7 வயது கஜ்ரி, மூன்று வயது மாமா மகனுடன் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவிலுள்ள வாடகை வீட்டுக்கு பின் விளையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேரால் கடத்தப்பட்டார்.
பத்து வருடங்கள் கழித்து டிசம்பர் 2020-ல் இன்னொரு மாமா மகன் - வங்கி முகவர் - நகரத்திலுள்ள ஒரு வீட்டுக்கு சென்றபோது கஜ்ரி போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண், தரையைத் துடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். தந்தையின் பெயரைக் கேட்டார். அதற்குள் அந்த உரையாடலை ஒரு பெண் இடைமறித்து பேச விடாமல் செய்தார். அவர் சென்று, வன்முறையிலிருந்து பெண்களையும் சிறுமிகளையும் காக்கவென பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் அமைத்திருந்த One-Stop மையத்துக்கு தகவல் கொடுத்தார். சில மணி நேரங்களிலேயே ஒரு காவலர் படை வந்து வீட்டில் சோதனை நடத்தி, கஜ்ரியை மீட்டு, குடும்பத்திடம் ஒப்படைத்தது.
இப்போது 21 வயது கஜ்ரி மனநல பாதிப்புடன் வாழ்கிறார். முன்னாலுள்ள கீழ் வரிசை பற்கள் அவருக்கு இல்லை. கடந்த 10 வருட வாழ்க்கையை பற்றி மிக மங்கலான நினைவுகளே அவருக்கு இருக்கின்றன. கடத்தல், பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் பணி ஆகியவற்றினூடாக வாழ்ந்து வந்திருக்கிறார்.
*****
“தொடக்கத்தில் நான் சோகமாக இருந்தேன். இப்போது நான் முழுமையாக அதிருப்தியை அடைந்து நம்பிக்கையை இழந்து விட்டேன்,” என்கிறார் கஜ்ரியின் 56 வயது தந்தை திரேந்திர சிங். லக்னோவிலுள்ள ஒரு தனியார் கல்லூரியின் காவலாளியாக அவர் பணிபுரிகிறார். வாடகை வீட்டில் வசிக்கிறார். அவரது மனைவியும் கஜ்ரி உள்ளிட்ட இரு மகள்களும் உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.
“காவலாளியாக நான் லக்னோவில் பல நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் 15 வருடங்களாக பணிபுரிந்திருக்கிறேன். 2021ம் ஆண்டிலிருந்து என் வேலையை ஒரு இடத்தில் தொடர்வது கடினமாகி விட்டது. ஏனெனில் காவல்துறையில் வாக்குமூலம் அளிக்க கஜ்ரியை அழைத்து செல்ல விடுப்புகள் எடுக்க வேண்டி வந்தது. தொடர்ந்து விடுப்புகள் கேட்டதால் வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள். மீண்டும் வேறு வேலை தேடினேன்,” என்கிறார் திரேந்திரா.
மாதந்தோறும் திரேந்திரா ஈட்டும் 9000 ரூபாய் வருமானம் குடும்பச் செலவுகளுக்கு போதுமானதாக இல்லை. “லக்னோவுக்கு கஜ்ரியை மீண்டும் மீண்டும் என்னால் அழைத்து வர முடியாது. ஒன்றுமே நடக்காமல் அவளது பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொடர்ந்து வர முடியாது. குறைவான என் வருமானத்தை இந்த பயணங்களில் அழிக்க முடியாது.”
கஜ்ரி கண்டுபிடிக்கப்பட்டு, ஆன மூன்றரை வருடங்களில் நீதி பெறுவதற்கான அவரது முயற்சிகளில் பெரிய விளைவுகள் கிட்டவில்லை. சட்ட உதவி மையத்துக்கும் மொகன்லால்கஞ்சிலுள்ள காவல் நிலையத்துக்கும் லக்னோவின் கெய்சர்பகிலுள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கும் பல முறை அலைந்தும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 164படி கஜ்ரியின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட்டின் முன் பதிவு செய்யப்படவில்லை. கஜ்ரி மீட்கப்பட்ட “2020ம் ஆண்டின் முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் கேட்கிறார்கள்” என்கிறார் திரேந்திரா.
திரேந்திரா பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை டிசம்பர் 2010ம் ஆண்டில்தான். கஜ்ரி காணாமல் போன இரு நாட்களுக்கு பிறகு கடத்தல் குற்றத்துக்கான இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 363 மற்றும் 364 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது கையால் எழுதப்பட்டு கந்தலாகிப் போன ஆவணம். 14 வருடங்கள் கழித்து அது செல்லுபடி ஆகாது. காவல்துறையிடம் அந்த வழக்கின் நகல் ஏதுமில்லை. கஜ்ரி 2020-ல் மீட்கப்பட்ட பிறகான தரவுகள் கொண்டு முதல் தகவல் அறிக்கை தயாரிக்க, அது தேவை என்கின்றனர்.
