மே மாத தொடக்கத்தில் காஷ்மீரின் உயர மலைகளிலே மேய்ச்சல் நிலங்களைத் தேடி செம்மறிகள், ஆடுகள், குதிரைகள் மற்றும் நாய்கள் என் தன் 150 விலங்குகளுடன் ரஜோவரி மாவட்டத்தின் பெரி கிராமத்திலிருந்து கிளம்பினார் அப்துல் லத்தீஃப் பஜ்ரன். மகன் தாரிக் மற்றும் சிலருடன் சேர்ந்து சென்றார். “என் குடும்பத்தை (மனைவி மற்றும் மருமகள்) ஆகியோரையும் பலவீனமான விலங்குகளையும் உணவு, இருப்பிடம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களையும் ஒரு மினி ட்ரக்கில் ஏற்றி அனுப்பினேன்,” என்கிறார் ஜம்முவை சேர்ந்த 65 வயது மேய்ப்பரான அவர்.
இரு வாரங்களுக்கு பிறகு, “அவர்களை (வயிலில்) பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்,” என்கிறார் அவர். (இந்தோ பாகிஸ்தான் எல்லையின்) மினிமார்கை அடைந்து முகாம் அமைத்திருப்பார்கள் என அவர் எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் அவர்கள் அந்த இடத்திலிருந்து 15 நாட்கள் தொலைவில் இருந்தனர். வானிலையின் காரணமாக அவர்கள் நின்றுவிட்டதாக சொல்கிறார் அவர். மினிமார்குக்கு செல்லும் வழியில் இருக்கும் சொஜிலா கணவாயில் இருக்கும் பனி உருக அவர்கள் காத்திருந்தார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஜம்மு பகுதியில் கோடை வரும்போது, புற்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். பகர்வால் போன்ற மேய்ச்சல் நாடோடி சமூகங்கள், மேய்ச்சல் நிலங்கள் இருக்குமென்ற நம்பிக்கையில் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு இடம்பெயருவார்கள். அங்கு குளிர் தொடங்கும் அக்டோபர் மாதத்தில்தான் மீண்டும் அவர்கள் திரும்புவார்கள்.
ஆனால் உயர்மலைகளில் இருக்கும் மேய்ச்சல் நிலங்கள் இன்னும் பனியால் மூடப்பட்டிருக்கும் நிலையில், அப்துல் போன்ற மேய்ப்பர்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர். மேய்ச்சல் நிலம் இல்லாத சொந்த கிராமத்துக்கு அவர்கள் திரும்பிச் செல்ல முடியாது. மேலே செல்லவும் முடியாது.
பருவம் தப்பிய வெயிலால் கூடுதலாக விலங்குகளை பறிகொடுத்திருக்கும் முகமது காசிமும் இதே ஊசலாட்டத்தில்தான் இருக்கிறார். “வெயில் அதிகமானால் செம்மறிகளுக்கும் ஆடுகளுக்கும் காய்ச்சல் வந்துவிடும். வயிற்றுப்போக்கு அவற்றை பலவீனமாக்கி விடும். அவை பலியாகவும் வாய்ப்பிருக்கிறது,” என்கிறார் 65 வயதுக்காரர்.
ஜம்முவின் ரஜோவுரி மாவட்டத்திலுள்ள ஆந்த் கிராமத்தை சேர்ந்த பகர்வாலான அவர், வழக்கத்துக்கு மாறாக கோடையின் தொடக்கத்தில் வெயில் அதிகமாக இருந்ததால் பல விலங்குகள் நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகுதான் பயணத்தை தொடங்கினார். 50 ஆடுகளையும் செம்மறிகளையும் வெயிலுக்கு அவர் இழந்தார்.
காத்திருந்தபோது அவர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த இன்னொரு நாடோடியான லியாகத்திடம் வானிலை குறித்து செல்பேசியில் விசாரித்துக் கொண்டிருந்தார். “மோசமாக இருப்பதாகதான் எப்போதுமே பதில் வந்தது.” செல்பேசி நெட்வொர்க் இல்லாததால் லியாகத்தை தொடர்பு கொள்வதும் சிரமமாக இருந்தது.
