"நாங்கள் வாழ்நாள் முழுவதும் ஆவணங்களை சமர்ப்பிப்பதிலும், இங்குள்ளவர்களைப் போலவே நாங்களும் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அரசுக்கும், சக குடிமக்களுக்கும் நிரூபிப்பதிலும்  செலவிட்டு வருகிறோம்."

பஹருல் இஸ்லாம், குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். பிளாஸ்டிக் பாட்டில்கள், ஈரமான குப்பைகள், அட்டை, தெர்மாகோல் என ஒவ்வொன்றையும் தனித்தனி பிளாஸ்டிக் சாக்குகளில் போட்டு அவர் அடுக்கி வைக்கிறார். 35 வயதான இவர், அசாமின் பார்பேட்டா, போங்கைகான், கோல்பாரா ஆகிய மாவட்டங்களின் 13 புலம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர். அவர்கள் ஹரியானாவின் அசர்பூர் நகரில்  ஒன்றாக வசிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் குப்பை சேகரித்தல் மற்றும் தரம் பிரித்தல் ஆகும்.

"இங்கும், அசாமிலும் மக்கள் எப்போதும் எங்கள் அடையாளத்தை கேள்வி கேட்கிறார்கள்." ஒவ்வொருவரிடமிருந்தும் ஆவணங்களைக் கோரி அதிகாரிகள் தனது பகுதிக்கு வந்து செல்வதாக பஹருல் கூறுகிறார். "நாங்கள் குப்பைகளை எடுக்கச் செல்லும்போது, நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று மக்கள் கேட்கிறார்கள். அசாம் என்று கூறினாலும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று எங்களை நினைத்துக் கொள்கிறார்கள். குற்றவியல் பதிவு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த காவல்துறையினர் அசாம் போலீஸின் உறுதியைப் பெற்றுத் தர பெரும்பாலும் கேட்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். "நாங்கள் என்ன சொல்கிறோம் என்பது முக்கியமல்ல," என்கிறார் அசாமில் நடத்தப்படும் குடிமக்களுக்கான தேசிய பதிவேடு (NRC) குறித்து அறிந்த பஹருல். நில உரிமை ஆவணங்கள் இருப்பதால் கவலையில்லை என்று கூறுகிறார்.

அதே வளாகத்தில் வசிக்கும் சகோதரர்களான ரியாஸ், நூர் இஸ்லாம் ஆகியோர், பிரம்மபுத்திரா நதிக்கு அருகில் தங்கள் நிலத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான வெள்ள பாதிப்பால், விவசாயத்தை நம்பியிருக்க முடியவில்லை என்றும், இதனால் அசாமை விட்டு வெளியேறியதாகவும் கூறுகின்றனர். பார்பேட்டாவில், அவர்களின் பெற்றோர் 800 சதுர அடி நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். அதில் அவர்கள் பச்சை மிளகாய், தக்காளி மற்றும் பிற காய்கறிகளை பயிரிடுகிறார்கள். "கனமழை பெய்யும் போது, ஆற்று நீர் எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து, எங்களை வெளியேற்றுகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க வாழை மரக் கட்டைகளைப் பயன்படுத்துகிறோம்," என்று சகோதரர்கள் கூறுகின்றனர். தேசிய ரிமோட் சென்சிங் மையத்தின் (NRSC) கூற்றுப்படி, 1998 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் அசாம் மாநிலத்தில் சுமார் 28.75 சதவிகித நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

PHOTO • Harsh Choudhary
PHOTO • Najam Sakib

இடது: பஹருல் இஸ்லாம், தரம் பிரிப்பதற்காக சேகரித்த குப்பைகளை தரையில் கொட்டுகிறார். வலது: ஹரியானாவின் அசாவர்பூர் கிராமத்தில் பஹருலின் வீட்டிற்கு அருகில் குப்பை பைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன

PHOTO • Najam Sakib
PHOTO • Harsh Choudhary

ரியாஸ் இஸ்லாம் (இடது) மற்றும் அவரது சகோதரர் நூர் (வலது) ஆகியோர் ஹரியானாவின் சோனிபட்டுக்கு குடிபெயர்ந்தனர். ஏனெனில் அவர்களின் சொந்த ஊரான அசாமில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு விவசாயத்தைத் தொடர முடியவில்லை

பஹருல், ரியாஸ், நூர் ஆகியோர் இப்போது அசாமில் தங்கள் வீடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வசிக்கின்றனர். அதேபோல் மற்ற 11 புலம்பெயர்ந்த குடும்பங்களும் வசிக்கின்றனர். அனைவரும் அசாமின் பார்பேட்டா, போங்கைகான் மற்றும் கோல்பாரா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள், ஒன்றாக வாழ்கிறார்கள். இந்த அந்நிய சூழலில் ஒருவருக்கொருவர் ஆதரவை வழங்குகிறார்கள். அவர்கள் சந்திக்கும் புலம்பெயர்வின் தினசரி சங்கடத்தை சமாளித்துக் கொள்கிறார்கள்.

பஹருல் கூறுகிறார், "இங்குள்ளவர்களுக்கு பணம் தேவைப்பட்டால், நாங்கள் அதை கொடுத்து ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம். ஒரு சிலரால் மட்டுமே அசாமுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் திரும்ப முடியும் என்பதால், மற்றவர்கள் இங்கே ஒன்றுகூடி மீத்தி ஈத், பக்ரீத் போன்ற பண்டிகைகளை கொண்டாடுகிறோம். ரமலான் மாதத்தில், நாங்கள் எப்போதாவது செஹ்ரியையும் பகிர்ந்து கொள்கிறோம்.”

பெருந்தொற்றுக்கு முன்பே பெரும்பாலான குடும்பங்கள் 2017ஆம் ஆண்டு இங்கு வந்தன. 2021ஆம் ஆண்டு மற்றவர்கள் பின்தொடர்ந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த இடத்தை மாதம் ரூ.17,000-க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் ஆயிரம் ரூபாய்க்கு சற்று அதிகமாக செலுத்துகின்றன. பஹருலின் மனைவி மோஃபிதா போன்ற பெண்களும் வேலையில் உதவுகிறார்கள். போங்கைகானைச் சேர்ந்த மோஃபிடா, 10ஆம் வகுப்பு படித்தவர், அசாமிய மொழியைத் தவிர ஆங்கிலம் படிக்கவும், எழுதவும் தெரிந்தவர். ஒவ்வொரு குடும்பமும் சேகரித்த குப்பைகளை அளந்து சிறிய புத்தகத்தில் குறிப்பெடுக்க அவர் உதவுகிறார்.

அனைத்து குடும்பங்களும் குப்பைகளைச் சுற்றி வேலை செய்கின்றன: சிலர் குடியிருப்பு பகுதிகளிலிருந்து குப்பைகளை சேகரிக்கிறார்கள். பஹருல் போன்றவர்கள் அருகாமை தொழிற்சாலைகள், தொழில்துறை பகுதிகளிலிருந்து குப்பைகளை சேகரிக்கின்றனர். சிறு குழந்தைகளும் கழிவுகளைப் பிரித்தல் போன்ற வேலைகளைச் செய்ய உதவுகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் குப்பைகளை சேகரிப்பதற்கு பெரியவர்களுடன் உதவிக்கு செல்கிறார்கள்.

PHOTO • Harsh Choudhary
PHOTO • Harsh Choudhary

இடது: பஹருல், அவரது மனைவி மோஃபிதா இருவரும் குப்பைகளை பிரித்து வியாபாரிகளுக்கு விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வளாகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் சேகரித்த குப்பைகளை அளவிடுவதற்கும், குறித்து வைப்பதற்கும் மோஃபிடா உதவுகிறார். வலது: மூங்கில் கழிகளில் போர்த்தப்பட்டிருக்கும் பஹருலின் வீடு

PHOTO • Harsh Choudhary
PHOTO • Najam Sakib

இடது: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை நகரைச் சுற்றி குப்பைகளை சேகரிக்கும் பணியில் நூர் ஈடுபட்டுள்ளார். வலது: இப்பகுதியில் வசிப்பவர்கள் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து வியாபாரிகளிடம் விற்கின்றனர்

