“பள்ளிக்குச்செல்ல வேண்டும். பள்ளிக்குச்செல்ல வேண்டும்”
பிரதீக் இதை மீண்டும் மீண்டும் கூறுகிறார். அங்கு இல்லாத உடன் படிக்கும் நண்பரை அழைத்து அவர் இவ்வாறு கூறுகிறார். அவரது ஒரு அறைகொண்ட மண் குடிசையின் வாசலில் அமர்ந்துகொண்டு, அருகில் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். காலை முதல் மாலை வரை அவர் அங்கேயே அமர்ந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது முற்றத்தில் உள்ள மரத்தின் மீது சாய்ந்துகொண்டு நின்றோ தனது உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 11 மாதங்களாக அரிதாகவே அவர் வாயில்படியை கடந்து முற்றம் மற்றும் மாட்டுக்கொட்டகைக்கு வருகிறார்.
கிராமத்தில் உள்ள மற்றொரு குழந்தை ரஷின், பிரதீக்குடன் விளையாடுவதில்லை. “இங்குள்ள குழந்தைகளுக்கு அவன் சொல்வது புரிவதில்லை. அதனால் அவன் தனியாக இருக்கிறான்“ என்று அவரது 32 வயது தாய் ஷாரதா ராவுட் நம்மிடம் விளக்குகிறார். கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகளைவிட, பிரதீக்கீன் ஆரம்பகால நடவடிக்கைகள் வித்யாசமாக இருந்ததை அவர் கண்டுபிடித்தார். அவரது மூத்த குழந்தையிலிருந்தும் மாறுபட்டதை உணர்ந்தார். குழந்தையால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. 10 வயது வரை தன்னை தானாகவும் பராமரித்துக்கொள்ள முடியவில்லை.
அவருக்கு 8 வயது இருக்கும்போது, அவர் சிறப்பு குழந்தையாக, அரசு நடத்தும் ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரங்னலே மருத்துவமனையில் கண்டறியப்பட்டார். அம்மருத்துவமனை, அகமது நகர் மாவட்டம் கர்ஜத் தாலுகாவில் உள்ள அவர்களின் கிராமத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. “அவருக்கு தற்போது 10 வயதாகிவிட்டது. இப்போதும் கூட அவரால் சரியாக பேசமுடியாது“ என்று ஷாரதா நினைவு கூறுகிறார். “அவர் பள்ளி செல்ல துவங்கியவுடன், என்னை அம்மா என்று அழைக்கத்துவங்கிவிட்டார். கழிவறைக்கு தானாக செல்கிறார். தானாகவே குளித்துக்கொள்கிறார். பள்ளி எனது குழந்தைக்கு மிக முக்கியமான ஒன்று. சில எழுத்துக்களை அவர் கற்றுக்கொண்டுள்ளார். அது தொடர்ந்தால், அவர் தன்னை வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த தொற்று காரணமாக அவர் தொடர்ந்து பள்ளி செல்ல முடியவில்லை“ என்று ஷாரதா வருந்துகிறார்.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட்-19 தொற்று காரணமாக அவரது பள்ளி மூடப்பட்டது. அந்தப்பள்ளியில் பயின்ற 25 சிறப்பு குழந்தைகளில் அவரும் ஒருவர். அவர்கள் அனைவரும் ஆண் குழந்தைகள். அவர்கள் 6 முதல் 18 வயதுடையவர்கள். அதனால் அங்கு தங்கி படித்து வந்தவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர்.
