ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் போலோ கிளப்பில் அது ஒரு பிப்ரவரி மாத வெயில் நிறைந்த பிற்பகல் 4 மணி வேளை.
இரு குழுவிலும் நான்கு வீரர்கள் தங்கள் நிலைகளில் தயாராகின்றனர்.
இந்த பயிற்சி ஆட்டத்தில் PDKF மற்றும் டீம் போலோ ஃபாக்டரி இன்டர்நேஷனல் அணிகளின் இந்திய மகளிர் பங்கேற்கின்றனர்- இந்தியாவில் விளையாடப்படும் முதல் சர்வதேச மகளிர் போலோ போட்டி இதுவே.
ஒவ்வொரு வீரரும் தங்கள் கைகளில் மர மேலட்டுகளுடன் விளையாட்டை தொடங்க தயாராகின்றனர். அசோக் ஷர்மாவிற்கு இந்த சீசனில் இதுவே முதல் போட்டி. அவருக்கு இந்த விளையாட்டு ஒன்றும் புதிதல்ல.
போலோ மேலட்டுகள் செய்வதில் 55 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மூன்றாம் தலைமுறை கைவினைஞர் அசோக். போலோ வீரருக்கு தேவையான மூங்கில் குச்சிகளை அவர் செய்கிறார். “மேலட்டுகள் தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்தவன் நான்,” என்று பெருமையுடன் கூறும் அவர், தனது 100 ஆண்டு குடும்ப பெருமையை சொல்கிறார். குதிரையேற்ற விளையாட்டுகளில் குதிரையேற்ற போலோ விளையாட்டுதான் மிகப் பழமையானது.
அவர் ஜெய்ப்பூர் போலோ ஹவுஸை நடத்துகிறார். இது அந்நகரத்தின் மிக பழமையான, அதிகம் விரும்பப்படும் பட்டறையாக திகழுகிறது. அதுவே அவரது வீடாகவும் இருக்கிறது. அங்கு அவர், தனது மனைவி மீனா, மனைவியின் உறவினரான ஜீத்து என்று செல்லமாக அழைக்கப்படும் ஜிதேந்திரா ஜாங்கிட்டுடன் இணைந்து பல வகையான மேலட்டுகளை செய்து வருகிறார். ஜாங்கிட் சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் ராஜஸ்தானில் பிற பிற்படுத்தப்பட்ட சாதியாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இரு அணிகளும் எதிரெதிரே அணிவகுத்து நிற்க நடுவர் பந்தை உருட்டிவிட ஆட்டம் தொடங்கும் என்று நினைவுகளை பகிர்கிறார் இந்த எழுபத்து இரண்டு வயதுக்காரர். “நான் முன்பெல்லாம் திடலுக்கு மிதிவண்டியில் செல்வேன், பிறகு ஸ்கூட்டர் வாங்கினேன்.” ஆனால் 2018-ம் ஆண்டு மூளையில் ஏற்பட்ட லேசான பாதிப்பு அவரது வருகையை நிறுத்தியது.
இரண்டு விளையாட்டு வீரர்கள் வந்து அவரிடம், ”நமஸ்தே பாலி ஜி” என ஜெய்ப்பூரின் போலோ வட்டத்தில் குறிப்பிடப்படும் பெயர் சொல்லி வணக்கம் சொல்கின்றனர். இந்த செல்லப்பெயர் அஷோக்கிற்கு அவரது நானி (தாய் வழி பாட்டி) வைத்தது. “இப்போதெல்லாம் இங்கு அடிக்கடி வர நினைக்கிறேன். இதனால் நிறைய வீரர்கள் என்னை அறிந்து கொள்வதோடு, அவர்களின் போலோ குச்சிகளை என்னிடம் சரிசெய்ய கொடுப்பார்கள்,” என்கிறார் அவர்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அசோக்கின் பட்டறைக்கு வரும் பார்வையாளர்களை சுவர் முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள முழுமைப் பெற்ற மேலட்டுகள் வரவேற்கின்றன. மேற்கூரையிலும் கூட அவை தொங்குகின்றன. இங்கு வெள்ளைச் சுவர்களை காண முடியாது, “பெரிய வீரர்கள் வந்து தங்கள் விருப்பக் குச்சியை தேர்வு செய்துவிட்டு, என்னுடன் அமர்ந்து தேநீர் பருகிவிட்டு செல்வார்கள்.”
