அந்த இரவில் ஒட்டுமொத்த மலையும் சரிந்தது.
அன்று இரவு 11 மணி. அடுத்தடுத்து 4-5 வீடுகளில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் 17 பேருடன் அனிதா பகடி உறங்கிக் கொண்டிருந்தார். “பயங்கர சத்தம் கேட்டு நாங்கள் விழித்தோம், உடனடியாக நடந்ததை உணர்ந்து கொண்டோம்,” என்கிறார் அவர். “இரவில் நாங்கள் ஓடத் தொடங்கினோம். எங்களுக்கு அருகே இருந்த வீடுகள் சரிந்து கிடந்தன.”
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டம், படான் தாலுக்காவிற்கு நடுவே உள்ள சஹ்யாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள மிர்கான் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அனிதாவின் வீடு தப்பியது. இந்தாண்டு ஜூலை 22ஆம் தேதி இரவு அவர் தனது விவசாய கூட்டுக் குடும்பத்தில் 11 பேரை இழந்துவிட்டார். இறந்தவர்களில் மிக சிறியவரான 7 வயது அண்ணன் மகன் யுவராஜூம், தூரத்து உறவினரான 80 வயது யசோதா பகடியும் அடங்கும்.
அடுத்தநாள் காலை, பேரிடர் மீட்புக்குழு வந்தது. 43 வயது அனிதா உள்ளிட்டோரை கிராமத்திலிருந்து மீட்டு சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொய்னாநகர் கிராம சில்லா பரிஷத் பள்ளிக்கு அழைத்துச் சென்றது. கொய்னா அணை மற்றும் நீர்மின் திட்டத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மிர்கான்.
“மாலை 4 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலச்சரிவிற்குப் பிறகு மாலை 7 மணிக்கு [ஜூலை 22அன்று] நாங்கள் மக்களை வெளியேற்றத் தொடங்கினோம். ஆனால் இரவு 11 மணிக்கு இப்பயங்கரம் நிகழ்ந்து எங்கள் ஒட்டுமொத்த கிராமமும் அழிந்தது,” என்கிறார் அக்கிராமத்தைச் சேர்ந்த காவலரான சுனில் ஷெலார்.
மிர்கானில் உள்ள 285 பேருக்கும் (கணக்கெடுப்பு 2011) – பலத்த மழை, லேசான நிலச்சரிவுகள் என்பது பழக்கமானது. அவர்களில் 11 பேர் நிலச்சரிவில் கொல்லப்பட்டுள்ளனர். ஜூலை 22ஆம் தேதி ஏற்பட்ட சம்பவங்கள் கணிக்க முடியாதது என்கின்றனர் அவர்கள். பல செய்தி அறிக்கைகளும் அன்றய தினம் கொய்னா மீன்பிடி தளத்தில் 746 மி.மீ மழை பெய்ததையும் – அதே வாரத்தில் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் பலத்த வெள்ளம் ஏற்பட்டதையும் பதிவு செய்துள்ளன.
“ஜூலை 21ஆம் தேதி மதியம் முதல் மழை தொடங்கியது,” என்று என்னிடம் தெரிவித்தார் பள்ளியில் தங்கியுள்ள 45 வயது ஜெயஸ்ரீ சப்கால். “பலத்த மழை என்பது பொதுவானது என்பதால் நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் அடுத்தநாள் இரவு 11 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டு கண் விழித்தோம். சில நிமிடங்களில், எங்கள் கிராமத்தின் மீது மலை சரிந்தது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் அருகில் உள்ள கோயிலுக்குள் ஓடிவிட்டோம்.”
“மலை சரிந்துவிட்டது என கிராமத்தினர் சிலர் எங்கள் வீட்டிற்கு ஓடி வந்தனர்,” என்கிறார் 21 வயது கோமல் ஷெலார். “நாங்கள் ஒரு நொடியும் சிந்திக்காமல் வீட்டை விட்டு வெளியேறினோம். எங்கும் வெளிச்சம் கிடையாது. வழியெங்கும் இடுப்பளவு தண்ணீர், சேற்றில் நடந்தபடி கோயிலுக்குச் சென்று இரவை அங்கு கழித்தோம்.”
வீடுகளை சேதம் செய்து உயிர்களை பறிப்பதற்கு முன் மழை மற்றும் நிலச்சரிவு விவசாய நிலங்களையும் பயிர்களையும் கூட நாசமாக்கியது. “இச்சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் நான் நெல் விதைத்திருந்தேன். இப்பருவகாலத்தில் நல்ல விளைச்சலை எதிர்பார்த்திருந்தேன்,” என்கிறார் கூட்டுக் குடும்பத்தில் 12 வீடுகளை இழந்த 46 வயது ரவிந்தர் சப்கால். “என் ஒட்டுமொத்த விளைநிலமும் போய்விட்டது. எங்கும் சேறு. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒட்டுமொத்த குடும்பமும் நெல் விளைச்சலை சார்ந்திருந்தது.”
மிர்கானின் பழமையான குடியிருப்புவாசிகளுக்கு பள்ளியில் தங்குவது என்பது மூன்றாவது முறை. முதன்முதலில் 1960களின் தொடக்கத்தில் கொய்னா அணை கட்டுமானத்தின்போது இக்குடும்பங்கள் உயர்வான இடத்தை நோக்கி நகர்ந்தன. உண்மையான மிர்கான் மெல்ல மூழ்கியது. பிறகு 1967, டிசம்பர் 11ஆம் தேதி கொய்னாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அருகமை கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். அதுவே புதிய மிர்கான் என்று ஆனது. இந்தாண்டு ஜூலை 22ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு அவர்களை மீண்டும் அதே இடத்திற்கு கொண்டு சென்றது.
