சோபி சாஹா கடந்த 25 ஆண்டுகளாக காகிதப் பாக்கெட்டுகளை தயாரித்து வருகிறார். "முதலில், நான் ஒரு கத்தியை பயன்படுத்தி காகிதத்தை மூன்று பகுதிகளாகப் வெட்டுகிறேன். அது ஆறு துண்டுகளை உருவாக்கும். பின்னர் அதன் முனைகளை ஒட்டுகிறேன். அதன் பிறகு காகிதத்தை ஒரு சதுரமாக மடித்து மறுபுறம் பசை தடவுவேன். இப்படித்தான் நான் ஒவ்வொரு பாக்கெட்டையும் செய்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.
ஆதித்யபூரில் வசிக்கும் இந்த 75 வயது மூதாட்டி தனது இரண்டடுக்கு மண் வீட்டின் முற்றத்திலும் தாழ்வாரத்திலும் சிதறிக் கிடக்கும் பழைய செய்தித்தாள்களுக்கு மத்தியில் அமர்ந்துக் கொண்டு எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
1998-ல் இதை அவர் தொடங்கும் போது, அவரது கணவர் ஆனந்தகோபால் சாஹா உயிருடன் இருந்தார். கிராம மக்களின் மாடு மற்றும் ஆடுகளை அவர் கவனித்து கொண்டதால், ஒரு நாளைக்கு சுமார் ரூ 40-50 வரை சம்பாதித்து வந்தார். அப்போது "நாங்கள் வறுமையில் இருந்தோம்," என்கிறார் சுன்ரி சமூகத்தைச் சேர்ந்த சோபி சாஹா. "உணவுக்கேனும் கொஞ்சம் சம்பாதிக்கலாம் என்பதற்காக இந்த வேலையைச் செய்ய முடிவு செய்தேன்."
அண்டை வீட்டாரால் தூக்கி எறியப்பட்ட செய்தித்தாள்களை சேகரிப்பதிலிருந்து அவர் தொடங்கியுள்ளார். உள்ளூர் மளிகைக் கடைகளில் கிடைத்த பேப்பர் பாக்கெட்டுகளைப் பார்த்து, அவற்றை எப்படிச் செய்வது என்று தனக்குத்தானே கற்றுக் கொண்டுள்ளார். "இதை செய்ய தேவைப்படும் எல்லா பொருட்களும் எளிதில் கிடைக்கக்கூடியவை என்பதாலும், இதை நான் வீட்டிலேயே செய்ய முடியும் என்பதாலும் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன்," என்று விவரிக்கும் சோபி, "முதலில், நான் பொறுமையாக செய்தேன். ஒரு பாக்கெட்டை செய்யவே எனக்கு 25 முதல் 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது," என்றும் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு நாளைக்கு சுமார் ஒரு கிலோ பைகள் மட்டுமே என்னால் செய்ய முடியும்," என்கிறார்.
போல்பூரில் உள்ள 8-9 மளிகைக் கடைகள் மற்றும் சாப் மற்றும் குக்னி போன்ற உள்ளூர் உணவுகளை விற்கும் சிறிய உணவகங்களுக்கு இந்த பாக்கெட்டுகளை அவர் விற்கிறார். இதற்காக பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போல்பூர்-ஸ்ரீநிகேதன் ஒன்றியத்தில் உள்ள தனது கிராமத்திலிருந்து பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவர் பேருந்தில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அவரது கால்வலியால், "இனி தன்னால் போல்பூருக்கு செல்ல முடியாது," என்று கூறுகிறார் அவர். அதற்கு பதிலாக, தனது கிராமத்தில் உள்ள ஒரு சில கடைகளுக்கு மட்டும் தற்போது பேப்பர் பாக்கெட்டுகளை விநியோகித்து வருகிறார்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன் இதன் ஆரம்ப நாட்களில் அவருக்கு காகிதங்கள் இலவசமாக கிடைத்துள்ளது. ஆனால், செய்தித்தாள்கள் அதிக விலை இல்லாத காரணத்தால், அதிலிருந்து செய்யப்பட்ட பாக்கெட்டுகளுக்கும் அதிக பணம் கிடைக்கவில்லை. "நான் [இப்போது] ஒரு கிலோ காகிதங்களை 35 ரூபாய்க்கு வாங்குகிறேன்," என்கிறார் சோபி.