பிரதீக் 2018ம் ஆண்டு முதல் பள்ளி செல்கிறார். அவரது உறவினர் ஒருவர், அவரது தாயிடம் சோலாப்பூர் மாவட்டம் கர்மாலா தாலுகாவில் உள்ள உண்டு உறைவிட பள்ளியான தியான்ப்ரபோதன் மட்டிமண்ட் நிவாஸி வித்யலாயா சிறப்பு குழந்தைகள் பள்ளி குறித்து கூறியதையடுத்து, அவர் அங்கு சேர்க்கப்பட்டார். அது பிரதீக்கின் கிராமத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பள்ளி தானேவைச் சேர்ந்த ஒரு தன்னார்வ அமைப்பு மூலம் நடத்தப்படுகிறது. அங்கு சிறப்பு குழந்தைகள் இலவசமாக சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இது குடும்பங்களுக்கு செலவில்லாத ஒன்று.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 4,30 மணி வரையும், சனிக்கிழமைகளில் சிறிது நேரமும் இயங்கும் பள்ளியில், 4 ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். பேச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி, தன்னலம் பேணுதல், பேப்பர் வேலைகள், மொழித்திறன், எண்கள், நிறம் மற்றும் பொருட்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் அவர்களுக்கு வழிகாட்டி உதவுகிறார்கள்.
ஆனால், ஊரடங்கு பிரதீக்கின் பள்ளி வழக்கம் மற்றும் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அதனால், அவர் ஆசிரியர்கள் மற்றும் மற்ற குழந்தைகளுடன் தொடர்புகொள்வதும் தடைபட்டுவிட்டது. வீட்டில் சில நேரங்களில் அவர் மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் சில எழுத்துக்களை எழுவதற்கு தானாகவே முயற்சி செய்வார். அவை அ, ஆ, இ, , இ, abcd என அவர் மார்ச் மாதம் பள்ளி மூடப்படுவதற்கு முன்னர் கற்றுக்கொண்டதாகும்.
ஆனால், 11 மாதத்தை கடந்தும் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதால், அவர் படித்தவற்றையெல்லாம் மறக்கிறார் என்பது ஷாரதாவின் கவலையாக உள்ளது. டிசம்பர் மாதம் முதல் அவர் எழுத்துக்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்று அவர் கூறுகிறார். “மார்ச் மாதம் அவர் திரும்பி வந்தபோது, அவர் மிக அமைதியாக இருந்தார்“ என்று ஷாரதா மேலும் கூறுகிறார். “ஆனால் மாதங்கள் செல்லச்செல்ல அவர் எரிச்சலுடன் காணப்படுகிறார். நான் ஏதாவது அன்பாக கேட்டால் கூட கோபத்துடனே பதில் கூறுகிறார்“ என்று ஷாரதா வருந்துகிறார்.
சிறப்பு குழந்தைகளுக்கு பள்ளி கொடுக்கும் பயிற்சியும், அட்டவணையும் மிக மிக அவசியமான ஒன்று என்று குழந்தை நரம்பியல் மருத்துவர், வளர்ச்சி கோளாறு சிறப்பு நிபுணர் மற்றும் வட மத்திய மும்பையின் சியோனில் உள்ள லோக் மானிய திலக் நகர பொதுமருத்துவமனையின் பேராசியருமான டாக்டர் மோனா கஜ்ரே கூறுகிறார். சிறப்பு பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறுகையில், “ஒவ்வொரு செயலும், பல்வேறு சிறுசிறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்றுவிற்கப்படும். அவை ஒவ்வொன்றும் பொருமையாக மீண்டும், மீண்டும் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்படும். அப்போதுதான், ஒவ்வொரு நிலையையும் நினைவில்வைப்பது, தானாக செய்வதும் எளிதாகும். அதை தொடர்ந்து செய்யவில்லையென்றால், சிறப்பு குழந்தைகள் கற்றுக்கொண்ட வற்றை சிறிது மாதங்களிலேயே மறந்துவிடுவார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
குழந்தைகளை பாடத்துடன் தொடர்பிலேயே இருக்கவைப்பதற்காக, பிரதீக்கின் பள்ளி, அவர் வந்தபோது கற்றலுக்காக சிலவற்றை அவருடனே கொடுத்து அனுப்பியிருந்தார்கள். ஆனால், ஷாரதாவிற்கு அதன் மூலம் கற்றுக்கொடுப்பது சிரமமாக இருந்தது. “அவரின் ஆசிரியர்கள் வண்ணங்களும், அரிச்சுவடி அட்டையும் கொடுத்தனுப்பியிருந்தார்கள். அதன் மூலம் கற்றுக்கொடுக்கும்போது, அவர் எங்களை கவனிக்கமாட்டார். மேலும் எங்களுக்கும் வேலை உள்ளது“ என்று அவர் கூறுகிறார். 10ம் வகுப்பு வரை படித்துள்ள ஷாரதா, அவரின் வீட்டு வேலைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தின் 2 ஏக்கர் நிலத்தின் வேலைகளையும், அவரது கணவர் தட்டாட்ரே ராவுத்துடன் இணைந்து கவனித்துக்கொள்கிறார்.