ஆட்டம் தொடங்கியது. எங்கள் இருக்கைக்கு அருகே ராஜஸ்தான் போலோ கிளப்பின் முன்னாள் செயலாளர் வேத் அஹூஜா அமர்ந்திருந்தார். “பாலி செய்த மேலட்டுகளைதான் ஒவ்வொருவரும் வைத்திருப்பார்,” என்கிறார் அவர் புன்னகையுடன். “கிளப்பிற்கு மூங்கில் வேர் பந்துகளையும் பாலி விநியோகம் செய்துள்ளார்,” என்று அஹூஜா நினைவுகூருகிறார்.
செல்வந்தர்கள் அல்லது இராணுவ வீரர்கள் மட்டுமே போலோ விளையாட்டிற்கான செலவை ஏற்க முடியும். 1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியன் போலோ கூட்டமைப்பில் (IPA) 2023ஆம் ஆண்டு வரை சுமார் 386 வீரர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். “ஒருவரிடம் ஐந்து முதல் ஆறு குதிரைகள் சொந்தமாக இருந்தால்தான் விளையாட முடியும்,” என்னும் அவர் ஆட்டம் நான்கு முதல் ஆறு சுற்றுகளாக பிரிக்கப்படும் என்கிறார். ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன் ஒவ்வொரு வீரரும் வேறு ஒரு குதிரையில் ஏற வேண்டும்.
ராஜஸ்தானின் முன்னாள் அரச குடும்பத்தினர் இந்த விளையாட்டை விளையாடி வந்தனர். “1920களில் ஜோத்பூர், ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களுக்கு என் மாமா கேஷூ ராம் போலோ மட்டைகளை செய்து கொடுத்துள்ளார்,” என்கிறார் அவர்.
கடந்த மூன்று தசாப்தங்களாக போலோ விளையாட்டிலும், உற்பத்தியிலும் ஒழுங்குபடுத்துவதிலும் உலகையே அர்ஜெண்டினா கட்டுப்படுத்தி வருகிறது. “அவர்களின் போலோ குதிரைகளுக்கு, போலோ மட்டைகள் மற்றும் இழை கண்ணாடி பந்துகள் போல, இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. வீரர்கள் அர்ஜெண்டினாவிற்கு பயிற்சிக்குக் கூட செல்கின்றனர்,” என்றார் அசோக்.
“அர்ஜெண்டினா குச்சிகளின் வருகையால் எங்கள் வேலை நின்றுவிட்டது. நல்ல வேலையாக முப்பது-நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே சைக்கிள் போலோ குச்சிகள் செய்யும் வேலையை தொடங்கிவிட்டதால், எனக்கு இப்போதும் வாய்ப்பு இருக்கிறது,” என்றார்.
எந்த வகையான, அளவிலான சாதாரண சைக்கிளிலும் சைக்கிள் போலோ விளையாட முடியும். குதிரையேற்றம் போன்றில்லாமல், “இந்த விளையாட்டு சாதாரண மனிதர்களுக்கானது,” என்கிறார் அசோக். சைக்கிள் போலோ மட்டைகள் செய்து கொடுப்பதில் அவர் ஆண்டிற்கு தோராயமாக ரூ.2.5 லட்சம் வருவாய் ஈட்டுகிறார்.
