வீட்டுக்கு வெளியே இருக்கும் மாமரத்துக்கடியில் சோகமாக அமர்ந்திருக்கிறார் சாரு. மடியில் குழந்தை புரண்டு கொண்டிருக்கிறான். “என் மாதவிடாய் வரும் நேரம் இது,” என்கிறார் அவர். “வந்துவிட்டால் நான் குர்மா கர்ருக்கு செல்ல வேண்டும்.” குர்மா கர் என்பதை ‘மாதவிடாய் குடிசை’ என மொழிபெயர்க்கலாம். மாதவிடாய் காலத்தில் 4-5 நாட்களுக்கு அங்குதான் அவர் தங்குவார்.
தவிர்க்க முடியாத இந்த நிலை சாருவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெரும் அங்கலாய்ப்பை தருகிறது. ”குர்மா கர்ரில் மூச்சடைக்கும். குழந்தைகளை விட்டு என்னால் தூங்கவே முடியாது,” என்கிறார் அவர் ஒன்பது மாத மகனை அமைதிப்படுத்த முயன்று கொண்டே. அவருக்கு மூன்றரை வயதில் கோமல் (உண்மையான பெயரல்ல) என்றொரு மகள் இருக்கிறார். நர்சரி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார். “அவளின் மாதவிடாய் விரைவில் தொடங்கிவிடும். நினைத்தாலே பயமாக இருக்கிறது,” என்கிறார் 30 வயது சாரு. அவரின் மகளும் மாடியா பழங்குடி மக்களின் பாரம்பரிய முறையை பின்பற்ற வேண்டியிருக்குமோ என கவலையுறுகிறார்.
சாருவின் கிராமத்தில் நான்கு குர்மா குடிசைகள் இருக்கின்றன. அவரின் வீட்டிலிருந்து ஒரு குடிசை வீடு 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கிறது. தற்போது அவற்றை 27 பதின்வயது பெண்களும் கிராமத்தின் மாதவிடாய் வயது கொண்ட பெண்களும் பயன்படுத்துகின்றனர். “என் தாயும் அவரின் தாயும் அங்கு செல்வதை பார்த்து வளர்ந்த நானும் அதை பயன்படுத்துகிறேன். கோமலும் அந்த துயரை அனுபவிக்க நான் விரும்பவில்லை,” என்கிறார் சாரு.
பழங்குடி இனமான மாடியா மக்கள், மாதவிடாய் பெண்களை அசுத்தமானவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் நினைக்கின்றனர். மாதவிடாய் வரும் போது அவர்களை தூர அனுப்பி விடுகின்றனர். “13 வயதிலிருந்து நான் குர்மாவுக்கு சென்று கொண்டிருக்கிறேன்,” என்கிறார் சாரு. பெற்றோரின் வீட்டில் அவர் அப்போது இருந்தார். தற்போதைய வீட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த கிராமம், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் இருக்கிறது.
கடந்த 18 வருடங்களில் சாரு தன் வாழ்க்கையின் 1,000 நாட்களை - மாதந்தோறும் ஐந்து நாட்கள் - நீரோ கழிவறையோ மின்சாரமோ படுக்கையோ காற்றாடியோ இல்லாத குடிசையில் கழித்திருக்கிறார். “உள்ளே இருட்டாக இருக்கும். இரவு நேரங்கள் பயம் கொடுக்கும். இருள் என்னை உண்டு விடுமோ என தோன்றும்,” என்கிறார் அவர். “என் வீட்டை நோக்கி ஓடி என் குழந்தைகளை நெஞ்சோடு கட்டிக் கொள்ள வேண்டுமென தோன்றும்… ஆனால் முடியாது.”
