”மழை மீண்டும் நின்றுவிட்டது” என்று சொன்னபடி, ஒரு மூங்கில் கைத்தடியை ஊன்றிக் கொண்டு தனது விளைநிலத்தினூடாக நடக்கிறார் தர்மா கரேல். “ஜுன் என்பது வினோதமான மாதமாகிவிட்டது. 2-3 மணி நேரத்திற்கு மழை பெய்யும். சில நேரங்களில் தூறல் போடும், சில நேரங்களில் அடித்துப் பெய்யும். ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் தாங்க முடியாத வெப்பம் நிலவும். நிலத்தின் எல்லா ஈரப்பதத்தையும் அது உறிஞ்சிவிடும். மண் மீண்டும் காய்ந்துவிடும். பயிர்கள் எப்படி வளரும்?”
தானே மாவட்டத்தின் ஷஹாபூர் தாலுக்காவில் 15 வார்லி குடும்பத்தினர் வழிக்கும் பழங்குடியின் கிராமத்தைச் சேர்ந்த எண்பது வயதாகும் கரேலும் அவரது குடும்பத்தினரும் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். 2019 ஜுனில் அவர்கள் விதைத்திருந்த நெல் மணிகள் அனைத்தும் முழுமையாக காய்ந்துவிட்டன. அந்த மாதத்தின் 11 நாட்களில் வெறும் 393 மிமீ மழை மட்டுமே பெய்திருந்தது (சராசரி அளவான 421.9 மில்லிமீட்டரைவிட குறைவு).
அவர்கள் விதைத்திருந்த நெல்மணிகள் முளைக்கக்கூட இல்லை – அதனால் விதைகள், உரங்கள், டிராக்டர் வாடகை மற்றும் பிறவற்றுக்காக செலவு செய்த ரூ. 10,000 விரயமானது.
“ஆகஸ்ட் மாதத்தில் தான் வழக்கமாக பெய்த மழையின் காரணமாக நிலம் குளிர்ந்தது. இரண்டாவது விதைப்பின் மூலம்தான், கொஞ்சம் விளைச்சலும், சிறிது லாபமும் கிடைத்தது” என்கிறார் தர்மாவின் 38 வயதாகும் மகன் ராஜூ.
அந்த தாலுக்காவில் ஜுன் மாதத்தில் பொய்த்த மழையானது, ஜூலை மாதத்தில் வழக்கமான மழையளவான 947.3 மில்லிமீட்டரைக் காட்டிலும் அதிகமாக, 1586.8 மிமீ அளவிற்கு அடித்து பெய்தது. எனவே கரேல் குடும்பத்தினர் இரண்டாவது விதைப்புக்குத் தயாராகினர். ஆனால், ஆகஸ்ட் மாதத்திலும் மழை தீவிரமாகி, அக்டோபர் வரைக்கும் தொடர்ந்தது. தானே மாவட்டத்தின் ஏழு தாலுக்காவிலும் 116 நாட்களில் 1,200 மிமீ அளவிற்கு கூடுதலாக மழை பெய்தது.
“பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அளவில் செப்டம்பர் வரைக்கும் போதுமான மழை பெய்தது. மனிதர்களாகிய நாமே, வயிறு வெடிக்கும் வரை சாப்பிடும்போது, சின்னஞ்சிறு பயிர்கள் என்ன செய்யும்?” என்கிறார் ராஜூ. அக்டோபர் மாத மழையில் கரேலின் பண்ணையில் வெள்ளம் சூழ்ந்தது. “செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் நாங்கள் அறுவடையைத் தொடங்கி, நெல் மணிகளை மூட்டை கட்டத் தொடங்கியிருந்தோம்” என்கிறார் 35 வயதாகும் விவசாயியும் ராஜூவின் மனைவியுமான சவிதா. ”இன்னும் கொஞ்சம் அறுவடை செய்ய வேண்டியிருந்தது. அக்டோபர் 5க்குப் பிறகு, திடீரென மழை அதிகமாகிவிட்டது. நாங்கள் முடிந்தவரையில் நெல் மூட்டைகளை வீட்டிற்குள் கொண்டுவந்து அடுக்க முயற்சித்தோம். ஆனால், சில நிமிடங்களுக்குள் பண்ணையில் வெள்ளம் சூழ்ந்துவிட்டது…”
ஆகஸ்ட் மாதத்தில் செய்த இரண்டாவது விதைப்பின் மூலம், கரேலுக்கு 3 குவிண்டால் அரிசி கிடைத்தது. கடந்த காலங்களில் அவருக்கு முதல் விதைப்பிலேயே ஏறத்தாழ 8-9 குவிண்டால் அரிசி கிடைத்தது.