சாதாரண குடிமக்களிடம் இருந்து சைக்கிள் போலோ மட்டைகள் செய்வதற்கும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலங்களின் ராணுவ குழுவினர்களிடம் இருந்து குதிரையேற்ற போலோ மட்டை செய்வதற்கும் ஆண்டிற்கு 100-க்கும் அதிகமான ஆர்டர்கள் அசோக்கிடம் வருகின்றன. “வீரர் பொதுவாக ஏழையாக இருப்பதால், நான் இதை அனுமதிக்கிறேன்,” என்று அவர் விற்கும் ஒவ்வொரு குச்சிக்கும் சுமார் 100 ரூபாய் மட்டுமே லாபம் வைப்பதை விளக்குகிறார். அவருக்கு அரிதாக ஒட்டகமேற்ற போலோ, யானையேற்ற போலோ மேலட்டுகள் தயாரிக்கவும், மினியேச்சர் பரிசுகள் செய்யவும் வாய்ப்புகள் வருகின்றன.
“இன்று பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர்,” என்றபடி நம்மை திடலில் இருந்து வெளியே அழைத்து வருகிறார் அசோக்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போட்டி நடந்தபோது, 40,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் திரண்டதையும், போட்டியை பார்க்க மரங்களில் கூட அமர்ந்திருந்ததையும் அவர் நினைவுகூருகிறார். இதுபோன்ற நினைவுகள் அவரை துடிப்புடன் வைப்பதோடு குடும்பத்தின் மேலட்டுகள் செய்யும் நீண்ட பாரம்பரிய பெருமையையும் தொடரச் செய்கிறது.
*****
“மக்கள் என்னிடம் இதில் என்ன கைவினை உள்ளது? வெறும் கம்பு தானே என்கின்றனர்.”
ஒரு மேலட்டை, "விளையாட்டின் அருவமான உணர்வோடு, பல்வேறு இயற்கை மூலப்பொருட்களை ஒன்றிணைத்து வடிவமைக்க வேண்டும். உணர்வு சமநிலை, நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் லேசான தன்மை ஆகியவற்றின் கூட்டால் நிகழ்கிறது. சமநிலை தவறக் கூடாது,” என்கிறார்.
அவரது வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள பணிமனைக்கு நாங்கள் மங்கலான ஒளிரும் விளக்கில் குறுகிய படிக்கட்டுகளில் ஏறுகிறோம். பக்கவாதம் தாக்கிய பிறகு அவருக்கு இக்கைவினை கடினமாக இருந்தாலும் உறுதியாக தொடர்கிறார். குதிரையேற்றப் போலோ மேலட்டுகளுக்கான பழுதுபார்க்கும் பணி ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படும் வேளையில், செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மட்டுமே சைக்கிள் போலோ மேலட் தயாரிப்பது உச்சத்தை அடைகிறது.
“கடினமான வேலைகளை மாடியில் ஜீத்து செய்கிறார்,” எனும் அசோக், “படிகளின் கீழே நானும், மேடமும் எங்கள் அறையில் மற்ற வேலைகளை செய்கிறோம்,” என்றார். அவர் ‘மேடம்‘ என்று தனது மனைவி மீனாவை குறிப்பிடுகிறார். 60களில் உள்ள மீனா, கணவர் ‘முதலாளியம்மா‘ என்று அழைக்கும் போது குலுங்கிச் சிரிக்கிறார். எங்கள் உரையாடலை பாதி கேட்டபடி, ஒரு வாடிக்கையாளருக்கு அவரது தொலைபேசி வழியே மேலட் மினியேச்சர் செட்களின் மாதிரி புகைப்படங்களை அனுப்புகிறார்.
அந்த வேலை முடிந்தவுடன் மீனா சமையலறைக்கு சென்று நாங்கள் உண்பதற்கு கச்சோரிகள் பொறிக்கிறார். “இந்த போலோ வேலைகளை நான் 15 ஆண்டுகளாக செய்கிறேன்,” என்கிறார் மீனா.