கிராமத்தின் பிற பெண்களும் பயன்படுத்தும் குர்மா கர்ருக்கு உள்ளே, நல்ல அறைக்கும், வலியெடுக்கும் உடலுக்கு மென்மையான படுக்கைக்கும், நேசிப்பவர்களின் அரவணைப்பு தரும் போர்வைகளுக்கும் சாரு ஏங்குகிறார். ஆனால் மண் சுவர்களுடன் மூங்கில்களால் தாங்கப்பட்டிருக்கும் பாழடைந்த குடிசை மனச்சோர்வை கொடுக்கும் இடமாக இருக்கிறது. அவர் தூங்க வேண்டிய தரை கூட சமமற்று இருக்கிறது. “அவர்கள் (கணவரும் மாமியாரும்) அனுப்பும் படுக்கைத் துணியில் தூங்குவேன். முதுகுவலி, தலைவலி, தசைவலி ஆகியவை கடுமையாக இருக்கும். மெல்லிய படுக்கைத்துணியில் படுப்பது வசதியாக இருக்காது,” என்கிறார் அவர்.
வசதியின்மையும் வலியும், தனிமையாலும் குழந்தைகளை விட்டு தூர இருக்கும் துயரத்தாலும் பன்மடங்காக சாருவுக்கு இருக்கிறது. “என்னுடையை நிலையை நெருக்கமானவர்கள் கூட புரிந்து கொள்ளவில்லை என்பது கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் அவர்.
பதற்றம், அழுத்தம், சோர்வு போன்ற உளவியல் சிக்கல்கள், மாதவிடாய் பருவ பெண்களுக்கு அதிகமாக இருக்கும் என்கிறார் மும்பையின் உளவியல் சிகிச்சையாளரான டாக்டர் ஸ்வாதி தீபக். “அவற்றின் தீவிரம் ஆளுக்கு ஏற்றார்போல மாறும். முறையான பராமரிப்பு இல்லாதபோது அவை இன்னும் மோசமடையும்,” என்கிறார் அவர். அச்சமயத்தில் அன்பும் பராமரிப்பும் கிடைப்பது பெண்களுக்கு முக்கியம் என்னும் டாக்டர் தீபக், பாகுபாடும் தனிமையும் பெரும் சிக்கலை கொடுக்கும் என்கிறார்.
மாடியா பெண்கள் வீட்டில் துணி வைத்திருக்கக் கூட அனுமதியில்லை. “நாங்கள் அனைவரும் அவற்றை குடிசையில் விட்டுவிடுவோம்,” என்கிறார் சாரு. பாவாடைகளிலிருந்து கிழித்து எடுக்கப்பட்ட துணிகள் நிரம்பிய பிளாஸ்டிக் பைகள் குர்மா கர்ரில், சுவரின் இடுக்குகளில் செருகப்பட்டிருக்கும். அல்லது மூங்கில் கழிகளில் தொங்கும். “பல்லிகளும் எலிகளும் ஓடும். இந்த துணிகளில் அவை அமரும்.” மாசுபட்ட துணி நாப்கின்கள் எரிச்சலையும் தொற்றையும் உருவாக்கும்.
குடிசையில் ஜன்னல் கிடையாது. காற்றோட்டமின்மையால் துணிகள் நாறும். “மழைக்காலத்தில் இன்னும் மோசம்,” என்கிறார் சாரு. “மழைக்காலத்தில் நான் சானிடரி நாப்கின் பயன்படுத்துவேன். ஏனெனில் துணி சரியாகக் காயாது,” என்கிறார் அவர். 20 நாப்கின்கள் கொண்ட பாக்கெட்டுக்கு 90 ரூபாய் செலவழிக்கிறார் சாரு. இரண்டு மாதங்களுக்கு அது பயன்படும்.
அவர் செல்லும் குர்மா கர், 20 வருடங்கள் பழமையானது. யாரும் அதை பராமரிப்பதில்லை. கூரையின் மூங்கில் சட்டகம் உடைந்து கொண்டிருக்கிறது. மண் சுவர் விரிசல் கொண்டிருக்கிறது. “இந்த குடிசை எவ்வளவு பழமையானது என நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மாதவிடாய் பெண்களால் மாசுப்பட்டதால் அதை எந்த ஆணும் சரி செய்ய முன் வருவதில்லை,” என்கிறார் சாரு. பெண்கள்தான் பழுது பார்க்க வேண்டும்.
