வெள்ளத்தால் முதன்முறையாக இடம் மாற நேர்ந்ததை மொஹேஸ்வர் சமுவா தெளிவாக நினைவுகூருகிறார். அப்போது அவருக்கு ஐந்து வயதுதான். “எங்களின் வீடுகளில் ஒன்றை வெள்ளம் முதலில் அடித்து சென்றது. நாங்கள் படகுகளில் ஏறி, வசிப்பிடம் தேடி தப்பினோம். அருகாமை தீவுக்கு இடம்பெயர்ந்தோம்,” என்கிறார் தற்போது அறுபது வயதுகளில் இருக்கும் சமுவா.
அசாமின் ஆற்றுத்தீவான ஜுலியின் 1.6 லட்சம் பேர் சமுவாவை போல தொடர் வெள்ளத்தாலும் சுருங்கி வரும் நிலப்பரப்பாலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 1956ம் ஆண்டில் இருந்த 1,245 சதுர கிலோமீட்டரிலிருந்து 2017ம் ஆண்டில் 703 சதுர கிலோமீட்டராக தீவின் நிலப்பரப்பு சுருங்கியிருப்பதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய அறிக்கை குறிப்பிடுகிறது.
“இது உண்மையான சல்மோரா இல்லை,” என்னும் சமுவா, தொடர்ந்து “சல்மோராவை 43 வருடங்களுக்கு முன் பிரம்மபுத்திரா ஆறு எடுத்துக் கொண்டது,” என்கிறார். பிறகு பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறு உருவாக்கிய புதிய சல்மோராவில்தான் சமுவா, தன் மனைவி, மகள் மற்றும் மகனின் குடும்பத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.
அவரின் புதிய வீடு, சிமெண்டாலும் மண்ணாலும் கட்டப்பட்டிருக்கிறது. வெளியே கட்டப்பட்டிருக்கும் கழிவறைக்கு செல்ல ஏணியில்தான் செல்ல வேண்டும். “ஒவ்வொரு வருடமும் நாங்கள் பிரம்மபுத்திரைக்கு நிலத்தை இழந்து வருகிறோம்,” என்கிறார் அவர்.
தொடர் வெள்ளங்கள் கிராமத்தின் விவசாயத்தை பாதித்திருக்கிறது. “எங்களால் அரிசி, உளுந்து, கத்திரிக்காய், முட்டைக்கோஸ் போன்றவற்றை விளைவிக்க முடிவதில்லை. யாரிடமும் நிலம் கிடையாது,” என்கிறார் சல்மோராவின் ஊர்த் தலைவரான ஜிஸ்வார். அங்கு வசிக்கும் பலரும் படகு செய்தல், குயவு, மீன் பிடித்தல் போன்ற பிற வேலைகளை செய்து வருகின்றனர்.
“சல்மோராவின் படகுகளுக்கு தீவில் தேவை இருக்கிறது,” என்கிறார் படகுகளை செய்யும் சமுவா. சிறு தீவுகளை சேர்ந்த மக்களுக்கு ஆற்றை கடக்க படகுகள் தேவைப்படுவதுதான் அதற்குக் காரணம். பள்ளிகளுக்கு குழந்தைகளை கொண்டு செல்லவும் மீன் பிடிக்கவும் வெள்ள காலத்திலும் படகுகள் பயன்படுகின்றன.
படகு செய்ய சுயமாக சமுவா கற்றுக் கொண்டார். மூவர் கொண்ட குழுக்களாக அவர்கள் வேலை பார்க்கின்றனர். ஹசல் குரி என்ற விலையுயர்ந்த, எளிதில் கிடைக்காத மரக்கட்டைகளால் படகுகள் செய்யப்படுகின்றன. “நீடித்த உழைப்பு, வலிமையும்தான் காரணம்,” என்கிறார் சமுவா. சல்மோரா மற்றும் அருகாமை கிராமங்களிலிருந்து அவர்கள் அந்த கட்டைகளை பெறுகின்றனர்.
ஒரு பெரிய படகு செய்ய ஒரு வாரம் பிடிக்கும். சிறியதை செய்ய ஐந்து நாட்கள் ஆகும். “பலர் வேலை பார்த்து, மாதத்துக்கு 5-8 படகுகளை அவர்கள் உருவாக்குகின்றனர். பெரிய படகின் (10-12 பேரையும் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் ஏற்ற வல்லது) விலை ரூ.70,000. சிறிய படகின் விலை ரூ.50,000. இந்த வருமானம் இரண்டு அல்லது மூன்றூ பேரால் பிரித்துக் கொள்ளப்படுகிறது.
படகு செய்வதில் வரும் வருமானம் நிலையற்றது. மழைக்காலம் நெருங்குகையில்தான் (மற்றும் வெள்ளம் நேரும் பருவம்) படகுகளுக்கான தேவை எழும். எனவே பல மாதங்களாக சமுவா வருமானமின்றி இருக்கிறார். மாத வருமானம் எதிர்பார்க்க முடியாது.
தற்போது ஐம்பது வயதுகளில் இருக்கும் ருமி ஹசாரிகா திறமையாக துடுப்பு போடுபவர். வெள்ளம் வருகையில் ஆற்றில் படகில் சென்று விறகு சேகரித்து வந்து உள்ளூர் சந்தையில் விற்பார். ஒரு குவிண்டாலுக்கு சில நூறு ரூபாய்கள் அவருக்குக் கிடைக்கும். கரிய மண்ணை பயன்படுத்தி அவர் செய்யும் சிறு பானைகளை கராமுர் மற்றும் கம்லாபாரியில் விற்கிறார். அவை இரண்டும் தீவின் நடுவே அமைந்திருக்கும் பகுதிகள். ஒரு பானையின் விலை ரூ.15. ஒரு மண் விளக்கின் விலை ரூ.5
“எங்களின் நிலத்துடன் சேர்ந்து, பாரம்பரிய
முறைகளையும் நாங்கள் இழந்து கொண்டிருக்கிறோம்,” என்கிறார் அவர். “எங்களின் கரிசல் மண்ணும்
தற்போது பிரம்மபுத்திராவால் அடித்து செல்லப்படுகிறது.”
இக்கட்டுரை எழுத உதவிய கிருஷ்ணா பெகுவுக்கு செய்தியாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்
தமிழில் : ராஜசங்கீதன்