சுனிதா பர்குடேவின் தாய்மொழி கொலாமி. ஆனால் இந்தப் பருத்தி விவசாயி, நாளின் பெரும்பாலான நேரம் மராத்தியில்தான் பேசுகிறார். “எங்களின் பருத்தியை விற்க, சந்தை மொழி நாங்கள் தெரிந்திருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் வளர்ந்த அவரின் கொலாம் பழங்குடி குடும்பத்தினர், வீட்டில் கொலாமி பேசுகின்றனர். சூர் தேவி கிராமத்தில், தான் பிறந்த வீட்டில் தாத்தா, பாட்டி உள்ளூர் மொழியான மராத்தியைப் பேச சிரமப்பட்டதை சுனிதா நினைவுகூருகிறார். “அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை, திக்கி திணறி மராத்தி மொழி பேசினார்கள்,” என்கிறார் அவர்.

குடும்ப உறுப்பினர்கள் பருத்தி விற்க அதிகமாக உள்ளூர் சந்தைகளுக்கு செல்லத் தொடங்கியதில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டனர். புல்காட் கிராமத்தில் இருக்கும் எல்லா கொலாம் பழங்குடிகளும் இப்போது பல மொழிகளையும் பேசுவார்கள். மராத்தி பேசுவார்கள். கொஞ்சம் இந்தி. பிறகு நிச்சயமாக கொலாமி.

மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, சட்டீஸ்கர் ஆகிய இடங்களில் அதிகம் பேசப்படும் திராவிட மொழி கொலாமி. யுனெஸ்கோவில் அருகி வரும் உலக மொழிகளுக்கான புத்தகத்தில் , ‘நிச்சயமாக அழிந்து வரும்’ வகையில் இம்மொழி சேர்க்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளால் தாய்மொழியாக கற்கப்படாத மொழிகளின் வகை அது.

“ஆனால் எங்களின் மொழி அழியவில்லை. நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்கிறார் 40 வயது சுனிதா.

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

கொலாம் பழங்குடி விவசாயியான சுனிதா பர்குடே (இடது) . மகாராஷ்டிராவின் யவத்மாலிலுள்ள புல்காட் கிராமத்தின் கொலாம் பழங்குடி பதிவேட்டை தன்னார்வ தொண்டு நிறுவனமான ப்ரேர்னா கிராம விகாஸ் (வலது) பராமரித்து வருகிறது

மகாராஷ்டிராவிலுள்ள கொலாம் பழங்குடியினர் மக்கள் தொகை 194,671 (இந்திய பட்டியல் பழங்குடிகள் புள்ளியியல் கணக்கு, 2013 ) ஆகும். ஆனால் அவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள்தான் சென்சஸ் கணக்கெடுப்பில் கொலாமியை தாய்மொழியாக பதிவு செய்திருக்கின்றனர்.

“எங்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்கையில், மராத்தி மொழி கற்றுக் கொள்கிறார்கள். கொலாமி அளவுக்கு அது கடினமாக இல்லை,” என்னும் சுனிதா, “எங்களின் மொழி பேசும் ஆசிரியர்கள் பள்ளிகளில் இல்லை,” என்றும் கூறுகிறார். அவரும் 2ம் வகுப்பு வரை மராத்திதான் படித்தார். பிறகு தந்தை இறந்ததால் படிப்பை நிறுத்தி விட்டார்.

தன்னுடைய மூன்று ஏக்கர் நிலத்தில் பருத்தி பறித்துக் கொண்டிருக்கும்போது சுனிதாவை பாரி குழு சந்தித்தது. “பருவகாலம் முடியும் முன், இவற்றை நான் அறுவடை செய்ய வேண்டும்,” என்னும் அவரின் கைகள் நிற்காமல் தன்னியல்பாக பருத்தி பருத்திக் கொண்டிருக்கிறது. சில நிமிடங்களில் அவரின் ஒட்டி பாதி நிறைந்துவிட்டது.

“இவைதான் கடை இரு டாஸ் (மராத்தியிலும் கொலாமியிலும் வரிசைகள்) கபாஸ் (மராத்தியில் பருத்தி),” என்கிறார் சுனிதா. ஆடைக்கு மேல் அவர் ஒரு சட்டை அணிந்திருக்கிறார். “காய்ந்த ரெக்கா (கொலாமியில் புல்லி இதழ்) மற்றும் கட்டி (கொலாமியில் களை) என் புடவையில் பட்டு கிழித்து விடும்.” புல்லி இதழ் என்பது பருத்தியின் வெளிப்புறத்திலிருந்து பூவை பிடித்திருக்கும் சுருள் ஆகும். கட்டி என்பது பருத்தி வயலில் இருக்கும் தேவையற்ற களைகள்.

