“108-ஐ (அவசர ஊர்திக்கான எண்) பல முறை அழைத்து பார்த்தேன். இணைப்பு பிஸியாகவே தொடர்பு எல்லைக்கு அப்பாலோதான் இருந்தது.” அவரின் மனைவி கருப்பை தொற்றால் பாதிக்கப்பட்டு, மருந்துகள் எடுத்தும் தீவிரமாக உடல்நலம் குன்றியிருந்தது. இரவு ஆகிவிட்டது. அவரது வலி அதிகரித்து விட்டது. அவருக்கு மருத்துவ உதவி கிடைக்க கணேஷ் பஹாரியா கடுமையாக முயன்று கொண்டிருந்தார்.

“இறுதியில் உள்ளூர் அமைச்சரின் உதவியாளர் உதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தொடர்பு கொண்டேன். தேர்தல் பிரசாரத்தின்போது எங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்திருந்தார்,” என நினைவுகூர்கிறார் கணேஷ். ஆனால் அமைச்சர் இல்ல என உதவியாளர் கூறி விட்டார். “எங்களுக்கு உதவி செய்ய அவர் மறுத்து விட்டார்.”

கலக்கத்துடன் கணேஷ், “ஓர் அவசர ஊர்தி இருந்திருந்தால் அவளை பொகாரோ அல்லது ராஞ்சி போன்ற இடங்களிலுள்ள (நகரங்கள்) நல்ல அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றிருப்பேன்,” என்கிறார். ஆனால் அவர், உறவினரிடம் 60,000 ரூபாய் கடன் பெற்று அருகே இருந்த தனியார் மருத்துவ மையத்துக்கு மனைவியை அழைத்து சென்றார்.

“தேர்தல் நேரத்தில், இது நடக்கும், அது நடக்கும் என பலவற்றை சொல்கிறார்கள்… எங்களை ஜெயிக்க மட்டும் வையுங்கள் என்கிறார்கள். ஆனால் பிறகு அவர்களை சென்று நீங்கள் சந்திக்கும்போது, உங்களை பார்க்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை,” என்கிறார் 42 வயது ஊர்த் தலைவர். பஹாரியா சமூகத்துக்கான அடிப்படை வசதிகளை அரசு புறக்கணிப்பதாக சொல்கிறார் அவர்.

பகூர் மாவட்டத்தின் ஹிரான்பூர் ஒன்றியத்திலுள்ள சிறு கிராமம், தங்காரா. பஹாரியா பழங்குடி சமூகத்தை சேர்ந்த 50 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. ராஜ்மகால் மலைத்தொடரின் பக்கவாட்டில் தனித்து இருக்கும் அந்த கிராமத்தை அடைய, மோசமான சாலையில் எட்டு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.

“எங்கள் அரசுப் பள்ளி மோசமான நிலையில் இருக்கிறது. புதிய பள்ளி கேட்டோம். ஆனால் எங்கு கிடைத்தது?” எனக் கேட்கிறார் கணேஷ். பெரும்பாலான குழந்தைகள் பள்ளியில் சேராததால், அரசின் மதிய உணவை பெற முடிவதில்லை.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: கணேஷ் பஹாரியாதான் தங்காராவின் ஊர்த் தலைவர். வாக்கு சேகரிக்க வரும்போது அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகள் தருவதாக சொல்லும் அவர், பிற்பாடு அவற்றை அவர்கள் நிறைவேற்றுவதில்லை என்கிறார். வலது: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில், சாலை கட்டித் தரப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. பல மாதங்கள் ஓடி விட்டன, இன்னும் ஒன்றும் நடக்கவில்லை

தங்களின் கிராமத்துக்கும் பக்கத்து கிராமத்துக்கும் இடையே ஒரு சாலை வேண்டுமெனவும் மக்கள் கேட்டார்கள். “நீங்களே போய் சாலையைப் பாருங்கள்,” என்கிறார் கணேஷ் கற்சாலையை சுட்டிக் காட்டி. ஊருக்குள் ஒரே ஒரு அடிகுழாய்தான் இருக்கிறது என்றும் சொல்கிறார். விளைவாக பெண்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. “எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அச்சமயத்தில் சொன்னார்கள். தேர்தல் முடிந்தபிறகு எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள்!” என்கிறார் கணேஷ்.

42 வயதுக்காரர்தான் ஹிரான்பூர் ஒன்றியத்திலிருக்கும் அந்த தங்காரா கிராமத்துக்கு தலைவர். 2024ம் ஆண்டு தேர்தலில் ஜார்க்கண்டின் பகுர் மாவட்டத்திலுள்ள சந்தால் பர்கானா பகுதியில் அரசியல் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் 81 இடங்களுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டம் நவம்பர் 13-லும் இரண்டாம் கட்டம் நவம்பர் 20-லும் நடக்கிறது. பகுர் மாவட்டம் இரண்டாம் கட்டத்தில் வாக்களிக்கிறது. ஜார்க்கண்டின் ஆளுங்கட்சியும் இந்தியா அணியை சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி.

இந்த கிராமம் லித்திப்பாரா சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. 2019ம் ஆண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தினேஷ் வில்லியம் மராண்டி 66,675 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜகவின் டேனியல் கிஸ்கு 52,772 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இம்முறை ஜேஎம்எம் கட்சி வேட்பாளர் ஹேம்லால் முர்மு. பாஜகவின் வேட்பாளர் பாபுதான் முர்மு.

கடந்த காலத்தில் எண்ணற்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. “2022ம் ஆண்டு கிராம சபை கூட்டத்தில், ஊரில் திருமணம் நடந்தால் அதற்கு சமையல் பாத்திரங்களை வழங்குவதாக வேட்பாளர்கள் உறுதி அளித்தனர்,” என்கிறார் மீனா பஹாதின். அதற்கு பிறகு அப்படி நடந்தது ஒரே ஒரு முறைதான்.

”மக்களவை தேர்தலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு காணாமல் போய் விட்டார்கள். ஹேமந்த் (ஜேஎம்எம் கட்சிக்காரர்) வந்து ஒவ்வொருவருக்கும் 1,000 ரூபாய் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று தற்போது பதவியில் இருக்கிறார்,” என்கிறார் அவர்.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: விறகு மற்றும் சிரோடா சேகரிக்க மீனா பஹாதின் அன்றாடம் 10-12 கிலோமீட்டர் தூரம் நடக்கிறார். வலது: சூரிய ஆற்றலில் இயங்கும் ஒரே ஒரு அடிகுழாயில் பெண்கள் நீர் எடுக்கின்றனர்

ஜார்க்கண்டில் 32 பழங்குடி சமூகத்தினர் வசிக்கின்றனர். அசூர், பிர்ஹோர், பிர்ஜியா, கோர்வா, மால் பஹாரியா, பர்ஹையா, செளரியா பஹாரியா மற்றும் சவார் ஆகிய அதிகம் பாதிக்கத்தக்க பழங்குடி குழுக்கள் (PVTG) இங்கு வசிக்கின்றன. 2013ம் ஆண்டு அறிக்கையின்படி ஜார்க்கண்டிலுள்ள PVTG மக்கள்தொகை நான்கு லட்சத்துக்கும் மேல்.

சிறு எண்ணிக்கை மற்றும் தனித்திருக்கும் கிராமங்கள் ஆகியவற்றால் குறைந்த படிப்பறிவு, பொருளாதார சிக்கல்கள், விவசாயத்துக்கு முந்தைய தொழில்நுட்ப பயன்பாடு ஆகிய சவால்கள் இருக்கின்றன. கடந்த சில பத்தாண்டுகளில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. பி.சாய்நாத் எழுதிய நல்ல வறட்சியை அனைவரும் விரும்புவார்கள் புத்தகத்தில் இடம்பெற்ற மலையளவு துன்பம் பகுதியை வாசிக்கவும்.

“கிராமத்திலுள்ள பெரும்பாலான மக்கள் தினக்கூலி வேலை பார்க்கிறார்கள். இங்குள்ள யாரும் அரசு வேலையில் இல்லை. நெல் வயல்களும் இங்கு ஏதும் இல்லை. மலைகள் மட்டும்தான் எங்கும்,” என்கிறார் கணேஷ். விறகு மற்றும் சிரோட்டா பூக்களை காடுகளுக்கு சென்று சேகரித்து சந்தையில் பெண்கள் விற்கின்றனர்.

பஹாரியா பழங்குடியினர்தான் ஜார்க்கண்டின் சந்தால் பர்கானா பகுதியின் பூர்வகுடிகள். சவுரியா பஹாரியா, மால் பஹாரியா மற்றும் குமார்பாக் பஹாரியா ஆகிய மூன்று பிரிவுகளாக அவர்கள் பிரிந்தனர். மூன்று பிரிவுகளும் ராஜ்மகால் மலைகளில் நூற்றாண்டுகளாக வாழ்கிறார்கள்.

வரலாற்று ஆவணங்களின்படி, கிமு 302ம் ஆண்டில் சந்திரகுப்தா மவுரிய ஆட்சியில் இந்தியாவுக்கு வந்த வரலாற்றாய்வாளரும் கிரேக்க அரசின் பிரதிநிதியுமான மெகஸ்தனிஸ் குறிப்பிடும் மல்லி பழங்குடியை சேர்ந்தவர்கள் இவர்கள் எனக் குறிப்பிடுகிறது இந்த ஆய்விதழ் . அவர்களின் வரலாறு போராட்டங்களால் நிரம்பியிருக்கிறது. சந்தால்களுக்கு பிரிட்டிஷுக்கும் நேர்ந்த மோதலும் அவற்றில் அடக்கம். பிரிட்டிஷ் ஆட்சி, அம்மக்களை சமவெளிகளில் இருந்து மலைகளுக்கு விரட்டிவிட்டது. கால்நடை திருடுபவர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும அவர்களின் மீது முத்திரை குத்தப்பட்டது.

“பஹாரியாக்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டார்கள். சந்தால்கள் மற்றும் பிரிட்டிஷாருடனான அவர்களின் கடந்தகாலப் போராட்டம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை,” என்கிறார் ஜார்க்கண்டின் தம்காவை சேர்ந்த சிடோ கனோ பல்கலைக்கழக பேராசிரியர் இந்த அறிக்கை யில்.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: மீனாவின் வீட்டுக்கு வெளியே சமையலுக்காக குவிக்கப்பட்டிருக்கும் விறகுகள். அவற்றில் கொஞ்சம் விற்கவும்படுகிறது. வலது: காட்டிலிருந்து சேகரிக்கும் சிரோட்டா மலர்கள் காய வைக்கப்பட்டு பிறகு சந்தைகளில் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

*****

குளிர்கால இளவெயிலில், குழந்தைகள் விளையாடும் சத்தமும் ஆடுகளின் சத்தமும் சேவல்களின் கூவலும் தங்காரா கிராமத்தில் கேட்கின்றன.

வீட்டுக்கு வெளியே மீனா பஹாதின் பிற பெண்களுடன் மால்தோ மொழியில் பேசுகிறார். “நாங்கள் ஜக்பாசிகள். அப்படியென்றால் என்ன தெரியுமா?” எனக் கேட்கிறார் அவர். “மலைகள் மற்றும் காடுகளை சார்ந்தவர்கள் நாங்கள் என அர்த்தம்,” என்கிறார் அவர்.

பிற பெண்களுடன் சேர்ந்து தினசரி காலை 8 அல்லது 9 மணிக்கு காட்டுக்கு செல்லும் அவர், நண்பகலில் திரும்புகிறார். “காட்டில் சிரோட்டா பூக்கள் இருக்கும். நாள் முழுக்க அவற்றை சேகரித்து காய வைத்து, பிறகு விற்பதற்குக் கொண்டு செல்வோம்,” என்கிறார் அவர் வீட்டுக்கூரையில் காயும் கிளைகளை சுட்டிக் காட்டி.

“சில நாட்கள் இரண்டு கிலோக்கள் கிடைக்கும், சில நாட்கள் மூன்று கிலோ. அதிர்ஷ்டம் இருந்தால் ஐந்து கிலோ வரை கூட கிடைக்கும். கடினமான வேலை,” என்கிறார் அவர். சிரோட்டா ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிரோட்டாவுக்கு மூலிகைதன்மை இருக்கிறது. டிகாஷனாக அதை மக்கள் குடிப்பார்கள். “குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அதை குடிக்கலாம். வயிற்றுக்கு நல்லது,” என்கிறார் மீனா.

காட்டிலிருந்து விறகுகளையும் சேகரிக்கிறார் மீனா. அன்றாடம் 10-12 கிலோமீட்டர் பயணிக்கிறார். “கட்டுகளின் எடை அதிகமாக இருக்கும். ஒவ்வொன்றும் 100 ரூபாய்க்கு விற்கும்,” என்கிறார் அவர். விறகு கட்டுகள் 15-20 கிலோ எடை இருக்கும். ஆனால் விறகு ஈரமாக இருந்தால், 25-30 கிலோ வரை எடை இருக்கும்.

அரசாங்கம் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்கிற கணேஷின் கூற்றை மீனாவும் ஒப்புக் கொள்கிறார். “முன்பு யாரும் எங்களிடம் வந்தது கூட இல்லை. கடந்த சில வருடங்களாக வரத் தொடங்கியிருக்கிறார்கள்,” என்கிறார் அவர். “பல முதலமைச்சர்களும் பிரதமர்களும் மாறி விட்டார்கள். ஆனால் எங்களின் நிலை அப்படியேதான் இருக்கிறது. மின்சாரமும் ரேஷன் கடையும் மட்டும்தான் கிடைத்திருக்கிறது,” என்கிறார் அவர்.

“உடைமைகள் பறிப்பு மற்றும் இடப்பெயர்வு ஆகியவை ஜார்க்கண்டின் பழங்குடியினர் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன. பிரதான வளர்ச்சித் திட்டங்கள், இக்குழுவுனி சமூக பண்பாட்டு தனித்துவத்தை அடையாளங்காண தவறி விட்டன. ‘அனைவருக்கும் ஒரு தீர்வு’ என்கிற பாணிதான் கடைபிடிக்கப்படுவதாக மாநிலத்தில் இருக்கும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் பற்றி 2021ம் ஆண்டில் வெளியான இந்த அறிக்கை கூறுகிறது.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

தனித்து விடப்பட்டிருக்கும் பஹாரியா பழங்குடிகளுக்கு, அவர்களின் குறைவான எண்ணிக்கையும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. பொருளாதார சவால்களை சந்திக்கின்றனர். கடந்த சில பத்தாண்டுகளில் ஒன்றும் மாறி விடவில்லை. வலது: தங்காரா கிராமத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளி. கடந்த வருடங்களில் புது பள்ளிக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக கூறும் கிராமவாசிகள், அந்த வாக்குறுதி காக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்

“வேலை இல்லை. எந்த வேலையும் இல்லை. எனவே நாங்கள் வெளியே செல்ல வேண்டியிருக்கிறது,” என்கிறார் புலம்பெயரும் 250-300 மக்களின் குரலாக. “வெளியே செல்வது கஷ்டம். போய் சேர இரண்டு மூன்று நாட்கள் பிடிக்கும். இங்கு வேலைகள் இருந்தால், நெருக்கடி நேரத்தில் உடனே எங்களால் திரும்பி வர முடியும்.”

தாகியா யோஜனா திட்டத்தின்படி பஹாரியா குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 35 கிலோ உணவுப் பொருட்கள் கிடைக்கும். எனினும் 12 பேர் கொண்ட தன் குடும்பத்துக்கு அது போதுமானதாக இல்லை என்கிறார் மீனா. “சிறு குடும்பத்துக்கு அது போதும். ஆனால் எங்களுக்கு 10 நாட்களுக்கு கூட அது வராது,” என்கிறார் அவர்.

கிராமத்தின் நிலையை பற்றி விவரிக்கும் அவர், ஏழைகளின் துயர் பற்றி எவரும் கவலை கொள்ளவில்லை என்கிறார். “எங்களுக்கு இங்கு அங்கன்வாடி கூட கிடையாது,” என்கிறார் மீனா. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி , ஆறு மாதங்களிலிருந்து ஆறு வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கும் கர்ப்பணி பெண்களுக்கும் அங்கன்வாடி மூலமாக சத்துணவு கொடுக்கப்பட வேண்டும்.

இடுப்பு வரை உயரத்தை காண்பித்து மீனா, “பிற கிராமங்களில் இந்த உயரம் வரை இருக்கும் குழந்தைகளுக்கு கொண்டைக்கடலை, அரிசி, பருப்பு போன்ற சத்துணவு கொடுக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு கிடைப்பதில்லை,” என்கிறார். “போலியோ சொட்டு மருந்து மட்டும்தான்,” என்கிறார் அவர். “இரு கிராமங்களுக்கு ஒரு அங்கன்வாடி இருக்கிறது. ஆனால் அவர்கள் எங்களுக்கு எதையும் தருவதில்லை.”

இவற்றுக்கிடையில் மனைவியின் மருத்துவ செலவும் மிஞ்சியிருக்கிறது. 60,000 ரூபாய் கடனும் அதற்கான வட்டியும் கணேஷ் கட்ட வேண்டியிருக்கிறது. “எப்படி கட்டுவேனென தெரியவில்லை. இன்னொருவரிடம் கடன் வாங்கினேன். எனவே எப்படியாகினும் அதை அடைக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

இந்த தேர்தலுக்கு “யாரிடமும் எதையும் நாங்கள் பெறப் போவதில்லை. எப்போதும் நாங்கள் வாக்களித்தவர்களுக்கும் இப்போது வாக்களிக்கப் போவதில்லை. எங்களுக்கு பலன் கொடுப்பவர்களுக்குதான் நாங்கள் வாக்களிப்போம்,” என்கிறார் உறுதியாக.

தமிழில் : ராஜசங்கீதன்

Ashwini Kumar Shukla

అశ్విని కుమార్ శుక్లా ఝార్కండ్ రాష్ట్రం, పలామూలోని మహుగావాన్ గ్రామానికి చెందినవారు. ఆయన దిల్లీలోని ఇండియన్ ఇన్స్టిట్యూట్ ఆఫ్ మాస్ కమ్యూనికేషన్ నుంచి పట్టభద్రులయ్యారు (2018-2019). ఆయన 2023 PARI-MMF ఫెలో.

Other stories by Ashwini Kumar Shukla
Editor : Priti David

ప్రీతి డేవిడ్ పీపుల్స్ ఆర్కైవ్ ఆఫ్ రూరల్ ఇండియాలో జర్నలిస్ట్, PARI ఎడ్యుకేషన్ సంపాదకురాలు. ఆమె గ్రామీణ సమస్యలను తరగతి గదిలోకీ, పాఠ్యాంశాల్లోకీ తీసుకురావడానికి అధ్యాపకులతోనూ; మన కాలపు సమస్యలను డాక్యుమెంట్ చేయడానికి యువతతోనూ కలిసి పనిచేస్తున్నారు.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

రాజా సంగీతన్ చెన్నైకి చెందిన రచయిత. ఒక ప్రసిద్ధ తమిళ వార్తా చానల్‌లో పాత్రికేయులుగా పనిచేస్తున్నారు.

Other stories by Rajasangeethan