2004ம் ஆண்டில், தன் 56வது வயதில் தனது கணவரை அவர் இழந்தார். அவரது மூன்று மகன்களும் திருமணமானவர்கள். அவர்கள், சொந்தமாக சிறு தொழில்களை செய்து வருகின்றனர். இவர் வீட்டின் ஒரு பகுதியில் வசிக்க, அவரது இளைய மகன் சுகுமார் சாஹா தனது குடும்பத்துடன் மற்றொரு பகுதியில் வசிக்கிறார். அவரது இரண்டு மூத்த மகன்களும் போல்பூர் நகரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் வசித்து வருகின்றனர்.
அண்டை வீட்டார் எறிந்த செய்தித்தாள்களை சேகரித்த சோபி சாஹா, கடைகளில் பார்த்த பேப்பர் பாக்கெட்டுகளை போல அவற்றில் செய்யத் தொடங்கினார்
அவருடைய நாள் காலை 6 மணிக்கே தொடங்கிவிடும். "நான் எழுந்து என் சொந்த வேலைகளைச் செய்வேன். பின்னர் ஒன்பது மணிக்கு காகிதங்களை வெட்டுவேன்," என்று கூறுகிறார் அவர். சமைத்து முடித்து மதிய உணவை சாப்பிட்டுவிட்டு, மதியத்தின் ஒரு பகுதியை ஓய்வில் செலவிடுகிறார் அவர்.
மாலையில், கிராமத்தில் உள்ள மற்ற பெண்களுடன் அரட்டையடிக்க வெளியே செல்வார். பின்னர் திரும்பி வந்ததும், காகிதங்களில் பசை தடவி மீண்டும் பாக்கெட்டுகளை செய்யத் தொடங்குவார். பாக்கெட்டுகளை தயாரிப்பதற்கு அவருக்கு ஒரு நாளில், நிர்ணயிக்கப்பட்ட நேரம் என்று எதுவும் இல்லை. "தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைச் செய்வதாக," கூறுகிறார் அவர். பெரும்பாலும், தனது வீட்டு வேலைகளுக்கு மத்தியிலேயே பேப்பர் பாக்கெட் தயாரிப்பதற்கான வேலைகளையும் அவர் செய்து விடுவார்.
உதாரணமாக, சமைத்துக் கொண்டிருக்கும் போதே சில சமயங்களில் பசை தடவிய காகிதங்களை தாழ்வாரத்திலும் முற்றத்திலும் காய வைக்க செல்வார். "பசையை தடவி முடித்தவுடன் வெயிலில் பரப்பி காய வைக்கிறேன். காய்ந்ததும் இரண்டாக மடித்து எடை போட்டு கட்டிவிட்டு கடைகளுக்கு கொண்டு செல்வேன்."
ரேஷன் கடைகளில் கிடைக்கும் மாவை கொண்டு சோபி தானே சொந்தமாக பசை தயாரிக்கிறார்.
"வாரத்தில் இரண்டு முறை, ஒரு கிலோ எடையுள்ள பாக்கெட்டுகளை கடைகளுக்கு வழங்க வேண்டும்," என்று நம்மிடம் கூறுகிறார். அவர் செல்ல வேண்டிய கடைகள் அனைத்தும் அவர் வீட்டிலிருந்து 600 மீட்டருக்குள் அமைந்துள்ளதால் அங்கெல்லாம் நடந்தே சொல்கிறார். "நான் ஒரு கிலோ எடையுள்ள 220 பாக்கெட்டுகளை செய்கிறேன்," என்னும் அவருக்கு அதற்கான சம்பளமாக கிலோ ஒன்றுக்கு ரூ.60 கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.900 -1,000 வரை அவர் சம்பாதிக்கிறார்.
ஆனால், தற்போது சோபியின் பாக்கெட் தயாரிக்கும் வேலைக்கு விரைவில் முடிவு ஏற்படலாம். "மக்கள் செய்தித்தாள்களை பெரிதாக படிப்பதில்லை. அவர்கள் தங்கள் டிவி மற்றும் மொபைலில் செய்திகளைப் பார்க்கிறார்கள். அதனால், செய்தித்தாள்கள் [பாக்கெட்டுகள் தயாரிக்க] பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது."
காணொளி தயாரிப்பில் உதவிய திஷ்யா கோஷுக்கு கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.
தமிழாக்கம்: சுபாஷ் சந்திர போஸ்