மதியவேளை வெப்பநிலை உயரத் தொடங்க, அவர் செலங்கா எனப்படும் சிறு பருத்தி துணியை எடுத்து வெப்பத்தாக்கத்தை தடுக்க தலையில் அணிந்து கொள்கிறார். ஒட்டிதான் மிகவும் முக்கியமான துணி. தோளிலிருந்து இடுப்பு வரை அணியப்படும் பருத்தியாலான நீளத் துணி. அதில்தான் அறுவடை செய்யப்படும் பருத்தி போடப்படும். ஏழு மணி நேரங்களுக்கு இடைவெளி இல்லாமல் வேலை பார்ப்பார். அவ்வப்போது பக்கத்து கிணறுக்கு ஈர் (கொலாமியில் நீர்) குடிக்க செல்வார்.

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

மூன்று ஏக்கர் நிலத்தில் சுனிதா பருத்தி விளைவிக்கிறார். ‘பருவகாலத்துக்கு முன் நான் அறுவடை செய்ய வேண்டும்.’ பகல் முழுக்க பருத்தி பறிக்கும் அவர், அவ்வப்போது பக்கத்து கிணற்றில் ஈர் (கொலாமியில் நீர்) பருகச் செல்வார்

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

ஆடையை செடிகள் கிழிக்காத வண்ணம் சுனிதா ஒரு சட்டையை மேலே போட்டுக் கொள்கிறார். மதிய வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியதும், செலங்கா என்னும் பருத்தி துணியை தலைக்கு போட்டுக் கொள்கிறார். பருத்தி சேகரிக்க இடுப்பை சுற்றி ஒட்டி அணிந்து கொள்கிறார்

பருவகாலம் முடியும்போது (ஜனவரி 2024) அக்டோபர் 2023 தொடங்கி சுனிதா 1,500 கிலோ பருத்தி அறுவடை செய்து முடித்திருப்பார். “பருத்தி அறுவடை சவாலாக இருந்ததில்லை. நான் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவள்.”

20 வயதாகும்போது அவர் மணம் முடித்தார். அவரது கணவர் 15 வருடங்கள் கழித்து 2014ம் ஆண்டில் இறந்து போனார். “மூன்று நாட்கள் அவருக்கு காய்ச்சல் இருந்தது.” அவரின் ஆரோக்கியம் குறையத் தொடங்கியதும், யவத்மாலின் மாவட்ட மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றார் சுனிதா. “எல்லாமே சட்டென முடிந்துவிட்டது. அவரின் மரணத்துக்கு என்ன காரணம் இன்று வரை எனக்கு தெரியவில்லை.”

இரண்டு குழந்தைகளுடன் சுனிதா தனித்து விடப்பட்டார். “அர்பிதாவும் ஆகாஷும் 10 வயதை கூட அடையவில்லை. விவசாய வேலைக்கு தனியே செல்ல நான் பயந்த காலம் உண்டு.” மராத்தி மொழி தெரிந்ததால், பக்கத்து வயல்களில் வேலை பார்த்த விவசாய நண்பர்களின் நம்பிக்கையை பெற முடிந்ததாக கூறுகிறார் அவர். “வயலிலோ சந்தையிலோ இருக்கும்போது, அவர்களின் மொழியை நாங்கள் பேசி ஆக வேண்டுமல்லவா? எங்களின் மொழியை அவர்கள் புரிந்து கொள்ள முடியுமா?” எனக் கேட்கிறார் அவர்.

விவசாய வேலையை அவர் தொடர்ந்தாலும், ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் பருத்தி சந்தையில் வேலை பார்ப்பதை பலரும் எதிர்த்ததால், அவர் அங்கு செல்வதை நிறுத்தி விட்டார். “பயிரை மட்டும் நான் அறுவடை செய்வேன். ஆகாஷ் (அவரது மகன்) அதை விற்பான்.”

பருத்தி அறுவடை செய்தபடி பேசும் சுனிதா பர்குடே

சுனிதா பர்குடேவின் தாய்மொழி கொலாமி. ஆனால், நாளின் பெரும்பாலான நேரம் மராத்தியில்தான் பேசுகிறார். 'எங்களின் பருத்தியை விற்க, சந்தை மொழி நாங்கள் தெரிந்திருக்க வேண்டும்,' என்கிறார் அவர்

*****

கொலாம் பழங்குடி சமூகம் எளிதில் பாதிக்கத்தக்க பழங்குடி குழுவாக (PVTG) பட்டியலிடப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவின் மூன்று PVTG-களில் அதுவும் ஒன்று. ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் மத்தியப் பிரதேசத்திலும் சட்டீஸ்கரிலும் கூட அவர்கள் வாழ்கின்றனர்.

