முடிக்க காத்திருக்கின்றனர். இந்த கிராமம் நெல், பருப்பு வகைகள் மற்றும் சில தானியங்களை வளர்க்கிறது.

ஜாஷினகரில் 250 முதல் 300 வரை ஆண்களும் பெண்களும் வேலை தேடி தொலைதூர இடங்களுக்கு குடிபெயர்கின்றனர். ஏப்ரல் மாதத்தில் முதல் கிராமத்தின் கோவிட் மேலாண்மைக் குழுவால் சேகரிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் கிராமம் திரும்பியவர்களின் பட்டியலில், அவர்கள் வழக்கமாகச் செல்லும் 24 வெவ்வேறு இடங்களை பதிவு செய்கிறார்கள். அது  - கோவாவின் இடங்களிலிருந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இருந்து கோலாப்பூர் மற்றும் அதற்கு அப்பால் - ஏழு மாநிலங்களில் பரவியுள்ளது. மக்கள் வயல்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், சாலைகள் ஆகியவற்றில் வேலைக்குச் சென்று வீட்டுக்கு பணம் அனுப்புகின்றனர்.

கிழக்கு விதர்பாவின் நெல் வளரும் மாவட்டங்களான பந்தாரா, சந்திரபூர், கட்சிரோலி மற்றும் கோண்டியா ஆகியவை இடம்பெயர்வு மையங்களாக உள்ளன. ஆண்களும் பெண்களும் கேரளாவின் நெல் வயல்களில் அல்லது மேற்கு மகாராஷ்டிராவின் கரும்பு அல்லது பருத்தி ஆலைகளில் வேலை செய்ய நீண்ட தூரம் குடிபெயர்கின்றனர். அவர்களில் சிலர் கடந்த 20 ஆண்டுகளில் உருவான தொழிலாளர் ஒப்பந்தக்காரர்கள் மூலம் அந்தமான் கூட செல்கின்றன.

பந்தாரா மற்றும் கோண்டியா போன்ற மாவட்டங்களில் இருந்து குடியேறுவதற்கு காரணிகளாக ஒற்றை பயிர் வயல் முறை மற்றும் தொழில்துறைகளின் பற்றாக்குறை ஆகியவை அடங்கும். சம்பா பருவம் முடிந்ததும், பெரும்பான்மையில் இருக்கும் நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகள், ஆண்டின் எஞ்சிய பாதியில் அவர்களைத் தக்க வைத்துக் கொள்ள உள்ளூரில் சிறிய வேலைகளைப் பார்க்கின்றனர்.

"இந்த பகுதியில் மக்கள் அதிக எண்ணிக்கையில் குடியேறுகிறார்கள்" என்று 44 வயதான பீம்சென் டோங்கர்வார் கூறுகிறார், அவர் அண்டை கிராமமான டேபே-பாவோனியில் ஒரு பெரிய நில உரிமையாளரும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணரும் ஆவார். "[தொற்றுநோய்க்கு பல ஆண்டுகளாக முன்னர்] இடம்பெயர்வு அதிகரித்து வந்தது." குடியேறியவர்களில் பெரும்பாலோர் நிலமற்ற, சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருந்தனர், வேலைவாய்ப்பு அழுத்தங்களால் தள்ளப்பட்டனர் - மேலும், வெளியில் நல்ல வருமானம் கிடைப்பதால் ஈர்க்கப்படுக்கின்றனர்.

குறிப்பிடத்தக்க வகையில் -  அதிர்ஷ்டவசமாக - தொலைதூரத்திலிருந்தும், வீடு திரும்பியவர்களிடமிருந்தும் கூட, ஜாஷினகரில் இதுவரை ஒரு கோவிட் -19 நோயாளிக்கூட இல்லாமல், இந்த தொற்றுக்காலத்தில் புதிய ஆண்டுக்குள் நுழைந்துள்ளது.

"நாங்கள் ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து ஒரு நாள் கூட  போராடாமல் கடந்து செல்லவில்லை" என்று கிராம கோவிட் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் விக்கி அரோரா கூறுகிறார். இவர் முன்னாள் சர்பஞ்சின் மகனும், சுறுசுறுப்பான சமூக மற்றும் அரசியல் பணியாளர். ஊரடங்கு காலத்தில் கட்டாயமாக தனிமையில் நேரத்தை செலவழித்த திரும்பி வந்த புலம்பெயர்ந்தோரைக் கவனிப்பதற்காக கிராம மக்கள் பணத்தை திரட்டியதாக அவர் எங்களுக்குத் தெரிவிக்கிறார்.

"எந்தவொரு வெளியாட்களும் அனுமதியின்றி நுழைவதை நாங்கள் உறுதி தடுத்தோம். புலம்பெயர்ந்தோரின் உணவு மற்றும் பிற தேவைகளை இந்த கிராமம் கவனித்துக்கொண்டது; அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவர்களின் சுகாதார சோதனை மற்றும் கோவிட் சோதனைகள் உட்பட. ”அரோரா எங்களிடம் கூறுகிறார். "ஒரு ரூபாய் கூட அரசாங்கத்திடமிருந்து வரவில்லை."

அவர்கள் திரட்டிய நிதியில் இருந்து, கிராமவாசிகள் தனிமை மையங்களில் தங்கியிருந்தவர்களுக்கு சானிடிசர்கள், சோப்புகள், டேபிள் மின்விசிறிகள், படுக்கை மற்றும் பிற பொருட்களை வாங்கினர்.