சுவரில் இருந்து ஒரு பழைய மேலட்டை எடுத்து, போலோ குச்சியின் மூன்று முக்கிய கூறுகளை அசோக் சுட்டிக்காட்டுகிறார்: தண்டு, மரத்தின் தலைப் பகுதி, ஒரு பருத்தி துணி பையில் ரப்பர் அல்லது ரெக்சினில் செய்யப்பட்ட கைப்பிடி. அவரது குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்களால் ஒவ்வொரு பாகமும் கையாளப்படுகிறது.
வீட்டின் மூன்றாவது தளத்தில் ஜீத்து செய்யும் வேலையுடன் பணி தொடங்குகிறது. தண்டுகளை வெட்டுவதற்கு தானே தயாரித்த கட்டர் இயந்திரத்தை அவர் பயன்படுத்துகிறார். தண்டை தட்டுவதற்கு, அவர் ராண்டா (தளம்) ஒன்றைப் பயன்படுத்துகிறார். இது தண்டை வளைய வைப்பதால் விளையாட்டின் போதும் அது வளைக்க அனுமதிக்கிறது.
“தண்டியின் அடியில் ஆணிகள் அடித்தால் குதிரைகளை காயப்படுத்தும் என்பதால் நாங்கள் அதை செய்வதில்லை,” எனும் அசோக், “மானோ அகர் கோடா லங்கடா ஹோ கயா தோ ஆப்கி லாக்கோன் ரூபே பேக்கார் [குதிரை ஊனமடைந்துவிட்டால் லட்சக்கணக்கான ரூபாய் வீணாகிவிடும்],” என்கிறார்.
“என் வேலை எப்போதும் நுட்பமானது,” என்கிறார் ஜீத்து. முன்பு மரச்சாமான்கள் செய்து வந்த அவர் இப்போது ராஜஸ்தான் அரசின் சவாய் மான் சிங் மருத்துவமனை ‘ஜெய்ப்பூர் ஃபூட்‘ துறையில் வேலை செய்கிறார். மலிவான செயற்கைக் கால்கள் செய்வதற்கு இதுபோன்ற கைவினைஞர்களை அரசு சார்ந்துள்ளது.
தண்டு வழியாகச் செல்வதற்கு ஒரு ச்செட் (துளை) உருவாக்க, துளையிடும் இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை விளக்குவதற்காக, ஜீத்து மேலட்டின் தலைபாகத்தை சுட்டிக்காட்டுகிறார். பின்னர் அவர் தண்டுகளை மீனாவிடம் ஒப்படைக்கிறார்.
தரை தளத்தில் இரண்டு படுக்கையறைகளும் சமையலறையும் உள்ளது. இப்பகுதிகளுக்குள் தேவைப்படும் வேலைகளை மீனா செய்கிறார். மேலட் தயாரிப்பு பணிகளை அவர் மதிய நேரத்திற்கு ஒதுக்கி வைக்கிறார். மதியம் 12 முதல் மாலை 5 மணி வரை இந்த வேலையை அவர் செய்கிறார். அதற்கு முன் அவர் சமையலை முடிக்கிறார். குறுகிய காலத்தில் அதிக ஆர்டர் வந்துவிட்டால் அவருடைய வேலை இன்னும் அதிகமாகிவிடும்.
மேலட்டுகளை தயாரிப்பதில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் அம்சங்களை மீனா மேற்கொள்கிறார் - தண்டை வலுப்படுத்துதல் மற்றும் பிடியை பிணைத்தல். தண்டின் மெல்லிய முனையில் பஞ்சில் நனைத்த ஃபெவிகால் பசையை மிக நுணுக்கமாக முறுக்குவதும் இதில் அடங்கும். இறுதியாக அதன் வடிவத்தை அப்படியே வைத்திருக்க 24 மணி நேரம் தரையில் தட்டையாக வைத்து உலர்த்த வேண்டும்.
பிறகு ரப்பர் அல்லது ரெக்சின் பிடிகளை அவர் பிணைக்கிறார். பசை மற்றும் ஆணிகளைப் பயன்படுத்தி பருத்தி பைகளை தடிமனான கைப்பிடிகளில் கட்டுகிறார். ஆட்டக்காரரின் மணிக்கட்டில் இருந்து குச்சி நழுவாமல் இருக்க, இந்தப் பிடி சரியாகவும், பை வலுவாகவும் இருக்க வேண்டும்.
