தீபிகா கமனின் பயிற்சி பெற்ற பார்வைக்கு, ஒன்று போல தோற்றமளிக்கும் ஆண் மற்றும் பெண் அந்துப்பூச்சிகளுக்கு இடையிலான வேறுபாடு தெரிந்து விடும். “ஒன்றுபோல் தோற்றமளித்தாலும் இரண்டில் நீளமாக இருப்பது ஆண் பூச்சி,” என்கிறார் அவர்13 செண்டிமீட்டர் இறகுகளை கொண்ட பழுப்பு பூச்சிகளை சுட்டிக் காட்டி. “குட்டியாக, தடியாக இருப்பதுதான் பெண் பூச்சி.”

அஸ்ஸாமின் மஜுலி மாவட்டத்திலுள்ள போருன் சிடாதர் சுக் கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா. எரி பட்டு அந்துப்பூச்சிகளை மூன்று வருடங்களாக வளர்த்து வருகிறார். தாய் மற்றும் பாட்டியிடமிருந்து அவர் கற்றுக் கொண்டார்.

எரி என்பது அஸ்ஸாமின் பிரம்மபுத்திர பள்ளத்தாக்கிலும் பக்கத்து அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலும் விளைவிக்கப்படும் பட்டு வகை. மைசிங் சமூக மக்கள் பாரம்பரியமாக பட்டுப் புழுக்களை வளர்த்து, எரி துணியை நெய்து உடுத்துபவர்கள். ஆனால் வியாபாரத்துக்காக பட்டு நெய்வது அச்சமூகத்தில் புதிய பழக்கம்.

”காலம் மாறி விட்டது,” என்கிறார் 28 வயது தீபிகா. “இப்போதெல்லாம் இளம்பெண்கள் கூட பட்டுப்புழு வளர்ப்பு கற்று, வளர்க்கின்றனர்.”

PHOTO • Prakash Bhuyan

தீபிகா கமன் பட்டுப்புழுக்கள் வளர்க்கிறார். எரி பட்டுப்புழுக்களுக்கு உணவளிக்கும் தட்டை சுத்தப்படுத்துகிறார்

பட்டுப்புழு வளர்ப்புக்கு மஜுலியின் பட்டுப்புழு வளர்ப்புத் துறையில் முட்டைகள் பெறலாம். சில வகைகளை கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை ரூ.400 வரை. அல்லது கிராமத்தில் தொழில் செய்து வரும் மக்களிடமிருந்து கூட அந்த முட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். தீபிகாவும் கணவர் உடாயும் கிராமவாசிகளிடமிருந்துதான் பெறுகிறார்கள். ஏனெனில் அது இலவசம். ஒருநேரத்தில் மூன்று ஜோடி அந்திப்பூச்சிகளைதான் அவர்கள் வைத்திருப்பார்கள். ஏனெனில் நுண்புழுக்கள் உண்ணவென எரா பாட் (ஆமணக்கு இலைகள்) அவர்கள் சேகரிக்க வேண்டும். ஆமணக்கு செடிகள் அவர்களிடம் கிடையாது.

“ஏகப்பட்ட வேலை அது. ஆமணக்கு இலைகளை சிறு நிலங்களில் விளைவிக்க முடியாது. ஆடுகள் வராமல் இருக்கும் வகையில் மூங்கில் தடுப்பு அமைத்து வளர்க்க வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர்.

கம்பளிப்புழுக்கள் அவற்றை உண்ணும். விரைவில் இலைகள் சேகரிப்பது சிரமமாகி விடும். “இரவு கூட விழித்தெழுந்து அவற்றுக்கு நாங்கள் உணவு கொடுக்க வேண்டும். அவை அதிகம் உண்டால், அதிக பட்டை அவை உற்பத்தி செய்யும்.” அவை கசெருவையும் உண்ணும் என்கிறார் உடாய். ஆனால் இரண்டில் ஒன்றைத்தான் அவை உண்ணும். “வாழ்நாள் முழுக்க ஒரு குறிப்பிட்ட இலை வகையைதான் அவை உண்ணும். மற்றவற்றை தவிர்த்து விடும்.”

