“ஒரு சிறிய பிழை நேர்ந்தாலும், கோய்தாவிற்கு பதில் உங்களுக்கு சத்தூர் தான் கிடைக்கும்!” இறைச்சி வெட்டும் கத்திக்கும், அரிவாளுக்குமான வித்தியாசத்தை அறிந்தவர் ராஜேஷ் சாபேகர். ஒரு தேர்ந்த லோஹராக (கொல்லர்), அவர் மஹாராஷ்டிராவின் அக்தன் கிராமத்தில் உள்ள தனது பட்டறையில், இதுவரை 10,000-க்கும் மேலான கருவிகளை வடிவமைத்துள்ளார்.
52 வயதான இவர், இந்த வேலையை தனது தந்தை தத்தாத்ரேய சாபேகரிடம் இருந்து கற்றுக் கொண்டார். பாஞ்சால் கொல்லர் வம்சா வழியில் வரும் இவர்கள், மஹாராஷ்டிர விவசாயிகளின் நம்பிக்கை பெற்றவர்கள் ஆவர். “‘அக்தன் சே ஹி ஹத்யார் லேகே ஆவோ’ [அக்தனிலிருந்து மட்டுமே கருவிகளைக் கொண்டு வா] என மக்கள் கூறுவர்,” என நெகிழ்கிறார் இந்த வசாய் தாலூகாவின் ஏழாம் தலைமுறை கொல்லர். இவரால் 25 வகையான விதிவிதமான விவசாயக் கருவிகளை உருவாக்க முடியும்.
சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில், நாவி மும்பையில் இருக்கும் உரனிலிருந்தும், தஸ்னி கருவிக்காக மொத்தமாக ஆர்டர் கொடுக்க வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இந்த கருவி படகுகள் செய்வதற்கு மிக முக்கியமானது ஆகும். “கிர்ஹைக்ஸ் [வாடிக்கையளர்கள்] நான்கு நாட்கள் ஆனாலும், எங்கள் வீட்டில் தங்கி இருந்து, ஆரம்பத்தில் இருந்து நாங்கள் அந்த கருவியை செய்வதை பார்த்து வாங்கி செல்வர்,” என நினைவுகூருகிறார்.
அக்தன் கிரமத்தின் குறுகிய சாலைகள், சாதி அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எல்லைகளாகின்றன. இங்கு சோனர் (பொற்கொல்லர்), லோஹர்(கொல்லர்), சுத்தார்(ஆச்சாரி), சம்பார்(செருப்புத் தொழிலாளி), கும்பார்(குயவர்) வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும், கைவினைஞர்களின் கடவுளான, விஷ்வகர்மாவின் பக்தர்களாக தங்களை கருதுகின்றனர். 2008 முதல், நாடோடி பழங்குடியினரின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பாஞ்சால் லோஹர்கள், அதற்கு முன் வரை OBC (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) ஆக வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.
19 வயதில், தனது குடும்பத் தொழிலான கொல்லர் தொழிலுக்கு செல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்று ராஜேஷ் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல், அவர் பணிபுரிந்த மின் சாதனக் கடையில் மாதம் ரூ.1,200 சம்பளம் கிடைத்தாகவும் கூறுகிறார் ராஜேஷ். தங்களது பெரிய கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவால், வேலையை இழந்த தந்தைக்கு பின், குடும்பத்தின் மூத்த மகனான தான் இந்த வேலையை தொடரும் கட்டாயத்திற்கு ஆளானதாக கூறுகிறார்.
முப்பது வருடங்களுக்கு பிறகு, இவர் தற்போது ஒரு தேர்ந்த கொல்லராக மாறியிருக்கிறார். காலை 7 மணிக்கு தொடங்கும் இவரது வேலை, தொடர்ந்து 12 மணி நேரம் வரை செல்கிறது. இடையிடையில் தேநீர் குடிக்க மட்டும் இடைவேளை எடுத்துக் கொள்கிறார். ஒரு நாள் வேலையில், அவரால் மூன்று கருவிகள் வரை உருவாக்க முடியும். வசாயின் புயிகாவ் மற்றும் மும்பையின் கோராயி அருகில் வசிக்கும் பேனாபட்டி ஆதிவாசிகளும் இவரது வாடிக்கையாளர்கள் ஆவர்.