“கடந்த பத்தாண்டுகளில் இது அதிகம்,” என்கிறார் தர்மா. “மழை அதிகமாவதுமில்லை, குறைவதுமில்லை. அது மிகவும் ஒழுங்கற்று பெய்கிறது – வெப்பத்தையும் பெருக்குகிறது.” 2018ல் கூட, இந்தக் குடும்பம் சராசரியை விடவும் மிகவும் குறைவாக, வெறும் நான்கு குவிண்டால் அறுவடை செய்தது. 2017 அக்டோபரில், காலம் தப்பி பெய்த மழையால், அவர்களின் நெற்பயிர்கள் மோசமாக பாதிக்கப்பட்டன.
இதற்கிடையில், வெப்பம் சீரான அளவில் அதிகரிப்பதையும், அது “தாங்கமுடியாததாக” இருப்பதையும், தர்மா கவனித்து வருகிறார். 1960ல், தர்மாவுக்கு 20 வயது. அப்போது தானேயில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை 175 நாட்களுக்கு நீடித்தது என நியூயார்க் டைம்ஸின் இணைய தளத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று, அந்த எண்ணிக்கை அதிகமாகி, 237 நாட்களுக்கு 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் நீடிக்கிறது.
ஷஹாபூர் தாலுக்காவின் பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் நெல் மகசூலில் ஏற்பட்டுள்ள சரிவைக் குறித்துப் பேசுகின்றன. 1.15 மில்லியன் (2011 கணக்கெடுப்பின்படி) மக்கள்தொகையைக் கொண்ட கட்கரி, மல்ஹர் கோலி, மா தாகூர், வார்லி மற்றும் சில பழங்குடியின சமூகங்கள் தானே மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவை. மொத்த எண்ணிக்கையில் இது 14 சதவீதம் ஆகும்.
“மானாவாரி நெல் விவசாயத்திற்கு சீரான அளவிலும், இடைவெளியிலும் மழைப்பொழிவு அவசியம். பருவத்தின் எந்த நிலையிலும் அதிக மழை பொழிந்தால் அது மகசூலை பாதித்துவிடும்,” என்கிறார் புனேயைச் சேர்ந்த நீடித்த வாழ்வாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான BAIF நிறுவனத்தின் திட்ட மேலாளர் சோம்நாத் செளத்ரி.
சிறு விவசாயிகளான பெரும்பாலான பழங்குடியின குடும்பங்கள் சம்பா சாகுபடி பருவத்தில் நெல் விளைவிக்கின்றன. ஆண்டின் மற்ற மாதங்களில் செங்கல் சூளைகள், கரும்பு வயல்கள் அல்லது வேறு தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். ஆனால், இந்த நிச்சயமற்ற, மோசமான வானிலையின் தாக்கத்தால் அவர்களால் நெல் விவசாயத்தில் ஆண்டின் ஒரு பாதியை தொடர்ந்து செலவிட முடியாது.
வறண்டநில விவசாயம் குறித்த மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, மாவட்டத்தில் 1,36,000 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா பருவத்தில் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. 3,000 ஹெக்டேர் பரப்பளவில் பாசன விவசாயம் (பெரும்பாலும் திறந்த கிணறுகள், ஆழ்துளை கிணறுகள்) நடைபெறுகிறது. சிறுதானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை போன்றவையும் பயிரிடப்படுகின்றன.
தானே மாவட்டத்தில் உலாஸ், வைதர்னா என இரண்டு முக்கிய நதிகளும், அவற்றின் துணையாறுகளும் இருந்தாலும், ஷஹபூர் தாலுக்காவில் பத்சா, மாதக் சாகர், தன்சா, அப்பர் வைதர்னா என நான்கு பெரிய அணைகள் இருந்தாலும், இங்குள்ள பழங்குடியின் கிராமங்களில் விவசாயம் பெரும்பாலும் மழையை நம்பியே நடக்கிறது.
