கமல் ஷிண்டேவின் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் 150 கிலோ அரிசி, 100 கிலோ கோதுமை மாவு, 30 கிலோ உருளைக்கிழங்கு, 50 கிலோ வெங்காயம் சேகரிக்கப்பட்டுள்ளது. “இந்த உணவு எல்லோருக்குமானது," என்கிறார் 55 வயதான கமல். "ஒவ்வொரு நபரும் தங்கள் நாளின் உணவை எடுத்துச் செல்கிறார்கள். மீதமுள்ள நாட்களில் நாங்கள் வழியில் [சாலை ஓரத்தில்] உணவு தயாரிப்போம்,"என்று கூறுகிறார்.
அவரது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 - 40 விவசாயிகள் இந்த கூட்டுப் பொருட்களுக்கு பங்களிப்பு செய்துள்ளனர். அவை நேற்று பிப்ரவரி 20 அன்று தொடங்கிய பேரணியின் போது அவர்களுக்கு உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் என்று போராட்டத்தின் முக்கிய அமைப்பாளரான அகில இந்திய கிசான் சபாவின் திண்டோரி தாலுகா ஒருங்கிணைப்பாளரான அப்பா வதானே கூறுகிறார்.
சமையலுக்கான பெரிய பாத்திரங்கள், தண்ணீர் சேமிப்பு டிரம்கள், விறகுகள், தார்பாய்கள் மற்றும் தூங்குவதற்கான மெத்தைகளும் அமைப்பாளர்கள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்களால் சேகரிக்கப்பட்டுள்ளன. நாசிக் மாவட்டத்தின் டிண்டோரி தாலுகாவில் சுமார் 18,000 பேர் வசிக்கும் திண்டோரி கிராமத்தின் விவசாயிகள் ஒரு மாத காலமாக நடைபயணத்திற்காக இந்த முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அவர்களில் 58 வயதான லீலாபாய் வாகேவும் ஒருவர். நேற்று காலை 10 மணியளவில் அவரும் குராசானி சட்னியுடன் 30 சப்பாத்திகளை ஒரு துணியில் கட்டினார். நாசிக்கிலிருந்து மும்பைக்கு பேரணி நடத்தும் போது, அடுத்த இரண்டு நாட்களுக்கு இதுவே அவரது மதிய மற்றும் இரவு உணவாக இருக்கும்.
அவரது கோரிக்கைகளில் நில உரிமைகள், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, நீர்ப்பாசன வசதிகள், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் கடன் தள்ளுபடி ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு இதே இரண்டு நகரங்களுக்கு இடையே நடந்த விவசாயிகளின் நீண்ட பேரணியில் லீலாபாய் கலந்து கொண்டார் - அதே கோரிக்கைகள் - உத்தரவாதங்கள் அளித்த போதிலும் மாநில அரசால் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
"நாங்கள் அங்கேயே [மும்பையில்] தங்கப் போகிறோம். எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை நாங்கள் நகர மாட்டோம். கடந்த ஆண்டும் நான் போராட்டத்தில் பங்கேற்றேன். ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை,” என்று திண்டோரியில் உள்ள தனது இரண்டு அறைகள் கொண்ட குடிசையில் ஒரு மண் அடுப்புக்கு அருகில் தரையில் அமர்ந்து சப்பாத்தி பொட்டலத்தை இறுக்கியபடி லீலாபாய் கூறுகிறார்.
லீலாபாய் மகாதேவ் கோலி சமூகத்தைச் சேர்ந்தவர். இது ஒரு பட்டியல் பழங்குடியினமாகும். 2018 ஆம் ஆண்டில், வனத்துறையின் ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டார். மழை பொய்த்த காரணத்தால் ஒட்டுமொத்த பயிர்களும் நாசமாகின.
"நான் பல ஆண்டுகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். சிறு விவசாயிகளாகிய நாங்கள் நிலத்தின் முழு உரிமையைப் பெற வேண்டும். நாங்கள் எப்படி உயிர் வாழ்வது? அரசு எங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். திண்டோரி கிராமத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மகாதேவ் கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வன நிலத்தில் கோதுமை, தினை, வெங்காயம் மற்றும் தக்காளி பயிரிடுகின்றனர். 2006 வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமைகளை அளிக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட கால கோரிக்கை.
பிப்ரவரி 20ம் தேதி மதியம் திண்டோரி கிராம விவசாயிகள் தானியங்கள், பாத்திரங்கள் மற்றும் பிற பொருட்களை டெம்போவில் ஏற்றினர். பின்னர் அவர்கள் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாகம்பே டோல் நாகாவிற்கு புறப்பட்டனர். சிலர் அதே வண்டியிலும், மற்றவர்கள் ஷேர் டாக்சிகள் அல்லது மாநில போக்குவரத்து பேருந்துகளிலும் புறப்பட்டனர். திண்டோரி தாலுகாவின் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மதியம் 2 மணிக்கு நாசிக் நோக்கி முதல் கட்டமாக பேரணியைத் தொடங்குவதற்கு முன்பு நாகாவில் கூடினர்.
"அரசு எங்களை அணிவகுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் அங்கேயே [நாசிக்கில்] எங்கள் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றும் வரை தர்ணாவில் ஈடுபடுவோம்," என்று 2018 நீண்ட பயணத்தில் பங்கேற்ற கமல் உறுதியுடன் கூறுகிறார். அவரது குடும்பம் ஐந்து ஏக்கர் வன நிலத்தில் பயிரிடுகிறது. அதில் ஒரு ஏக்கர் மட்டுமே அவர்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த 50,000 விவசாயிகள் இந்த வாரம் தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். (பேரணிக்கான அனுமதி நிச்சயமற்றது என்றாலும்) இந்த முறை அரசு தனது உத்தரவாதத்தை உண்மையிலேயே செயல்படுத்தும் என்ற நம்பிக்கையில்.
தமிழில்: சவிதா