கோய்தா (சிறிய அரிவாள்), மோர்லி (காய்கறி மற்றும் இறைச்சி வெட்டும் கருவி), அவுத் (கலப்பை), தாஸ்னி (அட்ஸே), காத்தி (மீன் வெட்டும் கருவி), சிம்டே (டாங்ஸ்) மற்றும் சத்தூர் (அறுவெட்டு/இறைச்சி வெட்டும் கத்தி) ஆகியவை அவரிடம் அதிகம் விற்பனையாகும் சிறந்த கருவிகள் ஆகும்.
தேவைக்கேற்ப தகவமைத்து கருவிகளை ராஜேஷ் உருவாக்குகிறார். “ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்துவமான தேவைகள் இருப்பதால் அதன் வடிவமைப்பும் மாறுபடுகிறது. கள் வெட்டுபவர்களுக்கு மரத்தில் ஏறும் போது, கோய்தாக்களை [சிறிய அரிவாள்] உறுதியாகப் பிடிக்க கூடுதல் பிடிமானம் தேவைப்படும்,” என்கிறார். வாழை மற்றும் தென்னை விவசாயிகள், ஆண்டு முழுவதும் தங்கள் கருவிகளை சாணைப் பிடிக்கவும், பழுதுபார்க்கவும் கொடுத்தனுப்புகிறார்கள்.
"இந்த வேலைக்கு, எங்களுக்கு பரிசுகளும் கிடைக்கிறது," என்று கூறி, உள்ளூர் விவசாயி ஒருவர் தன் அரிவாளை சாணை பிடித்ததை, பாராட்டும் விதமாக வழங்கிய தேங்காய்களைக் காட்டுகிறார். "நான் ஒரு காத்தியை [மீன் வெட்டும் கத்தி] பழுதுபார்த்துக் கொடுக்கும்போது, கோலி சகோதரர்கள் தாம் பிடித்த புதிய மீன்களை சில சமயங்களில் எங்களுக்கு கொடுப்பதுண்டு," என்று ராஜேஷ் கூறுகிறார்.
கொல்லர்கள் அதிகம் இல்லாத காரணத்தால் புனே வாகோலியில் இருந்தும் பல ஆர்டர்களை அவர் பெறுகிறார். "த்யஞ்சே சத்தூர் அஸ்தாத், பக்ரே காபாய்லா [அவர்கள் ஆட்டு இறைச்சியை வெட்டும் கத்திகளை ஆர்டர் கொடுக்கின்றனர்]."
புதிய வடிவங்களில் கருவிகளை செய்ய விரும்பும் ராஜேஷ், கடினமான, காய்ந்த தேங்காய்களை வெட்டுவதை எளிதாக்கும் வகையில், ஒரு சிறப்பு அரிவாளை வடிவமைத்துள்ளார், “நான் தொடர்ந்து பல புதிய வடிவங்களை செய்ய முயலுகிறேன். ஆனால் அதை உங்களுக்கு காட்ட முடியாது. அது எனது காப்புரிமை!" என புன்னகைக்கும் அவர் புகைப்படங்கள் எடுக்கவும் எங்களை அனுமதிக்கவில்லை.
சமையலறை மேடைகளில் பொருத்தக்கூடிய, காய்கறி வெட்டப் பயன்படும் மோர்லி , வேகமாக விற்பனையாகும் பொருட்களில் ஒன்றாகும். பாரம்பரிய முறையில் தரையில் அமர்ந்து வெட்டும் கருவிகளை பயன்படுத்த முடியாத வயதானவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மழைக்காலங்களில் விவசாயிகள், நகரங்களுக்கு தினக்கூலி வேலைக்கு செல்வதால், விற்பனை குறையும். “சில நேரங்களில் ஒரு நாளைக்கு ரூ.100 கிடைக்கலாம் அல்லது சில நாட்களில் ரூ. 10 மட்டுமே கிடைக்கும். சில சமயங்களில் எனக்கு ரூ. 3,000 அல்லது 5,000 கிடைக்கலாம். ஆனால் அடுத்த நாள் ஒன்றுமே கிடைக்காமல் போகலாம். எனது வருமானத்தை அனுமானிக்கவே முடியாது, ” என்று அவர் தனது வருமானத்தை விவரிக்கிறார். “கிர்ஹைக் ஆனி மறன் கதி யெதில் காய் சாங்தா யெதா கா? [வாடிக்கையாளரோ மரணமோ, எப்போது நம் கதவைத் தட்டும் என்பதை நம்மால் அனுமானிக்க முடியுமா என்ன?]."