“அணை கட்டியபோது எங்களுக்கு விளைநிலமும், வேலைவாய்ப்பும் அளிப்பதாக அரசு உறுதி அளித்தது,” என்கிறார் 42 வயது உத்தம் ஷெலார். “40 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது. எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கொய்னா பகுதிக்குச் சென்றால் மலைகளில் உள்ள மிகப்பெரும் பிளவுகளை நீங்கள் பார்க்கலாம். அடுத்த மழைக்குள் அம்மலைகளும் சரிந்துவிடும். நாங்கள் தொடர் அச்சுறுத்தலில் வாழ்கிறோம்.”
மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜூலை 23ஆம் தேதி மாநில அரசு அறிவித்தது செய்தி குறிப்பில் உள்ளது. அனிதா பகடியின் குடும்பம் இத்தொகையை பெற்றுள்ளது. மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சத்தை பகடி குடும்பம் இன்னும் பெறவில்லை.
நிலச்சரிவில் வீடுகள் அல்லது விளைநிலங்களை இழந்த மக்களுக்கு நிவாரணம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
“வருவாய் துறையினர் எங்களிடம் படிவத்தை [ஆகஸ்ட் 2, இழப்பீட்டிற்காக] நிரப்பச் சொன்னார்கள். ஆனால் எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை,” என்கிறார் மண் மற்றும் கழிவுகளில் மூடப்பட்டுள்ள தனது விளைநிலத்தை காட்டியபடி 25 வயது கணேஷ் ஷெலார். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நவிமும்பையில் பார்த்து வந்த இயந்திர பொறியாளர் வேலையை விட்டுவிட்டு குடும்பத்துடன் சேர்ந்து நெல் விவசாயம் செய்வதற்காக கணேஷ் தனது கிராமத்திற்குத் திரும்பினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் முட்டுகிறது. “எங்கள் 10 ஏக்கர் நிலமும் போனது, பயிர்கள் அழிந்தன. இதற்காக அரசிடமிருந்து எதுவும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.”
அரசு மற்றும் பல்வேறு என்ஜிஓக்கள் அளிக்கும் உணவு தானியங்கள், பிற பொருட்களைச் சார்ந்துள்ளதால் மிர்கான்வாசிகள் நிலச்சரிவு ஏற்பட்டு பல வாரங்களுக்குப் பிறகும் பள்ளியிலேயே தங்கியுள்ளனர். முறையான, நிரந்தர மறுவாழ்வு கிடைக்காமல் அனைவரும் தற்போது துன்பத்தில் உள்ளனர். “எங்கள் கிராமம் போய்விட்டது. பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தப்பட வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய கோரிக்கை,” என்கிறார் காவலரான பாடீல் சுனில் ஷெலார்.
“தங்களின் வீடுகளுக்கு [மிர்கானுக்கு] திரும்ப யாரும் விரும்பவில்லை. இங்கு தங்கவும் நாங்கள் விரும்பவில்லை, எங்களுக்கு முழுமையான மறுவாழ்வு வேண்டும்,” என்கிறார் உத்தம் ஷெலார்.
நிலச்சரிவில் உயிர் தப்பிய அனிதாவின் உறவினரான (அவரது தாயின் சகோதரி மகன்) சஞ்சய் பகடே சொல்கிறார், “சுதந்திர தினத்தன்று எங்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்படும் என்று அரசு உறுதி அளித்தது. ஆனால் அரசு அந்த உறுதியை காப்பாற்றவில்லை. எத்தனை நாட்கள் நாங்கள் இப்பள்ளியிலேயே வாழ முடியும்?” பள்ளியில் உள்ள பெண்களுக்கான கழிப்பறைகள் போதுமானதாக இல்லை, குடிநீரும் பிரச்னையாகவே உள்ளது. “வேறு மாவட்டத்திற்குச் செல்லக் கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்,” எனும் அவர், “ஆனால் எங்களுக்கு முழுமையான மறுவாழ்வு வேண்டும்.”
மிர்கான் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 11 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்துவதற்காக ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஏராளமான மக்கள் பள்ளியில் ஒன்று திரண்டனர். அனைவரும் கண்களை மூடி இருந்தனர். அனிதாவின் கண்கள் மட்டும் திறந்திருந்தது. குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை போலும்.
மற்றவர்களைப் போன்று அவரும் விவசாயிகளான கணவர் மற்றும் மகனுடன் பள்ளியில்தான் இப்போதும் தங்கியுள்ளார். உறவினர்கள் சிலருடன் அரங்கின் ஓரத்தில் தரையில் அமர்ந்தபடி அவர் பேசுகையில், “எங்கள் குடும்பத்தை, வீடுகளை, அனைத்தையும் இழந்துவிட்டோம். எங்கள் கிராமத்திற்கு இப்போது நாங்கள் போக மாட்டோம்.” அவருக்கு கண்ணீர் மல்குவதால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
முகப்பு புகைப்படம்: கணேஷ் ஷெலார்
தமிழில்: சவிதா