சரியாக சொல்வதெனில் நீதிமன்றத்துக்கு தேவைப்படும் ‘2020 முதல் தகவல் அறிக்கை’ இல்லை. எனவே கஜ்ரியின் வழக்கு நீதி அமைப்புக்குள்ளேயே எங்கும் கிடையாது.
“கஜ்ரி மீட்கப்பட்டதும் அவர் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டிலிருந்து பெண்ணுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். 2010ம் ஆண்டில் அவர் காணாமல் போனபோது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கடத்தல் குற்றச்சாட்டுகள் மட்டுமே இருந்தன. ஆனால் அவர் மீட்கப்பட்ட பிறகு, பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் ஆகியவற்றை உள்ளடக்கக் கூடிய கடுமையான சட்டப்பிரிவுகளுடன் கூடிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்,” என்கிறார் லக்னோவை சேர்ந்த வழக்கறிஞரான அபூர்வ ஸ்ரீவாஸ்தவ். “கஜ்ரியின் வாக்குமூலம் காவல்துறையாலும் மாஜிதிரேட்டாலும் தொடக்கத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மாஜிஸ்திரேட்டிடம் பதிவு செய்ய வேண்டியது இன்னும் நிலுவையில் இருக்கிறது.”
கஜ்ரி மீட்கப்பட்ட 48 மணி நேரங்களில் அவருடைய வாக்குமூலம் மொகன்லால்கஞ்ச் காவல் நிலையத்தில் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 161-ன்படி பெறப்பட்டது. அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் லக்னோவின் இரு மருத்துவமனைகளில் நடத்தப்பட்டது. முதல் மருத்துவமனையில் கஜ்ரியின் அடிவயிற்றில் ஒரு தழும்பு கண்டறியப்பட்டது. கீழ் தாடை பற்கள் இல்லாததும் வலது மார்பகத்தில் பட்டுப் போன காயமும் கண்டறியப்பட்டது. இரண்டாம் மருத்துவமனையில் அவரை உளவியல் துறைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டது.
2021ம் ஆண்டின் மருத்துவமனை அறிக்கை, கஜ்ரிக்கு “சற்று மனநல பாதிப்பு” இருப்பதாகக் குறிப்பிட்டது. IQ எனப்படும் அறிவுக்கூர்மை அவருக்கு 50-55-தான் இருந்தது. “50 சதவிகித குறைபாடு” அது. ஏழு நாட்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஜ்ரி, மனநல நோய்க்கான ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றார். “தொடர் பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் ஆகியவை நேர்ந்த ஒருவருக்கு அது மிகவும் குறைவான நிவாரணம். தொடர் மனநல சிகிச்சையும் ஆலோசனையும் அவசியம். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர் கடந்த கால நினைவுகள், குற்றவுணர்வு மற்றும் பாதிப்பின் பிற்கால அழுத்தம் ஆகியவற்றிலிருந்து மீள முடியும். சமூகத் தனிமை மற்றும் பாரபட்சம் பாராட்டுதல் ஆகியவற்றுடன் போராடுவதற்கான சமூக ஏற்பும் உறுதி செய்யப்பட வேண்டும்,” என்கிறார் ஸ்ரீவாஸ்தவ்.
போதுமான மனநல - சமூக ஆதரவு இன்மையும் நேரத்துக்கு பதியப்படாத முதல் தகவல் அறிக்கையாலும் 2010ம் ஆண்டு தொடங்கி 2020ம் ஆண்டு வரையிலான கஜ்ரியின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் மிகக் குறைவாகவும் மங்கலான நினைவுகளாகவுமே இருக்கின்றன. நாளடைவில் அதுவும் அழிந்து போகும் சாத்தியமே இருக்கிறது.
“இரண்டு பேர் என்னைக் கொண்டு சென்று, வாயில் துணியை கட்டினர். பேருந்தில் சின்ஹாத்துக்கு என்னைக் கொண்டு சென்றனர்,” என போஜ்பூரியும் இந்தியும் கலந்த மொழியில், 2010ம் ஆண்டின் டிசம்பரில் தான் கடத்தப்பட்ட நாளை நினைவுகூருகிறார் கஜ்ரி. லக்னோவின் ஒன்றியமான சின்ஹாத் பகுதியிலிருந்துதான் கஜ்ரி மீட்கப்பட்டார். அவர் பிடித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் பேசப்பட்ட மொழி, போஜ்பூரி. அடிக்கடி அவர் ‘என்னை வெறுங்காலில் அவர்கள் வைத்திருந்தார்கள்’ என சொல்கிறார்.
முதல் தள வீடாக நினைவுகூரும் கஜ்ரி அங்கு மூவர் இருந்ததாகவும் அதில் ஒரு பெண்ணின் பெயர் ரேகா எனவும் சொல்கிறார். தரைதளத்தில் பலர் வாடகை அறைகளில் வசித்ததாகவும் சொல்கிறார்.