பள்ளத்தாக்கில் பனி இன்னும் இருப்பதை கேள்விப்பட்டதும், கிராமத்தை விட்டு கிளம்ப காசிம் தயங்கினார். வெயிலும் ஏற்கனவே விலங்குகளிடம் பலவீனத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆடுகளால் கடுமையான குளிர் வானிலைகளை தாங்க முடியாதென்றும் இறந்து கூட போகலாமென்றும் கூறுகிறார். செம்மறிகள், தம் தோல் இருப்பதால் ஓரளவுக்கு தாக்கு பிடிக்கும்.
பல நாட்கள் காத்திருந்தும் சூழல் மாறாததால் அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. விலங்குகளை ட்ரக்கில் ஏற்றி வயிலில் இருக்கும் பகர்வால் குடும்பங்களை சென்றடைய வேண்டும். ஜம்முவில் வெயில் ஏறிக் கொண்டிருந்தது அவருக்கு கவலையை அளித்தது. “இங்கிருந்து விலங்குகளை விரைவில் கொண்டு செல்லவில்லை எனில், அவை எல்லாவற்றையும் இழந்து விடுவேன்,” என நினைத்ததாக அவர் நினைவுகூருகிறார்.
இரண்டு வாரங்கள் தாமதமாகி விட்டதால், காசிம் அதற்கு மேல் நேரம் எடுக்கவில்லை. “விலங்குகளை கலாகோடேவிலிருந்து கந்தெர்பாலுக்கு (229 கிலோமீட்டர்) கொண்டு செல்ல 35,000 ரூபாய் கொடுத்தேன்.”
விலங்குகளின் பாதுகாப்பை கருதியதால், மினிமார்க் சென்றடைவதில் அப்துலும் ஒரு மாதம் பின் தங்கியிருந்தார். ”ஏனெனில் காஷ்மீரின் உயர்மலைகளில் இந்த வருடம் இன்னும் பனி இருக்கிறது.” குடும்பமும் மந்தைகளும் இறுதியில் ஜுன் 12ம் தேதி சென்றடைந்தது.
போகும் வழியில் பனியில்லை. ஆனால் கன மழைகள் அப்துலின் விலங்குகளுக்கு பாதிப்பை கொடுத்தன. “தெற்கு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் 30 செம்மறிகளை இழந்தேன்,” என்கிறார் அவர். இந்த வருடம் மினிமார்குக்கு செல்லும் வழியில் இது நேர்ந்தது. “ஷோபியான் மாவட்டத்தின் முகல் சாலையில் நாங்கள் வந்து கொண்டிருக்கும்போது திடீரென மழை பொழியத் தொடங்கி ஐந்து நாட்களுக்கு தொடர்ந்தது.”
பால்ய காலத்திலிருந்து ஒவ்வொரு கோடையிலும் ஜம்முவிலிருந்து காஷ்மீருக்கு இடம்பெயர்ந்து வரும் அப்துல், மே மாத பிற்பகுதியிலும் ஜூன் மாத தொடக்கத்திலும் இந்தளவுக்கு தீவிரமான வானிலையை கண்டதில்லை என்கிறார். அவரது குடும்பம் உடனே மலைக்கு சென்றுவிடாமல் வயிலில் சில நாட்கள் தங்கியிருந்தது நல்லது என்கிறார் அவர். “ (மினிமார்க் செல்லும் வழியிலுள்ள) சொஜில்லாவை கடக்கும்போது அவர்கள் இன்னும் அதிக செம்மறிகளை இழந்திருப்பார்கள்,” என்கிறார்.
ஷோபியன் வழியாக பழைய மொகலாயர்கள் காலப் பாதை, மேய்ச்சல் நாடோடி சமூகங்கள் செல்லும் பாரம்பரிய வழியாகும்.
புல்வெளிகளுக்கு பதிலாக பனியை கண்டதும், “நாங்கள் கூடாரம் போட இடம் தேடினோம். வழக்கமாக பெரிய மரங்கள் அல்லது மண் வீடுகள் இருக்கும் இடங்களை தேடுவோம்,” என்கிறார் அப்துல். “அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கு அவை தென்படும். இல்லையெனில், திறந்தவெளியில் கூடாரம் அமைத்து மழையில் நனைய வேண்டும்.” முடிந்தளவுக்கான விலங்குகளை காக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்கிறார் அவர். “எல்லாவற்றுக்குமே அதனதன் உயிர் முக்கியம்.”