“நான்கு அணைகளின் தண்ணீரும் மும்பைக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள மக்கள் டிசம்பர் முதல் மே வரை, பருவமழை பெய்யும் வரைக்கும், தண்ணீர் பஞ்சத்தை அனுபவிக்கின்றனர்,” என்கிறார் பத்சா பாசன திட்ட மறுசீரமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சஹாபூரைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளருமான பாபன் ஹரானே.
“சஹாபூரில் ஆழ்துளை கிணறுகளின் தேவை அதிகரித்து வருகிறது,” என்கிறார் அவர். “தண்ணீர் துறையினரால் தோண்டப்பட்ட குழிகளில் தனியார் ஒப்பந்தக்காரர்கள் கூடுதலாக சட்டவிரோதமாக 700 மீட்டர் வரையிலும் தோண்டுகின்றனர்.” தானே மாவட்டத்தில், ஷஹாபூர் உள்ளிட்ட மூன்று தாலுக்காக்களில் உள்ள 41 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் சுருங்கிவிட்டது என்று நிலத்தடி நீராய்வு மற்றும் வளர்ச்சி முகமையின் 2018ம் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
“எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் கிடைக்காது, நாங்கள் எப்படி பயிர்களுக்கு வழங்க முடியும்? பெரிய விவசாயிகள் பணம் செலுத்தி அணையிலிருந்து தண்ணீர் பெற முடியும், அல்லது அவர்களின் கிணறுகள், பம்புகள் இருக்கும்,” என்கிறார் ராஜூ.
ஷஹபூரின் பழங்குடியின கிராமத்தினர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மே வரை வேறு வேலை தேடி புலம்பெயர்வதற்கு இந்த தண்ணீர் பஞ்சம் ஒரு காரணம். அக்டோபரில் சம்பா சாகுபடி முடிந்ததும், மாநிலத்திற்குள் இருக்கும் கரும்பு தோட்டங்கள் அல்லது மஹாராஷ்டிரா, குஜராத்தில் உள்ள செங்கல் சூளைகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். மீண்டும் சம்பா சாகுபடிக்கு விதைப்பு பருவம் வந்தவுடன், சில மாதங்களுக்கான கையிருப்பை வைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்புகின்றனர்.
கரும்புத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நந்தர்பார் மாவட்டம் ஷஹதி தாலுக்காவில் பிரகாஷா கிராமத்திற்கு ராஜூவும், சவிதா கரேலும் புலம்பெயர்ந்தனர். 2019ஆம் ஆண்டு டிசம்பரில் தர்மாவையும், அவர்களின் 12 வயது மகன் அஜயையும் கரேல்படாவில் விட்டுவிட்டு வந்தனர். நான்கு பேர் கொண்ட இக்குடும்பத்திற்கு கைவசம் உள்ள மூன்று குவிண்டால் அரிசி ஜூன் வரை உணவளிக்கும். “[அருகில் உள்ள] அகாய் கிராமத்தில் துவரை பயிரிடும் சில விவசாயிகளிடம் நாங்கள் அரிசியை மாற்றிக் கொள்வோம், இப்போது அதுவும் முடியாது,” என்று விளைச்சல் சரிந்துள்ளதை சுட்டிக்காட்டி ராஜூ என்னிடம் சொல்கிறார்.
கரும்பு தோட்டங்களில் வேலை செய்வதன் மூலம் அவரும், சவிதாவும் சேர்ந்து சுமார் ஏழு மாதங்களில் ரூ. 70,000 வரை சம்பாதிக்கின்றனர். ஷஹபூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிவாண்டி தாலுக்காவின் இணைய வழி ஷாப்பிங் கிடங்கில் சுமை தூக்கும் பணியையும் ராஜூ செய்கிறார். அங்கு ஜூன் - செப்டம்பர் மாதங்களில் பொதுவாக 50 நாட்களுக்கு தினமும் ரூ.300 வரை சம்பாதிக்கலாம்.
கரேல்படாவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெர்ஷிங்கிபடா எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த மாலு வாகின் குடும்பமும் நெல் விளைச்சல் வீழ்ச்சி அடைந்துள்ளதால் சிரமப்படுகிறது. அவரது கூரை வேய்ந்த மண் குடிசையின் ஒரு ஓரத்தில் இரண்டு குவிண்டால் நெல் மணிகளை பசுஞ்சாணம் மெழுகப்பட்ட மூங்கில் பெட்டியில் வேப்பிலையுடன் வைத்து பூச்சிகளிடம் இருந்து பராமரித்து வருகின்றனர். “இந்த வீட்டிலேயே இதுதான் இப்போது விலை உயர்ந்த பொருள்,” என்று நவம்பர் மாதம் என்னிடம் பேசுகையில் மாலு தெரிவித்தார். “எங்கள் விளைச்சலை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மழையை நம்ப முடியாது. அது மன்னரைப் போன்று இஷ்டத்திற்கு வரும், போகும். நாம் சொல்வதை அது கேட்காது.”
மழை மோசமடைந்துள்ளதை ஆய்வுகளும் உறுதிபடுத்துகின்றன. “மகாராஷ்டிராவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பெய்த மழை குறித்த தரவுகளை நாங்கள் ஆராய்ந்தோம்,” என்கிறார் இந்திய வானிலை ஆய்வு மையத் துறை (IMD) 2013 ஆய்வின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் புலக் குஹதாகுர்தா. மழையின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம், மகாராஷ்டிராவில் பருவநிலை குறியீட்டில் ஏற்படும் மாற்றம், தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக 1901-2006 காலகட்டத்தில் மாதாந்திர மழைப்பொழிவு தரவுகளை மாநிலத்தின் 35 மாவட்டங்களில் ஆராய்ந்தனர். “இந்த ஆய்வில் சிறுசிறு பகுதிகளில் தனித்தனியாக மழை பெய்வதும், அவை தற்காலிக மாற்றங்களுடன் பெய்வதையும் உணர முடிந்தது… இந்த மாற்றங்கள் வேளாண்மை கோணத்தில் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக மழையை நம்பியுள்ள மானாவாரி வேளாண்மையில் தாக்கத்தை ஏற்படுத்துபவை,” என்கிறார் புனே IMD பருவநிலை ஆராய்ச்சி மற்றும் பணிகளில் விஞ்ஞானியாக உள்ள டாக்டர் குஹதாகுர்தா.
இந்த மாற்றங்கள் நிலத்திலும் அதிகமான தாக்கத்தைச் செலுத்துகிறது. இதனால் தான் கட்கரி சமூகத்தைச் சேர்ந்த 56 வயதாகும் மாலு வாக், அவரது குடும்பத்தினர் - குஜராத்தின் வல்சத் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வாபி நகருக்கு சென்றனர் - இந்த குக்கிராமத்தில் உள்ள 27 பழங்குடியின குடும்பங்களும் இதையே செய்கின்றன - 50 கிலோ அரிசியை மட்டும் எடுத்துச் செல்கின்றனர். மே-ஜூன் மாதத்தில் பெர்ஷிங்கிபடாவிற்கு திரும்பும்போது தங்கள் குடிசையில் பூட்டி வைத்திருந்த சுமார் இரண்டு குவிண்டால் அரிசியை அக்டோபர் மாதம் வரை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
“சுமார் 5-10 ஆண்டுகளுக்கு முன்பு, 8-10 குவிண்டால் அறுவடை செய்வோம். [குறைந்தது] 4 முதல் 5 குவிண்டால் அரிசியை என் வீட்டில் வைத்திருப்போம். தேவைப்படும்போது துவரம் பருப்பு, கேழ்வரகு [ராகி], வரகு [சிறுதானியம்], கொண்டைக்கடலை போன்றவற்றை பயிர் செய்யும் விவசாயிகளிடம் அரிசியை கொடுத்து மாற்றிக் கொள்வோம்,” என்கிறார் மாலுவின் மனைவியான 50 வயதாகும் நகுலா. ஐந்து பேர் கொண்ட இக்குடும்பத்திற்கு இதுபோதுமானதாக இருக்கும். “6 முதல் 7 குவிண்டாலுக்கு மேல் நெல் அறுவடை செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது.”