அவை கூடடையத் தயார் விட்டால், கம்பளிப்புழுக்கள் நல்ல இடங்களை தேடி அலையத் தொடங்கும். வாழை இலைகளில் அவை வைக்கப்பட்டு, மாற்றம் ஏற்பட காத்திருக்க வேண்டும். “நூல்களை அவை தயாரிக்கத் தொடங்கியதும், அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு அவை தெரியும். அதற்குப் பிறகு கூடுக்குள் மறைந்து விடும்,” என்கிறார் தீபிகா.

PHOTO • Prakash Bhuyan
PHOTO • Prakash Bhuyan

இடது: எரி பட்டுக் கூடுகள், தீபிகா-உடாய் வீட்டு சுவரில் தொங்குகின்றன. பெண் அந்திப்பூச்சிகளின் கூடுகள், ஆண் பூச்சிகளுடையதை விடப் பெரிதாக இருக்கும். வலது: ஒரு தட்டில் பட்டுப் புழுக்கள் வைக்கப்பட்டு உணவு கொடுக்கப்படும்

*****

கூடடையும் கட்டம் தொடங்கிய 10 நாட்களில் பட்டு இழைகளை எடுக்கும் பணி தொடங்கும். “அதற்கு மேலும் எடுக்காமல் இருந்தால், கம்பளிப்புழு அந்துப்பூச்சியாக மாறி பறந்து விடும்,” என்கிறார் தீபிகா.

பட்டு எடுக்க இரு வழிகள் உண்டு. உருமாற்றம் முழுமையடையும் வரை காத்திருந்து, அந்துப்பூச்சி பறந்து சென்ற பிறகு அது விட்டுச் சென்ற இழைகளை சேகரிப்பது ஒரு வழி. அல்லது பாரம்பரிய மைசிங் பழக்கப்படி, கூட்டை காய வைப்பது.

கையால் இழை எடுப்பது கடினம் என்பதால் கூடு காய வைக்கப்பட வேண்டும் என்கிறார் தீபிகா. அந்துப்பூச்சி வந்ததும் கூடு வேகமாக கெட்டுப் போகும். “காய் வைக்கும்போது, மென்மையாகி விட்டனவா என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டே இருப்போம்,” என்கிறார் உடாய். ”நெருப்பு மேல் அரை மணி நேரம் காய வைக்கப்பட வேண்டும்.”

காய்ந்த பிறகு கூட்டிலிருந்து எடுக்கப்படும் கம்பளிப்புழு உண்ணுவதற்கு ருசியாக இருக்கும். “கறி போல இருக்கும்,” என்கிறார் தீபிகா. “வறுக்கப்பட்டோ வாழை இலையில் சுற்றி, மண்ணுக்கடியில் வேக வைக்கப்பட்டோ உண்ணலாம்.”

எடுக்கப்பட்ட இழைகள் அலசப்பட்டு, துணியில் மூடப்பட்டு நிழலில் காய வைக்கப்படும். பிறகு இழைகள் ஒரு கண்டில் சுற்றப்படும். “250 கிராம் எரி நூல் செய்ய நாங்கைந்து நாட்கள் பிடிக்கும்,” என்கிறார் அன்றாட வீட்டுவேலை முடித்து விட்டு நூல் சுற்றும் தீபிகா. பாரம்பரிய சடோர் மேகலா உடைக்கு ஒரு கிலோ நூல் தேவைப்படும்.

PHOTO • Prakash Bhuyan
PHOTO • Prakash Bhuyan

இடது: பெண் அந்துப்பூச்சிகள் முட்டையிடுகின்றன. கூடுகளை விட்டு அந்துப்பூச்சிகள் வெளியே வந்ததும், இனவிருத்தி செய்ய தயாராக இருக்கும். வலது: எரி பட்டுக் கூடுகளிலிருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள். எரி பட்டுப்புழு பொறிந்து வந்தபிறகு 3-4 வாரங்கள் கழித்து கூடு கட்டத் துவங்கும். அச்சமயத்தில் பட்டுப்புழுக்கள், இழை உதிர்க்கும் இறுதியான நான்காம் கட்டத்தை முடித்து, அந்துப்பூச்சிகளாக மாறத் தயாராக இருக்கும். இதற்கென பட்டுப்புழு இழை சுரந்து கூடு கட்டத் துவங்கும். 2-3 நாட்களில் கூடு கட்டி முடியும். கூட்டுக்குள் புழு அடுத்த 3 வாரங்களுக்கு இருக்கும்