*****
ஞாயிறு உட்பட, எல்லா தினங்களும் காலை, ராஜேஷ் தனது பத்தியை (ஃபோர்ஜ்) நெருப்பூட்டுகிறார்.
பாரியில் நாங்கள் அவரை சந்திக்க சென்ற போது, ஃபோர்ஜ் சூடுபிடிக்க காத்திருந்தார். அப்போது உள்ளூர்வாசி ஒருவர், உருளைக்கிழங்கு ஒன்றை அவரிடம் தந்துவிட்டு செல்கிறார். வேறு ஒன்றும் சொல்லவில்லை. ராஜேஷ் உருளைக்கிழங்கை எடுத்து ஃபோர்ஜின் ஓரத்தில் புதைக்கிறார். "அவருக்கு சுட்ட உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்து வாங்கிக் கொல்வார்," என்று கூறுகிறார்.
விரைவில் அன்றைய நாளின், முதல் வாடிக்கையாளர் வந்து, சாணை பிடிக்க நான்கு அரிவாள்களைக் கொடுக்கிறார். அவர் வாடிக்கையாளரிடம், "இதற்கு அவசரம் ஒன்றுமில்லையே?" எனக் கேட்க, வாடிக்கையாளர், இல்லை என்று உறுதியளித்து விட்டு, சில நாட்கள் கழித்து வாங்கிக்கொள்வதாக கூறுகிறார்.
“வேறென்ன செய்வது, நான் தான் கேட்க வேண்டும். என்னிடம் வேறு பணியளர்கள் இல்லையே” என்கிறார் ராஜேஷ்.
அன்றைய நாளின் ஆர்டர்கள் வரத் தொடங்க, தனக்குத் தேவையான மூலப்பொருட்களை எடுத்து தயார்ப்படுத்தி வைக்கத் தொடங்குகிறார். ஃபோர்ஜ் சூடானவுடன், எல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்பதால் இது மிகவும் முக்கியம் ஆகிறது. ஆறு முதல் எட்டு கிலோ நிலக்கரியை, ஒரு பாத்திரத்தில் மாற்றி, வெறும் கைகளால் அதிலிருந்து கற்களைப் பிரித்தெடுக்க தொடங்குகிறார். "சிறிய கற்கள் நிலக்கரி எரிவதை தாமதப்படுத்துகின்றன," என்று அவர் கூறுகிறார். எனவே ஃபோர்ஜில் நெருப்பைப் பற்றவைக்கும் முன் அவற்றை அகற்ற வேண்டும்.
தேர்ந்த கொல்லரான, போர்ஜ் நன்றாக எரிய நிலக்கரியின் மேல், மரச் சவரன்களை சேர்க்கிறார். தாம்னி (பெல்லோ பம்ப்) என்று அழைக்கப்பட்டு வந்த பாத்தா , ஃபோர்ஜிற்குள் நெருப்பை அணையாமல் வைத்திருக்க உதவுகிறது. காற்றின் திசையைக் கட்டுப்படுத்தியும் கூடுதல் காற்றை வழங்கியும், ஃபோர்ஜை சூடாக வைத்திருக்க இது உதவுகிறது.
மூல உலோகம் சூடாக, ஃபோர்ஜினுள் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வைக்கப்படுகிறது. சூடாகி, கனலாக தெரியும்போது, உலோகம் ஒரு பெரிய இரும்புத் தொகுதியான அய்ரனில் (பட்டறைக்கல்) வைக்கப்படுகிறது. ராஜேஷ், இரண்டு வினாடிகள் உலோகத்தை தலைகீழாகப் பிடித்து, கானை (சுத்தியலை) வேகமாக அடிக்கிறார், "உலோகத்தின் சூடு தணியும் முன் இதைச் செய்ய வேண்டும். இல்லையெனில் அதன் வடிவம் சரியாக வராது," என்று அவர் விளக்குகிறார்.