அவர்கள் வீட்டின் தேவைக்காக காரீப் பருவத்தில் கம்பு மற்றும் சோளம் ஆகிய இரண்டையும் பயிரிடுகிறார்கள். “நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை நாங்கள் மற்றவர்களின் வயல்களில், மாதத்தில் 20 – 25 நாட்கள் வேலை செய்வோம்“ என்று ஷாரதா கூறுகிறார். அவர்களின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தை தாண்டாது. இதனால், அவர்களால், வீட்டில் இருந்து குழந்தைக்கு உதவிகள் செய்துகொண்டிருக்க முடியாது. இது அவர்களுக்கு ஏற்கனவே உள்ள பொருளாதார நெருக்கடியில் கூடுதல் இழப்பை ஏற்படுத்தும்.
பிரதீக்கின் மூத்த சகோதரர் 18 வயதான விக்கி 12ம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு ஆன்லைனில் வகுப்புகள் (ஊரடங்குக்குப்பின்னர்) நடைபெறுகிறது. ஆனால் அவர்களிடம் ஸ்மார்ட் போன் வசதி இல்லாததால், அதே கிராமத்தில் உள்ள விக்கியில் நண்பர் வீட்டிற்கு சென்று ஆன்லைன் வகுப்புகளை கவனித்து, படித்துவருகிறார். இதனால், அவருக்கும் தனது சகோதரருக்கு சொல்லிக்கொடுக்க நேரமில்லை.
ஆன்லைன் கல்வி என்பது அனைத்து குழந்தைகளுக்கும் சவாலான ஒன்றாகவே உள்ளது. (ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் பிரிவுகளை பார்க்க) பள்ளியில் சேர்ந்தாலும், சிறப்பு குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய தடையாக உள்ளது. 5 முதல் 19 வரை வயதுக்குள் உள்ள 4 லட்சம் சிறப்பு குழந்தைகளுள் 1,85,086 குழந்தைகள் மட்டுமே ஏதேனும் ஒரு பள்ளி செல்கிறார்கள் (இந்தியாவின் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுள்) என்று 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.
பெரும்பாலான இந்நிறுவனங்களுக்கு அரசிடம் இருந்து, ஊரடங்கு காலத்தில் வழிமுறைகள் வந்திருந்தது. 2020ம் ஆண்டு ஜீன் மாதம் 10ம் தேதியிடப்பட்டு, மஹாராஷ்ட்ரா அரசின் மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் இருந்து, சமூக நீதி மற்றும் சிறப்பு உதவிகள் துறைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தொற்று காலத்தில் சிறப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி வழங்க அனுமதி கோரப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு, இணையதளத்தில் உள்ள சிறப்பு குழந்தைகள் முன்னேற்ற தேசிய மையத்தின் தகவல்களை வைத்து, பெற்றோர் மூலம் சிறப்பு கல்வி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேவைப்படும் பெற்றோருக்கு அதை வழங்குவதன் மூலமும் அவர்களுக்கு கல்வி தடையின்றி கிடைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரதீக்கின் பள்ளி தியான்ப்ரோபதன் வித்யாலயாவும், பெற்றோர்களுக்கு கற்றல் உபகரணங்களை அனுப்பிவைத்தது. அரிச்சுவடி, எண்கள், பொருட்கள் அட்டவணை, பாடல்கள் கற்றுக்கொடுக்கும் முறை உள்ளிட்ட அனைத்து கற்றல் உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டது மற்றும் பெற்றோருக்கு வழிகாட்டும் வகையில் அவர்களுடன் தொலைபேசியிலும் உரையாடினர். திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோஹித் பகடே, அடிக்கடி பெற்றோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு குழந்தைகள் குறித்து விசாரித்ததாக கூறுகிறார்.
