ஷாஜஹான்பூர் போராட்டக் களத்தில் மூன்று நாட்கள் கழித்த பிறகு சொந்த கிராமத்திற்கு திரும்பும் ஹனுமந்த் குஞ்ஜாலுக்கு மனம் நிறைய மறக்க முடியாத நினைவுகளும் இருந்திருக்கும்.
“அங்குள்ள விவசாயிகள் மிகவும் விருந்தோம்பலுடன், சிறப்பாக நடந்துகொண்டனர்,” என்கிறார் டிசம்பர் 25ஆம் தேதி ஷாஜஹான்பூர் வந்த மகாராஷ்டிராவின் நாஷிக் மாவட்டம் சந்த்வாட் கிராமத்தின் 41 வயது பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர். “தேவைப்பட்டால் சமைப்பதற்கு என அரிசி, பருப்பு எடுத்து வந்திருந்தேன். ஆனால் அவற்றிற்கு தேவை ஏற்படவில்லை. நிறைய நெய் கலந்த உணவை அவர்கள் அளித்தனர். தாராள மனதுடன் எங்களை வரவேற்றனர்.”
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் டிசம்பர் 21ஆம் தேதி நாஷிக்கிலிருந்து டெல்லிக்கு வாகன பேரணி தொடங்கியது. சுமார் 1,400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகரின் புறநகருக்கு சுமார் 1000 விவசாயிகள் ஐந்து நாள் பேரணியாக வந்தடைந்தனர். ராஜஸ்தான் - ஹரியானா எல்லையில், தெற்கு டெல்லியில் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாஜஹான்பூரில் பேரணி முடிந்தது. தேசிய தலைநகரை சுற்றியுள்ள போராட்டக் களங்களில் ஒன்றான இங்கு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26ஆம் தேதியிலிருந்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானிலிருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.ஷாஜஹான்பூர் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு தனது கிராமத்திற்குத் திரும்பிய மகாராஷ்டிரா விவசாயி ஹனுமந்த் குஞ்ஜல் மனம் நிறைய மகத்தான நினைவுகள் சுமந்து சென்றார்
டெல்லியைச் சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் பலர் நிலக்கிழார்கள், பலரும் நான்கு சக்கர வாகனங்களில் வந்துள்ளனர். 2024 பொதுத் தேர்தல் வரை போராட்டம் நடத்துவதற்கான வளமை தங்களிடம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகளில் பலரும் பழங்குடியின சமூகத்தினர். மிகக் குறைந்த நிலமும், வளமும் கொண்ட அவர்களுக்கு இப்போராட்டம் அசாதாரணமானது. பல்கார் மாவட்டம் விக்ரம்காட் தாலுக்காவில் வார்லி சமூகத்தைச் சேர்ந்த 45 வயதாகும் விவசாயி சுரேஷ் வர்தா (மேலே உள்ள முகப்புப் படத்தில் இருப்பவர்), பேசுகையில், “வடமாநிலங்களையும் தாண்டி வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு நிலவுகிறது என்பதைக் காட்ட விரும்புகிறோம். இது ஏழை மற்றும் பணக்கார விவசாயிகள் என இரு தரப்பினரையும் பாதிக்கிறது.”
பெருமுதலாளிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், விவசாயிகள், விவசாயத்தின் மீது அதிகளவு அதிகாரத்தை அவர்கள் செலுத்த வழிவகுக்கும் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என்பதாலும் விவசாயிகள் இந்த புதிய சட்டங்களை எதிர்க்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி), வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (ஏபிஎம்சிஸ்), மாநில கொள்முதல் போன்ற பல ஆதரவு அம்சங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றனர்.
வடக்கத்திய விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவை நல்கும் வகையில் மகாராஷ்டிரா விவசாயிகள் பெட்டிகள் நிறைய மருந்துகளைக் கொண்டு வந்தனர். ஆனால் ஷாஜஹான்பூரில் உள்ள போராட்டக்காரர்களுக்கு மருந்து விநியோகத்திலும் தட்டுப்பாடு இல்லை.