*****
கடந்த நான்கு வருடங்களாக பொதுச் சுகாதார ஊழியராக (ASHA) சாரு இருந்தாலும், மாதவிடாய் கால விலக்கு அவருக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. “நான் ஒரு சுகாதார ஊழியர். ஆனால் இத்தனை வருடங்களில் இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் மனப்பான்மையை என்னால் மாற்ற முடியவில்லை,” என்கிறார் அவர். மாதவிடாய் குறித்து மக்களிடையே இருக்கும் மூட நம்பிக்கைதான் இந்த முறை நீடிப்பதற்கான பிரதான காரணம் என விளக்குகிறார் சாரு. “மாதவிடாய் பருவத்தின்போது வீடுகளில் பெண்கள் இருந்தால், கிராமதேவிக்கு கோபம் வந்துவிடுமென்றும் மொத்த கிராமமும் கடவுளின் சாபத்தை எதிர்கொள்ள வேண்டுமெனவும் முதியவர்கள் கூறுவார்கள்.” அவரின் கணவர் ஒரு கல்லூரி பட்டதாரி. “அவரும் இந்த குர்மா முறைக்கு ஆதரவாக இருக்கிறார்.”
குர்மா முறையை பின்பற்றவில்லையெனில் தண்டனையாக ஒரு கோழியையோ ஆட்டையோ கிராம தெய்வத்துக்கு பலி கொடுக்க வேண்டும். அளவை பொறுத்து ஆட்டின் விலை 4,000-5,000 ரூபாய் வரை வரும் என்கிறார் சாரு.
முரண்நகை என்னவென்றால், மாதவிடாய் பருவத்தில் வீட்டில்தான் சாரு இருக்க முடியாது. ஆனால் நிலத்தில் விவசாயம் பார்க்கலாம். கால்நடைகளை அந்த நாட்களில் மேய்க்கலாம். குடும்பத்துக்கென இரண்டு ஏக்கர் வானம் பார்த்த பூமி இருக்கிறது. அதில் அவர்கள் மாவட்டத்தின் பிரதான பயிரான நெல்லை விளைவிக்கிறார்கள். “அப்போதும் ஓய்வு கிடைக்காது. வீட்டுக்கு வெளியே வேலை பார்ப்பதாகதான் அது இருக்கும். கஷ்டமாக இருக்கும்,” என்கிறார் அவர். அதை போலித்தனம் என்கிறார் அவர். “ஆனால் அதை நிறுத்த என்ன செய்வது? எனக்கு தெரியவில்லை.”
சுகாதார பணியாளர் வேலையின் மூலமாக, மாதத்துக்கு சாரு 2,000-2,500 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். நாட்டிலுள்ள பிற சுகாதாரப் பணியாளர்கள் போல, அவருக்கும் சரியான நேரத்துக்கு சம்பளம் கிடைப்பதில்லை. வாசிக்க: மக்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் பாதிப்பு காலங்களில் கிராமங்கள் மீதான அக்கறை . “3-4 மாதங்கள் கழித்து வங்கிக்கு பணம் வரும்,” என்கிறார் அவர்.
சாருவுக்கும் பிறருக்கும் இம்முறை, பெரும் அலைக்கழிப்பை கொடுக்கிறது. பழமையான குர்மா முறை, நாட்டில் குறைந்த வளர்ச்சி கொண்ட பகுதிகளில் ஒன்றான கட்சிரோலியின் பெரும்பாலான கிராமங்களில் நிலவுகிறது. மாடியா உள்ளிட்ட பழங்குடி சமூகங்கள்தான் அங்கு 39 சதவிகிதம் இருக்கிறது. கிட்டத்தட்ட 76 சதவிகித நிலம் காடுகளால் நிறைந்திருக்கிறது. நிர்வாகரீதியாக அந்த மாவட்டம் ‘பின்தங்கியதாக’ வரையறுக்கப்பட்டிருக்கிறது. தடைசெய்யப்பட்ட மாவோயிச குழுக்களை சேர்ந்தவர்கள் அங்கு இயங்குவதால், பாதுகாப்பு படையினர் பெரியளவில் மலைப்ப்பகுதியில் ரோந்து செய்கின்றனர்.
