சோப் பவுடர் கலக்கிய தண்ணீரில் முக்கப்பட்டிருக்கும் கம்பளத்தை இளம் தலாப் ஹுசேன் மிதித்துக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு அவர் ஆடுவது போல் இருக்கிறது. அவர் முகம் புன்னகையில் நிறைந்திருக்கிறது. “முக்கப்பட்ட கம்பளத்தில் விழுந்து விடாமல் சரியாக நிற்க வேண்டும்,” என்கிறார் அவர், முன்னால் இருக்கும் ஒரு மரத்தை பிடித்துக் கொண்டு. கம்பளம் முக்கப்பட்டிருக்கும் பெரிய பாத்திரத்துக்குள் சோப் கலக்கப்பட்ட கொதிநீரை ஒருவர் ஊற்றுகிறார்.
அது, ஜம்முவின் சம்பா மாவட்டத்திலுள்ள சிறு பகர்வால் வசிப்பிடத்தின் ஒரு குளிரிரவு. புதிதாக செய்யப்பட்டிருக்கும் கம்பளிகளை அலசுவதற்கான நீர் காயவைக்கப்பட்டிருக்கும் ஒரு தற்காலிக அடுப்பிலிருந்து வருவதுதான் ஒரே வெளிச்சம்.
கம்பளிப் போர்வை நிபுணத்துவத்துக்கு பெயர் பெற்ற மெக் மற்றும் மிங் பட்டியல் சமூகத்தினரால் கம்பளிப் போர்வைகள் செய்யப்படுகின்றன. போர்வைகள் செய்யப்பட்டதும் அவை அலசப்பட்டு, பகர்வால் ஆண்களால் காய வைக்கப்படுகின்றன. போர்வைகளுக்கான நூலை வழக்கமாக பகர்வால் பெண்கள்தான் உருவாக்குவார்கள். அவற்றுக்கான நிறம் பகர்வால் குடும்பங்களின் வீடுகளில் சேர்க்கப்படுகிறது.
ஜம்மு மாவட்டத்தின் பர்கால்டா கிராமத்துக்கருகே இருக்கும் வசிப்பிடத்தை சேர்ந்தவர் கலீல் கான். இளம் பகர்வாலான அவர், இந்த பாணியில் போர்வை செய்வதற்கு நேரமும் கடினமான உழைப்பும் பிடிக்கும் என்கிறார். ஆனால் அதன் விலை அது உழைக்கும் காலத்தோடு ஒப்பிடுகையில் குறைவுதான். முகமது காலு கன்னா சார்க்லை சேர்ந்தவர். பர்கால்தாவின் ஆற்றுப்படுகையில் இருக்கும் சிறு வசிப்பிடம் அது. அவரது இளைய மகன் தூங்கும் கம்பளிப் போர்வையை சுட்டிக் காட்டி, “அதை பார்த்தீர்களா? ஒரு மனிதரின் ஆயுளளவுக்கும் அதைத் தாண்டியும் போர்வை நீடிக்கும். ஆனால் சந்தையில் வாங்கும் கம்பளி போர்வை சில வருடங்கள்தான் நீடிக்கும்,” என்கிறார். செயற்கைக் கம்பளியில் செய்யப்படும் போர்வைகள் நனைந்தால், காய்வதற்கு பல நாட்கள் எடுக்கும் என்கிறார். ஆனால் கலப்படமற்ற கம்பளிப் போர்வைகள் உடனே காய்ந்து விடும் என்கிறார். “குளிர்காலத்தில் செயற்கைப் போர்வைகளை பயன்படுத்துகையில் நம் கால் எரியும். உடல் வலிக்கும்,” என்கின்றனர் மேய்ப்பர்களான கலீல் மற்றும் காலு.
*****
போர்வைகள் மட்டுமல்ல, அவர்களது விலங்குகளின் கம்பளிகள் நம்தாக்களாக மாற்றப்படுகின்றன. நம்தா என்பது ஒட்டுக் கம்பளம் போடும் உத்தி கொண்டு வண்ணமயமான பூத்தையல் போட்டு தயாரிக்கப்படும் முரடான கம்பளி விரிப்பு ஆகும். மெல்லிய மெத்தைகளாகவும் பரிசு பொருட்களாகவும் பயன்படுத்தப்படும் தரு என்கிற சிறு போர்வைகளையும் அவர்கள் தயாரிக்கின்றனர். இவையும் கூட பெண்களாலும் ஒவ்வொரு குடும்பத்தாலும் குழுவாலும் அவரவரின் தனித்துவ வடிவங்கள் கொண்ட பூத்தையல் போடப்படுபவை.
சிறு மெத்தை ஒன்றை பார்த்தே, அதை எந்த குடும்பம் தயாரித்தது என என்னால் சொல்ல முடியும்,” என்கிறார் சரீனா பேகம். தலாப் ஹுசேன் வசிக்கும் பகுதியில் அவரும் வசிக்கிறார். அவரைப் பொறுத்தவரை ஒரு போர்வை செய்ய 15 நாட்கள் ஆகிறது.
“மூலையில் இருக்கும் அந்த போர்வைகளை பாருங்கள். ஒரு குடும்ப திருமணத்துக்காக அவை செய்யப்பட்டன. சிறப்புவாய்ந்தவை. தேவையை பொறுத்து மணமகனின் குடும்பம் 12-30 அல்லது 50 போர்வைகள் செய்யும் ஆர்டரை கொடுப்பார்கள்,” என்கிறார் சமூகத்தின் மூத்தவராக இருக்கும் சரீனா. இந்த காலத்தில் மக்கள் அதிகம் போர்வைகளை கொடுப்பதில்லை என்றாலும் விழா நடந்ததெனில் பாரம்பரிய திருமணப் பரிசாக நிச்சயம் போர்வை கொடுக்கப்படும் என்றும் கூறுகிறார் அவர்.
போர்வைகள் மதிப்புவாய்ந்த திருமணப் பரிசுகளாக இருந்தாலும், அவற்றின் இடத்தை மெல்ல மின்சார உபகரணங்களும் நாற்காலிகளும் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
கீழ்ச்சரிவு பக்கம் இருக்கும் பசோலி தாலுகாவின் வசிப்பிடத்தின் முனையில் முனாப்பரும் அவரது மனைவி மருஃப்ஃபும் வசிக்கின்றனர். கூடாரத்துக்குள் அவர் தயாரித்த பொருட்களை காட்டி, “இந்த அழகான பூத்தையலை பாருங்கள். இப்போது எங்களுக்கு வருமானம் ஏதும் இல்லை,” என்கிறார்.
40,50 செம்மறி மற்றும் ஆடுகள் ஆகியவற்றுடன் கஷ்மீருக்கு அவர்கள் இடம்பெயரும்போது கொண்டு செல்லும் கைவினைப் பொருட்கள் கூடாரத்துக்குள் எங்களை சுற்றி கிடக்கின்றன. மெல்லிய மெத்தையும் குதிரையின் சேணைகளும் மணிகளும் கடிவாளங்களும் இருக்கின்றன. “இந்த பூத்தையல், கால்நடை யாவும் கடும் உழைப்பில் விளைந்தவை. ஆனால் எங்களுக்கு அடையாளம் இல்லை. யாருக்கும் எங்களின் பணி தெரியாது,” என்கிறார் முனாப்பர்.
*****
“ஆலைகள் வைத்திருப்போர் கிடைப்பதே அரிதாகிவிட்டது,” என்கிறார் மாஸ் கான். அறுபது வயதுகளில் இருக்கும் கான், கம்பளியை பதனிடும் குடும்பத்தை சேர்ந்தவர். சமூகத்தில் இருக்கும் பலரும், நூற்பு சக்கரம் இறந்துவிட்டது என்றும் நூற்பு வேலையை கைவிட்டுவிட்டதாகவும் சொல்கின்றனர்.
