தூரச் செல்கிறேன், அந்நிய நிலத்துக்கு செல்கிறேன்
இது ஒரு நெடியப் பயணம், அன்பு குஞ்ச் பறவையே.. நான் தூரச் செல்கிறேன்
புதிதாய் திருமணம் முடித்த பெண் இப்பாடலை, குஞ்ச் பறவை எனப்படும் கொக்கை பார்த்து பாடுகிறார். சொந்த வீட்டை விட்டு, கணவர் வீட்டுக்குக் கிளம்பத் தயாராகும் பெண், தன் பயணத்தையும் கொக்கின் பயணம் போன்றதென நினைக்கிறார்.
ஒவ்வொரு வருடமும் மென்மையான, சாம்பல் நிற இறகுகளை கொண்ட இப்பறவைகள், மத்திய ஆசியாவிலிருக்கும் அவற்றின் இனவிருத்தி நிலங்களிலிருந்து மேற்கு இந்தியாவின் வறண்ட வெளிகளுக்கு, குறிப்பாக குஜராத்துக்கும் ராஜஸ்தானுக்கும் பறந்து வருகின்றன. கிட்டத்தட்ட 5,000 கிலோமீட்டரை தாண்டி பயணிக்கும் அவை, மீண்டும் செல்வதற்கு முன் இங்கு நவம்பரிலிருந்து மார்ச் மாதம் வரை தங்கியிருக்கின்றன.
ஆண்ட்ரூ மில்ஹம் தன்னுடைய Singing like Larks புத்தகத்தில், “பறவையியல் பாடல் வகை அச்சுறுத்தலில் இருக்கிறது. வேகமாக ஓடும் இன்றைய தொழில்நுட்ப உலகில் அவற்றுக்கு இடமில்லாமல் போய்விட்டது,” என்கிறார். பறவைகளுக்கும் நாட்டுப்புற பாடல்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக சொல்லும் அவர், இரண்டுமே அவற்றின் சிறகுகளில் நம்மை வீடுகள் தாண்டிய உலகுக்கு சுமந்து செல்லக்கூடியவை என்கிறார்.
நாட்டுப்புற பாடல்கள் வெகு அரிதாக பாடப்படும் காலத்தில் வாழ்கிறோம். அருகி வரும் வகையாக அவை மாறியிருக்கின்றன. ஆனால் அவற்றை உருவாக்கியவர்களும் கற்றுக் கொண்டவர்களும் அப்பாடல்களை வானத்தை பார்த்தும், சுற்றியுள்ள உலகை கவனித்தும் சொந்த மக்களை அவதானித்தும் வாழ்க்கைப் பாடங்களையும் படைப்பூக்கத்தையும் பெற்று பாடியிருக்கின்றனர்.
இப்பறவைகள் கட்ச்சிப் பாடல்களுக்குள்ளும் கதைகளுக்கும் இடம்பெற்றதில் ஆச்சரியமில்லை. முந்த்ரா தாலுகாவை சேர்ந்த பத்ரேசர் கிராமத்தின் ஜுமா வகெர் இப்பாடலை பாடும் விதம் அதை மேலும் அழகாக்கியிருக்கிறது.
કરછી
ડૂર તી વિના પરડેસ તી વિના, ડૂર તી વિના પરડેસ તી વિના.
લમી સફર કૂંજ મિઠા ડૂર તી વિના,(૨)
કડલા ગડાય ડયો ,વલા મૂંજા ડાડા મિલણ ડયો.
ડાડી મૂંજી મૂકે હોરાય, ડાડી મૂંજી મૂકે હોરાય
વલા ડૂર તી વિના.
લમી સફર કૂંજ વલા ડૂર તી વિના (૨)
મુઠીયા ઘડાઈ ડયો વલા મૂંજા બાવા મિલણ ડયો.
માડી મૂંજી મૂકે હોરાઈધી, જીજલ મૂંજી મૂકે હોરાઈધી
વલા ડૂર તી વિના.