கட்சிரோலி மாவட்டத்தில் குர்மா முறையை கடைப்பிடிக்கும் கிராமங்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வு எதுவுமில்லை. “அம்முறையை பின்பற்றும் 20 கிராமங்களை நாங்கள் கண்டறிந்து அங்கு இயங்கிக் கொண்டிருக்கிறோம்,” என்கிறார் சச்சின் ஆஷா சுபாஷ். 2016ம் ஆண்டிலிருந்து பாம்ரகாட் தாலுகாவின் கட்சிரோலியில் இயங்கிக் கொண்டிருக்கும் புனேவின் தன்னார்வ தொண்டு நிறுவனமான சமாஜ்பந்த் அமைப்பின் நிறுவனர் அவர். பழங்குடி பெண்களிடம் மாதவிடாய் அறிவியல், சுகாதார பராமரிப்பு ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வையும் குர்மா குடிசைகளால் பெண்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் குறைபாடுகள் குறித்த தெளிவையும் சமாஜ்பந்தின் தன்னார்வலர்கள் ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
சவால் அதிகம்தான் என சச்சின் ஒப்புக் கொள்கிறார். அவர்களின் விழிப்புணர்வு பிரசாரங்களும் பயிற்சிகளும் கடும் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. “குர்மா முறையை உடனடியாக நிறுத்துமாறு அவர்களிடம் சொல்வது அத்தனை எளிதல்ல. அது, அவர்களது பண்பாட்டின் பகுதி என்றும் வெளியாட்கள் தலையிடக் கூடாது என்றும் சொல்வார்கள்.” கிராமத்தின் செல்வாக்கான ஆட்களான பூமியர்களும் (ஊர்த்தலைவர்கள்) பெர்மாக்களும் (தலைமை பூசாரிகளும்) அக்குழுவை எச்சரித்தார்கள். மிரட்டினார்கள். “அவர்களுக்கு புரிய வைக்க முயற்சித்தோம். ஏனெனில் பெண்கள் முடிவெடுக்கும் சுதந்திரம் இங்கு இல்லை,” என்கிறார் சச்சின்.
காலப்போக்கில், சச்சினும் சக தன்னார்வலர்களும் நீர், மின்சாரம், மேஜை காற்றாடிகள், படுக்கைகள் போன்றவற்றை குர்மா குடிசைகளில் வைக்க சில பூமியர்களை ஒப்புக் கொள்ள வைத்தனர். போலவே துணி நாப்கின்களை வீடுகளிலேயே பூட்டப்பட்ட பெட்டிகளில் பெண்கள் வைத்திருப்பதற்கான அனுமதியையும் அவர்கள் பெற்றனர். “சில பூமியாக்கள் எழுத்துப்பூர்வமாக இதை ஒப்புக் கொண்டனர். ஆனால் குர்மா கர்ருக்கு செல்ல விரும்பாத பெண்களை தனிமைப்படுத்த மாட்டோமென அவர்களை சொல்ல வைக்க இன்னும் அதிக காலம் பிடிக்கும்,” என்கிறார் அவர்.
*****
பெஜூரில் பார்வதி தன் படுக்கையை 10க்கு 10 அடி குர்மா குடிசையில் தயார் செய்கிறார். “இங்கிருக்க எனக்கு பிடிக்கவில்லை,” என்கிறார் 17 வயது நிறைந்த அவர் பதட்டத்துடன். 35 குடும்பங்களும் 200 பேருக்கும் சற்று குறைவான மக்களையும் கொண்ட பெஜூர், பாம்ரகாட் தாலுகாவிலுள்ள ஒரு சிறு கிராமம். இங்குள்ள பெண்கள் சொல்லும் கணக்குப்படி, கிராமத்தில் மொத்தம் ஒன்பது மாதவிடாய் குடிசைகள் இருக்கின்றன.