"நாங்கள் காலை 7 மணிக்கு பணியை தொடங்குவோம். நகரத்திற்குள் சென்று குப்பைகளை சேகரித்து பின்னர் மாலை 3 மணியளவில் திரும்பி வருவோம்," என்று நூர் இஸ்லாம் கூறுகிறார். ஆனால் வேலைப் பளு இருந்தால், வீடு திரும்ப அவர்களுக்கு இரவு 9 மணி ஆகிவிடும் என்று கூறுகிறார். குப்பைகள் சேகரிக்கப்பட்டவுடன், அது சுமார் 30-35 வகைகளாக பிரிக்கப்படுகிறது: பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், பிளாஸ்டிக் சாக்குகள், சப்பாத்திகள், தெர்மாகோல், கண்ணாடி பொருட்கள் மற்றும் பல. "பின்னர் நாங்கள் குப்பைகளை உள்ளூர் வியாபாரிகளிடம் விற்கிறோம்," என்று பஹருல் கூறுகிறார். தேவையின் அடிப்படையில் வியாபாரி விலையை தீர்மானிக்கிறார். குப்பை சேகரித்தவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். "ஒரு கிலோ தெர்மாகோலின் விலை ரூ.15 முதல் 30 வரை வேறுபடுகிறது," என்கிறார் பஹருல்.

குடும்ப வருமானம் ஒரு மாதத்திற்கு ரூ.7,000 முதல் 10,000 வரை உள்ளது. கோடைக்காலங்களில் குடிநீருக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில் அதிக அளவு கிடைக்கிறது.

"எங்கள் வருமானத்தில் கிட்டத்தட்ட பாதி வாடகை, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களுக்காக செலவிடப்படுகிறது. மின்சாரம், தண்ணீர் கட்டணங்கள் தனித்தனியாக உள்ளன. மின்சாரக் கட்டணம் சுமார் ரூ.1,000 வருகிறது," என்கிறார் பஹருல். இப்பகுதியில் கிடைக்கும் குழாய் நீர் நுகர்வுக்கு தகுதியற்றதாக இருப்பதால், இக்குடும்பங்கள் குடிநீரை ஒரு சப்ளையரிடமிருந்து வாங்க வேண்டும்.

உணவுக்கு கூடுதலாக செலவாகிறது என்று பஹருல் குறிப்பிடுகிறார். "நாங்கள் வீட்டிலேயே [அசாமில்] ரேஷன் பொருட்களைப் பெறுகிறோம்," என்று பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்படும் உணவு தானியங்களைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். "ஆனால் இங்கு [ஹரியானாவில்] ரேஷன் பொருட்களுக்காக ஹரியானா அடையாள அட்டை தேவைப்படுகிறது. அது எங்களிடம் இல்லை," என்று கூறுகிறார்.

இந்தியாவிற்குள் உள்நாட்டில் குடியேறியவர்கள் உட்பட அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு 2019 முதல், நாடு தழுவிய பெயர்வுத்திறன் திட்டமான ONORC (ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை) பற்றி பஹருலுக்குத் தெரியாது. "அது பற்றி எனக்குத் தெரியாது," என்று அவர் இந்த செய்தியாளரிடம் கூறுகிறார்.

PHOTO • Harsh Choudhary
PHOTO • Harsh Choudhary

பிளாஸ்டிக் பாட்டில்கள் (இடது) நல்ல வருமானத்தைத் தருகின்றன. பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், பிளாஸ்டிக் சாக்குகள், சப்பாத்திகள், தெர்மாகோல், கண்ணாடி பொருட்கள், அட்டை என பல வகையாக பிரிக்கப்படுகின்றன

PHOTO • Najam Sakib
PHOTO • Harsh Choudhary

குழந்தைகள் (இடது) பெரும்பாலும் உதவுகிறார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஆவணங்களைக் கோருவதற்காக அதிகாரிகள் தங்கள் வீடுகளுக்கு வந்து செல்வதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்