PHOTO • Prakash Bhuyan
PHOTO • Prakash Bhuyan

இடது: எரி பட்டுநூலை கூடுகளிலிருந்து எடுத்து சுற்ற, இந்த பாரம்பரியக் கருவிகள் பயன்படுகிறது. தக்குரியில் நூல் சுற்றப்படுகையில் பாப்பி சுற்றுவதற்கான எடையாக பயன்படும். எரி பட்டின் பல இழைகளை ஒரு நூலாக சுற்றிப் பின்ன பாப்பி உதவுகிறது. வலது: வறுக்கப்பட்ட பட்டுப்புழுக்கள் ஒரு கிண்ணத்தில் கொடுக்கப்படுகிறது. மைசிங் மற்றும் வட கிழக்கு இந்தியாவின் பிற சமூகங்களில் பட்டுப்புழுக்கள் ருசிகர உணவாகும்

முதலில் சுற்றப்படுகையில் நூல் வெள்ளையாக இருக்கும். பிறகு பலமுறை அலசப்படுவதால், ஒருவகை மஞ்சள் நிறத்தை எரி நூல் பெறுகிறது.

“காலையிலேயே தொடங்கி முழு நாளும் நெய்தால், ஒரு மீட்டர் எரி பட்டை ஒரு நாளில் நெய்து விடலாம்,” என்கிறார் அவர்.

பட்டு நூல்கள், பருத்தி நூலோடு கலந்து நெய்யப்படும். இந்த துணியைக் கொண்டு அஸ்ஸாமிய பெண்கள் அணியும் சட்டைகளும் புடவைகளும் பாரம்பரிய உடைகளும் தயாரிக்கப்படுகிறது. எரி நூல் கொண்டு தயாரிக்கப்படும் புடவை, புது பாணியாக உருவெடுத்திருக்கிறது.

புது பாணிகள் இருந்தாலும், பட்டு வணிகம் செய்ய கடும் உழைப்பு தேவைப்படுகிறது. “பட்டுப் புழுக்கள் வளர்க்கவும் பிறகு துணி நெய்யவும் அதிக நேரம் பிடிக்கும்,” என்கிறார் பட்டு விவசாயத்தை நிறுத்தி வைத்திருக்கும் தீபிகா. வீட்டுவேலை, விவசாய வேலை, நான்கு வயது மகனை வளர்க்கும் வேலை ஆகியவற்றுக்கு இடையில் இதற்கான வேலை செய்வது அவருக்கு சிரமமாக இருக்கிறது.

*****

ஜாமினி பாயெங் நாற்பது வயதுகளில் இருக்கும் திறன் வாய்ந்த நெசவாளர். இந்திய கைவினைக் கலை சபையின் அங்கீகாரம் பெற்றவர். பத்தாண்டுகளாக எரி பட்டு நெய்யும் அவர், அக்கலையில் குறைந்து வரும் ஆர்வம் குறித்து கவலைப்படுகிறார். “இப்போதெல்லாம் தறியை தொட்டுக் கூட பார்க்காதவர்கள் பலர் எங்களில் இருக்கின்றனர். உண்மையான எரி எது என்பதை அவர்களால் கண்டறிய முடியாது. இந்த நிலையில் இக்கலை இருக்கிறது.”

10ம் வகுப்பில், ஜவுளி மற்றும் நெசவு பற்றிய கல்வியை ஜாமினி பயின்றார். கல்லூரியில் சேருவதற்கு முன் இரு வருடங்கள் வரை அவர் நெசவு வேலை செய்தார். பட்டப்படிப்பு முடித்ததும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர், மஜூலியின் கிராமங்களுக்கு சென்று பாரம்பரிய பட்டு நெசவை ஆராய்ந்து வருகிறார்.

