எந்த நேரத்திலும் அகமதாபாத்தின் ஆயிரக்கணக்கான இடங்களிலிருந்து அவை வானேறும். வானின் பிற எந்த அணிவகுப்பைக் காட்டிலும் வண்ணமயமாகவும் அற்புதமாகவும் இருக்கும். அவற்றின் பைலட்களும் உரிமையாளர்களும் தரையில் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பறக்க விட்டிருக்கும் கலம் வருடம் முழுக்க உழைக்கும் தரைக் குழுக்களால் தயார் செய்யப்பட்டவை என்பது அவர்களுக்குத் தெரியாது. குழுக்களில் பெரும்பாலானோர் பெண்கள். கிராமம் அல்லது சிறு டவுன்களில் வசிப்பவர்கள். சிக்கலான நுட்பமான கடினமான பணியை அற்பமான சம்பளத்துக்காக செய்கிறார்கள். உயர பறக்க இயலாதவர்கள்.
இது மகர சங்கராந்தி காலம். இந்த இந்து மதத் திருவிழாவை நகரத்தில் கொண்டாடுவதற்கான பல வண்ணக் காற்றாடிகள் அகமதாபாத்திலும் குஜராத்தின் கம்பத் தாலுகாவிலும் இஸ்லாமியப் பெண்களாலும் இந்து சுனாரா சமூகத்தினராலும் உருவாக்கப்படுகிறது. காற்றாடி பறக்க விடுபவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்.
ஜனவரி 14 அன்று வானை அலங்கரிக்கும் வண்ண வண்ணக் காற்றாடிகளை தயாரிக்க இப்பெண்கள் வருடத்தில் 10 மாதங்களுக்கும் மேலாகக் குறைவான ஊதியத்துக்கு உழைக்கின்றனர். குஜராத்தின் 625 கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த இத்துறையில் பணிபுரியும் 1.28 லட்ச மக்களின் 10 பேரில் 7 பேர் பெண்கள்.
“ஒரு காற்றாடி தயாரிக்கப்பட ஏழு ஜோடி கைகளை அது கடக்க வேண்டும்,” என்கிறார் 40 வயது சபின் அப்பாஸ் நியாஸ் ஹுசேன் மாலிக். கம்பத் லால் மகால் பகுதியின் சிறு தெரு ஒன்றில் வீடாகவும் கடையாகவும் இருக்கும் 12 x 10 அடி அறைக்குள் நாங்கள் அமர வைக்கப்பட்டிருந்தோம். காற்றாடிகள் கட்டப்பட்ட பளபளப்பான பெட்டிகளின் பின்னணியில் அமர்ந்து அவர், வெளித்தோற்றத்தில் அழகாக தெரியும் துறையின் அறியாப் பக்கத்தை பற்றி எங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
பெட்டிகளில் கட்டப்படாமல் சிதறிக்கிடந்த வண்ணமயமான காற்றாடிகள் அவரது அறையின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை நிறைத்திருந்தன. மூன்றாம் தலைமுறை ஒப்பந்ததார உற்பத்தியாளரான அவர், 70 கைவினைஞர்கள் கொண்டு, மகர சங்கராந்திக்கான காற்றாடிகளை ஒரு வருட காலமாக செய்து கொண்டிருக்கிறார். காற்றாடிகளை கையாளும் எட்டாவது ஜோடி கைகள் அவருடையது எனக் கூறலாம்.
நம்பிக்கைக் கொண்டிருப்போருக்கு மகர சங்கராந்தி என்பது மகர் ராசிக்குள் குரு நுழையும் நிகழ்வு ஆகும். இந்தியா முழுக்க வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் அறுவடை நாளும் அது ஆகும். அஸ்ஸாமில் மக் பிகு என்றும் வங்காளத்தில் பவுஷ் பார்பன் என்றும் தமிழ்நாட்டில் பொங்கல் என்றும் கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் உத்தராயன் என அழைக்கப்படுகிறது. வடக்கு பக்கமாக சூரியன் நகரத் தொடங்குவதை அந்த நிகழ்வு குறிக்கிறது. தற்போது உத்தராயன் என்றால் காற்றாடி பறக்கவிடும் விழா என்றுதான் புரிந்துகொள்ளப்படுகிறது.
