“அந்த மதியத்தில் திடுமென நடந்தது!”

“தெரியும். புயல் மோசமாக இருந்தது. இல்லையா?”

“உறுதியாக தெரியவில்லை. மரமும் கொஞ்சம் பழைய மரம்தான். இச்சமூகத்துக்கு நாங்கள் குடி வந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கிருக்கிறது.”

“இருந்தாலும், ஒரு பக்கமாக அது சாய்ந்து கொண்டிருப்பது ஆபத்து. மேலும் அதற்குக் கீழே இருக்கும் அப்துலின் டீக்கடையும் ஒரு பெரிய தொந்தரவுதான். இரவில் வவ்வால்கள் எனில், பகல் முழுக்க இவர்களின் தொந்தரவு. வெறுப்பாக இருக்கிறது.”

”அது என்ன சத்தம்?”

குடியிருப்பின் நுழைவாயிலை மறைத்துக் கொண்டிருந்த மரத்தை, நகராட்சியின் அவசர உதவியிலிருந்து வந்து அகற்றி 36 மணி நேரங்கள் ஆகிறது. ஆனாலும் அதைப் பற்றி பேசுவதை மக்கள் நிறுத்தவில்லை: எத்தனை ஆச்சரியம், எவ்வளவு அதிர்ச்சி, எப்படி திடீரென, ஓ அச்சமூட்டுகிறது, நல்லவேளை. அனைவரும் ஒரே விஷயத்தைதான் பார்க்கிறார்களா என்று கூட அவளுக்கு சந்தேகம் வருவதுண்டு. அவள் பார்ப்பதை போல்தான் அனைவரும் உலகை பார்க்கிறார்களா? அவர் அந்த மதியம் அங்கிருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்களா? அவர் இறப்பதை யாரேனும் பார்த்தார்களா?

அப்துல் மாமாவின் கடையருகே அவள் ஆட்டோவில் இறங்கியபோது கன மழை பெய்து கொண்டிருந்தது. சாலையில் நீர் தேங்கியிருந்தது. ஆட்டோ ஓட்டுநர்கள் மேற்கொண்டு செல்ல மறுத்தனர். மாமா அவளை அடையாளம் கண்டுகொண்டார்.  கையில் குடையுடன் ஓடி வந்து எதுவும் சொல்லாமல் அவளிடம் குடையைக் கொடுத்து தலையசைத்தார். அவளும் புரிந்து கொண்டு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள். பதிலுக்கு அவளும் தலையசைத்துவிட்டு, சற்று தள்ளியிருந்த குடியிருப்பை நோக்கி செல்ல நீர் தேங்கிய சாலையை கடக்கத் தொடங்கினாள். ஒரு கணம் கூட மாறிக் கொண்டிருக்கும் காலநிலை பற்றி அவள் யோசிக்கவில்லை.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, ஒரு பெரும் சத்தம் கேட்டு, ஜன்னலுக்கு ஓடி சென்று பார்த்தாள். புதிதாய் ஒரு காடு வேகமாக பிரதான சாலைக்கு வந்தது போன்ற தோற்றம். பழைய மரம்  விழுந்திருப்பதை சற்று நேரம் கழித்துதான் அவள் புரிந்து கொள்ளத் தொடங்கினாள். மரத்தின் பொந்திலிருந்து எட்டிப் பார்க்கும் வெள்ளைப் புறாவை போல, ஒரு வெள்ளை குல்லா தெரிந்தது.

பிரதிஷ்தா பாண்டியா கவிதை பாடுவதை கேளுங்கள்

PHOTO • Labani Jangi

பழைய மரம்

யார் கவனிப்பாரென நினைக்கிறீர்கள்
இலைபடரும் சூரியனை
எலுமிச்சை நிறத்திலிருந்து தங்க பச்சைக்கும்
அடர் கானக நிறத்துக்கும்
ஆரஞ்சுக்கும் துரு நிறத்துக்கும்
மாறும் பச்சோந்தியை
ஒன்றன்பின் ஒன்றாக
வீழும் இலைகளின் எண்ணிக்கையை
யார் எண்ணுவார்?
ஆபத்தான அளவு நேரம் பிடித்து
சிறு கிளைகளில்
பழுப்பு கொள்ளும் இலையையும்
மர அணில்களின் பற்கடித் தடங்களையும்
தேடுகிற எதையோ நோக்கி
மேலும் கீழுமாக ஓடியலையும் அவற்றையும்
யார் கவனிக்கிறார்கள்?
உறுதியான மரத்தண்டில் துளை போடும்
தச்சு எறும்புகளின் ராணுவத்தை
யார் பார்க்கிறார்?
இருட்டில் மரம் நடுங்குவதை யார் பார்க்கிறார்?
மரவளையங்களிலிருந்து புயல் கிளம்புவதையும்
உள்ளே கவிழ்ந்திருக்கும் நீரூற்றுகளையும்
யாரும் கேட்காமல் தொங்கும் கிளைகளையும்
மரத்தண்டில் முளைத்த காளான்களையும்
யார் முகருகிறார்?

யாரால் புரிந்து கொள்ள முடியும்
என் வேர்களின் ஆழத்தை
அவர்கள் தோண்டும் குருட்டு தூரத்தை
ஒரு நீர்நிலையில் அவர்கள் தேடும்
கடைசி நம்பிக்கையின் நிறத்தை?
யார் உணர்வார் அரித்தோடும் மண் மீது
தொடர்ந்து கொண்டே இருக்கும் என் இறுகல் பிடியையும்
காட்டுத்தீயை மூட்டும்
என் நரம்புகளில் காய்ந்த உயிர்ச்சாற்றையும்?
என் இறுதி  வீழ்ச்சியை மட்டும்தான் அவர்கள் பார்க்கிறார்கள்.


இக்கவிதை, வினிதா அக்ரவால் தொகுத்து ஹவாகல் பப்ளிஷர்ஸ் பிரசுரித்த Count Every Breath என்கிற காலநிலை பற்றிய தொகுப்பில் முதன்முறையாக பிரசுரமானது

தமிழில்: ராஜசங்கீதன்

Pratishtha Pandya

PARI సృజనాత్మక రచన విభాగానికి నాయకత్వం వహిస్తోన్న ప్రతిష్ఠా పాండ్య PARIలో సీనియర్ సంపాదకురాలు. ఆమె PARIభాషా బృందంలో కూడా సభ్యురాలు, గుజరాతీ కథనాలను అనువదిస్తారు, సంపాదకత్వం వహిస్తారు. ప్రతిష్ఠ గుజరాతీ, ఆంగ్ల భాషలలో కవిత్వాన్ని ప్రచురించిన కవయిత్రి.

Other stories by Pratishtha Pandya
Illustration : Labani Jangi

లావణి జంగి 2020 PARI ఫెలో. పశ్చిమ బెంగాల్‌లోని నాడియా జిల్లాకు చెందిన స్వయం-బోధిత చిత్రకారిణి. ఆమె కొల్‌కతాలోని సెంటర్ ఫర్ స్టడీస్ ఇన్ సోషల్ సైన్సెస్‌లో లేబర్ మైగ్రేషన్‌పై పిఎచ్‌డి చేస్తున్నారు.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

రాజా సంగీతన్ చెన్నైకి చెందిన రచయిత. ఒక ప్రసిద్ధ తమిళ వార్తా చానల్‌లో పాత్రికేయులుగా పనిచేస్తున్నారు.

Other stories by Rajasangeethan