“ஆண்டுதோறும் விளைச்சல் குறைந்து வருகிறது,” என்கிறார் மாலு.
கடந்தாண்டு ஆகஸ்ட்டில், மழை பெய்யத் தொடங்கியதும் நம்பிக்கை பிறந்தது. ஆனால் அக்டோபர் மாதம் 11 நாட்களுக்கு பெய்த 102 மி.மீ பருவம் தவறிய கனமழை இக்குடும்பத்தின் ஒரு ஏக்கர் நிலத்தை மூழ்கடித்தது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கின - மூன்று குவிண்டாலை மட்டுமே மீட்க முடிந்தது. “இந்த மழை தான் காரணம்,” என்கிறார் மாலு, விதைகள், உரங்கள், காளை மாடுகளை வாடகைக்கு எடுத்தது என செலவிடப்பட்ட ரூ.10,000 வீணானது.”
தானே மாவட்டம் ஷஹாபூர் தாலுக்காவில் உள்ள இந்த குக்கிராமத்தில் வசிக்கும் 12 கட்கரி மற்றும் 15 மல்ஹார் கோலி குடும்பங்களும் இதே இழப்புகளை சுமக்கின்றன.
“மழைக்காலம் பெரிதும் மாறுவது தெரிந்த விஷயம் தான். பருவநிலை மாற்றம் இந்த மாற்றத்தை மேலும் அதிகரித்துவிடுகிறது, இதனால் விவசாயிகளால் பயிர்களின் சுழற்சி முறையையும், விரும்பிய பயிர் வகைகளையும் பயிரிட முடிவதில்லை,” என்கிறார் பாம்பே இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் காலநிலை ஆய்வுகள் இடைநிலை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. டி. பார்த்தசாரதி. மகாராஷ்டிராவின் நாஷிக் மற்றும் கொங்கன் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மழை அதிகரித்துள்ளது, அதுவே தானே மாவட்டத்தில் 1976-77ஆம் ஆண்டு பெய்த கனமழைக்கு பிறகு மழை பொழியும் நாட்களில் மாற்றம் கண்டுள்ளதையும் அவரது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.
1951 முதல் 2013ஆம் ஆண்டுகள் வரையிலான 62 ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் 34 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட தினசரி மழை தரவுகளின் மீது ஆய்வும், வேளாண்மையில் பருவ நிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த ஆராய்ச்சியும் செய்யப்பட்டது. “பருவநிலை மாற்றம் மழைப்பொழிவின் மீது தாக்கம் செய்துள்ளது. மழைக் காலத்தின் தொடக்கம், மழையின் முடிவு, மழை பெய்த நாட்கள், பெய்யாத நாட்கள், ஒட்டுமொத்த மழைப்பொழிவு என அனைத்தும் மாறியுள்ளன. இவை விதைக்கும் தேதி, முளைக்கும் விகிதம், மொத்த விளைச்சலில் மோசமான தாக்கத்தை செலுத்துவதால் பெருமளவு பயிரிழப்பை ஏற்படுத்துகிறது,” என்கிறார் பேரா. பார்த்தசாரதி.
பெர்சிங்கிபடாவிலிருந்து 124 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெரோலி கிராமத்தில் 60 வயதாகும் மா தாகூர் சமூகத்தைச் சேர்ந்த இந்து அகிவாலி இந்த மாற்றங்கள் குறித்து பேசுகிறார். “நாங்கள் ரோகிணி நட்சத்திரத்தில் [மே25 முதல் ஜூன் 7 வரை] விதை விதைப்போம். பூசம் வரும்போது [ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 2 வரை], பயிர்கள் நாற்றுநட தயாராகிவிடும். சித்திரை நட்சத்திரம் [அக்டோபர் 10 முதல் 23 வரை] வரையில் நாங்கள் கதிர் அறுத்தலை தொடங்குவோம். இப்போது இவை [நெல் சாகுபடி முறை] அனைத்தும் தாமதமாகின்றன. நீண்ட காலமாகவே மழைப்பொழிவு என்பது நட்சத்திரங்களுக்கு ஏற்ப இல்லை. இது எதனால் என தெரியவில்லை.”