ராஜேஷ் ஒரு சிறிய சுத்தியலையும், அவனுடைய மகன் ஓம் பெரிய சுத்தியலையும் பயன்படுத்துகின்றனர். இருவரும் அவர்கள் விரும்பிய வடிவத்தைப் பெறும் வரை, ஒரு மணிநேரம் உலோகத்தை தொடர்ந்து சூடாக்கி, பின்னர் அடிக்கும் கடுமையான செயல்முறையை செய்கிறார்கள். கருவியின் வடிவம் தயாரானதும், மரக் கைப்பிடியையும், உலோகத்தையும் பிணைக்க மாண்டல் ( வட்ட ஸ்டீல் வளையம் ) பயன்படுத்தப்படுகிறது.
கருவிகளின் விளிம்புகளைக் கூர்மையாக்க 80 ஆண்டுகள் பழமையான அரைகல்லைப் பயன்படுத்துகிறார். ராஜேஷ் தனது தந்தை கொடுத்த மோக்ரியைக் கொண்டு, தான் வடிவமைத்த கருவிக்கு இறுதி வடிவம் கொடுத்து மேம்படுத்துகிறார்.
பொதுவாக புகைமண்டலமாக இருக்கும் அவரது பட்டறையைப் பற்றி அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை. "எனக்கு வெப்பம் பிடிக்கும். மஜா ஆத்தா ஹை மேரேகோ [நான் அதை விரும்புகிறேன்]." கொதிக்கும் ஃபோர்ஜ் அருகே உட்காருவது கடினம் என்பதால், அவ்வப்போது தனது வெறும் கால்களில் தண்ணீரைத் தெளித்துக் கொள்கிறார்.
உள்ளூர் யூடியூபர் ஒருவரால் ஆவணப்படுத்தப்பட்ட அவரது வீடியோ வைரலான பிறகு, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்தும் ஆர்டர்கள் வரத் தொடங்கியது. ஆனால் ஆயுதங்களாக வகைப்படுத்தப்படுவதால் அவற்றை அவரால் அனுப்ப முடியவில்லை. ஆயினும் தற்போது ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்கள் சிலர், இறைச்சி வெட்டும் கத்திகளை வாங்க அவரது பட்டறைக்கு தனிப்பட்ட முறையில் வருகின்றனர்.
ராஜேஷுக்கு, அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள வாடிக்கையாளர் பலர் உள்ளனர், இருப்பினும் போதுமான வேலையாட்கள் இல்லாததால் ஆர்டர்களை முடிப்பது கடினமாக உள்ளது. "எனது வாடிக்கையாளர்களை, நாளை வாருங்கள், என்று என்னால் கூற முடியாது," என்று மேலும் கூறுகிறார்.
அவரது சமூகத்தைச் சேர்ந்த பலரும், தற்போது அதிக ஊதியம் தரும், ரயில்வே மற்றும் சிறு வணிக வேலை வாய்ப்புகளுக்காக, தானே மற்றும் மும்பைக்கு அருகில் குடிபெயர்ந்துள்ளனர்: "விவசாய நிலங்கள் இல்லாத நிலையில் நாங்கள் என்ன செய்யமுடியும்." 30 ஆண்டுகளுக்கு முன்பு, தனது தெருவிலேயே 10-12 கொல்லர் பட்டறைகள் இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார். அவர் கூறுகையில், "அத்தா தோனச் ராஹிலே! [இப்போது இரண்டு மட்டுமே உள்ளன!]." ராஜேஷ், மற்றும் அவனது உறவினர் அண்ணன் இருவர் மட்டுமே அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த கொல்லர்கள் ஆவர். மனைவி சோனாலி ஒரு ஆசிரியை. கணவர் கொல்லராக பணிபுரிய முடிவெடுத்ததை பெருமையாகக் கருதுகிறார் அவர். “இன்று எல்லோரும் எளிதாக சம்பாதிக்க விரும்புகிறார்கள். யார் பட்டியில் உட்கார்ந்து கான் [சுத்தியல்] அடிப்பார்கள்?" என்று வினவுகிறார்.
இவரது 20 வயது மகன் ஓம், பொறியியல் படிப்பு படித்து வருகிறார். "வார இறுதி நாட்களில் என்னுடன் பணியாற்ற நான் அவரை வேண்டுவேன். இது நமது வேலை; இந்த திறமையை இழக்கக்கூடாது." ராஜேஷ், தான் இறந்த பிறகு, தனது கருவிகள் அனைத்தையும் தன் மகன் பாதுகாக்க வேண்டும் என விரும்புகிறார். “என்னிடம் இன்னும் என் தந்தை மற்றும் தாத்தாவின் கருவிகள் உள்ளன. சுத்தியலால அவை அடிக்கப்பட்ட விதத்தை வைத்தே அந்த கருவியை யார் தயாரித்தார்கள் என்பதை நீங்கள் அடையாளம் காணலாம். சுத்தியலால் அடிப்பதற்கு, ஒவ்வொருவரிடமும் ஒரு பாணி இருந்தது.