ஆனால், அந்த 25 குழந்தைகளின் பெற்றோர்களும், செங்கல் சூளையிலோ, விவசாய கூலியாகவோ, குறு விவசாயியாகவோ உள்ளவர்கள்தான். “குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதற்கு பெற்றோர் சிறிது நேரம் குழந்தைகளுடன் அமரவேண்டும். ஆனால், அது அவர்களின் தினக்கூலியை பாதிக்கிறது“ என்று அவர் மேலும் கூறுகிறார். “அதனால் பிரதீக் அல்லது மற்ற சிறப்பு குழந்தைகளுக்கு வேறு வழியில்லை. அவர்கள் சிலைபோல் அமர்ந்திருக்கிறார்கள். அன்றாட வேலைகள் மற்றும் விளையாட்டு அவர்களை தன்னிறைவு பெற்றவர்களாகவும், அவர்களுக்கு ஏற்படும் எரிச்சல் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்துவதாகவும் மாற்றுகிறது. அந்த நடவடிக்கைகளை ஆன்லைனில் செய்வது மிகக்கடினம், அந்தக் குழந்தைகளுக்கு தனிக்கவனம் தேவை“ என்று அவர் கூறுகிறார்.
பள்ளி மூடப்பட்டது, 18 வயது சங்கீத் ஹம்பேவையும் பாதித்துள்ளது. அவரும் ரஷினில் உள்ள சிறப்பு குழந்தை. அந்த கிராமத்தில் 12,600 பேர் வசிக்கிறார்கள். மார்ச் மாதம் முதல், தனது சிமெண்ட் வீட்டின் முற்றத்தில் உள்ள இரும்பு கட்டிலில் நாள் முழுவதும் அமர்ந்துகொண்டு, கீழே பார்த்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறார். (இதற்கிடையில், 18 வயது வரை உள்ள மாணவர்களை மட்டும்தான் பள்ளிகள் அனுமதிக்கின்றன. அதற்கு பின்னர், வழக்கமாக அவர்கள் வீடுகளிலே தங்கிவிடவேண்டும். கர்ஜாத் தாலுகாவில், சில தொழிற்பயிற்சி மையங்கள் பயிற்சியளிக்கின்றன. ஆனால், அதற்கு பெற்றோர் கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால், அது அவர்களால் செலுத்த முடியாது)
அவரது மருத்துவ அறிக்கைப்படி, மனநல குறைபாடு கொண்டவராக, அறியப்பட்டது 6 வயதில், சங்கீத்தால் பேச முடியாது. தொடர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கு மருந்துகள் வழக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும். 2017ல் அவருக்கு 15 வயது இருந்தபோது, அவரது தாய் 39 வயதான மணிஷா, அங்கீகரிக்கப்பட்ட சமூக நல செயற்பாட்டாளரின் அறிவுரையின்படி, அவரை முதல் முறையாக பள்ளிக்கு அனுப்பினார்.
“முன்பெல்லாம் அவரை குளிக்க வைக்க வேண்டும். உடை உடுத்திவிட வேண்டும். கழிவறைக்கு செல்வதற்கு உதவ வேண்டும். அவருக்கு அருகில் யாராவது சென்றால் அமைதியின்றி காணப்படுவார். ஆனால், பள்ளி சென்றபின் அவர் நிறைய முன்னேறிவிட்டார்“ என்று மணிஷா கூறுகிறார்.