இரவில், நிலாவெளிச்சம் சுவரின் விரிசலின் வழியாக உள்ளே விழுகிறது. குர்மா கர்ரில் பார்வதி வசிக்கும் நாட்களில் அது ஒன்று மட்டும்தான் ஆசுவாசம். “திடீரென நடு இரவில் விழித்தெழுவேன். காட்டு விலங்குகளின் சத்தங்கள் பயமுறுத்தும்,” என்கிறார் அவர்.
நல்ல நிலையில் இருக்கும் அவரது வீடு, மின்சார வசதியுடன் 200 மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. “என் வீட்டில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன். ஆனால் இங்கு அப்படி இருக்க முடியவில்லை. என்னுடைய பெற்றோரும் மாதவிடாய் குறித்த கற்பிதத்துக்காக அஞ்சுகின்றனர்,” என்கிறார் பார்வதி பெருமூச்செறிந்து. “வேறு வழியில்லை. கிராமத்து ஆண்கள் அனைவரும் இந்த விதிகளில் உறுதியாக இருக்கிறார்கள்,” என்கிறார் அவர்.
பார்வதி, பெஜூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எடபள்ளி தாலுகாவிலுள்ள பகவந்த்ராவ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11ம் வகுப்பு படிக்கிறார். அங்குள்ள விடுதியில் வசிக்கும் அவர், விடுமுறைக்கு ஊருக்கு வருவார். “வீட்டுக்கு வரவே எனக்கு பிடிக்காது,” என்கிறார் அவர். “கோடையில் வெயில் அதிகமாக இருக்கும். இரவு முழுக்க இந்த குடிசையில் வியர்வையில் இருப்பேன்.”
குர்மா கர்ரில் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களிலேயே, கழிவறைகளும் நீரும் இல்லாதிருப்பதுதான் கடுமையான சிக்கல். இயற்கை உபாதைக்காக குடிசைக்கு பின் இருக்கும் புதர்களை பார்வதி நாட வேண்டியிருக்கிறது. “இரவில் முழுக்க இருட்டாக இருக்கும். தனியாக செல்வது பாதுகாப்பாக இருக்காது. பகலிலோ வழிபோக்கர்களை கண்காணிக்க வேண்டும்,” என்கிறார் அவர். பார்வதியின் வீட்டிலிருந்து ஒருவர், சுத்தப்படுத்தவும் கழுவவும் ஒரு பக்கெட் நீரை கொண்டு வந்து வைத்து விட்டு செல்வார். குடிநீரை ஒரு ஜாடியில் விட்டு செல்வார். “ஆனால் நான் குளிக்க முடியாது,” என்கிறார் அவர்.
அவருக்கான உணவை குடிசைக்கு வெளியே மண் அடுப்பில் சமைக்கிறார். இருட்டில் சமைப்பது சுலபமில்லை என்கிறார் அவர். “வீட்டில் நாங்கள் பெரும்பாலும் மிளகாய்ப்பொடி மற்றும் உப்பு போட்ட சோற்றை சாப்பிடுவோம். அல்லது ஆட்டுக்கறி, சிக்கன், மீன்…” உணவை பட்டியலிடுகிறார் பார்வதி. மாதவிடாய் காலத்திலும் அவைதான் உணவு. ஒரே வித்தியாசம், மாதவிடாய் காலத்தில் அவரே அவருக்கு சமைத்துக் கொள்ள வேண்டும். “தனிப் பாத்திரங்கள் அச்சமயத்தில் பயன்படுத்தவென வீட்டிலிருந்து அனுப்பப்படும்,” என்கிறார் பார்வதி.