Vicky Arora (left) says Zashinagar's residents collected money during the lockdown to look after the migrants spending time in isolation upon their return home (right)
PHOTO • Sudarshan Sakharkar
Vicky Arora (left) says Zashinagar's residents collected money during the lockdown to look after the migrants spending time in isolation upon their return home (right)
PHOTO • Sudarshan Sakharkar

ஜாஷினகரில் வசிப்பவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் தனிமையில் (வலது) இருக்கும் புலம்பெயர்ந்தோரைப் பார்க்கக்கொள்ள பணம் சேகரித்தனர் என்று விக்கி அரோரா (இடது) கூறுகிறார்

நாங்கள் செப்டம்பரில் ஜாஷினகருக்கு பயணத்தின் போது, கோவாவிலிருந்து வீடு திரும்பிய நான்கு இளம் புலம்பெயர்ந்தோர்களை, கிராம பஞ்சாயத்து நூலகத்தை மேற்பார்வையிடும் திறந்தவெளி திரையரங்கில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

"நாங்கள் மூன்று நாட்களுக்கு முன்பு திரும்பி வந்தோம்," அவர்களில் ஒருவர் பதிலளித்தார். "நாங்கள் எங்கள் சோதனைகளுக்காக காத்திருக்கிறோம்."

யார் சோதனைகளை நடத்துவார்கள் என்று கேட்டோம்.

"கோண்டியா சுகாதாரத் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது," என்று அரோரா எங்களுக்குத் தெரிவித்தார். "ஒன்று கிராமவாசிகள் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது கோவிட் -19 சோதனைகளைச் செய்ய சுகாதாரத் துறை ஒரு குழுவை அனுப்பும், அதன் பிறகு அவர்கள் முடிவுகளைப் பொறுத்து வீட்டிற்குச் செல்லலாம்." நான்கு பேரும் மார்காவோவில் ஒரு ஸ்டீல் ரோலிங் மில்லில் வேலை செய்கின்றனர், ஒரு வருடம் கழித்து விடுப்பில் வீடு திரும்பியுள்ளனர். ஊரடங்கின் போது, அவர்கள் தங்கள் தொழிற்சாலை வளாகத்தில் வசித்து வந்தனர்; வேலை செய்தனர்.

***

தற்போது, ஜாஷினகர் கிராமம் வேலையின்மையால் போராடுகிறது. பஞ்சாயத்து ஒவ்வொரு நாளும் கூடுகிறது. கொரேடி மற்றும் ககாஸ்நகரில் இருந்து குடியேறிய பிறர் கடந்த பல மாதங்களுக்கு முன்பு ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே கிராமத்திலிருந்து கிளம்பினர் என்று லக்ஷ்மன் ஷாஹரே கூறுகிறார்.

"நாங்கள் வேலையை உருவாக்க முயற்சிக்கிறோம்," என்று 51 வயதான சித்தார்த் காட்ஸே கூறுகிறார், அவர் ஜாஷினகரின் கிராம சேவக் (கிராம செயலாளர்). "அதிர்ஷ்டவசமாக, இந்த ஆண்டு, எங்களுக்கு நல்ல மழை பெய்தது, விவசாயிகள் ஒரு நல்ல அறுவடையை அறுவடை செய்தனர். [பலருக்கு, பூச்சி தாக்குதல் காரணமாக நல்ல சம்பா விளைச்சலை அழித்திருந்தாலும்]. ஆனால் கிராம பஞ்சாயத்து வேலைகளை உருவாக்க வேண்டும், எனவே குடியேறியவர்களில் சிலர் தங்கியிருந்தால் அவர்களை வேலையில் அமர்த்த முடியும். ”

ஷாஹரே மற்றும் கொரேடி உட்பட ஒரு சில கிராமவாசிகள் பிற, கூட்டு தேர்வுகளை ஆராய்ந்தனர். குறுவை விதைப்பதற்காக மொத்தம் 10 ஏக்கர் இருக்கும் தங்களின் நிலத்தை நீர்நிலையை அமைத்திருந்தனர். இது உதவியது என்றாலும், தேவைப்படுவதை விட கிராமத்தில் இன்னும் குறைவான வேலைகள் உள்ளன - மேலும் 2021 குளிர்காலத்திற்கு முன்னர் பலர் வெளியேறுவார்கள் என்பதும் சாத்தியமில்லாதது.

"இந்த ஆண்டு மிகக்குறைந்த வருமானத்தில் வாழ்ந்தாலும் நான் வெளியூர் செல்லமாட்டேன்", என்று கொரேடி கூறுகிறார். தொற்றுநோய் இன்னும் அதிகமாகி வருவதால், இது ஜாஷினகரின் குடியேறியவர்கள் அனைவராலும் உணரும் விஷயமாக உள்ளது. இல்லையெனில், அவர்களில் பெரும்பாலோர் 2020 அக்டோபருக்குள் வெளியில் வேலைக்கு கிளம்ப ஆரம்பித்திருப்பார்கள்.

"இந்த ஆண்டும் யாரும் வெளியில் செல்லவில்லை," ஷாஹரே தனது நாற்காலியில் சாய்ந்து உறுதியாக அறிவிக்கிறார். "நாங்கள் எங்கள் சேமிப்பு மற்றும் உள்ளூர் வயல் வேலைகளில் இருந்து வாழ்வோம்." கடந்த கோடையில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் வலிக்கிறது. "ஆலை உரிமையாளர் மீண்டும் தொழிலாளர்களை அழைத்து வரச் சொல்லி என்னை அழைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நாங்கள் செல்லவில்லை."

தமிழில்: ஷோபனா ரூபகுமார்

Jaideep Hardikar

جے دیپ ہرڈیکر ناگپور میں مقیم صحافی اور قلم کار، اور پاری کے کور ٹیم ممبر ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز جے دیپ ہرڈیکر
Translator : Shobana Rupakumar

Shobana Rupakumar is a Chennai based journalist and she has worked on women and environmental issues.

کے ذریعہ دیگر اسٹوریز Shobana Rupakumar