எனக்கு ஆறு வயதாக இருந்தபோது அகமதாபாத்தின் பழைய நகரத்தில் இருக்கும் எங்களின் பூர்விக வீட்டில் முதன்முறையாக காற்றாடி விட்டேன். நன்றாக காற்று இருக்கும்போது கூட காற்றாடியை எழுப்ப எனக்கு ஆறு கைகள் உதவிக்கு தேவைப்பட்டன. முதல் ஜோடி நிபுணக் கைகள் என்னுடைய தந்தையினுடையது. இரண்டாவதாக என் பொறுமையான அம்மாவின் கைகள். அவர்தான் மாஞ்சா நூல் சுற்றிய சக்கரத்தைப் பிடித்திருப்பார். கடைசி இரு கைகள் பக்கத்துக் கட்டடத்திலிருக்கும் யாரோ ஒரு நல்லுள்ளத்தின் கைகளாக இருக்கும். அவர்தான் என் காற்றாடியை இரு முனைகளில் பிடித்துக் கொண்டு மாடியில் தூரமாகச் சென்று, என் காற்றாடியை மேலெழுப்ப தேவையான காற்று வரும் வரை காத்திருப்பவர்.
அகமதாபாத்தின் பழைய நகரத்தில் வளர்ந்த எவரும் காற்றாடிகளை இயல்பாக எடுத்துக் கொள்வார்கள். பல அளவுகளில் இருக்கும் காகிதப் பறவைகள் அவை. மாடிகளில் மறைந்திருக்கும் பழைய மரங்களிலிருந்து பறந்து வருபவை. அல்லது உத்தராயன் அன்று வானை நிரப்புவதற்கு முன் கூட்டம் நிறைந்த பழைய நகரத்துச் சந்தைகளில் வாங்கப்படுபவை. காற்றாடியின் வரலாறோ அல்லது அது உருவாக்கப்படும் முறையோ பேசப்பட்டதில்லை. அதை உருவாக்குபவர்களின் நிலை பற்றி சொல்லவே வேண்டாம். குறைந்த நேரத்துக்கு வானில் பறக்கவிடப்படும் நம் காற்றாடிகளைத் தயாரிக்க கண்ணுக்குத் தெரியாத தரைதளக் குழு ஆண்டு முழுக்க உழைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பருவத்தில் குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு காற்றாடி பறக்க விடுவதுதான். ஆனால் காற்றாடிகள் தயாரிப்பது குழந்தை விளையாட்டு அல்ல.
*****
“ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு கைவினைஞரால் செய்யப்படும்,” என்கிறார் சபின் மாலிக். “ஒருவர் காகிதத்தை வெட்டுவார். இன்னொருவர் இதயம் போன்ற துண்டை ஒட்ட வைப்பார். மூன்றாமவர் பட்டையை காற்றாடியில் ஒட்டுவார். நான்காமவர் குச்சிகள் வைப்பார். அடுத்தவர் குறுக்காக குச்சி வைப்பார். இன்னொருவர் ஒட்டுகள் ஒட்டுவார். ஒருவர் வால் செய்வார்.”
மாலிக் எனக்கு முன்னால் ஒரு காற்றாடியைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியையும் விரலால் சுட்டிக் காட்டி விளக்குகிறார். என்னுடைய நோட்டுப்புத்தகத்தில் புரிவதற்காக வரைந்து கொண்டேன். இந்த எளிமையான வித்தியாசமான உருவாக்கத்தின் வேலைகள் பல இடங்களில் செய்யப்படுகிறது.
“ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஷகர்பூரில் ஒரே ஒரு வேலைதான் நடக்கும். பட்டை ஒட்டப்படும்,” என்கிறார் சபின் மாலிக். “அக்பர்பூரில் ஒட்டுகளை மட்டும் வடிவமைப்பார்கள். அருகே இருக்கும் தாதிபாவில் குச்சி செய்வார்கள். மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நகரா கிராமத்தில் குறுக்குக் குச்சி ஒட்டுவார்கள். மட்டன் மார்க்கெட்டில் ஒட்டுப் பட்டைகள் செய்வார்கள். வால்களும் அங்கே செய்வார்கள்.”
கம்பாத், அகமதாபாத், நதியாத், சூரத் மற்றும் குஜராத்தின் பிற பகுதிகளுலும் காற்றாடிகள் தயாரிக்கும் அனைவரைப் பற்றியக் கதை இது.
அகமதாபாத்தை சேர்ந்த 60 வயது முனாவர் கான் இத்தொழிலில் நான்காம் தலைமுறையாக இருக்கிறார். அவரின் பணி, காற்றாடி காகிதங்களை பெல்லார்பூர் அல்லது திரிபேனி போன்ற இடங்களில் வாங்குவதிலிருந்து தொடங்குகிறது. இரு இடங்களும் உற்பத்தியாளர்களின் பெயர்களால் சுட்டப்படும் இடங்கள். அகமதாபாத்தின் பெல்லார் ஆலைகள் மற்றும் கொல்கத்தாவின் திரிபேனி டிஷ்யூஸ். அவர் வாங்கும் காகிதக் கட்டுகள் பட்டறைக்குக் கொண்டு செல்லப்பட்டு தேவைப்படும் வடிவங்களிலும் அளவுகளிலும் வெட்டப்படும்.
அவற்றை 20 தாள்களாக நேர்த்தியாக கட்டி வைத்து, காற்றாடி தாள்களுக்குத் தேவையான அளவுகளில் ஒரு பெரிய கத்தியைக் கொண்டு வெட்டத் தொடங்குகிறார். பிறகு அவற்றை அடுக்கி அடுத்த கைவினைஞரிடம் கொடுக்கிறார்.
கம்பத்தில் 41 வயது ராஜும் இதே வேலையைத்தான் செய்கிறார். “எல்லா வேலைகளும் எனக்குத் தெரியும்,” என்கிறார் அவர் காற்றாடிக்கு தேவையான வடிவங்களை வெட்டியபடி. “ஆனால் என் ஒருவனால் எல்லா வேலைகளும் செய்ய முடியாது. கம்பத்தில் பல தொழிலாளர்கள் இருக்கின்றனர். சிலர் பெரிய காற்றாடிகளை செய்வார்கள். சிலர் சிறியவற்றில் வேலை பார்ப்பார்கள். ஒவ்வொரு அளவிலும் 50 விதமான காற்றாடிகள் இருக்கும்.
பல வண்ணத்திலும் பல வடிவங்களில் வானில் வண்ணமயமான யுத்தத்தை நடந்தபோது குஞ்சம் வைத்த காற்றாடி எங்களின் மாடியிலிருந்து மூன்று மீட்டர் தூர உயரத்துக்கு என் திறமையற்ற கைகளால் பறந்தது. பறவை போன்று வடிவமைக்கப்பட்டு வானில் அதிக நேரம் பறக்கக் கூடிய சண்டைக் காற்றாடிகளும் வளையங்கள் வரையப்பட்ட காற்றாடிகளும் பல நிறங்களில் பட்டைகள் வரையப்பட்ட கற்றாடிகளும் இன்னும் பிற வகைகளும் வானில் பறந்திருக்கும்.
சிக்கலான வடிவமைப்பும் அதிக நிறங்களும் வடிவங்களும் கொண்ட காற்றாடியைச் செய்ய அதிக உழைப்பு செலுத்தப்படுகிறது. 40 வயதுகளில் இருக்கும் கவுசர் பானு சலீம்பாய் இப்பணியை 30 வருடங்களாக செய்து வருகிறார். கம்பத்தின் அக்பர்பூரில் வசிக்கிறார்.