விளைவாக, மேய்ப்பர்களுக்கும் கம்பளி விற்பது குறைந்துவிட்டது. “குறைந்தபட்சம் 120-220 (ரூபாய்) ஒரு கிலோவுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது ஒன்றும் கிடைப்பதில்லை. பத்தாண்டுக்கு முன்பு, ஆட்டின் முடிக்கு கூட சந்தையில் விலை இருந்தது. இப்போது செம்மறியின் கம்பளி வாங்க ஆளில்லை,” என்கிறார் முகமது தாலிப். கத்துவா மாவட்டத்தில் பசோலி தாலுகாவை சேர்ந்த பகர்வால் அவர். பயன்படுத்தப்படாத கம்பளி, சேமிப்பறைகளில் கிடைக்கின்றன. அல்லது உறிக்கப்பட்ட இடத்திலேயே கைவிடப்பட்டுவிடுகின்றன. கம்பளி பணி செய்யும் கலைஞர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
“பகர்வால்கள் எந்தப் பொருட்களையும் செய்வதில்லை. அது சிறு வேலையாக மாறிவிட்டது. செயற்கை கம்பளிக்கு மாற்று இன்னும் மலிவாக வந்துவிட்டது,” என்கிறார் குஜ்ஜார் - பகர்வால் சமூகத்தில் பல வருடங்களாக பணியாற்றி வரும் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான டாக்டர் ஜவாய்த் ராகி.
கம்பளிக்காக விலங்கு மந்தையை வைத்திருப்பது கடினமாகி விட்டது. மேய்ச்சல் நிலங்கள் ஜம்மு பகுதியில் குறைந்துவிட்டது. விலங்குகள் மேயும் நிலவுரிமையாளர்களுக்கும் அவர்கள் பணம் கட்ட வேண்டும்.
சம்பா மாவட்ட கிராமங்களை சுற்றியுள்ள பல பகுதிகளை சமீபமாக லந்தானா காமரா என்கிற பூச்சி பரவ ஆரம்பித்திருக்கிறது. “இங்கு நாங்கள் மேய்க்க முடியாது. எங்கு பார்த்தாலும் களைகள் இருக்கின்றன,” என்கிறார் பசோலி தாலுகாவின் சிறு கிராமத்தில் வசிக்கும் முனாப்பர் அலி.
விலங்குகளின் பழைய வகைகள் பலவற்றை அரசு மாற்றிவிட்டது. சமவெளிகளின் வெயிலை கலப்பின செம்மறிகள் அதிக நாட்களுக்கு தாங்க முடிவதில்லை என்றும் மலைப்பாதைகளில் அவற்றால் பயணிக்க முடிவதில்லை என்றும் பகர்வால்கள் சொல்கின்றனர். “கஷ்மீருக்கு நாங்கள் இடம்பெயரும்போது, சிறு கட்டை இருந்தாலும் தாண்டி குதிக்க முடியாமல் அப்படியே அவை நின்றுவிடும். பழைய வகை நன்றாக நடந்தன,” என்கிறார் தாகிர் ரசா.
ஆயுதப்படை மற்றும் வன இலாகா ஆகியவற்றுக்காக அரசு போட்டிருக்கும் வேலிகள் மேய்ச்சலுக்கு தடையாக இருக்கின்றன. வாசிக்க: வேலி அடைக்கப்பட்ட மேய்ச்சல் பழங்குடிகளின் வாழ்க்கைகள்
அரசின் பாஷையில் சொல்வதாக இருந்தால், “எல்லா இடங்களிலும் (எங்களுக்கும் எங்கள் விலங்குகளுக்கும்) முடக்கம் இருக்கிறது,” என்கின்றனர் மேய்ப்பர்கள்.
ரிதாயன் முகெர்ஜி மேய்ச்சல் நாடோடி சமூகங்கள் பற்றிய செய்திகளை மேய்ச்சல் வாழ்வுக்கான மையத்தின் பயண மானியம் கொண்டு சேகரிக்கிறார். இக்கட்டுரையின் உள்ளடக்கத்தில் எந்தவித அதிகாரத்தையும் அம்மையம் செயல்படுத்தவில்லை
தமிழில் : ராஜசங்கீதன்