લમી સફર કૂંજ વલા ડૂર તી વિના (૨)
હારલો ઘડાય ડયો વલા મૂંજા કાકા મિલણ ડયો,
કાકી મૂંજી મૂકે હોરાઈધી, કાકી મૂંજી મૂકે હોરાઈધી
વલા ડૂર તી વિના.
લમી સફર કૂંજ વલા ડૂર તી વિના (૨)
નથડી ઘડાય ડયો વલા મૂંજા મામા મિલણ ડયો.
મામી મૂંજી મૂકે હોરાઈધી, મામી મૂંજી મૂકે હોરાઈધી
વલા ડૂર તી વિના.
தமிழ்
தூரச் செல்கிறேன், அந்நிய நிலத்துக்கு
செல்கிறேன் (2)
இது ஒரு நெடியப் பயணம், அன்பு குஞ்ச் பறவையே..
நான் தூரச் செல்கிறேன் (2)
கொலுசுகளை செய், என் கால்களை அலங்கரி;
என் தாத்தாவை நான் பார்க்க வேண்டும்.
பாட்டி என்னை வழியனுப்பி வைப்பார்.
அன்பே, நான் இங்கிருந்து தூரச் செல்கிறேன்.
இது ஒரு நெடியப் பயணம், அன்பு குஞ்ச் பறவையே..
நான் தூரச் செல்கிறேன் (2)
எனக்கு வளையல்கள் செய். என் கைகளை அலங்கரி.
என் அப்பாவை நான் பார்க்க வேண்டும்.
அம்மா என்னை வழியனுப்பி வைப்பார்.
அன்பே, நான் இங்கிருந்து தூரச் செல்கிறேன்.
இது ஒரு நெடியப் பயணம், அன்பு குஞ்ச் பறவையே..
நான் தூரச் செல்கிறேன் (2)
எனக்கு ஒரு கழுத்தணி செய், கழுத்தில் அணிய.
என் மாமாவை நான் பார்க்க வேண்டும்
அத்தை என்னை வழியனுப்பி வைப்பார்.
அன்பே, நான் இங்கிருந்து தூரச் செல்கிறேன்.
இது ஒரு நெடியப் பயணம், அன்பு குஞ்ச் பறவையே..
நான் தூரச் செல்கிறேன் (2)
எனக்கு ஒரு மூக்குத்தி செய்து கொடு.
என் தாய்மாமனை நான் பார்க்க வேண்டும்.
அத்தை என்னை வழியனுப்பி வைப்பார்.
அன்பே, நான் இங்கிருந்து தூரச் செல்கிறேன்.
இது ஒரு நெடியப் பயணம், அன்பு குஞ்ச் பறவையே..
நான் தூரச் செல்கிறேன் (2)
பாடல் வகை: பாரம்பரிய நாட்டுப்புற பாடல்
தொகுப்பு: திருமணப் பாடல்கள்
பாடல்: 9
பாடலின் தலைப்பு: தூர் தி வினா, பர்தேஸ் தி வினா
இசையமைப்பாளர்: தேவால் மேத்தா
பாடகர்: முந்த்ரா தாலுகாவின் பத்ரேசர் கிராமத்தை சேர்ந்த ஜுமா வகெர்
பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள்: மேளம், ஹார்மோனியம், பாஞ்சோ
பதிவு செய்யப்பட்ட வருடம்: 2012, KMVS ஸ்டுடியோ
சூர்வானி என்கிற ரேடியோவால் பதிவு செய்யப்பட்ட இந்த 341 பாடல்கள், பாரிக்கு கட்ச்ச் மகிளா விகாஸ் சங்காதன் (KMVS) மூலமாக கிடைத்தது. இப்பாடல்களை கேட்க: கட்ச்சி நாட்டுப்புற பாடல்களின் பெட்டகம்
ப்ரீத்தி சோனி, KMVS-ன் செயலாளர் அருணா தொலாகியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா ஆகியோருக்கும் குஜராத்தி மொழிபெயர்ப்பு செய்த பார்தி பென் கோருக்கும் நன்றி
தமிழில் : ராஜசங்கீதன்