ஃபோர்ஜை இயக்குவதற்கு தேவைப்படும் சமையல் அல்லாத நிலக்கரியின் விலை உயர்ந்ததாகி வருகிறது: கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) உயர்தர நிலக்கரியின் விலையை 2023-ல் 8 சதவீதம் உயர்த்தியுள்ளது. நான் ஆரம்பிக்கும்போது [32 வருடத்திற்கு முன்] ரூ.3 ஆக இருந்த ஒரு கிலோ, இன்று ரூ. 58 ஆகிவிட்டது,” என்கிறார்.
ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்படும் நிலக்கரிக்கு ஆகும் செலவை மீட்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அவர் ஒரு அரிவாளை ரூ.750க்கு விற்கிறார். ஒரு அரிவாளை உருவாக்க, இரண்டு முதல் மூன்று கிலோ எடையுள்ள மூல உலோகத்தை வடிவமைக்க அவருக்கு சுமார் ஆறு கிலோ நிலக்கரி தேவைப்படுகிறது. எனவே ஒரு துண்டுக்கு ரூ120-140 செலவாகிறது. கருவியின் மரக் கைப்பிடி மொத்தமாக வாங்கினால் ஒரு துண்டுக்கு ரூ.15 ரூபாய் ஆகிறது. சில்லரையாக வாங்கும் போது ஒரு துண்டு ரூ.60 ஆகிறது.
“நீங்களே கணக்கிட்டு, எனக்கு எவ்வளவு மிஞ்சுகிறது என்று கூறுங்கள்?"
உயரும் நிலக்கரியின் விலையைத் தவிர, சமூகத்தின் இழப்பும் இவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையதாகிறது. ஒரு காலத்தில், தச்சர்களும் கொல்லர்களும் செலவுகளைக் குறைக்க ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வார்கள் என்று அவர் கூறுகிறார். “இன்று கிடைக்கும் பாபுல் கட்டையை விட, அதிக விலை உள்ள கைர் மரத்தையே நாங்கள் பயன்படுத்துவோம். அதனை தச்சர்கள் காட்டிற்கு செல்லும்போது எங்களுக்காக எடுத்து வருவார்கள். அதற்கு மாற்றாக, அவர்களின் மாட்டு வண்டிகளின் சக்கரங்களில் ஹப் பேண்ட் மற்றும் பாக்ஸிங் [மெட்டல் இணைப்பு] செய்ய அவர்களுக்கு உதவுவோம். இவ்வாறாக நாங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டோம்.”
தீ மற்றும் உலோகத்துடன் வேலை செய்வது, அதைச் சார்ந்த ஆபத்து மற்றும் காயங்களை கொண்டிருக்கிறது. சந்தையில், இதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கின்றன. ஆனால் சூடான ஃபோர்ஜில் பணியாற்றும் போது, அவை மூச்சுத் திணற வைக்கிறது என்று ராஜேஷ் கூறுகிறார். அவரது மனைவி சோனாலி, தீக்காயங்கள் குறித்து கவலைப்பட்டு கூறுகையில், “கருவிகளை தயாரிக்கும் போது பலமுறை கைகளில் வெட்டுப்பட்டுள்ளது. ஒருமுறை அவர் கால்களிலும் வெட்டுப்பட்டது,” என்கிறார்.
ஆனாலும் ராஜேஷ் விடுவதாக இல்லை. “சும்மா உட்காருவது எனக்கு வேலை தராது. பட்டியில் உட்கார வேண்டும். கோய்லா ஜலானா ஹை மெரேகோ [நான் நிலக்கரியை எரித்தாக வேண்டும்].”
பல தசாப்தங்களாக தொடரும் தனது கொல்லர் தொழிலை மேலும் தொடர தீர்மானித்துள்ள அவர், "சல்தா ஹை கர் [இதனால், என்னால் என் குடும்பத்தை நடத்த முடிகிறது]" என்று கூறுகிறார்.
தமிழில்: அகமது ஷ்யாம்