11 மாதங்களுக்கு மேலாக பள்ளி மூடப்பட்டதையடுத்து, அவர் தானாகவே கழிவறைக்கு செல்லும் தனது பழக்கத்தை மறந்துவிட்டார். அவர் மார்ச் மாதத்தில் வீடு திரும்பிய சில வாரங்கள் கழித்து, அவரது கால்சட்டையை மண்ணாக்கிகொண்டார். மலத்தை உடல் மற்றும் சுவற்றில் பூசிவிட்டார்“ என்று மணிஷா கூறுகிறார்.
முதலில் சில வாரங்கள் பள்ளி மூடப்பட்டது. பின்னர் சில மாதங்களாக அது தொடர்ந்தவுடன் மணிஷாவின் கவலை அதிகரித்தது. சங்கீத்தும் அடிக்கடி முரட்டுத்தனமாகவும், பிடிவாதமாகவும், உறக்கமின்றியும் ஆகிவிட்டார். “சில நேரங்களில் இரவு முழுவதும் உறங்காமல், படுக்கையில் அமர்ந்துகொண்டு முன்னும், பின்னும் சாய்ந்துகொண்டு இருப்பார்“ என்று மணிஷா கூறுகிறார்.
2010ம் ஆண்டு, தனது 30 வயதில், அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தபின், மணிஷா, தனது மகன் மற்றும் மகள் 19 வயதான ருதுஜா ஆகியோருடன் தனது பெற்றோரின் ராஷின் கிராமத்தில் வசிக்கிறார். (ருதுஜா தபால் மூலம் பிஏ படிக்கிறார். அதற்காக தானே மாவட்டத்தில் உள்ள பத்லபூர் நகரில், தனது அத்தை வீட்டில் தங்கியிருக்கிறார்). மணிஷா தனது பெற்றோருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் ஆண்டு முழுவதும் வேலை செய்கிறார். இந்த குடும்பத்தினர், கூலித்தொழிலாளர்களின் உதவியோடு, ரபி மற்றும் காரீப் பருவத்தில் சோளம் பயிரிடுகிறார்கள்.
“எனது பெற்றோர் இருவரும் 80 வயதை கடந்தவர்கள்“ என்று மணிஷா கூறுகிறார். “அவர்களால், சங்கீத்தை பார்த்துக்கொள்ள முடியாது. அவர்கள் அன்பாகவே ஏதேனும் கேட்டாலும், சங்கீத் அவர்களை தள்ளிவிட்டு, ஏதேனும் பொருளை தூக்கி அவர்கள் மீது வீசிவிட்டு, சத்தமாக அலறுவார்“. அதற்காக நானே நாள் முழுவதும் வீட்டில் தங்கிவிட்டால், வேலைகளை கவனிப்பது யார்? என்ன சாப்பிடுவது?“ என்று அவர் கேட்கிறார்.
சங்கீத் மார்ச் மாதத்தில் பள்ளியில் இருந்து திரும்பியபோது, இவ்வளவு முரட்டுத்தனமாக இல்லை. “அவர் என்னுடன் வயலுக்கு வருவார். மாடுகளுக்கு தீவணப்பயிர்களை தலையில் சுமந்து வருவார். ஆனால் திடீரென செப்டம்பர் மாதம் முதல் வருவதை நிறுத்திவிட்டார். மணிஷா அவரை உடன் வருமாறு அழைத்தால், மணிஷாவை அவர் அடிக்கவோ, உதைக்கவோ செய்வார். அதனால் நான் கோபமடைய மாட்டேன். அம்மாவைப்பொறுத்தவரை அனைத்து குழந்தைகளும் சமம் தானே. எப்படியிருந்தாலும், எனது மனதின் ஒரு பகுதி அவர்“ என்று மணிஷா கூறுகிறார்.