நண்பர்களுடனும் பக்கத்து வீட்டாருடனும் குடும்பத்தினருடனும் பேசுவதற்கு குர்மா கர்ரில் இருக்கும்போது அனுமதி இல்லை. “குடிசையிலிருந்து பகல் நேரத்தில் நான் வெளியே வர முடியாது. கிராமத்தை சுற்றியும் செல்ல முடியாது. யாருடனும் பேசவும் முடியாது,” என்கிறார் பார்வதி கட்டுப்பாடுகளை பட்டியலிட்டு.
*****
மாதவிடாய் பெண்களை அசுத்தமானவர்களென சொல்லி தனிமைப்படுத்தும் முறையால் பல விபத்துகளும் மரணங்களும் பாம்ரகாடில் நேர்ந்திருக்கின்றன. “கடந்த ஐந்து வருடங்களில், நான்கு பெண்கள் பாம்பு மற்றும் தேள் கடிகளால் இறந்திருக்கின்றனர்,” என்கிறார் R.S. சவான். பாம்ரகாடின் குழந்தைகள் நல மேம்பாட்டு திட்ட அலுவலராக அவர் இருக்கிறார். மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் பிரதிநிதி அவர்.
உடைந்து கொண்டிருக்கும் குர்மா கட்டடங்களுக்க்கு மாற்றாக 2019ம் ஆண்டில் மாவட்ட நிர்வாகம் ஏழு ‘வீடுகளை’ கட்டிக் கொடுத்தது எனக் கூறுகிறார் சவான். ஒவ்வொரு குடிசையிலும் ஒரே நேரத்தில் 10 பெண்கள் இருக்க முடியும். வட்ட வடிவக் கட்டடத்தில் காற்றோட்டத்துக்கென ஜன்னல்களும் உண்டு. கழிவறைகளும் படுக்கைகளும் நீரும் மின்சாரமும் அவை கொண்டிருக்கும்.
ஜூன் 2022-ல் அரசாங்கம் வெளியிட்ட செய்தியறிக்கை , 23 ‘பெண்களின் ஓய்வு மையங்கள்’ அல்லது மகிளா விசவா கேந்திராக்கள், கட்சிரோலியில் குர்மா கர்கள் இருந்த இடங்களில் கட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டது. ஒன்றிய அரசின் உதவியோடும் மகாராஷ்டிரா யுனிசெஃப்பின் தொழில்நுட்ப உதவியோடும், அடுத்த இரண்டு வருடங்களில் 400 மையங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால் பாம்ரகாடில் அரசாங்கம் கட்டியிருக்கும் மூன்று குர்மா வீடுகளுக்கு - கிருஷ்ணார், கியார் மற்றும் குமார்குடா கிராமங்களில் - பாரி மே 2023-ல் சென்று பார்த்தபோது, அவை பாதி கட்டிமுடிக்கப்படாமல், வசிப்பதற்கு வழியின்றி இருந்தன. ஏழு குர்மா வீடுகளும் செயல்பட்டனவா என்பதை உறுதி செய்ய முடியாத சவான், “சரியாக சொல்வது கடினம். ஆனால் பராமரிப்பு மோசமாக இருப்பது உண்மைதான். சிலவை மோசமாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சில இடங்களில், நிதியின்றி அவை முடிக்கப்படாமல் இருக்கின்றன,” என்கிறார்.
கேள்வி என்னவென்றால், இத்தகைய மாற்று, எப்படி குர்மா முறையை ஒழிக்க முடியும்? “முழுமையாக அது ஒழிக்கப்பட வேண்டும்,” என்கிறார் சமாஜ்பந்தின் சச்சின் ஆஷா சுபாஷ். “அரசாங்க குர்மா வீடு தீர்வு கிடையாது. ஒருவகையில் அது ஆதரவளிப்பதாகவே அமையும்.”