மகாராஷ்டிராவில் இச்சமூகத்தினர் தங்களை ‘கொலாவர்’ அல்லது ‘கொலா’ என அழைத்துக் கொள்கின்றனர். மூங்கில் அல்லது பிரம்பு என அர்த்தம் கொள்ளலாம். கூடைகள், பாய்கள், விசிறிகள், தட்டி போன்றவற்றை செய்வது அவர்களின் பாரம்பரியத் தொழில்.

“இளம் வயதில், என் தாத்தா-பாட்டி மூங்கில் கொண்டு பல பொருட்களை சொந்த பயன்பாட்டுக்கு தயாரித்ததை நான் பார்த்திருக்கிறேன்,” என நினைவுகூருகிறார் சுனிதா. காடுகளிலிருந்து சமவெளிகளுக்கு அவர்கள் இடம்பெயரத் தொடங்கிய பிறகு, காட்டுக்கும் வீட்டுக்கும் இடையிலான தூரம் அதிகரித்தது. “என் பெற்றோர் அத்திறன்களை கற்றுக் கொள்ளவே இல்லை,” என்னும் அவரும் அவற்றை கற்றுக் கொள்ளவில்லை.

விவசாய வேலைதான் அவருக்கு வாழ்வாதாரம். “எனக்கு நிலம் இருந்தாலும், பயிர் பொய்த்தால், மற்றவரின் வயலில் வேலைக்கு செல்ல வேண்டும்,” என்கிறார் அவர். பிற கொலாம்களுக்கும் அதே நிலைதான். பெரும்பாலானோர் விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். விவசாயக் கடன்களையும் பிற கடன்களையும் அடைக்க சிரமப்படுகின்றனர். ஜூன் 2023-ல் நடவுக்காக சுனிதா 40,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

“பருத்தி விற்று முடிந்தபிறகு, ஜூன் வரை வேலை இருக்காது. மே மாதம் மிகவும் கடினமாக இருக்கும்,” என்கிறார் அவர். கிட்டத்தட்ட 1,500 கிலோ பருத்தியை அவர் அறுவடை செய்திருக்கிறார். கிலோவுக்கு ரூ.62-65 பெறுகிறார். “கிட்டத்தட்ட 93,000 ரூபாய். கடனை 20,000 ரூபாய் வட்டியுடன் அடைத்த பிறகு, மொத்த வருடத்துக்கு கையில் ஒரு 35,000 ரூபாய் மிஞ்சியிருக்கும்.”

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

பெரும்பாலான கொலாம் பழங்குடியினரைப் போல (எளிதில் பாதிக்கத்தக்க பழங்குடி குழு), பயிர் பொய்த்தால் ‘மற்றவரின் நிலத்துக்கு சென்று வேலை பார்க்க வேண்டும்,’ என்கிறார் சுனிதா. பல கொலாம்கள் விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். விவசாயக் கடன்களையும் பிற கடன்களையும் அடைக்க சிரமப்படுகின்றனர்

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

இடது: குபட்ஹெட்டி கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயிகள் மகர சங்கராந்தி (அறுவடை விழா) கொண்டாடுகின்றனர். வலது: குழுவின் விதை வங்கியில் விதைகள் சேமிக்கப்படுகிறது

உள்ளூர் வியாபாரிகள் சிறு அளவில் அவருக்கு கடன்கள் கொடுக்கின்றனர். அவற்றை அவர் வருடந்தோறும் மழைக்காலத்துக்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். “இவருக்கு ஒரு 500, அவருக்கு ஒரு 500… கடைசியில் கையில் ஒன்றும் நிற்காது. எல்லா நாளும் வேலை பார்த்து செத்துப் போக வேண்டியதுதான்!,” என விரக்தியுடன் சிரித்து வேறு பக்கம் பார்க்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன் ரசாயன விவசாயத்தை கைவிட்டு, இயற்கை விவசாயத்துக்கு சுனிதா மாறினார். “கலப்பு விவசாயம் செய்யத் தொடங்கினேன்,” என்கிறார் அவர். பச்சைப்பயறு, உளுந்து, சோளம், கம்பு, எள், துவரம் பருப்பு போன்றவற்றுக்கான விதைகளை அவர், கிராமத்திலுள்ள பெண் விவசாயிகள் உருவாக்கியிருக்கும் விதை வங்கியிலிருந்து பெற்றார். துவரை மற்றும் பச்சைப் பயறு போன்றவற்றை விளைவித்ததால் கடந்த வருடத்தின் மே மற்றும் ஜூன் மாதங்களில் வேலையில்லாத போது அவரால் தாக்குப்பிடிக்க முடிந்தது.

ஒரு பிரச்சினை மறைந்து இன்னொரு பிரச்சினை வந்தது. துவரை விளைந்த அளவுக்கு பிற பயிர்கள் விளைச்சல் கொடுக்கவில்லை. “காட்டுப் பன்றிகள் அழித்துவிட்டன,” என்கிறார் சுனிதா.