“அனைத்து வசதிகளையும் கொண்ட இதைப்போன்ற ஒரு போராட்டத்தை இதுவரை நான் கண்டதில்லை,” என்கிறார் அகமத்நகர் மாவட்டம் சங்கம்நர் தாலுகா ஷின்டோடி கிராமத்தைச் சேர்ந்த 57 வயதாகும் விவசாயி பில் பழங்குடியான மதுரா பார்தி. “அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். போராட்டக் களத்திற்கு நாங்கள் வந்தபோது முந்திரி, பாதாம், கீர் என பல பொருட்களையும் கொடுத்து வரவேற்றனர். இந்த பொருட்களை வாங்குவதற்கு முன் இருமுறை யோசித்தோம். குளிப்பதற்கு சுடுநீர், தடித்த போர்வைகள் அளித்தனர். எங்களது போர்வைகள் கிழிந்திருந்ததால் அவை தான் அதிகம் தேவைப்பட்டன.”
2018 மார்ச்சில் நடைபெற்ற விவசாயிகளின் நீண்ட பேரணி யில் பங்கேற்ற மதுராதை பேசுகையில், என்னால் உதவ முடியாவிட்டாலும், இரு போராட்டங்களையும் ஒப்பிட முடியும். “ நாங்கள் எடுத்துச் சென்ற உணவு தானியங்களை எவ்வளவு குறைவாக பயன்படுத்தினோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது,” என்கிறார் அவர். “ஏழு நாட்கள் நடந்தே நாஷிக்கிலிருந்து மும்பை வந்தோம். எங்களுக்கான உணவுகளை நாங்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது. இங்கே லங்கார்கள் போராட்டக்காரர்களுக்கு தொடர்ந்து உணவளிக்கின்றனர். எங்களால் முடிந்தவரை சாப்பிட்டோம்.”ஷாஜஹான்பூரில் வர்க்க வேறுபாடுகள் கடந்த ஒற்றுமை நிலவியது. டெல்லி எல்லையில் நடைபெறும் போராட்டங்கள் இன்னும் வலிமை பெறுவதற்கு களத்திற்கு வெளியே உள்ளவர்களின் ஆதரவும் காரணம்.
2018 பெரும் பேரணியை ஒருங்கிணைத்த விவசாய தலைவர்களில் ஒருவரான அஜித் நவாலி இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டை சொல்கிறார்: “அப்பேரணி ஏழு நாட்கள் நடந்தது,” என்கிறார் அவர். “முதல் ஐந்து நாட்களுக்கான வளங்களைப் பெறுவதற்கு நாங்கள் போராடினோம். ஆறாவது நாளன்று மும்பையின் புறநகரை அடைந்தபோது, விவசாயம் சாராத சமூகத்தினர் உணவு, குடிநீர், பழங்கள், பிஸ்கட்டுகள், செருப்புகள் என பலவற்றுடன் எங்களிடம் வந்தனர்.”
அனைத்து இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளர் நவாலியும் (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கம்) ஷாஜஹான்பூருக்கு வந்த விவசாயிகள் குழுவை வழிநடத்தியவர்களில் ஒருவர். இதுபற்றி அவர் பேசுகையில், “எந்த போராட்டமும் நீடிப்பது சமூகத்தின் ஆதரவில்தான் உள்ளது. டெல்லியைச் சுற்றி நடக்கும் விவசாயிகள் போராட்டத்திலும் இதுதான் நிகழ்ந்துள்ளது. விவசாயிகளுடன் இது முடியவில்லை. ஒட்டுமொத்த சமூகமும் ஆதரிக்கிறது.”
ஷாஜஹான்பூர் முகாமின் முதல்நாள் இரவை விவரிக்கும் நவாலி, சில ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டக் களத்திற்கு போர்வைகள், கதகதப்பான ஆடைகள், குல்லாக்கள் போன்ற பல பொருட்களைக் கொண்டு வந்தனர். “மகாராஷ்டிராவிலிருந்து ஷாஜஹான்பூர் வந்த விவசாயிகளுக்கு டெல்லியில் உள்ள சீக்கிய சமூகத்தினர் பணத்தை வாரி இறைத்தனர்,” என்கிறார் அவர். “அவர்கள் இந்தப் பொருட்களை வாங்கி கொடுத்து அனுப்பினர்.”
இவையாவும் ஹனுமந்த் குஞ்ஜாலின் அனுபவ நினைவுகளாக மாறியுள்ளன. “எங்கள் கிராமத்திற்கு மிகவும் நேர்மறையான சிந்தனையுடன் திரும்பியுள்ளோம்,” என்கிறார் அவர்.
தமிழில்: சவிதா