“ஜரியாவில் இருக்கும் எங்கள் வீட்டில் 4-5 மாதங்களாக மின்சாரம் கிடையாது. சகோதரன், சகோதரி மற்றும் நான் டார்ச் வெளிச்சத்தில்தான் படிக்கிறோம். 30-45 நிமிடங்களுக்கு டார்ச் தொடர்ந்து வேலை செய்யும். பிறகு மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும்.”
13 வயதாகும் சோம்பாரி பாஸ்கி, சந்தால் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவள். படின் நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் அவள், பள்ளி படிப்பை முழுவதுமாக முடிப்பதில் உறுதியாக இருக்கிறாள்: “நான் [முறையான கல்வியை] படிக்க விரும்புகிறேன். இதுவே என் கனவு.”
ஜாதுகோரா வட்டாரத்தில் உள்ள ஜரியா கிராமத்தின் மக்கள் தொகை 1000க்கும் மேல் இருக்கும். ஜார்கண்டின் சராசரி கல்வியறிவான 66 சதவிகிதத்திற்கும் குறைவாக 59 சதவிகிதத்தினர் மட்டுமே இங்கு படிப்பறிவு பெற்றுள்ளனர். புர்பி சிங்பும் மாவட்ட ஜரியாவில் ஒரு தொடக்கப் பள்ளி மட்டுமே உள்ளது. எனவே நடுநிலைப் பள்ளிக்கு சோம்பாரி, வீட்டிலிருந்து தினமும் நான்கு கிலோ மீட்டர் தூரம் செல்கிறார்.
இந்த நிருபர் அருகிலுள்ள கிராமமான காரியா கோச்சாவுக்குச் சென்றபோது, சபார் மொழியிலிருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்பாளராக முன்வந்து கையை உயர்த்தியவர்தான் சிறுமி சோம்பாரி. கிழக்கு சிங்புமின் சபர் சமூக மக்களிடம் செய்தியாளர் உரையாடுவதற்கு அச்சிறுமி உதவினாள். தாய் மொழி சந்தாலியுடன் சபர், ஹோ, இந்தி, வங்காள மொழிகளையும் சோம்பாரி அறிந்துள்ளார்.
தனது ஜரியா கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரியா கோச்சார் கிராமத்திற்கு விரைந்து சென்று டார்ச்சிற்கு சார்ஜ் செய்து வருவதை சோம்பாரி இந்தியில் நமக்கு விளக்கினாள்.
*****
“மின் கட்டணத்தை நேரத்திற்கு செலுத்தவில்லை என்பதால் எங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் [மின்சாரத்துறை] என் தாத்தா குராய் பாஸ்கியின் பெயருக்கு 16,745 ரூபாய் நிலுவை மின்கட்டணத்தை செலுத்துமாறு ரசீது அனுப்பினர். இவ்வளவு பெரிய தொகைக்கு நாங்கள் எங்கு செல்வது?”
"எனவே எங்கள் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
“ எங்கள் கிராமத்தில் சில வீடுகளில் மட்டுமே மின் இணைப்பு உள்ளது. ஆனால் அவர்களின் வீடுகளில் மொபைல் மற்றும் டார்ச்சுகளுக்கு சார்ஜ் செய்ய எங்களை அனுமதிப்பதில்லை. எனவே அண்டை கிராமமான கரியா கோச்சாவிற்கு சென்று டார்ச்சிற்கு சார்ஜ் செய்கிறேன். அக்கிராமத்தில் உள்ள சபர் பழங்குடியினர் வீடுகளுக்கு சென்று டார்ச்சிற்கு சார்ஜ் செய்துகொண்டு வீடு திரும்புவேன்.
‘எனது கிராமத்தில் சில வீடுகளில் மட்டுமே மின்இணைப்பு உள்ளது. ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அண்டை கிராமமான கரியா கோச்சாவிற்கு சென்று டார்ச்சிற்கு சார்ஜ் செய்வேன், இல்லாவிட்டால் படிக்க முடியாது’
“சந்தையிலிருந்து வீடு திரும்பும் அப்பா அல்லது சாச்சாவிற்கு [மாமா] நான் காத்திருப்பேன். அவர்களின் மிதிவண்டியை பயன்படுத்திக் கொள்வேன். டார்ச் சார்ஜ் ஆவதற்கு 3-4 மணி நேரம் ஆகும். சைக்கிளில் இறங்கிய அடுத்த நொடியே சார்ஜ் போட சென்றுவிடுவேன். தினமும் காலையில் சார்ஜ் செய்ய முயல்வேன். இல்லாவிட்டால் என்னால் படிக்க முடியாது. என் மூத்த சகோதரி ராணி 10 ஆம் வகுப்பும், இளைய சகோதரன் ஜித்து 3ஆம் வகுப்பும் படிக்கின்றனர்.”
“எங்களால் கரியா கோச்சாவிற்கு அடிக்கடி சென்று வர முடியாது. அதுபோன்ற நாட்களில் நாங்கள் பாட்டரியில் சார்ஜ் இருக்கும் வரை பயன்படுத்திக் கொள்வோம் அல்லது மெழுகுவர்த்தி பயன்படுத்துவோம்.”
*****
படின் நடுநிலைப் பள்ளிக்கு படின் மற்றும் ஜரியா போன்ற அருகாமை கிராமங்களில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். 232 மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியின சமூகத்தினர். “ நாங்கள் அவர்களுக்கு மதிய உணவு வழங்குகிறோம். முட்டை அல்லது பழங்கள் கொடுக்கப்படும் நாட்களில் அதிகளவு மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்,” என்கிறார் சோம்பாரி பள்ளி தலைமை ஆசிரியர் தினேஷ் சந்திர பகத்.