வண்ண வடிவங்களை அவர் கலந்து காற்றாடிகளுக்கேற்பப் பொருத்திப் பார்த்து முனைகளில் வைத்து ஒட்டி வடிவத்தை முடிக்கிறார். “இங்கு பணிபுரியும் அனைவருமே பெண்கள்தான்,” என்கிறார் கவுசர் பானு கூடியவர்களைச் சுட்டிக்காட்டி. “ஆலைகளில் காகிதங்களை வெட்டுவது, காற்றாடிகளை விற்பது போன்ற பிற வேலைகளை ஆண்கள் செய்கின்றனர்.”
கவுசார் பானு காலை, பிற்பகல் பொழுதுகள் மட்டுமின்றி அவ்வப்போது இரவு கூட பணிபுரிகிறார். “பெரும்பாலான நேரங்களில் நான் தயாரிக்கும் ஆயிரம் காற்றாடிகளுக்கு 150 ரூபாய் கிடைக்கும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேவை அதிகமாக இருக்கும்போது 250 ரூபாய் கூட கிடைக்கும்,” என விளக்குகிறார். “பெண்களாகிய நாங்கள் வீட்டிலும் பணிபுரிகிறோம். சமைக்கிறோம்.”
சுயதொழில் செய்யும் பெண்கள் சங்கத்தின் 2013ம் ஆண்டு ஆய்வு , இத்துறையின் 23 சதவிகித பெண்கள் மாதத்துக்கு 400 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பதை உறுதிப்படுத்துகிறது. அவர்களின் பெரும்பாலானோரின் வருமானம் 400 ரூபாய்க்கும் 800 ரூபாய்க்கும் இடையேதான் இருக்கிறது. வெறும் 4 சதவிகித பேர்தான் மாதத்துக்கு 1,200 ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டிருந்தனர்.
இதன் அர்த்தம், ஒரு பெரிய காற்றாடிக்கு கிடைக்கும் விலையான 1,000 ரூபாய்க்கும் குறைவாகவே அவர்களின் பெரும்பாலானோர் வருமானமாக ஈட்டுகின்றனர் என்பதே. மலிவான காற்றாடியை நீங்கள் வாங்கினால், ஐந்து காற்றாடிகளை 150 ரூபாய்க்கு வாங்க முடியும். உயர்தர காற்றாடிகள் எனில் 1,000 ரூபாய்க்கும் மேல் விலை உண்டு. இரு விலைகளுக்கும் இடையிலுள்ள விலைகள் காற்றாடி கொண்டிருக்கும் வகைகள், வடிவங்கள் மற்றும் அளவுகள் ஆகியவற்றின் அளவுக்கு குழப்பம் தரவில்லது. சிறிய காற்றாடிகளின் அளவு 21.5 x 25 அங்குலங்கள். இவற்றின் இரண்டு அல்லது மூன்று மடங்குகள்தான் பெரிய காற்றாடி.
*****
என்னுடைய காற்றாடி குறைந்த தூரத்துக்கு பயணித்துவிட்டு திரும்பும்போது வேடிக்கை பார்த்த ஒருவர், “காற்றாடியின் முதுகை திருப்பு” எனக் கத்தியது நினைவில் இருக்கிறது. எனவே நான் காற்றாடியை மேலிருந்து கீழ் வரை என் இரு சிறியை கைகளால் பிடித்து அதன் முதுகைத் திருப்பினேன். முதுகுக் குச்சி மிருதுவாக இருக்க வேண்டும். திருப்பினா உடையமளவுக்கு பலவீனமாக இருக்கக் கூடாது.
பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, கம்பத்தின் சுனர்வாதிலுள்ள 25 வயது ஜெயாபென், காற்றாடியின் முதுகாக இருக்கும் குச்சியை ஒட்டும் விதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் பயன்படுத்தும் பசை வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பசை. ஜவ்வரிசியை வேக வைத்து உருவாக்கப்படுவது. அவரைப் போன்ற திறமைசாலிக்கும், ஆயிரம் குச்சிகள் ஒட்டினால் 65 ரூபாய்தான் கொடுக்கப்படுகிறது. உற்பத்திச் சங்கிலியின் அடுத்த நபர் காற்றாடியின் குறுக்குக் குச்சியை ஒட்ட வேண்டும்.