அவர்களின் தற்காலிக வீடுகள் மூங்கில் கழிகளில் நீட்டப்பட்ட தார்ப்பாய்களால் கட்டப்பட்டுள்ளன. வகை பிரிக்கப்பட்ட, பிரிக்கப்படாத குப்பைக் கழிவுகளை ஒருவருக்கொருவர் வீடுகளின் அருகே கொட்டுகின்றனர். அவர்களின் குழந்தைகள் அங்குமிங்கும் ஓடுகிறார்கள். இந்த அறிக்கை யின்படி, பெற்றோருடன் நகரங்களுக்கு குடிபெயர்ந்த குழந்தைகளில் 55 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இந்த வட்டாரத்தில் வசிக்கும் பல குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடர்வதற்கு பதிலாக வேலைக்குச் செல்வதைத் தேர்வு செய்கிறார்கள். ரியாஸின் 12 வயது மகன் அன்வர், மூன்றாம் வகுப்பு முடித்த பிறகு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டான். அவன் இப்போது ரியாஸுக்கு குப்பை சேகரித்தல், தரம் பிரித்தல் ஆகியவற்றில் உதவுகிறான். "ஒரு கபாடிவாலாவின் மகனை யாரும் நெருங்குவதில்லை. எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. என் தந்தைக்கு உதவுவதற்காக, நான் படிப்பை நிறுத்திவிட்டேன்," என்கிறான் அன்வர்.

சோனிபட்டுக்கு வருவதற்கு முன்பு, பஹருல் சென்னையில் மூன்று ஆண்டுகள் கல்லூரியில் பாதுகாவலராக பணியாற்றினார். "நான் ஒரு சக கிராமவாசியின் பாதையை பின்பற்றி இங்கு வந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

"நான் இந்த வேலை செய்கிறேன் என்று என் பெற்றோரிடமும், கிராம மக்களிடமும் சொன்னால், அவமானம்", என்று பஹருல் கூறுகிறார். "நான் பள்ளிகளில் சிறு சிறு வேலைகளைச் செய்வதாக சொல்லி வைத்திருக்கிறேன்." புலம்பெயர்தலில் உள்ள சவால்களை வேறு வழிகளிலும் உணர்கிறேன் என்று அவர் கூறுகிறார்: "அசாமில் மீன் எங்கள் முக்கிய உணவு. ஆனால், இங்கு மீன் சாப்பிட்டால் அக்கம்பக்கத்தினர் நம்மை கேவலமாக பார்க்கிறார்கள்; அதை மிகவும் ரகசியமாக சமைத்து சாப்பிட வேண்டியிருக்கிறது," என்றார்.

அசாமில் ஒரு சிறிய நிலத்தை வாங்கி தனது மக்களுடன் வாழுவதற்கு போதுமான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பது அவரது கனவு. "யாரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பொய் சொல்ல விரும்புவதில்லை. நாங்கள் அனைவரும் கண்ணியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம்."

தமிழில் : சவிதா

Student Reporter : Harsh Choudhary

సోనీపత్‌లోని అశోకా విశ్వవిద్యాలయ విద్యార్థి అయిన హర్ష్ చౌధరి, మధ్యప్రదేశ్‌లోని కుక్దేశ్వర్‌లో పుట్టిపెరిగారు.

Other stories by Harsh Choudhary
Editor : PARI Desk

PARI డెస్క్ మా సంపాదకీయ కార్యక్రమానికి నాడీ కేంద్రం. ఈ బృందం దేశవ్యాప్తంగా ఉన్న రిపోర్టర్‌లు, పరిశోధకులు, ఫోటోగ్రాఫర్‌లు, చిత్రనిర్మాతలు, అనువాదకులతో కలిసి పని చేస్తుంది. PARI ద్వారా ప్రచురితమైన పాఠ్యం, వీడియో, ఆడియో, పరిశోధన నివేదికల ప్రచురణకు డెస్క్ మద్దతునిస్తుంది, నిర్వహిస్తుంది కూడా.

Other stories by PARI Desk
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha