மாயா தாமி 30 கிலோ எரிவாயு சிலிண்டரை முதுகில் சுமந்து மூன்று கிலோ மீட்டர் நடந்து, 200 படிக்கட்டுகள் ஏறி அன்றைய நாளின் முதல் வாடிக்கையாளருக்கு வழங்குகிறார்.
32 வயதாகும் அவர், தூரத்தில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி, "இப்போது நான் அந்த மலைக்குன்றுக்கு இன்னொரு சிலிண்டரை கொண்டுபோக வேண்டும்" என்கிறார். கூலியாக ரூ.80 வாங்கிக்கொண்டு உடனே அடுத்த இடத்திற்கு புறப்படுகிறார். அடுத்த ஆறு மணி நேரத்திற்கு, அவர் எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு போய் டெலிவரி கொடுப்பார்.
"சுமை அதிகமாக இருக்கும்போது, ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, நாங்கள் ஆண்கள் அல்ல என்பதால் மக்கள் பெரும்பாலும் பேரம் பேசுகிறார்கள்" என்கிறார் மாயா. ஒரு பெண் சுமை தூக்கி ரூ.80 சம்பாதிக்கிறார், அதே தூரத்திற்கு ஒரு ஆண் ரூ.100 பெறுகிறார்.
மேற்கு வங்கத்தின் பரபரப்பான நகரமான டார்ஜிலிங், கிழக்கு இமயமலையில் 2,042 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதன் மலைப்பாங்கான நிலப்பரப்பு சாலைவழி போக்குவரத்திற்கு தடையாக உள்ளது. அங்கு குடியிருப்பவர்கள் காய்கறிகள், தண்ணீர், சமையல் சிலிண்டர்கள், போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், வீட்டிற்கு தேவையான பிற பொருட்களைப் கொண்டு வர சுமை தூக்கிகளையே நம்பியுள்ளனர். வாகனங்களால் அத்தகைய சரிவுகளில் ஏற முடியாது. ஒன்று, அவர்களே எடுத்துச் செல்ல வேண்டும், அல்லது எரிவாயு நிறுவனம் மூலமோ, கடைகளில் இருந்து சுமை தூக்கிகள் மூலமோ அனுப்ப வேண்டும்.
நேபாளத்தைச் சேர்ந்த மாயா தாமி டார்ஜிலிங்கில் 12 ஆண்டுகளாக சுமைதூக்கியாக பணியாற்றி வருகிறார். அவரைப் போலவே, நகரத்தில் உள்ள மற்ற சுமைதூக்கிகளில் பெரும்பாலானோர் நேபாளத்திலிருந்து குடியேறிய பெண்கள். தாமி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (மேற்கு வங்கத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளனர்). அவர்கள் நிறைய காய்கறிகள், சிலிண்டர்கள் மற்றும் தண்ணீர் கேன்களை நம்லோ என்ற பட்டையைப் பயன்படுத்தி கட்டப்பட்ட டோகோ (மூங்கில் கூடை) மீது சுமந்து செல்கின்றனர்.
"கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய பொறுப்புகள் வந்துச்சு, அதனால நான் முக்லானுக்கு [இந்தியா] குடிவந்துவிட்டேன்", என்று நினைவுகூர்கிறார் மாயா. நேபாளத்தில், கணவர் பௌதேயுடன் இணைந்து 2 கதா (0.06 ஏக்கர்) நிலத்தில் அரிசி, கம்பு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை அவர் பயிரிட்டு வந்தார்; இவர்கள் சிறு கடைகளில் தினக்கூலிகளாகவும் வேலை செய்து வந்தனர். இத்தம்பதி 2021-ம் ஆண்டு டார்ஜிலிங்கிற்கு குடிபெயர்ந்தனர் - நேபாள எல்லையில் இருந்து சாலை வழியாக வருவதற்கு சில மணி நேரங்கள் ஆகும்.
மாயா எரிவாயு ஏஜென்சிகளிலிருந்து வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சிலிண்டர்களை டெலிவரி செய்கிறார். "நான் வழக்கமாக காலை 7 மணிக்கு எனது பணியிடத்திற்கு வருவேன், விநியோகத்திற்கு வரும் சிலிண்டர்களை எடுத்துக்கொள்வேன்," என்று அவர் கூறுகிறார். வழக்கமாக ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து சிலிண்டர்களை டெலிவரி செய்கிறார். இதற்காக அவர் இரண்டு சிலிண்டர்களை முதுகில் சுமந்து செல்கிறார். மேலும் இந்த கடின உழைப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.500 சம்பாதிக்க முடியும். "என் தலையில் ஒரு நம்லோவைப் பயன்படுத்தி தொடர்ந்து நிறைய சிலிண்டர்களை சுமப்பது அதிக முடி உதிர்தல் மற்றும் உடல் வலிக்கு வழிவகுத்தது" என்கிறார் மாயா. மேலும் அவருக்கு இரத்த அழுத்தமும் ஏற்படுகிறது.
"நான் வழக்கமாக காலை 7 மணிக்கு எனது பணியிடத்திற்கு வருவேன், விநியோகத்திற்கு வரும் சிலிண்டர்களை எடுத்துக்கொள்வேன்," என்று அவர் கூறுகிறார். வழக்கமாக ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து சிலிண்டர்களை டெலிவரி செய்கிறார். மேலும் இந்த கடின உழைப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.500 சம்பாதிக்க முடியும்
காய்கறிகளை டெலிவரி செய்யும் சுமை தூக்கிகளும், சிலிண்டர்களை டெலிவரி செய்யும் சுமை தூக்கிகளும் வேறுபட்டவர்கள். சந்தை மூடப்படும் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இரவு 8 மணி வரை அவர்கள் சௌக் பஜாரில் காத்திருக்கின்றனர். "நாங்கள் எங்கள் காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்கு விற்ற பிறகு, மீதமுள்ளவற்றை வாங்குபவர்களுக்கும் சுமை தூக்கிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்துவோம்" என்று பீகாரைச் சேர்ந்த கடைக்காரர் மனோஜ் குப்தா கூறுகிறார்.
"70 கிலோ எடையை சுமந்து பழகிவிட்டேன்" என்று 70 கிலோ காய்கறிகளை டெலிவரி செய்ய ஹோட்டலுக்கு சுமந்து செல்லும் 41 வயதாகும் மன்குமாரி தாமி கூறுகிறார். "என்னால் இதைச் செய்ய முடியாது என்று சொன்னால், இந்த வேலை வேறு ஒருவருக்கு போய்விடும். இதனால் எனக்கு ரூ.80 கிடைக்காது", என்று அவர் கூறுகிறார்.
"ஹோட்டல்கள் பொதுவாக சௌக் பஜாருக்கு மேலே அமைந்திருப்பதால், நாங்கள் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மலை மீது ஏறுவோம். 10 நிமிட தூரத்தில் இருக்கும் ஹோட்டல்களுக்கு 60 முதல் 80 ரூபாயும், தொலைவில் இருக்கும் ஹோட்டல்களுக்கு 100 முதல் 150 ரூபாயும் நாங்கள் பெறுகிறோம்", என்று மற்றொரு காய்கறி சுமக்கும் தொழிலாளியான தன்குமாரி தாமி கூறுகிறார்.
காய்கறி சுமைகளை சுமக்கும் தன்குமாரி தாமி, பெண்கள் பாகுபாட்டை எதிர்கொள்வதை ஒப்புக்கொள்கிறார்: "கேதா லே மாதாய் சச்சா எஸ்தோ கம் தா ஹைனா ரைசாவ் பைனி. ['ஆண்கள் மட்டுமே இந்த வேலையைச் செய்ய முடியும்' என்று பெண்கள் சொன்னார்கள். அப்படி இல்லை அக்கா. இங்குள்ள சுமை தூக்கிகளில் பெரும்பாலானோர் பெண்கள்]" என்றேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிப்பழக்கத்தால் தனது கணவர் இறந்த பின்னர் அவர் இந்த வேலையைச் செய்து வருகிறார்.
வீடுகளுக்கு தண்ணீர் கேன்களை விநியோகிக்கும் பாண்டம் தேயிலைத் தோட்டத் தம்பதியரான அஸ்தி தாமி, ஜங்கே தாமி ஆகியோர் தண்ணீரை எடுத்துச் செல்வது கூடுதல் வேலை என்கின்றனர். டார்ஜிலிங்கில் சில பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால், அவர்களின் தேவையும் தினமும் உள்ளது.
"நானும், என் கணவரும் தினமும் காலை 6 மணிக்கு நீர்நிலையில் இருந்து தண்ணீர் எடுக்க வருகிறோம். ஜெர்ரி கேன்களில் தண்ணீரை நிரப்பி, தண்ணீர் கேட்கும் வீடுகளுக்கு டெலிவரி செய்வதை உறுதி செய்கிறோம்," என்கிறார் அஸ்தி. வாடகைக்கு தங்கியுள்ள இடத்திலிருந்து தண்ணீர் எடுக்கும் இடம் கிட்டத்தட்ட 2 கி.மீ நடைபயணம் தூரத்தில் உள்ளது.
அவர்கள் ஒரு முறை இறைச்சி விற்பனையை முயற்சித்ததாகவும், ஆனால் கோவிட் காரணமாக வியாபாரம் நஷ்டமடைந்ததாகவும் ஜங்கி கூறினார். இதனால் அவர்கள் சுமை தூக்கும் வேலைக்குத் திரும்பினர்.
*****
மாயா தாமியின் கணவர் பௌதே தாமி இரண்டாம் தலைமுறையாக புலம்பெயர்ந்தவர். அவரது பெற்றோர் சுமை தூக்கிகளாக வேலை செய்து டார்ஜிலிங்கில் உள்ள ஹோட்டல்களுக்கு காய்கறிகளை டெலிவரி செய்தனர். மாயாவும், பௌதேயும் தங்கள் பணியிடமான சௌக் பஜாரிலிருந்து 50 நிமிட பயண தூரத்தில் உள்ள கௌஷாலா அருகே ஓர் அறையை மாதம் ரூ.2,500க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.
சுமை தூக்கிகள் பலரும் தங்க குடும்பத்துடன், இந்த வட்டாரத்தில் ஒரு தனி அறையை வாடகைக்கு எடுத்துள்ளனர். காரணம் இது மலிவானது என்பதுதான்.
மாயா மற்றும் பௌதேயின் குழந்தைகள், பாவனா மற்றும் பவின் இன்னும் பள்ளியில் உள்ளனர்; அவர்களின் கல்விதான் மாயாவின் முன்னுரிமை: "பாவனா ரா பவின் பரிஞ்சல் மோ மேரோ நம்லோ லே சிலிண்டர் போக்ச்சு) [பாவனாவும் பவினும் படிப்பு முடிக்கும் வரை, நான் எனது நம்லோவுடன் சிலிண்டர்களை எடுத்துச் செல்வேன்]", என்று கூறுகிறார்.
தமிழில்: சவிதா