ஆனால் குறுக்குக் குச்சி தேய்க்கப்பட்டு மென்மையாக்கப்பட வேண்டும். 36 வயது ஆஷாபென், மூங்கில் குச்சிகளை உரித்து வடிவத்துக்குக் கொண்டு வரும் வேலையை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். வீட்டில் குச்சிக் கட்டுகளோடு அமர்ந்து கொண்டு, சைக்கிள் ட்யூபின் ஒரு துண்டை ஆட்காட்டி விரலில் சுற்றிக் கொண்டு, குச்சிகளை கூர்மையான கத்தி கொண்டு தேய்த்து உரித்துக் கொண்டிருக்கிறார். “ஆயிரம் குச்சிகளை உரித்தால் 60லிருந்து 65 ரூபாய் கிடைக்கும். பெரியவற்றுடன் வேலை பார்க்கும்போது சில சமயங்களில் ரத்தம் கூட வரும்.”
குறுக்குக் குச்சி மென்மையாகி விட்டது. இப்போது அதில் தடம் போட வேண்டும். 60 வயது ஜமீல் அகமதுக்கு அகமதாபாத்தின் ஜமல்பூர் பகுதியில் ஒரு சிறு கடை இருக்கிறது. எனினும் அவர் குறுக்குக் குச்சி வேலையும் செய்கிறார். எட்டு ஜுவாலைகள் கொண்ட அவரின் மண்ணெண்ணெய் விளக்கில் மூங்கில் குச்சிகளைக் காட்டுகிறார். மூங்கில் குச்சிகளில் கறுப்புத் தடங்கள் ஏற்படுகின்றன.
குறுக்குக் குச்சிகளை ஒட்டவென தனிப் பசை ஒன்றை ஜமீல் பயன்படுத்துகிறார். “காற்றாடி செய்ய உங்களுக்கு மூன்றிலிருந்து நான்கு வகைப் பசைகள் தேவைப்படும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகை உட்பொருட்களும் நீடிக்கும் தன்மையும் இருக்கின்றன.” அவர் மைதாவால் தயாரிக்கப்பட்ட வெளிர்நீலப் பசையைப் பயன்படுத்துகிறார். ஆயிரம் குறுக்குக் குச்சிகள் ஒட்டினால் 100 ரூபாய் கிடைக்கும்.
அகமதாபாத்தின் ஜுகாபுராவில் இருக்கும் 35 வயது ஷகாபியா பட்டை ஒட்ட பயன்படுத்தும் பசை ஜமீலின் பசையிலிருந்து வித்தியாசமானது. சமைக்கப்பட்ட அரிசியிலிருந்து அப்பசையை அவர் உருவாக்குகிறார். பல காலமாக அந்த வேலையைச் செய்வதாக அவர் சொல்லிக் கொண்டே, தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் நூல் கற்றையிலிருந்து ஒரு நூலை உருவுகிறார். வேகமாக அந்த நூலை காற்றாடியைச் சுற்றிக் கட்டி, இன்னொரு கையிலிருக்கும் பசையைக் கொண்டு ஒட்டுகிறார். மேஜையின் அடிப்புறம் பசை நிரம்பிய பாத்திரம் இருக்கிறது.
“என் கணவர் வீட்டுக்கு வந்து விட்டால் இந்த வேலையை என்னால் செய்ய முடியாது. அவர் கோபம் கொள்வார்.” அவரின் பணி காற்றாடிக்கு வலிமை கொடுக்கிறது. ஆயிரம் காற்றாடிகளுக்கு 200லிருந்து 300 ரூபாய் வரை அவருக்குக் கிடைக்கும். அதற்குப் பிறகு பிற பெண்கள் காற்றாடிகளின் முதுகுக் குச்சியும் குறுக்குக் குச்சியும் உறுதியாக இருப்பதற்கு சிறு துண்டு காகிதங்களை ஒட்டுகின்றனர். ஒவ்வொரு ஆயிரம் காற்றாடிகளுக்கும் 85 ரூபாய் கிடைக்கும்.