“எனக்கு இரண்டு ரொட்டிகள் நாளொன்றுக்கு இரண்டு முறை கொடுப்பார்கள். அதற்கு மேல் கொடுக்க மாட்டார்கள். எப்போதும் என்னை வெறுங்காலில்தான் வைத்திருந்தார்கள். குளிர்காலத்தில் கூட போர்வையோ படுக்கையோ கொடுக்க மாட்டார்கள். கிழிந்து போன பழைய உடைகளைத்தான் எனக்குக் கொடுத்தார்கள். மாதவிடாய் நேரத்தில் ரேகா பழைய துணிகளை கொடுப்பார். சில நேரங்களில் தரை துடைக்கும் ‘மாப்’பை பயன்படுத்த சொல்வார்,” என்கிறார் கஜ்ரி.
வீடு கூட்டுவது, தரை துடைப்பது, சமைப்பது, கழிப்பறை சுத்தப்படுத்துவது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளை வன்முறை பிரயோகிக்கப்படும் அச்சத்திலேயே செய்ததாக அவர் சொல்கிறார். ஒருமுறை உணவில் சுவையில்லை என ரேகா அவரின் முகத்தில் குத்தியதாக சொல்கிறார். அப்போதுதான் அவரது முன்னம் பற்கள் விழுந்திருக்கின்றன.
“மாதவிடாய் இல்லாத நேரத்தில், என்னை அவர் அறைக்குள் கொண்டு செல்வார்,” என்கிறார் கஜ்ரி தரையைப் பார்த்தபடி. வீட்டில் வசித்த ஒருவன் “அறையை உள்ளிருந்து பூட்டி விட்டு, என்னுடைய உடைகளை அவிழ்த்து, அவன் விரும்பியதை செய்ய வைப்பான். நான் அவனை தடுக்க முயலுவேன். உடனே என்னை பலாத்காரம் செய்வான். பிற அறைகளில் வசிப்பவர்களையும் அழைத்து பலாத்காரம் செய்ய சொல்வான். என்னை அவர்களுக்கு இடையில் அவர்கள் படுக்க வைப்பார்கள்.”
மீட்கப்பட்டபோது “பிற அறைவாசிகளின் வீட்டு வேலையை கஜ்ரி செய்ததற்கும் அவரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததற்கும் தொடர்ச்சியாக ரேகா பணம் வாங்கினார்,” என கஜ்ரி சொன்னதாக திரேந்திரா சொல்கிறார்.
தந்தை அலுப்படைந்து விட்டார். “ஜனவரி 2021-லிருந்து நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம்,” என்கிறார். அவர் குறிப்பிடும் ‘நாங்கள்’ என்பது நிலையான சட்ட உதவியை குறிப்பிடவில்லை. சட்ட முன்னெடுப்புகளுக்கான அறக்கட்டளை மற்றும் சங்கம் (AALI), லக்னோவில் இருக்கும் ஒரு சட்ட உதவி நிறுவனம். 2020ம் ஆண்டில் One-stop மையத்தின் வழியாக வந்த பெண்கள் மீதான வன்முறை வழக்குகளுக்கு இலவசமாக சட்ட உதவி அளித்து வருகிறது. அப்போதிருந்து கஜ்ரியின் வழக்கு குறைந்தபட்சம் நான்கு வழக்கறிஞர்களுக்கு மாறி விட்டது.
AALI-ன் தற்போதைய வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கான ஒரு புதிய புகார் வரைவை திரேந்திராவுக்கு அனுப்பினார். அவர் அதில் சில தரவுப் பிழைகளை சுட்டிக் காட்டியதும் வழக்கறிஞர் அவற்றை ஏற்க மறுத்து, வழக்கைக் கிடப்பில் போட்டுவிட்டார். திரேந்திரா, வரைவில் இன்னும் கையொப்பமிடவில்லை. வழக்கறிஞரும் புதிய வரைவு எதையும் அனுப்பவில்லை.
“செல்ஃபோன் தொலைந்து போனால், உலகையே தலைகீழாக்கி விடுகிறார்கள். இங்கு என் மகள் கடத்தப்பட்டு, 10 வருடங்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறாள். யாரும் எதையும் செய்ய மறுக்கிறார்கள்,” என்கிறார் திரேந்திரா. 2010ம் ஆண்டு தொடங்கி அவர் சேகரித்த ஆவணங்கள், உறைகள், புகைப்படங்கள் என ஒவ்வொரு தகவலையும் சேமிப்பறையில் பாதுகாத்து வைத்திருக்கிறார். தொடர்ந்து போராடும் அவரின் குணத்துக்கான சான்று அது.
பாலியல் மற்றும் பாலின வன்முறையில் பிழைத்தவர்கள் மீள்வதற்கு தடையாக இருக்கும் அமைப்புரீதியான, சமூகரீதியான, நிறுவனரீதியான அம்சங்களை நாடு முழுவதும் செய்தியாக்கும் பணியின் ஓர் அங்கம் இக்கட்டுரை. எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட பணி இது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் பாதுகாப்புக்காக மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழில்: ராஜசங்கீதன்