மாதவிடாய் தனிமைப்படுத்துதல், எந்த வடிவத்திலும் தீண்டாமை அனுமதிக்கப்படக் கூடாது என்கிற இந்திய அரசியல் சாசனத்தின் 17வது பிரிவுக்கு எதிராக இருக்கிறது. Indian Young Lawyers Association vs The State Of Kerala வழக்கில் 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இப்படி சொன்னது : “மாதவிடாயை அடிப்படையாகக் கொண்டு பெண்களை சமூக விலக்கம் செய்வது தீண்டாமையின் வடிவம்தான். அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ‘தூய்மை மற்றும் மாசு’ ஆகிய தன்மைகளை கொண்டு தனி நபர்களை ஒதுக்கும் முறைக்கு, அரசியல் சாசனத்தில் இடமில்லை.”
எனினும் ஆணாதிக்க அதிகாரத்தில் பாகுபாடு நிறைந்த அம்முறை இன்னும் நீடிக்கிறது.
“இது கடவுளை பற்றிய விஷயம். எங்களின் கடவுள் இம்முறையை நாங்கள் பின்பற்ற விரும்புகிறது. நாங்கள் அடிபணியாவிட்டால், விளைவுகளை நாங்கள் சந்திக்க வேண்டும்,” என்கிறார் பாம்ரகாட் தாலுகாவின் கொலாகுடா கிராமத்தின் தலைமைப் பூசாரியான லஷ்மண் ஹொயாமி. “எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் வரும். மக்களுக்கு இழப்புகள் ஏற்படும். நோய்கள் அதிகரிக்கும். எங்களின் கால்நடைகள் சாகும். இதுதான் எங்களின் பாரம்பரியம். நாங்கள் இதை பின்பற்றாமல் இருக்க முடியாது. அப்படி இருந்தால் பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் தண்டிக்கப் படுவோம். இந்த பாரம்பரியம் எப்போதும் தொடரும்,” என்கிறார் அவர் உறுதியாக.
ஹொயாமி போல பலரும் குர்மா முறை பின்பற்றப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாலும் சில இளம்பெண்கள், அதை பின்பற்றுவதில்லை என்கிற உறுதியில் இருக்கின்றனர். கிருஷ்ணார் கிராமத்தின் 20 வயது அஷ்வினி வெலஞ்சே அவர்களில் ஒருவர். ”குர்மா முறையை பின்பற்ற முடியாது என்கிற நிபந்தனையில்தான் நான் திருமணம் செய்தேன். இது நிறுத்தப்பட வேண்டும்,” என்கிறார் 2021ம் ஆண்டில் 12ம் வகுப்பு முடித்த அஷ்வினி. இந்த வருட மார்ச் மாதத்தில் அவர் 22 வயது அஷோக்கை, தன் நிபந்தனையை ஏற்ற பிறகு, திருமணம் செய்துள்ளார்.
14 வயதிலிருந்து அஷ்வினி, குர்மா முறையை பின்பற்றியிருக்கிறார். “என் பெற்றோருடன் வாக்குவாதம் செய்திருக்கிறேன். ஆனால் சமூக அழுத்தத்தால் ஏதும் செய்ய முடியவில்லை,” என்கிறார் அவர். திருமணத்துக்கு பிறகு, மாதவிடாய் நாட்களை வீட்டு வராண்டாவில் கழிக்கிறார் அஷ்வினி. குடும்பத்தை நோக்கி வரும் எதிர்ப்பை எதிர்த்து தொடர்ந்து அவர் இம்முறைக்கு எதிராக போராடி வருகிறார். “குர்மா கர்ரிலிருந்து வீட்டு வராண்டா வரை நகர்ந்து விட்டேன். விரைவிலேயே மாதவிடாய் காலத்தில் வீட்டிலேயே இருக்கும் நிலையை உருவாக்குவேன்,” என்கிறார் அஷ்வினி. “நிச்சயமாக என் வீட்டில் நான் மாற்றத்தை கொண்டு வருவேன்.”
தமிழில் : ராஜசங்கீதன்