இல்லை. லாரியின் பின்கதவின் வழியாக எட்டிப் பார்க்க கிஷன்ஜி முயலவில்லை. உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் நகருக்கு வெளியே உள்ள இச்சிறு கிராமத்தில் ஏதோவொரு சேமிப்புக் கிடங்கில் 'லோடை' இறக்கிவிட்டு வந்திருக்கும் லாரி ஏற்கனவே காலியாகத்தான் இருந்தது.

70 வயதுகளில் இருக்கும் கிஷன்ஜி, ஒரு தள்ளுவண்டியில் கடலையும் வீட்டில் செய்த தின்பண்டங்களும் விற்கும் ஒரு சிறுவியாபாரி. "நான் மறந்து விட்டுவந்த ஒரு பொருளை எடுக்க வீட்டுக்குச் சென்றிருந்தேன்," என்கிறார் அவர். "நான் திரும்பிய போது ஒரு பெரிய லாரி என் பாதி வண்டி மீது ஏறி நின்றிருந்ததைப் பார்த்தேன்."

லாரி ஓட்டுநர் லாரியை இங்கு நிறுத்தியிருக்கிறார். லாரியை எடுக்கும்போது கிஷன்ஜியின் வண்டியைக்  கவனிக்காமலேயே ரிவர்ஸ் எடுத்திருக்கிறார். பிறகு ஓட்டுநரும் உதவியாளரும் சென்று விட்டனர். நண்பர்களை அழைக்கவோ மதிய உணவுக்கோ சென்று விட்டனர். லாரியின் பின்னாலுள்ள கதவு, வண்டியை இடித்து அதன் மேல் நின்றிருக்கிறது. அவர் அதை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். கிட்டப் பார்வைக் குறைபாடு கொண்ட கிஷன்ஜி எப்படி பிரச்சினையை சரி செய்யலாமெனக் கண்டுபிடிக்க லாரிக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஓட்டுநரும் உதவியாளரும் எங்குச் சென்றனர் என எங்களுக்குத் தெரியவில்லை. யார் அவர்கள், எங்கு இருப்பவர்கள் என்பது கிஷன்ஜிக்கும் தெரியவில்லை. ஆனால் அவர்களின் பூர்விகத்தை பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்களை வெளிப்படையாகக் குறிப்பிட்டார். அவரின் வண்ணமயமான வார்த்தைப் பிரயோகங்களை அவரின் முதிய வயது பறித்திருக்கவில்லை.

தள்ளுவண்டியில் பொருட்களை வைத்து விற்கும் பல்லாயிரக்கணக்கான சிறு வியாபாரிகளில் கிஷன்ஜியும் ஒருவர். இந்த நாட்டில் எத்தனை கிஷன்ஜிக்கள் இருக்கின்றனர் எனக் குறிப்பிடும் சரியான தரவுகள் இல்லை. இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட 1998ம் ஆண்டில் நிச்சயமாக தரவுகள் இல்லை. "தள்ளுவண்டியுடன் என்னால் அதிக தூரம் நடக்க முடியாது. எனவே 3-4 கிராமங்களில் விற்பதோடு நிறுத்திக் கொள்வேன்," என்கிறார் அவர். "ஒரு நாளில் 80 ரூபாய் சம்பாதித்தால் அது எனக்கு நல்ல நாள்," என்கிறார்.

லாரியிலிருந்து தள்ளுவண்டியை விடுவித்துக் கொடுத்தோம். 80 ரூபாய் கொடுக்கும் நல்ல நாளாக அன்றைய நாள் அவருக்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் வண்டியைத் தள்ளிச் செல்லும் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

தமிழில்: ராஜசங்கீதன்

పి సాయినాథ్ పీపుల్స్ ఆర్కైవ్స్ ఆఫ్ రూరల్ ఇండియా వ్యవస్థాపక సంపాదకులు. ఆయన ఎన్నో దశాబ్దాలుగా గ్రామీణ విలేకరిగా పని చేస్తున్నారు; 'Everybody Loves a Good Drought', 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' అనే పుస్తకాలను రాశారు.

Other stories by P. Sainath
Translator : Rajasangeethan

రాజా సంగీతన్ చెన్నైకి చెందిన రచయిత. ఒక ప్రసిద్ధ తమిళ వార్తా చానల్‌లో పాత్రికేయులుగా పనిచేస్తున్నారు.

Other stories by Rajasangeethan