இத்தம்பதியின் 36 வயது மகன் சத்யம் முன்பு இப்பணிகளில் பங்கெடுத்து வந்தார். ஆனால் சாலை விபத்திற்கு பிறகு காலில் மூன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரால் தரையில் அமர முடியாமல் போனது. மாலை நேரங்களில் சப்ஜி (காய்கறி) சமைப்பது அல்லது தாபா பாணியில் பருப்பு தாளிப்பது போன்ற இரவு உணவிற்கான சமையலறை வேலைகளுக்கு அவர் உதவுகிறார்.
வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் இருக்கும் பீட்சா ஹட்டில் அவரது மனைவி ராக்கி காலை 9 முதல் இரவு 9 மணி வரை வேலை செய்கிறார். வீட்டில் ஓய்வு நேரம் கிடைக்கும்போது பெண்களுக்கான மேல் சட்டை, குர்தா போன்றவற்றை மகளுடன் சேர்ந்து அவர் தைக்கிறார். சத்யமின் வழிகாட்டுதலில் ஏழு வயது மகள் தனது வீட்டுப் பாடங்களை முடிக்கிறாள்.
நைனா, 9 அங்குல மினியேச்சர் மேலட்டுடன் விளையாடுகிறார். உடையக்கூடியது என்ற காரணத்தால், அவளிடமிருந்து அதை விரைவாக வாங்குகின்றனர். இரண்டு குச்சிகள் கொண்ட ஒரு மினியேச்சர் செட், மரத் துண்டில் பொறுத்தப்பட்டுள்ள பந்து போன்ற செயற்கை முத்து ஆகியவை ரூ. 600க்கு விற்கப்படுகிறது. விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பெரிய மேலட்டை விட பரிசளிக்க பயன்படும் மினியேச்சர் மேலட்டுகள் செய்வது மிகவும் கடினமானது என்கிறார் மீனா. "இதற்கான வேலை மிகவும் சிக்கலானது."
மேலட் தயாரிப்பில், தலை மற்றும் தண்டு - இரண்டு தனித்தனி துண்டுகளை ஆப்பு வைத்து இணைப்பது மிகவும் குறிப்பிடத்தக்க பணியாக கருதப்படுகிறது. இந்த நிலை தான் குச்சியின் சமநிலையை அமைக்கிறது. "சமநிலை என்பது எல்லோராலும் சரியாக அமைக்க முடியாத ஒன்று" என்கிறார் மீனா. இது உபகரணங்களின் அருவமான பண்பு. "அதைத்தான் நான் செய்கிறேன்" என்று அசோக் சாதாரணமாக சொல்கிறார்.
இடது காலை நீட்டியவாறு தரையில் சிவப்பு நிற மெத்தையில் அமர்ந்து, அவர் அதன் தலையில் துளைக்கப்பட்ட ஓட்டைகளில் பசையை பூசுகிறார். அதே சமயம் தண்டு அவரது பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் உள்ளது. கடந்த ஐந்தரை தசாப்தங்களில் தனது கால்விரல்களுக்கு இடையில் எத்தனை முறை தண்டை வைத்துள்ளார் என்பதைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டபோது, மெதுவாகச் சிரித்துக்கொண்டே, "எந்தக் கணக்கும் இல்லை," என்கிறார் அசோக்.