ஜார்கண்ட் கல்வித் திட்டக் குழுவின் கீழ் ஜார்கண்ட் அரசு மாணவர்களுக்கு சீருடை வழங்குகிறது. 1-5ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு சீருடை, ஷூக்கள், காலுறைகள் வாங்க ரூ.600 அரசு ஒதுக்குகிறது. 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடைக்கு ரூ.400, ஸ்வெட்டருக்கு ரூ.200, ஒரு ஜோடி ஷூக்கள், காலுறைகள் வாங்குவதற்கு ரூ.160 என அரசு நிதி வழங்குகிறது.
இத்திட்டத்தில் செலுத்த வேண்டிய பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் வரவு வைக்கப்படும். ஆனால், சீருடை வாங்குவதற்காக 60 சதவீத மாணவர்கள் மட்டுமே இந்தப் பணத்தைப் பெற்றுள்ளனர் என்கிறார் தலைமை ஆசிரியர்.
இங்கு ஜரியாவில் 94.39 சதவிகித மக்கள் சந்தால், முன்டா, தண்டி, லோஹார் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 94 சதவிகிதம் சந்தால்கள். பெரும்பாலானவர்கள் தினக்கூலி வேலை செய்கின்றனர். சிலர் சிறிதளவு பிகா நிலங்களில் மானாவாரி விவசாயத்தில் சொந்த பயன்பாட்டிற்கு நெல் விளைவிக்கின்றனர்.
“என் தந்தை திவாராம் பாஸ்கி தினக்கூலி வேலை செய்கிறார். அவர் பெரும்பாலும் கேபிள் பதிக்க பூமியை தோண்டும் வேலையை செய்கிறார். வேலை இருக்கும் நாளில் அவருக்கு 300-350 ரூபாய் கிடைக்கும். அவரது கூலியை தான் எங்கள் குடும்பமே நம்பியுள்ளது. தந்தை வழி தாத்தாவிற்கு சொந்தமான சுமார் ஏழு ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அங்கு பாறைகள் நிறைந்துள்ளது.”
“வீட்டு வேலைகளை பார்த்து கொள்ளும் என் அம்மா மாலதி பாஸ்கி விறகு தேடி அடிக்கடி காட்டிற்கு செல்கிறார். அவர் இல்லாத போது வீட்டு வேலைகளை நான் செய்கிறேன். இதனால் அன்று பள்ளி செல்ல முடிவதில்லை. பப்லு சாச்சாவின்[தந்தையின் சகோதரர்] காலை உணவு கடைக்கு என் அம்மா சமைத்து கொடுக்கிறார். விற்பனைக்கு ஏற்ப அவர் 50-60 ரூபாய் சம்பாதிக்கிறார். என் தந்தைக்கு கூலி வேலை கிடைக்காதபோது, பப்லு சாச்சாவிற்கு அவர் உதவுகிறார். எங்கள் சமூகத்தைச் சேராத சாச்சாவை, எங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவிக்கிறோம்.”
கோவிட்-19 காலத்தில் அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் 87 சதவிகித மாணவர்களிடம் ஸ்மார்ட் ஃபோன் வசதி கிடையாது என்கிறது பள்ளிக் கல்வி குறித்த அறிக்கை: க்ளூம் இன் தி கிளாஸ்ரூம் : தி ஸ்கூலிங் க்ரைசிஸ் இன் ஜார்கண்ட் . பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரிசே பாரியிடம் கூறுகையில்,”கோவிட் நெருக்கடி காலத்தில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கல்வி முறையால் கைவிடப்பட்டார்கள். இணைய வழி கல்வியை நாம் முற்றிலுமாக சார்ந்திருந்தோம். ஏழை பிள்ளைகளுக்கு அது சாத்தியமில்லை.”
*****
“டிசம்பர் அப்போது தான் தொடங்கியது. எங்கள் பள்ளி ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் சுற்றுலாவிற்கு செல்ல முடியுமா என்று கவலையாக இருந்தது. என் பள்ளித் தோழிகளுடன் சேர்ந்து ஜம்ஷட்பூரில் உள்ள திம்னா அணைக்குச் செல்ல விரும்பினேன். ஆனால் அதற்கு நாங்கள் ரூ.200 செலுத்த வேண்டும். என் குடும்பத்தால் அதை செலுத்த முடியாது. அதனால் நான் அவர்களிடம் பணம் கேட்கவே இல்லை. பிறரது வயல்களில் நெல் அறுவடைக்குச் சென்று ஒரு நாளுக்கு 100 ரூபாய் சம்பாதித்தேன். இப்படி கஷ்டப்பட்டு ரூ.200 சேர்த்து சுற்றுலாவிற்கு பணம் செலுத்தினேன். என் பள்ளித் தோழிகளுடன் அணைக்குச் சென்று மகிழ்ந்தேன்.”
“கரோனா பெருந்தொற்றின்போது எங்கள் பள்ளி மூடப்பட்டு, கடந்தாண்டு திறக்கப்பட்டது. ஊரடங்கின்போது நான் முறையாக படிக்கவில்லை. கடந்த தேர்வுகளில் நான் குறைவான மதிப்பெண்கள் எடுத்தேன். ஆனால் இம்முறை கடினமாக உழைக்கிறேன். நல்ல மதிப்பெண் எடுப்பேன்.”
“ இந்த ஆண்டு தேர்வு முடிந்தவுடன், ஜதுகோரா சென்று மேலும் படிக்க விரும்புகிறேன். எங்கள் கிராமத்திலிருந்து அது 7-8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்குள்ள உயர்நிலை பள்ளியில் நான் சேர்வேன்.
“நான் வளர்ந்ததும் காவல்துறை அதிகாரி அல்லது வழக்கறிஞராக விரும்புகிறேன்.”
தமிழில்: சவிதா