42 வயது ஃபிர்தோஸ் பானு காற்றாடிளுக்கான வண்ணமயமான வால்களை அவரின் கைகளிலிருந்து தொங்க விட்டுக் காட்டுகிறார். ஒரு கட்டில் 100 இருக்கும். அக்பர்பூரில் பணிபுரியும் ஆட்டோடிரைவரின் மனைவியான அவர் ஆர்டர்களின் பெயரில் அப்பளங்கள் செய்து கொடுப்பார். “ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் அவற்றைக் காய வைக்க மாடி இல்லை. இதுவும் சாதாரண வேலை ஒன்றூமில்லை. குறைவான பணம்தான் கிட்டுகிறது,” என்னும் ஃபிர்தோஸ் பானு, “எனக்கு வேறு வேலையும் தெரியாது,” என்கிறார்.
சிக்கலான வடிவமைப்பும் அதிக நிறங்களும் வடிவங்களும் கொண்ட காற்றாடியைச் செய்ய அதிக உழைப்பு செலுத்தப்படுகிறது
அவர் தயாரிக்கும் காற்றாடி வால்களின் அளவுக்கேற்ப, பெரிய கூர்மையான கத்திரிகோலால் காகிதத்தை ஒரு பக்கத்திலிருந்து பட்டைகளாக வெட்டுகிறார். பிறகு வெட்டப்பட்ட காகிதங்களை மகள்களான 17 வயது தில்ஷத் பானு மற்றும் 19 வயது மகெரா பானு ஆகியோரிடம் கொடுக்கிறார். அவர்கள் ஒவ்வொரு காகிதமாக எடுத்து நடுவே பசையை இடுகின்றனர். அவரின் பெருவிரலில் சுற்றி வைத்திருக்கும் நூலிலிருந்து அவர்கள் ஒவ்வொரு நூலை எடுத்து, காகிததத்துடன் கட்டி சுற்றி சரியான வாலாக மாற்றுகின்றனர். அடுத்த தொழிலாளர் வாலை காற்றாடியுடன் கட்டி விட்டால் அது பறக்கும் நிலைக்கு தயார். மூன்று பெண்களும் சேர்ந்து ஆயிரம் வால்கள் செய்தாலும் 70 ரூபாய் வருமானம்தான் கிடைக்கும்.
“கீழே நூலை இழு…!!” இம்முறை கோபத்துடன் கத்துகிறார்கள். மாஞ்சா வானிலிருந்து கனமாக தளர்ந்து மாடிகளில் விழுந்தது. ஆம், பல பத்தாண்டுகள் கழிந்தும் எனக்குப் பிடித்த காற்றாடியை நான் இழந்த விதத்தை நினைவில் வைத்திருக்கிறேன்.
இப்போது நான் காற்றாடிகள் விடுவதில்லை. ஆனால் அடுத்தடுத்த தலைமுறைகளின் குழந்தைகள் காற்றாடி விட உதவுபவர்களை இந்த வாரத்தில் சந்தித்திருக்கிறேன். முடிவுறா அவர்களின் உழைப்புதான் மகர சங்கராந்திக்கான வண்ணங்களை கொடுக்கிறது.
இக்கட்டுரை எழுத உதவிய ஹொசேஃபா உஜ்ஜெயினி, சமீனா மாலிக் மற்றும் ஜனிசார் ஷேக் ஆகியோரின் உதவிக்குக் கட்டுரையாளர் நன்றி செலுத்துகிறார்.
முகப்புப் படம்: தற்போது பிரபலமாக இருக்கும் பிளாஸ்டிக் காற்றாடிகளில் கம்ரூம் நிசா பானு வேலை பார்க்கிறார். பிரதிஷ்தா பாண்டியா எடுத்த புகைப்படம்.
தமிழில் : ராஜசங்கீதன்