மணிஷா பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் பொருட்களை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது என்று பள்ளியில் கொடுக்கப்பட்டுள்ள படங்கள் அட்டையை காண்பித்து சங்கீத்துக்கு சொல்லிக்கொடுக்கிறார். இந்த பாடங்கள் அனைத்தும் அவர் வயலில் வேலை முடித்து வீடு திரும்பியவுடன் சொல்லிக்கொடுக்கிறார். அப்போது கூடவே வீட்டு வேலைகளையும் செய்துகொள்கிறார். “நான் இந்த அட்டையை எடுத்து சொல்லிக்கொடுக்க துவங்கினாலே அவர் ஓடிவிடுகிறார். எங்காவது அமர்ந்துகொண்டு, நாம் சொல்லிக்கொடுப்பதை கவனிக்கமாட்டார்“ என்று அவர் குற்றம்சாட்கிறார்.
பள்ளியின் நடைமுறைகள், வழக்கமான செயல்பாடுகள், மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது போன்றவை இல்லாமல், உபகரணங்களை வைத்து கற்றுக்கொள்வது மற்றும் தன்னல பயிற்சிகள் சொல்லிக்கொடுப்பது, குழந்தைகளில் நடத்தையில் பிரச்னைகளை ஏற்படுத்தி, அவர்களை தீவிர அறிவுக்குறைபாடு உடையவர்களாக மாற்றும் என்று ரோஹித் பகடே கூறுகிறார்.
அவர்களிடம் ஸ்மார்ட் போனோ அல்லது மடிக்கணினி மற்றும் நல்ல நெட்வொர்க்கும் இருந்தால், சிறப்பு குழந்தைகளுக்கு வகுப்புகள் முக்கியம் என்று அவர் கூறுகிறார். “இதற்கிடையில், சிறப்பு குழந்தைக்கு கற்பிப்பதற்கு நிறைய பொறுமை தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட செயல் குறித்து தொடர்ந்து அவர்கள் புரிந்துகொள்ளும் வரை பேசி, அவர்களை நம்ப செய்வது பெற்றோர்களுக்கு மிகமிக கடினமான ஒன்று“ என்று பகடே மேலும் கூறுகிறார். “பெற்றோர்களுக்கு இது பழக்கமில்லாத ஒன்று. எனவே அவர்கள் பொறுமையிழந்து, குழந்தைகள் கவனிக்கவில்லையென்று கூறி சொல்லிக்கொடுப்பதை விட்டுவிடுவார்கள் என்று கூறுகிறார்.
“சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்கு நிலைத்தன்மை ஒரு முக்கிய காரணி“ என்று மும்பை லோக்மாக்யா திலக் நகராட்சி பொது மருத்துவமனை மருத்துவர் கஜ்ரே விளக்குகிறார். தொற்றால் ஏற்பட்ட இந்த ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டது, பெரும்பாலான சிறப்பு குழந்தைகள் தங்கள் கல்வியை இழப்பதற்கு காரணமாவிட்டது. அவர்களை ஒருவரை சார்ந்திருக்க செய்தததுடன், இடை நிற்றலை அதிகரித்துவிட்டது. “ஆன்லைனில் கற்றுக்கொள்வது, நாம் நேரடியாக கொடுக்கும் பயிற்சி மற்றும் சிகிச்சைக்கு ஈடாகாது. குறிப்பாக சிறப்பு குழந்தைகளுக்கு அது கைகொடுக்காது. மார்ச் மாத துவக்கித்தில் இருந்து நாங்கள் 35 குழந்தைகளுக்கு ஆன்லைனில் பயிற்சி கொடுக்க துவங்கினோம். அக்டோபர் மாதத்தில் 8 முதல் 10 நபர்களே ஆன்லைன் பயிற்சிக்கு வந்ததை நாங்கள் பார்த்தோம். குறிபிடத்தக்க வகையில் அந்த எண்ணிக்கை குறைந்திருந்தது“ என்று ஆட்டிசம் மையத்தின் சேர்க்கை குறித்து டாக்டர் கஜ்ரே மேலும் கூறினார்.