வெப்பம் அதிகரித்திருப்பது பற்றியும் இந்து சொல்கிறார். “என் வாழ்நாளிலேயே இதுபோன்ற ஒரு வெயிலைக் கண்டதில்லை. நான் குழந்தையாக இருந்தபோது, ரோஹிணி நட்சத்திரத்தின்போது கனமழை தொடங்கும். கோடைக்கு பிறகு வெப்பமான நிலத்தை தொடர் மழை குளுமைப்படுத்திவிடும். ஈரமண்ணின் வாசம் காற்றில் பரவும். இப்போது இந்த வாசனையே அரிதாகிவிட்டது…” என்று தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் தடுப்புகளை அமைப்பதற்காக குழி தோண்டிக் கொண்டே சொல்கிறார் அவர்.
ஷஹாபூரில் முறையற்ற மழைப்பொழிவுடன், சாகுபடி சரிவு, வெப்பநிலை உயர்வு, மண்வளமும் குறைந்து வருகிறது என்கின்றனர் விவசாயிகள். நெரோலி கிராமத்தைச் சேர்ந்த 68 வயதாகும் கிசான் ஹிலாம் இரசாயன உரங்களும், கலப்பு விதைகளையும் குற்றம்சாட்டுகிறார். மசூரி, சிகந்தர், போஷி, டாங்கே போன்ற [மரபு] விதைகள் இப்போது யாரிடம் உள்ளன? யாரிடமும் இல்லை. எல்லோரும் மரபிலிருந்து அவுஷத்வாலிக்கு [கலப்பு விதைகள்] மாறிவிட்டனர். யாரும் விதைகளை இப்போது பராமரிப்பதில்லை,” என்கிறார் அவர்.
நாம் அவரை சந்தித்தபோது, வைக்கோல் வாரியின் உதவியோடு மண்ணில் கலப்பு விதைகளை கலந்து கொண்டிருந்தார். “இவற்றை நான் எதிர்க்கிறேன். குறைந்த மகசூல் கொடுத்தாலும் மரபு விதைகள் சூழலை எதிர்கொள்ளும். இந்த புதிய விதைகள் மருந்துகளின்றி [உரங்கள்] வளருவதில்லை. மழை பெய்யாவிட்டாலும், கனமழையாக இருந்தாலும் - இவை மண்ணின் செழுமையை குறைக்கின்றன.”
“மரபு விதைகளை பாதுகாப்பதற்குப் பதிலாக விதை நிறுவனங்களை விவசாயிகள் சார்ந்திருப்பது அதிகரித்துவிட்டது. இதுபோன்ற கலப்பு விதைகளுக்கு அதிகளவில் உரங்கள், நீர், பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுகின்றன. சரியாக பராமரித்தாலும் உறுதியான விளைச்சலை அளிப்பதில்லை. பருவநிலை மாற்றங்களை கலப்பினங்களால் தாக்குபிடிக்க முடியவில்லை என்று அர்த்தம்,” என்கிறார் புனேயைச் சேர்ந்த நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் மேம்பாடு நிறுவன BAIFல் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜய் பாட்டீல். “புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிவின் சரியான நேரத்தை கணிக்க முடிவதில்லை. மாறும் நிலைகளுக்கு ஏற்ப தாக்குபிடிக்கும் நிலையான பயிர்களை பெற வேண்டும்.”
“பருவநிலை மாற்றங்களிலும் இப்பகுதிகளில் விதைக்கப்படும் பாரம்பரிய நெல் விதைகள் சிறந்த விளைச்சலை அளிக்கக் கூடியவை,” என்கிறார் BIAFன் சோம்நாத் சவுத்ரி.
கலப்பின விதைகளுக்கு பொதுவாகவே அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. வானம் பார்த்த கிராமங்களில் மழை தவறினால் பயிர்கள் பாதிக்கின்றன.
இந்தாண்டு தொடக்கத்தில் அவர்களிடம் தொலைப்பேசியில் பேசியபோது அவர்கள் வாபி செங்கல் சூளையில் உள்ள தற்காலிக குடிசையில் மாலு, நகுலா, அவர்களின் மகன் ராஜேஷ், மருமகள் லதா, 10 வயதாகும் பேத்தி சுவிதா ஆகியோர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அரிசியுடன் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு அல்லது சிலசமயம் தக்காளி இரசம் என ஒரு நாளுக்கு ஒருமுறையாக உணவை குறைத்துக் கொண்டனர்.