*****

சூரியன் மறையும் நேரத்தில், அறுவடை செய்த பருத்தியை அவர் பொட்டலம் கட்டுகிறார். அந்த நாளுக்கான இலக்கை அவர் அடைந்து விட்டார். மிச்சமிருந்த கடைசி வரிசைகள் அவருக்கு கிட்டத்தட்ட ஆறு கிலோ பருத்தியை கொடுத்தது.

அடுத்த நாளுக்கான இலக்கை அவர் ஏற்கனவே முடிவு செய்து விட்டார். களையை அகற்றி, ரெக்கேயை சேமிக்கப்பட்ட பருத்தியிலிருந்து காய வைக்க வேண்டும். அதற்கு அடுத்து, அடுத்த நாளுக்கான இலக்கு: சந்தைக்கு அதை தயாராக வைப்பது.

PHOTO • Ritu Sharma
PHOTO • Ritu Sharma

வீட்டில் வைப்பதற்காக உருண்ட பொட்டலமாக்கப்படும் பருத்தி

“(அவரின் நிலம் தவிர்த்து) வேறு எதையும் யோசிக்க நேரம் இல்லை,” என்கிறார் அவர் கொலாமி மொழி அழிந்து வருவது குறித்து. சுனிதாவுக்கும் அவரது சமூகத்தினருக்கும் மராத்தி முழுமையாக தெரியாது. “அனைவரும் மராத்தியில் பேசு, மராத்தியில் பேசு என்றார்கள்!” இப்போது கொலாமி அழியத் தொடங்கியதும், “கொலாமியில் பேசு, கொலாமியில் பேசு என்கிறார்கள்,” என அவர் சிரிக்கிறார்.

“எங்கள் மொழியை நாங்களும் எங்களின் குழந்தைகளும் பேசுகிறோம்,” என உறுதியாக சொல்கிறார் அவர். “வெளியில் செல்லும்போது மட்டும்தான் நாங்கள் மராத்தி மொழியில் பேசுவோம். வீட்டுக்கு வந்ததும் எங்களின் மொழியை பேசுகிறோம்.”

“எங்களின் மொழி, எங்களின் மொழியாக இருக்க வேண்டும். கொலாமி கொலாமியாகவும் மராத்தி மராத்தியாகவும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.”

கட்டுரையாளர், ப்ரேர்னா கிராம விகாஸ் சன்ஸ்தாவின் மாதுரி காட்சேவுக்கும் ஆஷா கரேவாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார். கொலாமி மொழிபெயர்ப்புக்காக சாய்கிரண் தேகாமுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்

பாரியின் அருகி வரும் மொழிகளை அடையாளப்படுத்தும் பணி (ELP), இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள மொழிகளை, அவற்றை பேசும் மக்களின் வாழ்வனுபவங்களை கொண்டு ஆவணப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.

தமிழில்: ராஜசங்கீதன்

Ritu Sharma

ఋతు శర్మ PARIలో అంతరించిపోతున్న భాషల కంటెంట్ ఎడిటర్. ఆమె భాషాశాస్త్రంలో ఎమ్.ఎ. పట్టా పొందారు. భారతదేశంలోని మాట్లాడే భాషలను సంరక్షించడానికి, పునరుత్తేజనం చేయడానికి కృషి చేయాలనుకుంటున్నారు.

Other stories by Ritu Sharma
Editor : Sanviti Iyer

సన్వితి అయ్యర్ పీపుల్స్ ఆర్కైవ్ ఆఫ్ రూరల్ ఇండియాలో కంటెంట్ కోఆర్డినేటర్. గ్రామీణ భారతదేశంలోని సమస్యలను డాక్యుమెంట్ చేయడానికి, నివేదించడానికి విద్యార్థులకు సహాయం చేయడం కోసం ఆమె వారితో కలిసి పనిచేస్తున్నారు.

Other stories by Sanviti Iyer
Editor : Priti David

ప్రీతి డేవిడ్ పీపుల్స్ ఆర్కైవ్ ఆఫ్ రూరల్ ఇండియాలో జర్నలిస్ట్, PARI ఎడ్యుకేషన్ సంపాదకురాలు. ఆమె గ్రామీణ సమస్యలను తరగతి గదిలోకీ, పాఠ్యాంశాల్లోకీ తీసుకురావడానికి అధ్యాపకులతోనూ; మన కాలపు సమస్యలను డాక్యుమెంట్ చేయడానికి యువతతోనూ కలిసి పనిచేస్తున్నారు.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

రాజా సంగీతన్ చెన్నైకి చెందిన రచయిత. ఒక ప్రసిద్ధ తమిళ వార్తా చానల్‌లో పాత్రికేయులుగా పనిచేస్తున్నారు.

Other stories by Rajasangeethan