“யே ச்சூடி ஹோ ஜாகி, ஃபிக்ஸ் ஹோ ஜாகி ஃபிர் யே பாஹர் நஹி நிக்லேகி [இது ஒரு வளையலைப் போல இருக்கும். இந்த வளையலின் விளிம்பில் பொருத்திவிட்டால் தனியாக வராது]" என்று ஜீத்து விளக்குகிறார். ஒரு பந்தின் தொடர்ச்சியான தாக்கத்தைத் தாக்கு பிடிக்கும் வகையில் கம்பும், மரத் துண்டும் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு மாதத்தில் சுமார் 100 மேலட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அசோக்கின் 40 வருட கூட்டாளியான முகமது ஷஃபி அவற்றை வார்னிஷ் செய்கிறார். வார்னிஷ் செய்வதால் பளபளப்பு கிடைப்பதோடு ஈரப்பதம், அழுக்குகளில் இருந்தும் குச்சிகளை பாதுகாக்கிறது. ஷஃபி ஒரு பக்கம் வண்ணப்பூச்சுடன் மேலட்டின் மேல் எழுதுகிறார். பிறகு அசோக், மீனா மற்றும் ஜீத்து கைப்பிடிக்கு கீழே ‘ஜெய்ப்பூர் போலோ ஹவுஸ்’ என்ற லேபிளை ஒட்டினர்.
ஒரு மேலட்டிற்கான மூலப் பொருட்களின் விலை ரூ.1000. விற்பனையில் பாதி தொகையைக் கூட தன்னால் எடுக்க முடியவில்லை என்கிறார் அசோக். ரூ.1600க்கு மேலட்டுகளை விற்க நினைத்தாலும், அவரால் முடிவதில்லை. “விளையாட்டு வீரர்கள் கூடுதல் தொகை கொடுப்பதில்லை. ஆயிரம், ஆயிரத்து இருநூறு [ரூபாய்] கொடுக்கதான் அவர்கள் முன்வருகின்றனர்,” என்கிறார் அவர்.
ஒரு மேலட்டின் ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு கவனமாக பரிசீலிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி அவர் குறைந்த வருமானத்தை மதிப்பிடுகிறார். "கம்பு [மட்டும்] அஸ்ஸாம், ரங்கூனில் இருந்து கொல்கத்தாவிற்கு வருகிறது" என்கிறார் அசோக். சரியான ஈரப்பதம், நெகிழ்வுத்தன்மை, அடர்த்தி மற்றும் தடிமன் ஆகியவற்றுடன் அவை தகுதி பெற்றிருக்க வேண்டும்.
“கொல்கத்தாவில் உள்ள விற்பனையாளர்களிடம் தடிமனான கம்புகள் உள்ளன. அவை காவல்துறை தடியடி, வயதானவர்களுக்கான நடை கம்புகள் தயாரிக்க ஏற்றது. கம்பு விற்பனை செய்யும் ஆயிரம் பேரில் நூறு பேர் மட்டுமே எனது தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்,”என்கிறார் அசோக். விற்பனையாளர்கள் அனுப்பும் கம்புகளில் பெரும்பாலானவை மேலட்டுகள் தயாரிப்பதற்கு மிகவும் தடிமனானவை என்பதால் பெருந்தொற்று காலத்திற்கு முன் அவர் ஆண்டுதோறும் கொல்கத்தாவுக்குச் சென்று பொருத்தமான கம்புகளை தேர்வு செய்து கொண்டு வந்து பயன்படுத்தினார். " என் பாக்கெட்டில் இப்போது ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் மட்டுமே நான் கொல்கத்தா செல்ல முடியும்."
அசோக் கூறுகையில், உள்ளூர் மரச் சந்தையில் பல வருட சோதனை முயற்சிகளுக்குப் பிறகு மேலட்டின் தலைப் பகுதிகளுக்கு ஸ்டீம் பீச் மற்றும் மேப்பிள் மரங்களை இறக்குமதி செய்கிறேன் என்கிறார்.
மரக்கட்டை விற்பனையாளர்களிடம் தான் செய்யும் கைவினைகளை பற்றி ஒருபோதும் பகிர்ந்து கொண்டதில்லை என்றார். "நீங்கள் படா காம் [அதிக மதிப்புள்ள வேலை] செய்கிறீர்கள் என்பது தெரிந்தால் அவர்கள் விலையை ஏற்றி விடுவார்கள்!"