PHOTO • Prakash Bhuyan
PHOTO • Prakash Bhuyan

இடது: ஜாமினி பாயெங், அஸ்ஸாமின் மஜுலியிலுள்ள அவரது கடையில் போஸ் கொடுக்கிறார். வலது: பாரம்பரிய எரி சால்வை

PHOTO • Prakash Bhuyan
PHOTO • Prakash Bhuyan

ஜாமினி பாயெங்கின் நெசவுப் பொறி

”எரி வளர்க்கப்படும் வீடுகளில் இக்கலையை தாய்களிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்,” என்கிறார் மஜுலியை சேர்ந்த ஜாமினி. “நெயதற்கோ பாபின் சுற்றுவதற்கோ எனக்கு எவரும் கற்றுக் கொடுக்கவில்லை. என் தாய் செய்வதை கண்டு கற்றுக் கொண்டேன்.”

இன்றைப் போல, இயந்திர தயாரிப்பு உடைகள் அதிகமாக கிடைத்திடாத அந்த காலத்தில், பெரும்பாலான பெண்கள் சொந்தமாக தங்களின் தறியில் நெய்த பட்டு ஆடைகளைத்தான் அணிந்திருந்ததாக சொல்கிறார் அவர். எரி, நூனி மற்றும் முகா பட்டில் நெய்யப்பட்ட சடோர்-மேகேலே துணியைப் பெண்கள் அணிந்திருந்தனர். ”தக்குரியை தாங்கள் செல்லும் இடங்கள் எல்லாவற்றுக்கும் பெண்கள் கொண்டு சென்றனர்.”

ஜாமினி ஈர்க்கப்பட்டார். “எரி பட்டுப்புழுக்களை வளர்க்கவும் மற்றவர்களுக்கு அதை சொல்லிக் கொடுக்கவும் அப்போதுதான் நான் முடிவு செய்தேன்.” இப்போது அவர் மஜுலியின் 25 பெண்களுக்கு நெசவு கற்றுக் கொடுக்கிறார். நாட்டுக்குள்ளும் வெளியேயும் அவரது துணிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பிரிட்டிஷ் மியூசியத்திலும் ஒரு துணி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

“எரி உடைகளுக்கான டிமாண்ட் அதிகம். ஆனால் நாங்கள் பாரம்பரிய முறைகளின்படிதான் தயாரிக்கிறோம்,” என்கிறார் ஜாமினி. பிற இடங்களில் எரி துணியை இயந்திரங்களிலும் நெய்கிறார்கள். பிகாரின் பகல்பூர் பட்டு, அஸ்ஸாமின் சந்தைகளை நிறைக்கிறது.

கையால் செய்யப்படும் பொருட்களின் விலை, நூல் வகை, பயன்படுத்தப்படும் உத்திகள், வடிவத்தின் நுட்பம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. கையால் செய்யப்பட்ட எரி வகை அங்கி ஒன்று 3,500 ரூபாய் வரை விற்கப்படும். கையால் செய்யப்பட்ட சடோர் மெகேலா துணிக்கான சந்தை விலை ரூ.8,000. உள்ளூர் சந்தையில் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை ஆகும்.

“தொடக்கத்தில், அஸ்ஸாமிய பெண்கள் கமுசா, ருமால் மற்றும் காதலர்களுக்கான தலையணை உறைகள் போன்றவற்றை நெய்வார்கள். மைசிங் பெண்கள் கலுக் துணியும் நெய்தார்கள்,” என்கிறார் அவர். பாரம்பரிய முறைகளை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தவில்லை எனில், செறிவான பண்பாடு மறைந்து விடுமென ஜாமினி கருதுகிறார். “எனவேதான் அதிகமோ குறைவோ முடிந்தமட்டிலும் எனது பொறுப்பாக கருதி இதைச் செய்து வருகிறேன்.”

இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளை மானிய ஆதரவில் எழுதப்பட்டது.

தமிழில்: ராஜசங்கீதன்

Prakash Bhuyan

Prakash Bhuyan is a poet and photographer from Assam, India. He is a 2022-23 MMF-PARI Fellow covering the art and craft traditions in Majuli, Assam.

Other stories by Prakash Bhuyan
Editor : Swadesha Sharma

Swadesha Sharma is a researcher and Content Editor at the People's Archive of Rural India. She also works with volunteers to curate resources for the PARI Library.

Other stories by Swadesha Sharma
Translator : Rajasangeethan

రాజా సంగీతన్ చెన్నైకి చెందిన రచయిత. ఒక ప్రసిద్ధ తమిళ వార్తా చానల్‌లో పాత్రికేయులుగా పనిచేస్తున్నారు.

Other stories by Rajasangeethan