சில வாரங்களுக்கான உணவுகளை மட்டும்தான் மேய்ப்பர்கள் எடுத்து செல்லும் நிலையில், சுத்தமான குடிநீர் இத்தகைய வானிலையில் கிடைப்பது சவாலுக்குரிய விஷயம். “தீவிர வானிலையில் சிக்கிக் கொள்ளும்போது, நீர் பற்றாக்குறைதான் நாங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினை. பனி பெய்யும்போது நீர் தேடுவது சிரமம். சுத்தமானதோ அசுத்தமானதோ ஏதோவொரு வகை நீரை தேடிக் கொண்டு வந்து காய்ச்சிக் குடிப்போம்,” என்கிறார் தாரிக் அகம்து.
வருடத்தின் பிற்பகுதியில் பள்ளத்தாக்குக்கு செல்லவிருப்பதாக பிற பகர்வால்களும் சொல்கின்றனர். “இந்த வருட (2023) மே 1ம் தேதி அன்று ரஜோவரியிலிருந்து எங்களின் பயணத்தை தொடங்கினோம். பனி உருகாததால் பகால்காமில் 20 நாட்கள் மாட்டிக் கொண்டோம்,” என்கிறார் அப்துல் வஹீது. 35 வயது பகர்வாலான அவர், அவரது சமூகத்தின் மேய்ப்பர்களை அழைத்துக் கொண்டு, லிட்டர் பள்ளத்தாக்கு வழியாக கொலாஹோய் பனியாறுக்கு செல்கிறார்.
இப்பயணத்தை முடிக்க வழக்கமாக 20-30 நாட்கள் பிடிக்கும். வானிலை சூழலுக்கு ஏற்ப இந்த காலம் மாறும். ”என்னுடன் கொண்டு வந்த 40 செம்மறிகளை ஏற்கனவே தொலைத்து விட்டேன்,” என்கிறார் 28 வயது ஷகீல் அகமது பர்கத். அவர் சென்று கொண்டிருந்த பால்தாலில் பனி இருந்ததால் மே 7ம் தேதி வயிலில் அவர் கூடாரம் போட்டார். பால்தாலிலிருந்து அவர் சொஜில்லாவுக்கு செல்ல வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர் அங்குள்ள பிற பகர்வால் குடும்பங்களுடன் ஒன்றாக மேய்ச்சல் செய்து கொண்டு வசிப்பார். “நாங்கள் செல்லுமிடத்தில் பனிச்சரிவு அதிகம் என்பதால் இன்னும் கூட விலங்குகள் தொலையலாம்,” என்கிறார் ஷகீல்.
கடந்த வருடம் குடும்பத்தையும் மொத்த விலங்குகளையும் வெள்ளத்தில் இழந்த நண்பர் ஃபரூக்கை நினைவுகூருகிறார் ஷகீல்.
பருவம் தப்பிய கனமழையும் பனியும் பகர்வால்களுக்கு புதிதில்லை. 2018ம் ஆண்டில் மினிமார்க்கில் திடீரென பனி பொழியத் தொடங்கிய சம்பவத்தை நினைவுகூருகிறார் தாரிக். “நாங்கள் காலையில் விழித்தெழுந்ததும் 2 அடி பனி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். கூடாரங்களின் வாசல்களை பனி மூடியிருந்தது,” என்கிறார் 37 வயது மேய்ச்சல்காரர். பனி அகற்ற உபகரணங்கள் இல்லாமல், “கையில் இருந்த பாத்திரங்களை கொண்டு பனியை அகற்றினோம்,” என்கிறார் அவர்.
வெளியேறி சென்று விலங்குகளை பார்ப்பதற்கு முன்னமே பல விலங்குகள் இறந்து விட்டிருந்தன. “செம்மறிகள், ஆடுகள், குதிரைகள், நாய்கள் எல்லாமும் வெளியே இருந்ததால், அவற்றை நாங்கள் இழந்து விட்டோம். அவற்றால் கடும் பனிப்பொழிவை தாங்க முடியவில்லை,” என நினைவுகூருகிறார் தாரிக்.
தமிழில் : ராஜசங்கீதன்