“செங்கல் அறுப்பது எளிதான வேலை கிடையாது. சேற்றில் நீரைப் போல எங்கள் வியர்வையும் கலந்துள்ளது. தொடர்ந்து வேலை செய்ய முறையாக சாப்பிட வேண்டும். இந்த முறை விளைச்சல் குறைவு என்பதால் ஒருநாளுக்கு ஒருமுறை தான் உண்கிறோம். ஜூன் மாத விதைக்கும் காலத்திற்கு முன் நம் சேமிப்பை [அரிசி] தீர்த்துவிடக் கூடாது,“ என்கிறார் மாலு.
மே மாத இறுதியில் செங்கல் அறுக்கும் காலம் முடிந்தவுடன், நான்கு பெரியவர்களும் உழைத்த தொகையாக கையில் ரூ. 80,000-90,000 வைத்துக் கொண்டு பெர்ஷிங்கிபடா திரும்புகின்றனர் - இது ஆண்டு முழுவதற்குமான விவசாய செலவுகள், மின் கட்டணங்கள், மருந்துகள், உப்பு, மிளகாய் தூள், காய்கறிகள் போன்றவற்றிற்கு உதவுகிறது.
ஷஹாபூரில் உள்ள ஆதிவாசி கிராமங்களைச் சேர்ந்த மாலு வாக், தர்மா கரேல் போன்றோருக்கு பருவநிலை மாற்றம் என்ற சொல்லாடல் குறித்து தெரியவில்லை, ஆனால் மாற்றங்களை உணர்ந்து, அன்றாடம் அவற்றின் தாக்கங்களை நேரடியாக சந்தித்து வருகின்றனர். பருவநிலை மாற்றங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் தெளிவாகப் பேசுகின்றனர்: முறையற்ற மழைப்பொழிவும், அவற்றின் ஒழுங்கற்ற விநியோகமும்; கடுமையான வெப்பம்; ஆழ்துளை கிணறுகளை அமைப்பதால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவது, விளைவாக நிலம், பயிர்கள், விவசாயம்; விதைகளில் மாற்றம் விளைச்சலில் அவற்றின் தாக்கம்; மோசமடைந்து வரும் உணவு பாதுகாப்பு குறித்த பருவநிலை விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.
இவை அனைத்தும் அவர்களின் அனுபவங்கள். வேறு வேறு மொழிகளில் பேசப்பட்டாலும் - அவர்களின் அவதானிப்பும், விஞ்ஞானிகளுடைய கருத்துகளும் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது. இக்கிராம மக்களுக்கு கூடுதல் போராட்டம் என்றால் அது வனத்துறை அதிகாரிகளுடன் நடப்பது.
மாலு சொல்கிறார்: “மழை மட்டுமல்ல. எங்களுக்கு பல போராட்டங்கள் உள்ளன. வன அலுவலர்களுடன் [நில உரிமைக்காக], ரேஷன் அலுவலர்களுடன் என பல போராட்டங்கள். மழை மட்டும் ஏன் எங்களை விட்டுவைக்க வேண்டும்?”
கரேல்படாவில் தனது விளைநிலத்தில் நின்றபடி தருமா சொல்கிறார், “காலநிலை மாறிவிட்டது. வெப்பம் அதிகமாகிவிட்டது. கடந்த காலங்களைப் போல சரியான நேரத்தில் மழை பெய்வதில்லை. மக்கள் முன்பைப் போல நல்லவர்களாக இல்லாதபோது இயற்கை மட்டும் எப்படி இருக்கும்? அதுவும் மாறுகிறது…”
எளிய மக்களின் குரல்கள், வாழ்க்கை அனுபவங்களின் மூலம் பருவநிலை மாற்றம் குறித்து தேசிய அளவில் செய்தி சேகரிக்கும் திட்டத்தை UNDP ஆதரவுடன் பாரி செய்து வருகிறது.
இக்கட்டுரையை மீண்டும் வெளியிட வேண்டுமா? [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் நகலாக [email protected] எழுதி அனுப்புங்கள்.
தமிழில்: சவிதா