அதற்கு பதிலாக அவர் விற்பனையாளர்களிடம் மேசைகளுக்கு கால்களை உருவாக்குவதாக கூறிக் கொள்கிறார். " சப்பாத்தி உருட்டும் குழவி செய்கிறீர்களா என்று யாராவது கோட்டால் , அதற்கும் ஆம்!" என்பேன், என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார்.
"என்னிடம் 15-20 லட்சம் ரூபாய் இருந்தால், என்னை யாரும் தடுக்க முடியாது," என்று அவர் கூறுகிறார். அர்ஜெண்டினாவை பூர்வீகமாகக் கொண்ட திப்புவானா திப்பு மரத்தில் இருந்து டிப்பா மரத்தை அவர் கண்டுபிடித்தார். இது அர்ஜெண்டினா மேலட்டுகளின் தலைகள் முதன்மையாக இருக்க பயன்படுகிறது. "இது மிகவும் லேசானது, உடையாது, தோலுரியாது," என்று அவர் கூறுகிறார்.
அர்ஜெண்டினா நாட்டு குச்சிகள் குறைந்தபட்சம் ரூ. 10,000 -12,000 வரை இருக்கும். "பெரிய வீரர்கள் அர்ஜெண்டினாவிலிருந்து வாங்கிக் கொள்கின்றனர்."
இன்று அசோக், குதிரையேற்றப் போலோ மேலட்களை, ஆர்டரின் பேரில் தேவைக்கேற்ப வடிவமைத்து தருகிறார். வெளிநாட்டு மேலட்டுகளை பழுதுபார்க்கிறார். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான போலோ கிளப்கள் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் சில்லறை விளையாட்டுப் பொருள் விற்பனை கடைகளில் கூட இவற்றை விற்பனைக்கு வைப்பதில்லை.
"போலோ குச்சிகள் கேட்டு யாராவது வந்தால், நாங்கள் போலோ விக்டரிக்கு எதிரே உள்ள ஜெய்ப்பூர் போலோ ஹவுஸுக்கு அவர்களை அனுப்பி வைப்போம்" என்று லிபர்ட்டி ஸ்போர்ட்ஸின் (1957) அனில் சாப்ரியா, அசோக்கின் வணிக அட்டையை என்னிடம் கொடுத்தார்.
போலோ விக்டரி சினிமா (இப்போது ஒரு உணவகம்) அசோக்கின் தந்தைவழி மாமா கேசு ராம் என்பவரால் 1933 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெய்ப்பூர் அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளின் நினைவாகக் கட்டப்பட்டது. அணியுடன் பயணித்த ஒரே போலோ மேலட் கைவினைஞர் கேசு ராம் மட்டுமே.
இன்று, ஜெய்ப்பூர் மற்றும் டெல்லியில் இரண்டாம் மான் சிங், ஹனுத் சிங் மற்றும் பிரித்தி சிங் ஆகிய வரலாற்று சிறப்புமிக்க ஜெய்ப்பூர் அணியின் மூன்று உறுப்பினர்களின் பெயர்களில் வருடாந்திர போலோ போட்டிகள் நடத்தப்படுகின்றன. எனினும், துணைக்கண்டத்தின் போலோ வரலாற்றில் அசோக் மற்றும் அவரது குடும்பத்தினரின் பங்களிப்பிற்கு சிறிய அங்கீகாரம் கூட இல்லை.
"ஜப் தக் கேன் கி ஸ்டிக்ஸ் சே கெலேங்கய், தப் தக் பிளேயர்ஸ் கோ மேரே பாஸ் ஆனா ஹி படேகா [அவர்கள் கம்புகளில் செய்யப்படும் குச்சிகளில் விளையாடும் வரை, எங்களிடம் அதற்கு வர வேண்டும்]," என்றார்.
இக்கட்டுரை, மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளை (MMF) ஆதரவில் எழுதப்பட்டது.
தமிழில்: சவிதா