மஹாராஷ்டிவில், 1,100 அரசு உதவிபெறும் மற்றும் உதவிபெறாத சிறப்பு உண்டு உறைவிட பள்ளிகள் உள்ளன. அது பார்வை மாற்றுத்திறன், காது மாற்றுத்திறன், சிறப்பு குழந்தைகள் மற்றும் மற்ற சிறப்பு தேவைகள் உள்ளவர்களுக்காக செயல்படுகிறது என்று யஸ்வந்த்ரோ சவான் பிரடிஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் உரிமை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜய் கன்ஹேக்கர் கூறுகிறார். இந்த பள்ளிகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
பிரதீக் மற்றும் சங்கீத்தின் பள்ளி, முன்புபோல் மீண்டும் துவங்கி, வகுப்புகள் நடைபெறுவது கடினம். அது மாநில அரசின் அனுமதி பெற்று இயங்கி வந்தது. ஆனால் எவ்வித உதவியும் பெறவில்லை. அதைக்கேட்டு பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு துறைக்கு எண்ணிலடங்கா கடிதங்கள் மட்டுமே அனுப்பியுள்ளது. மார்ச் மாதம் முதல் பள்ளிக்கு எவ்வித நன்கொடையும் கிடைக்கவில்லை (ஒரு சில அறக்கட்டளை மற்றும் தனிநபரிடம் இருந்து மட்டுமே கிடைத்துள்ளது) இவையெல்லாம் அந்த பள்ளி திறப்பை மேலும் கடினமாக்கும்.
“நாங்கள் பெற்றோரிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூல் செய்ய மாட்டோம். எனவே நன்கொடைகள் எங்களுக்கு முக்கியம். மேலும் எங்களுக்கு தொற்று காலத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் நன்றாக இருக்க வேண்டும். எங்கள் ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பிபிஇ உடைகள் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படுகிறது. ஏனெனில் எங்கள் குழந்தைகள் ஏற்கனவே உடல் நலன் பாதிக்கப்பட்டவர்கள்“ என்று பகடே கூறுகிறார்.
“கிராமப்புற மஹாராஷ்ட்ராவில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன“ என்று விஜய் கூறுகிறார். “குழந்தைகளும் எந்த செயல்பாடுகளுமின்றி வீட்டில் இருக்கிறார்கள். அது குழந்தைகளை மேலும் முரட்டுத்தனமாக்குகிறது. அது பெற்றோரையும் மனதளவில் பாதித்து, சிறப்பு குழந்தைகளை கையாள்வதில் மேலும் போராடத்தை கொடுக்கிறது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
அவரது மன்றம் பாதுகாப்பான பள்ளிகளை உருவாக்குவதற்கு உதவி கோருகிறது. “கோவிட் தொற்றுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளுடன் கூடிய சிறப்பு பள்ளி“ என்று விஜய் கூறுகிறார். இதுகுறித்து மஹாராஷ்ட்ரா சமூக நீதி மற்றும் சிறப்பு உதவிகள் துறைக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், கோவிட்-19 தடுப்பு மருந்தை சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதலில் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.
தற்போது பள்ளியும் செல்லாமல், தங்களின் வழக்கமான செயல்பாடுகளும் இல்லாமல், நண்பர்களும் இன்றி, சிறிது புதிய விஷயங்கள் கற்றுக்கொண்டு, பிரதீக் மற்றும் சங்கீத் போன்றோர் தங்கள் வீடுகளையே சுற்றிக்கொண்டு, முற்றதிலும் அமர்ந்துகொண்டு தனியாகவே அல்லலுறுகின்றனர். அவர்களுக்கு தொற்று குறித்து எந்த புரிதலும் இல்லை. பிரதீக் டிவியில் கொரோனா குறித்த செய்தி மற்றும் விளம்பரங்களை பார்த்து கொலோனா, கொலோனா….. கொலோனா என்று கூறிக்கொண்டிருக்கிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.